தமிழர்களின் கடற்படை என்றவுடன் நமக்கு உடனே நினைவுக்கு வருவது சோழர்கள்தான். அதிலும் ராஜராஜனும் ராஜேந்திரனும் கடல் கடந்து பெற்ற வெற்றிகள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. இதனால் சோழர்களிடம் மட்டுமே கடற்படை இருந்தது என்ற பிம்பம் உருவாக்கப்பட்டுவிட்டது.
ஆனால் சங்க காலத்திலிருந்தே பாண்டியர்களிடமும் சேரர்களிடமும் வலுவான கடற்படை இருந்தது என்றும் அதைக் கொண்டு அவர்கள் வெற்றிகள் பல பெற்றார்கள் என்பதையும் பல குறிப்புகள் மூலம் அறியமுடிகிறது. அப்படிப்பட்ட கடற்போர் ஒன்றை இங்கே பார்க்கலாம்.
சங்க காலத்து சேர அரசு வடக்கே ஹோனவார் என்று தற்போது அழைக்கப்படும் வானவாற்றிலிருந்து தெற்கே குமரி வரை பரந்திருந்தது. இப்படி நீண்ட கடற்கரையைக் கொண்டிருந்ததால் கடல் மூலம் நிகழ்ந்த வணிகச் செழிப்புமிக்க நாடாக ஒருபுறம் இருந்தாலும் கடல் புறத்திலிருந்து அடிக்கடி வரும் தொல்லைகளை முறியடிக்க வேண்டிய கட்டாயத்திலும் சேர நாடு இருந்தது. அக்காலச் சேர மன்னர்களில் சிறப்பாக ஆட்சி செய்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.
இமயமலைக்குச் சென்று சேரர்களின் வில் சின்னத்தை அங்கே பொறித்ததால் அவனுக்கு இமயவரம்பன் என்ற பெயர் வந்ததாகச் சொல்வதுண்டு. அவன் மாந்தை என்று அழைக்கப்பட்ட இடத்திலிருந்து ஆட்சி செய்து கொண்டிருந்தான். இது இப்போது கேரளாவில் கண்ணனூருக்கு அருகே இருக்கிறது. பழையங்காடிப் புகைவண்டி நிலையம் இதன் ஒரு பகுதி என்று ஆய்வாளர் ஔவை துரைசாமி குறிப்பிடுகிறார். ‘துறை கெழுமாந்தை‘, ‘கடல் கெழுமாந்தை‘ என்றெல்லாம் இந்நகரம் புகழப்பட்டிருக்கிறது.
ஏகிடித் தீவு, கூவகத்தீவு என்று அப்போது அழைக்கப்பட்ட கோவாவிலிருந்து தொடங்கி அரபிக்கடலில் கொங்கணக் கரையோரம் உள்ள பல தீவுகளில் கடம்பர் என்ற இனத்தினர் வசித்து வந்தனர். அவர்களுடைய தலைமையிடமாக கடம்பத் தீவு இருந்தது (Kadmat Island). அந்தத் தீவில் கடம்ப மரம் ஒன்றை காவல் மரமாக வைத்து வழிபட்டு வந்தனர் கடம்பர்கள்.
பலவகை குடிகள் இவர்களில் உண்டு. கடலோடும் இனத்தினரான இவர்களுக்கு மீன் பிடிப்பது தொழிலாக இருந்தது. இருந்தாலும் அவர்களில் சிலர் கொள்ளையடிப்பதையும் தொழிலாகக் கொண்டிருந்தனர். அரபிக் கடலில் வரும் வணிகக் கப்பல்களைக் கொள்ளையடித்தும், அவ்வப்போது சேர நாட்டுக் கடற்கரையில் திடீர்த் தாக்குதல்கள் நடத்தி ஊர்களைச் சூறையாடியும் அட்டகாசம் செய்து வந்தனர் இந்தக் கூட்டத்தினர். இதனால் பாதிக்கப்பட்ட சேரநாட்டின் மக்கள், அரசனான நெடுஞ்சேரலாதனிடம் முறையிட்டனர். கடம்பர்களை ஒடுக்க நினைத்த சேரலாதன் ஒரு பெரும் கடற்படையோடு கிளம்பினான்.
கடம்பர்களும் கடற்போர்களில் சளைத்தவர்கள் அல்லர். அவர்களிடமும் வலுவான கடற்படை இருந்தது. வாட்போரிலும் அவர்கள் வல்லவர்களாக இருந்தனராம். எதிர்த்து நின்றவர்களை எல்லாம் வாள் சண்டையில் வென்று அவர்களுடைய நாட்டைக் கவர்ந்து கொள்ளும் திறன் கடம்பர்களிடம் இருந்தது என்கிறது பதிற்றுப்பத்து என்ற சங்க இலக்கியம்.
பழங்கோவாவில் உள்ள அவர்களுடைய நடுகற்களில் கடம்பர்களின் கப்பல்களும், படை வீரர்களும் செதுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். ஆயிரம் கலங்களைக்கூட விரைவில் திரட்ட வல்லவர்கள் கடம்பர்கள் என்று அவர்களுடைய கடற்படைத் திறனைப் பற்றிச் சொல்வதுண்டு.
தம்மை எதிர்த்து வந்த சேரர்களோடு கடலில் மோதினர் கடம்பர்கள். சேரர் கடற்படையும் கடம்பர் படையும் கடுமையாகச் சண்டையிட்டன. கடம்பர் கலங்களைத் தீக்கிரையாக்கிவிட்டு சேரர் படை கடம்பத்தீவில் புகுந்தது. நெடுஞ்சேரலாதனே நேரடியாகக் களத்தில் இறங்கினான். அந்தக் காட்சியை குமட்டூர்க் கண்ணனார் என்ற புலவர் இப்படி வர்ணனை செய்கிறார்.
நளியிரும்பரம்பின்மாக்கடன்முன்னி
அணங்குடைஅவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடைமுழுமுதல்தடிந்தபேரிசைக்
கடுஞ்சினவிறல்வேள்களிறூர்ந்தாங்குச்
செவ்வாய் எஃகம்விலங்குநர்அறுப்ப
…
முரண்மிகுசிறப்பின் உயர்ந்த ஒக்கலை
பலர்மொசிந்தோம்பியதிரளபூங்கடம்பின்
கடியுடைமுழுமுதல்துமியவேஎய்
வென்றெறிமுழங்குபணை செய்த வெல்போர் (பதிற்றுப் பத்து 2-1)
‘பெரும் பரப்பைக் கொண்ட கடலின் நடுவே சென்று சூரபத்மன் மாமரத்தின் உருவைக் கொண்டான். அந்த மாமரமான சூரனை முற்றிலும் அழிந்து போகுமாறு வெட்டி வீழ்த்தி, தனக்குரிய பிணிமுகம் என்ற யானையின் மீது வெற்றிச்செருக்கோடு ஊர்ந்து சென்ற முருகப் பெருமானைப் போல நீ பகைவரை வென்று யானை மீது வெற்றி உலாச் சென்றாய். உன்னுடைய வாள் முனை பகைவரை வெட்டி வீழ்த்தியவாறு முன்னேறியது. அதனால் அந்தக் குருதிக் கறையாலே சிவந்து போனது. கடம்பரை அழித்து அவர்களது காவல் மரமான கடம்பையும் அடியோடு வெட்டி வீழ்த்தி அந்த மரத்தினால் வெற்றி முரசினைச் செய்து கொண்டாய்‘ என்று நெடுஞ்சேரலாதனை கண்ணானார்புகழ்கிறார்.
வயவர்வீழவாள்அரில்மயக்கி,
இடம்கவர்கடும்பின்அரசுதலைபனிப்ப,
கடம்புமுதல்தடிந்தகடுஞ்சினவேந்தே (பதிற்றுப்பத்து 2-2)
கடம்பர்களின் தலைவன் பயத்தால் நடுங்குமாறு உன்னுடைய வாள் வலிமையால் அவர்களை வீழ்த்தி காவல் மரமான கடம்பினை அடியோடு வெட்டிக் கொண்டு வந்த வேந்தனே என்றும் சேரலாதன் புகழப்படுகிறான். இப்படிக் கடற்போரில் கடம்பை அறுத்து நெடுஞ்சேரலாதன் வெற்றி கொண்ட செய்தியை மாமூலனார் என்ற புலவர்
சால் பெருந்தானைச்சேரலாதன்
மால் கடல் ஓட்டி, கடம்பு அறுத்து, இயற்றிய
பண் அமை முரசின் (அகநானூறு 347)
என்று குறிப்பிடுகிறார்.
சேரன் கடம்பர்களை கடற்போரில் வீழ்த்திய செயலை இளங்கோவடிகளும் சிலப்பதிகாரத்தில் புகழ்கிறார்.
“மாநீர்வேலிக்கடம்பெறிந்துஇமயத்து
வானவர் மருள மலைவிற்பூட்டிய
வானவர் தோன்றல்” (காட்சிக் காதை)
இப்படிப் பலரால் பாரட்டப்பட்ட சேரலாதன் தன் தலைநகரில் வெற்றி விழா ஒன்றை நடத்தினான். இந்தப் போரில் தோற்று ஓடிய கடம்பர்கள் கொண்கணக்கரையில் இருந்த மற்ற சில தீவுகளிலும் உள்நாட்டிலும் குடி புகுந்தனர். ஆனால் அவர்கள் சும்மா இருக்கவில்லை.
தமிழகத்தோடு வணிகம் செய்த மேலை நாடுகளில் யவனம் (கிரேக்க / ரோம் நாடுகள்) முக்கியமானதாக விளங்கியது. மிளகு போன்ற பொருட்களை இங்கிருந்து வாங்கிச் சென்று பண்டமாற்றாகப் பொன்னைக் கொடுத்துச் சென்றார்கள் யவனர்கள் என்று சங்க இலக்கியங்கள் குறிக்கின்றன. யவன நாட்டு மதுவுக்கும் இங்கே அதிக மதிப்பு இருந்ததாகத் தெரிகிறது. அப்படி வணிகக் கப்பல்களில் விலை உயர்ந்த பொருட்களை அவர்கள் கொண்டுவரும்போது காவலுக்காக கடற்படை ஒன்றும் அவர்களோடு வந்தது. அப்படி வந்த யவனர்கள் இங்கேயே தங்கி கோட்டைக் காவலர்களாகவும் மெய்க் காப்பாளார்களாகவும் பணி புரிந்ததெல்லாம் வரலாறு.
இந்த யவனர்களோடு கடம்பர்கள் சேர்ந்து கொண்டனர். சேரநாட்டின் மீது படையெடுக்கவும் அவர்களைத் தூண்டினர். உள்ளூர்த் தலைவர்களை அழிக்க வெளிநாட்டு ஆட்களைக் கொண்டு வருவதெல்லாம் அப்போதே நடந்திருக்கிறது பாருங்கள். யவனர்களின் கடற்படை கடம்பர்களோடு இணைந்து சேர நாட்டைத் தாக்கியது.
ஆனால் சேரர் கடற்படை சளைக்கவில்லை. கடலில் நடந்த கடுமையான போரில் யவனர் கலங்கள் சில அழிக்கப்பட்டன. மீதியுள்ள கப்பல்களின் மீது சேர வீரர்கள் குதித்துப் போர் செய்து பல யவனர்களைச் சிறைப்பிடித்தனர்.
அப்படிப் பிடிக்கப்பட்ட யவனர்களின் தலை மீது நெய்யை ஊற்றி அவர்கள் கைகளை முதுகின் பின்னால் கட்டி தன்னுடைய நகரத்திற்குச் சேரலாதன் கொண்டுவந்தான். இது அக்காலத்தில் வழங்கப்பட்ட கடுமையான தண்டனைகளில் ஒன்று. தன்னுடைய நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டவர்கள் தலையிடுவதை விரும்பாத சேரமன்னன் இப்படிப்பட்ட தண்டனையை ஒரு உதாரணமாகக் காட்ட விரும்பியிருக்கவேண்டும்.
நயன்இல்வன் சொல் யவனர்ப்பிணித்து,
நெய் தலைப் பெய்து, கை பிற்கொளீஇ
அரு விலை நன்கலம்வயிரமொடு கொண்டு
பெருவிறல்மூதூர்த் தந்து, பிறர்க்கு உதவி (பதிற்றுப் பத்து – பதிகம்)
பல விலை மதிப்பு மிக்க அணிகலன்களையும் வைரங்களையும் யவனர்களிடமிருந்து கைப்பற்றிக்கொண்டு, தன்னுடைய குடிமக்களுக்கு அவற்றைத் தந்தானாம் நெடுஞ்சேரலாதன்.
இதையே மாமூலனாரும் குறிப்பிடுகிறார்.
வலம்படு முரசில் சேர லாதன்
முந்நீர்ஓட்டிக்கடம்பறுத்துஇமயத்து
முன்னோர் மருள வணங்குவிற்பொறித்து
நன்னகர்மாந்தைமுற்றத்துஒன்னார்
பணிதிறை தந்த பாடுசால்நன்கலம்
பொன்செய் பாவை வயிரமொடு -ஆம்பல்
ஒன்று வாய் நிறையக்குவைஇஅன்றவண்
நிலந்தினத் துறந்த நிதியத்து (அகம் 127)
கடம்பை அறுத்துக் கடம்பர்களை வென்றும் இமயத்தில் வில் சின்னத்தைப் பொறித்தும் பெருமை கொண்ட சேரலாதன் பகைவர்களிடமிருந்து கொண்டுவந்த அணிகலன்கள், பொன்னால் செய்யப்பட்ட பாவை விளக்கு (யவனர்கள் விற்பனை செய்யக் கொண்டுவந்த பொருட்களில் இதுவும் ஒன்று “யவனர் இயற்றிய வினைமாண் பாவை” என்கிறார் நக்கீரர்) வைரம் போன்ற மணிகள் ஆகியவற்றை தன்னுடைய தலைநகரான மாந்தையில் வீரர்களுக்கும் புலவர்களுக்கும் குடிமக்களுக்கும் கொடுத்துவிட்டு மீதியை ஆம்பல் பூக்கள் போலக் குவித்து யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும் என்று விட்டு வைத்திருந்தானாம். ஆனால் அவற்றை (யாரும் எடுத்துக்கொள்ளாததால்) நிலம் தின்று விட்டதாம்.
இப்படித் தன் கடற்படை வலிமையால் உள்நாட்டுப் பகைவர்களை வென்றது மட்டும் அல்லாமல் மேலை நாட்டிலிருந்து வந்த வலிமையான யவனர் படையையும் கடற்போரில் வெற்றிகொண்டவன் இயமவரம்பன் நெடுஞ்சேரலாதன்.
(தொடரும்)
(படங்களில் கடம்ப வீரர்கள், பழங்கோவா அருங்காட்சியகம். நன்றி : தொல்லியல் துறை)
“உள்ளூர் தலைவர்களை அழிக்க வெளிநாட்டு ஆட்களை கொண்டு வருவதெல்லாம் அப்போதே நடந்திருக்கிறது “- மனிதன் மாறவில்லை !!