Skip to content
Home » தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #3 – வெண்ணிப் போர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #3 – வெண்ணிப் போர்

வெண்ணிப் போர்

தஞ்சையிலிருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில் கோயில் வெண்ணி என்ற சிற்றூர் இருக்கிறது. அழகியநாயகி அம்மன் உடனுறை வெண்ணிநாதர் / வெண்ணிகரும்பேஸ்வரர் கோவில் என்ற பாடல்பெற்ற தலத்தைக் கொண்ட ஊர் இது. அந்தக் கோவிலின் தலவிருட்சமாகவும் வெண்ணிப் பூ (நந்தியாவட்டை) உள்ளது. இந்த ஊரில்தான் சரித்திரப் புகழ் பெற்ற வெண்ணிப்போர் நடந்தது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்தும் இன்றும் அவ்வூரின் அருகில் நாம் காணக்கூடிய பெரும் வெளி அது உண்மைதான் என்பதைப்பறைசாற்றுகிறது.

“கை வண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த வயல் வெள் ஆம்பல்” என்ற நற்றிணையின் 390வது பாடல் இந்த இடம் சோழநாட்டில் வயல்கள் சூழ இருந்த இடம் என்பதை உறுதி செய்கிறது. வெண்ணி என்ற பெயருடைய வேறு ஊர் ஏதும் சோழ தேசத்தில் இல்லையாதலால் கோயில்வெண்ணியே போர் நடந்த இடம் என்று நாமும் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.

வெண்ணிப் போர்

வெண்ணிப்போர் கரிகால் சோழனுக்கும் அவனை எதிர்த்து வந்த பதினோரு வேளிர்கள், முடியுடை மன்னர்கள் இருவர் ஆகியோர் கொண்ட கூட்டணிப் படைக்கும் இடையில் நடந்தது. முன்பு நாம் பார்த்த தலையாலங்கானப் போர் வெளிப் பகைவர்களால் ஏற்பட்டது. வெண்ணிப்போருக்கான காரணம் உட்பகை. அதிலும் தாயத்தார் பங்குகொண்ட போர் இது என்பதால் பாரதப்போரை ஒத்திருந்தது என்று சொல்லலாம். அரசுரிமைக்காகத் தமிழகத்தில் நடந்த முதற் போராகவே இதை நாம் கருதவேண்டியிருக்கிறது.

கரிகாலச்சோழனின் இயற்பெயர் திருமாவளவன் என்று நமக்குத் தெரியும். சோழ மன்னர்களில் பல இளஞ்சேட்சென்னிகள் உண்டு. அதில் ஒருவனான உருவப் பல் தேர் இளஞ்சேட்சென்னிக்கும் அழுந்தூர் வேளிர் குலத்தில் பிறந்த அரசிக்கும் பிறந்தவன் திருமாவளவன். அவன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே இளஞ்சேட்சென்னி இறந்துபட்டான். இந்தச் செய்தியை முடத்தாமக்கண்ணியார் என்ற புலவர் சங்க இலக்கியங்களின் ஒன்றான பத்துப்பாட்டில் உள்ள பொருநர் ஆற்றுப்படையில் குறிப்பிடுகிறார்.

உருவப் பல் தேர் இளையோன் சிறுவன்
முருகற்சீற்றத்து உரு கெழுகுருசில்,
தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி

உருவப் பல்தேர் சென்னியின் மகனான திருமாவளவன் தாயின் வயிற்றிலிருந்தபோதே தாயம் (அரசுரிமை) எய்தினான் என்கிறார் அவர். இளஞ்சேட்சென்னி இறந்துவிட்டதால் நாடு அரசன் இல்லாமல் தவித்தது. நாட்டில் நிலவிய இந்தக் குழப்ப நிலையில் நல்வாய்ப்பாகக் கருதிய அவனுடைய உறவினர்கள், இருங்கோவேள் என்ற வேளிர் அரசனின் தலைமையில் அரசைக் கைப்பற்றச் சதி செய்தனர். அதன் ஒரு பகுதியாக திருமாவளவன் சிறுவனாக இருக்கும் போதுஅவனைத் தீ வைத்துக் கொல்லச் சதியொன்று நடந்திருக்கவேண்டும். அதிலிருந்து வளவன் தப்பிய போதிலும் அவனுடைய கால் தீயினால் கருகியது. இதனாலேயே அவன் கரிகாலன் என்று அழைக்கப்பட்டான். இந்தச் செய்தியை பொருநர் ஆற்றுப்படையிலும் பட்டினப்பாலையிலும் உள்ள தனிப்பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.

முச்சக்கரமும்அளப்பதற்கு நீட்டிய கால்
இச்சக்கரமேஅளந்ததால்-செய்ச் செய்
அரிகால்மேல் தேன் தொடுக்கும் ஆய் புனல் நீர்நாடன்
கரிகாலன் கால் நெருப்பு உற்று

திருமால் மூன்று உலகங்களையும் காலால் அளந்ததுபோல தன்னுடைய கருகிய காலைக்கொண்டு மூன்று நாடுகளையும் கரிகாலன் வென்றான் என்பது பொருள். பழமொழி நானூறின் பாடல் ஒன்று பின்வருமாறு குறிப்பிடுகிறது.

சுடப்பட்டுயிருய்ந்த சோழன் மகனும்
பிடர்த்தலைப்பேரானைப்பெற்றுக் – கடைக்கால்
செயிரறு செங்கோல் செலீஇயினான் இல்லை
உயிருடையார்எய்தா வினை

கரிகாலன் என்ற பெயர் அவன் கால் எரிந்ததால் வந்தது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. அகநானூறிலும் புறநானூறிலும் உள்ள பல பாடல்கள் இந்த அரசனை கரிகால் என்றே குறிப்பிடுகின்றன. இப்படிச் சிறுவயதிலேயே தன் உறவினர்களால் துன்புறுத்தப்பட்ட கரிகாலன் அவர்களிடம் சிறைப்பட்டு இளமையில் சில ஆண்டுகளைச் சிறையில் கழிக்க வேண்டியிருந்தது. ஆனால் தன் திறமையினால் அந்தச் சிறையிலிருந்து மீளும் வழிகளைச் சிந்தித்து தக்கார் துணையையும் பெற்று சிறையிலிருந்து தப்பி விடுதலை பெற்றான்.

‘கூரிய நகத்தையும் வளைந்த வரிகளையும் கொண்ட புலிக்குட்டி ஒன்று கூட்டில் பிடிபட்டு, உரன் பெற்று வளர்ந்தது. குழியில் பிடிபட்ட யானை தன்னுடைய தந்தத்தினால் குழியின் கரைகளை குத்தி, குழியைத் தூர்த்து அதைக் கொண்டு மேலேறி தப்பித்தது போல கரிகாலன் சிறையிலிருந்து தப்பினான்’ என்று இந்நிகழ்வை வர்ணிக்கிறது பட்டினப்பாலை.

இப்படிச் சிறையிலிருந்து தப்பிய கரிகாலனுக்கு அவனுடைய மாமனான இரும்பிடர்த்தலையாரின் உதவி கிடைத்தது. அவருடைய உதவியைக் கொண்டு ‘உரு கெழு தாயம் ஊழின் எய்தி’ சோழநாட்டின் அரசுரிமையைப் பெற்றான் திருமாவளவன். ஆனாலும் வேளிர்கள் பதினோரு பேரும் பாண்டியனுடனும் சேரனுடனும் சேர்ந்து அவன் மேல் போர் தொடுத்தனர். இதுதான் கோவில்வெண்ணி என்னும் வெண்ணிப்பறந்தலையில் நடந்த போர் ஆகும். பறந்தலை என்பதற்கு பொட்டல் வெளி, போர்க்களம் என்று பொருள்.

இதில் ஈடுபட்ட பாண்டியனின் பெயர் தெரியவில்லை. ஆனால் சேர மன்னனின் பெயர் பெருஞ்சேரலாதன் என்று தெரிகிறது. வேளிர்களுக்கு இருங்கோவேள் தலைமை தாங்கினான். கரிகாலனின் படையை ஒப்பிடும்போது பகைவர் படை மிகப் பெரியது. தலையாலங்கானப் போரில் எரிபரந்தெடுந்தல் என்ற போர் முறையைப் பின்பற்றி சோழ நாட்டில் புகுந்து பகைவர் படையைப் பாண்டியர்கள் தோற்கடித்தனர் என்று பார்த்தோம். அதற்கு நேர் மாறாக, தன்னுடைய படையை விட அதிகமான எண்ணிக்கையில் இருந்த எதிரிகளின் படையை வலுவான உறையூர் போன்ற அரணிலிருந்து வெண்ணியைப் போன்ற பொட்டல்வெளிக்கு இழுக்க கரிகாலன் கையாண்ட வியூகத்தைப் பற்றி பட்டினப்பலையை எழுதிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் இவ்வாறு கூறுகிறார்.

தலைதவச் சென்று தண்பணைஎடுப்பி
வெண்பூக்கரும்பொடு செந்நெல் நீடி
மா இதழ்க்குவளையொடுநெய்தலும் மயங்கி,
கராஅம்கலித்த கண் அகன் பொய்கை,
கொழுங் கால் புதவமொடுசெருந்திநீடி,
செறுவும்வாவியும், மயங்கி, நீர் அற்று,

காவிரியும் அதன் துணை நதிகளும் வளப்படுத்தியதால் வயல்களும் நீர் நிலைகளும் நிறைந்த மருதநிலப்பகுதியாக சோழ நாடு விளங்கியது. இந்த மருதநிலப் பகுதியில் இருந்த பூக்களும் கரும்புகளும் நெல்லும் குவளையும் நெய்தலும் நிறைந்த வயல்களின் மீது யானைகளை ஓட்டி அவற்றை அழித்ததாம் கரிகாலனின் படை. தவிர, ஏரி, குளம் போன்ற அங்குள்ள நீர் நிலைகளின் கரைகளும் உடைக்கப்பட்டன. இப்படி நிலமெங்கும் அழிக்கப்பட்டு வெள்ளக்காடானதால் மருதநிலத்தின் குடிகள் அவர்களின் இருப்பிடத்திலிருந்து எதிரிகளின் அரண்களை நோக்கி ஓட்டப்பட்டனர்.

இப்படி வெளியேறிய மக்கள் கூட்டம் பகைவர் படைகளில் குழப்பத்தை ஏற்படுத்தின. இதன் காரணமாக வேளிர் கூட்டணிப் படை அரண்களிலிருந்து வெளியேறி கரிகாலனின் படையை வெண்ணியின் வெளியில் சந்திக்க நேர்ந்தது. இது ஒரு அபாயகரமான வியூகம்தான் என்றாலும், பெரும் வீரனும் திறமைசாலியுமான கரிகாலன் தலைமையில் சோழர் படை எதிரிகளை வேட்டையாடியது. புகழ்பெற்ற இந்தப் போரைப் பற்றி பல புலவர்கள் பாடியிருக்கின்றனர். பொருநர் ஆற்றுப்படையில் முடத்தாமக்கண்ணியார் ‘ஆத்தி மாலையைச் சூடிய கரிகாலன் தன்னுடைய இளைய பருவத்தில், ஒரு யாளி யானையை வேட்டையாடிக் கொன்றது போல பனம் பூவையும் வேம்பையும் தன் தலையில் அணிந்த இரு வேந்தர்களையும் வெண்ணிப் போரில் வென்றான்’ என்கிறார்.

“இரு பெருவேந்தரும் ஒரு களத்து அவிய,
வெண்ணித் தாக்கிய வெருவருநோன் தாள்,
கண் ஆர் கண்ணி, கரிகால்வளவன்” – பொருநர்ஆற்றுப்படை (146-148)

பட்டினப்பாலையை இயற்றிய உருத்திரங்கண்ணனாரின் பாடல் கீழே.

“குடவர் கூம்ப, தென்னவன் திறல்கெடசீறி..
மாத்தானைமறமொய்ம்பின்
செங்கண்ணால்செயிர்த்து நோக்கி
புன்பொதுவர் வழி பொன்ற
இருங்கோவேள்மருங்கு சாய”

‘பகைவருடைய அரண்களை எல்லாம் தகர்த்து, குடதிசை மன்னனான சேரன் ஊக்கம் அழிய தென்னவனான பாண்டியன் திறன் அழிய, மாற்றாரின் பெரும் படையின் வலிமையைத் தன்னுடைய சிவந்த கண்ணாலே அழித்து சிறிய செய்கைகளைச் செய்த அரசர்களை (வேளிர்களை) தோற்கடித்து ‘இருங்கோவேள்மருங்கு சாய’ – இருங்கோவேள் மண்ணில் சாயுமாறு போர் செய்தான் கரிகாலன் என்கிறார்.

சங்க காலப் புலவர்களில் ஒருவரான பரணரோ பெரும் வலிமை பெற்ற கரிகாலனை வேளிர் அரசர்கள் பதினோரு பேர் வெண்ணியில் தாக்கினர். ஆனால் கரிகாலனை எதிர்த்துப் போரிட முடியாமல் தம்முடைய போர் முரசுகளைப் போர்க்களத்திலேயே போட்டுவிட்டு ஓடினர் (அகம் 246) என்று புகழ்கிறார். இந்தப் போரில் கரிகாலனும் சேர மன்னனான பெருஞ்சேரலாதனும் நேருக்கு நேர் சண்டையிட்டனர். கரிகாலன் எறிந்த வேல் சேரனுடைய மார்பில் ஊடுருவி அவன் முதுகிலும் புண்ணை ஏற்படுத்தியது.

“இருசுடர்தம்முள் நோக்கி ஒருசுடர்
புன்கண் மாலை மலைமறைந்தாங்குத்
தன்போல் வேந்தன் முன்புகுறித்துஎறிந்த
புறப்புண் நாணி மறத்தகை மன்னன்
வாள்வடக்குஇருந்தனன்”

முழுமதி தோன்றும் நாளில் சில மணித்துளிகளுக்கு சூரியனும் சந்திரனும் எதிர் எதிர் தோன்றும். ஆனால் அவற்றில் ஒரு சுடர் விரைவில் மறைந்துவிடும். அதுபோல தன்னைப் போன்ற ஒரு வேந்தன் எறிந்த வேலால் ஏற்பட்ட புறப்புண்ணுக்காக வெட்கமடைந்த சேரலாதன் போர்க்களத்திலேயே வடக்கு இருந்து உயிர்விட்டான் என்று கழாத்தலையார் என்ற புலவர் பாடியிருக்கிறார் (புறம் 65). அரசனை இழந்த சேர நாடு பொலிவிழந்தது என்றும் வருந்துகிறார் அவர். மாமூலனார் என்ற புலவரும் இந்தச் செய்தியை உறுதி செய்கிறார். கரிகால்வளவனோடு வெண்ணிப்பறந்தலையில் போர் செய்து, முதுகில் புண்பட்டதால் நாணமடைந்த சேரலாதன் வடக்கிருந்தான் என்று (அகம் 55) குறிப்பிடுகிறார் அவர்.

கோவில் வெண்ணியைச் சேர்ந்த வெண்ணிக் குயத்தியார் என்ற புலவரும் இந்தப் போரைப் பற்றியும் சேரமான் வடக்கிருந்து உயிர் துறந்ததைப் பற்றியும் பாடியிருக்கிறார். ‘கரிகால்வளவ, நீ நல்லவன் தான் ஆனால் வெண்ணிப்பறந்தலையில் நடந்த போரில் புறமுதுகில் புண் பட்டதால் வெட்கமடைந்து உயிர் துறந்த சேரன் உன்னிலும் நல்லவன் அல்லவா’ என்கிறார் அவர் (புறம் 66).

இப்படிப் பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட வெண்ணிப் போரில் தென்னவன் பாண்டியனைத் தோற்று ஓடச்செய்து, இருங்கோவேளைச் சாய்த்து, சேர மன்னன் உயிர் விட்ட பிறகும் ஒன்பது வேளிர்களின் படை கரிகாலனை மீண்டும் எதிர்த்திருக்கிறது. அவர்களை வாகைப்பறந்தலை என்ற இடத்தில் தோற்கடித்தான் கரிகாலன்.

உட்பகைகளை அழித்து தன்னுடைய அரசுரிமையை உறுதி செய்து கொண்ட பிறகு, போரினால் அழிந்த நாட்டின் நீர்வளத்தைச் சீர் செய்தான் கரிகாலன். ‘குளம்தொட்டுவளம்பெருக்கி’, காவிரியின் இரு கரைகளையும் செம்மைப்படுத்தி சோழநாட்டின் நீர் மேலாண்மையைச் செம்மைப்படுத்தியதை ‘தெள்ளருவிச் சென்னிப் புலியே மிருத்திக் கிரி கிரித்துப் பொன்னிக் கரைகண்ட பூபதியும்’ என்று பின்னாளில் புகழ்கிறார் ஒட்டக்கூத்தர்.

போர் செய்து எதிரிகளை வெல்வது மட்டும் முக்கியமல்ல, அதனால் உண்டாகும் அழிவுகளையும் உடனுக்குடன் சீர் செய்து நல்லாட்சி தருவது இன்றியமையாதது என்று செயலில் காட்டிய அரசன் கரிகால்வளவன்.

(தொடரும்)

 

பகிர:

4 thoughts on “தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #3 – வெண்ணிப் போர்”

  1. Pl. use the name “Karikarchozhan” only.
    pl avoid and dont describe other names in all places.

  2. அவரைப் பற்றி அதிகமான குறிப்புகள் இல்லாத போதும், மிக அழகாக விளக்கி இருக்கீங்க. கல்லணை ஒன்று போதும் அவர் ஆற்றலை குறிக்க. கரிகாலன் பெருவளத்தான் ❤️

  3. செந்தில் குமார்

    தெள்ளருவி சென்னி புலியே மிருத்திக் கிரி கிழித்து

    இதில் மிருத்திக் என்ற என்பதின் அர்த்தம் அளிக்கவும் ஐய்யா

  4. I was so absorbed into reading this and was dreaming of those days. Your effort put into the extensive research to give an accurate history is phenomenal . 🙏🏻

Comments are closed.