பெரும் அரசுகளுக்கு இடையே நடக்கும் போர்களானாலும் சரி, சாதாரண மனிதர்களுக்கு இடையே நடக்கும் சண்டைகளானாலும் சரி; பெரும்பாலான மோதல்களுக்கு இரண்டு காரணங்கள் இருப்பதைக் காணலாம். திடீரென்று ஏற்படும் ஏதாவதொரு நிகழ்வினாலோ உணர்ச்சிப் பெருக்கினாலோ தொடங்கிவிடும் மோதல் முதல் வகை. நீண்ட நாட்களாக ஏதோ ஒரு பகை நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டு இருக்கும். தங்களுக்கு ஆதாயம் வேண்டிச் சிலர் அந்த நெருப்பு அணைந்துவிடாமல் ‘விசிறிக்கொண்டு’ இருப்பார்கள். ஒரு நாள் திடீரென்று அந்த நெருப்பு வெடித்துச் சிதறிக் கிளம்பிவிடும். இது இரண்டாவது வகை. அப்படிப்பட்ட ஒரு போரைத்தான் இங்கே நாம் பார்க்கப்போகிறோம்.
தமிழ் இலக்கியங்கள் போர்களைப் பல வகைகளாகப் பிரித்திருக்கின்றன. இதைப் பற்றிய ஒரு பாடல் உண்டு.
வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை – அதிரப்
பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்
அதாவது பகை நாட்டிற்குள் சென்று அவர்களது ஆநிரைகளை (கால்நடைகளை) கவர்வது வெட்சித் திணை ஆகும். அப்படி எதிரிகள் கவர்ந்து சென்ற கால்நடைகளை மீட்கச் செய்யும் போர் கரந்தைத் திணை. பகைநாட்டின் மீது படையெடுத்துச் செல்வது வஞ்சித் திணை, அப்படிப் படையெடுத்து வருபவர்களைத் தடுத்துப் போரிடுவது காஞ்சித் திணை.
பகைவரது கோட்டைகளை முற்றுகை இடுவது உழிஞைத் திணைப் போர். அந்தக் கோட்டைகளை எதிரிப் படை பிடித்து விடாமல் தற்காத்துப் போரிடுவது நொச்சித் திணை. நேரே எதிர் எதிராக நின்று போரிடுவது தும்பை. அதில் வென்று அவர்களது பெருமையைப் பேசுதல் வாகைத் திணை என்று போர்கள் வகைப்படுத்தப்படுகின்றன. அந்தந்தப் போர்களுக்குரிய பூக்களைச் சூடிக்கொண்டு வீரர்கள் சண்டை செய்வார்களாம். இந்த வகைகளுக்கு உள்ளேயும் பல உட்பிரிவுகள் உண்டு. இப்போதைக்கு நாம் தகடூர்ப் போரைக் கவனிப்போம்.
சேர வம்சத்தில் இருந்த பல குடிகளில் குட்டுவன் குடியும் பொறையர் குடியும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. இவற்றில் பொறையர் வம்சத்தினர் கொங்கு நாட்டில் உள்ள கருவூர் வஞ்சியைத் (கரூர்) தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். அந்த வம்சத்தில் வந்த சிறப்புமிக்க மன்னர்களில் ஒருவன் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்ற அரசன். தன்னுடைய திறமையினால் சேரநாட்டை வலிமை மிகுந்த அரசாக ஆக்கியவன் வாழியாதன். சங்க காலத்தில் நடந்தவைகளாகப் பாடல்களில் குறிப்பிடப்படும் எல்லாமே கட்டுக்கதை என்ற ஒரு எண்ணம் சிலரிடம் இருந்து வருகிறது. அதைப் பொய்ப்பிக்கும் வண்ணம் கிடைத்த ஒரு கல்வெட்டு ஆதாரம் வாழியாதனுடையது. திருச்சிக்கு அருகிலுள்ள புகளூரில் தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று உள்ளது.
“தா அமண்ணன் யாற்றூர் செங்காய பன் உறைய்
கோஆதன் செல்லிரும்பொறை மகன்
பெருங்கடுங்கோன் மகன் ளங்
கடுங்கோ ளங்கோ ஆகி அறுத்த கல்”
என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டு ஆராய்ச்சியாளரும் தொல்லியல் நிபுணருமான ஐராவதம் மகாதேவன் இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் போற்றப்பட்டுள்ள சேர மன்னனான செல்வக்கடுங்கோ வாழியாதன் (கோஆதன் செல்லிரும்பொறை), அவன் மகன் பெருஞ்சேரல் இரும்பொறை (பெருங்கடுங்கோன்) அவனுடைய மகன் இளஞ்சேரல் இரும்பொறை (இளங்கடுங்கோன்) ஆகியவர்களே என்று நிறுவியுள்ளார்.
அக்காலத்தில் கொங்கு நாட்டில் பல வேளிர் குல மன்னர்களும் குறுநில அரசர்களும் ஆட்சி செய்து வந்தனர். வளர்ந்து வலிமை பெற்று வரும் சேர நாடு தங்களை விரைவில் வெற்றி கொண்டுவிடும் என்ற அச்சம் அவர்களுக்கு இருந்தது. அப்படிப்பட்ட மன்னர்களில் ஒருவன் தகடூர் (தற்போதைய தர்மபுரியை) நாட்டை ஆட்சி செய்துகொண்டிருந்த அதியமான்.
தமிழகத்தின் மூவேந்தர்களுக்கு இணையாக அசோகரின் கல்வெட்டு ஒன்றில் பெயர் குறிப்பிடப்பட்ட பெருமை உடையது அதியன் வம்சம். ‘சத்யபுத்திரர்கள்’ என்ற பெயரில் அசோகர் இந்த வம்சத்தின் அரசர்களைத் தன்னுடைய இரண்டாம் பாறைக் கல்வெட்டில் குறித்திருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள ஜம்பை என்ற இடத்தில் உள்ள தமிழ் பிராமிக் கல்வெட்டும் ‘சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி‘ என்று அதியமான் அரசனான நெடுமான் அஞ்சியைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
இப்படிப்பட்ட பெருமை உடைய அதியமான்கள் சேர அரசர்களின் வலிமையைக் கண்டு மன அமைதி இழந்தனர். இத்தனைக்கும் அதியமான்களும் சேரர் குடிகளில் ஒருவராவார். ஆயினும் நாடாசையால் சேரர்கள் தங்களைத் தாக்கக்கூடும் என்ற நினைப்பில் தகுந்த ஏற்பாடுகளைச் செய்யத்தொடங்கினர் அதியமான்கள்.
ஆனால், வாழியாதனுக்கு உடனடியாக அதியமானோடு போர் செய்யும் எண்ணம் ஏதும் இல்லை. அதற்கு இன்னோரு காரணமும் இருந்தது. தகடூருக்கும் சேர அரசுக்கும் இடையே இருந்ததும் கொல்லிக்கூற்றம் என்று அழைக்கப்பட்டதுமான கொல்லி மலையை வல்வில் ஓரி என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் அதியனுக்கு நண்பன். சிறந்த வீரன். வில்வித்தையில் சிறந்தவன் என்பதால் அவனுக்கு அந்தப் பெயர் வந்தது. கடையேழு வள்ளல்களில் ஒருவன் இந்த அரசன்.
அப்படிப்பட்ட அரசனை வென்றுதான் தகடூரை நெருங்க முடியும் என்பதால் சேர அரசர்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை. ஆனால், திருக்கோவிலூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மலையமான் அரசனான காரி என்பவனின் எண்ணம் வேறு மாதிரி இருந்தது. மலையமான்களுக்கும் ஓரிக்கும் இடையே பகை உண்டு. அந்தப் பகையைத் தீர்த்துக்கொண்டது போலவும் ஆயிற்று, கொல்லிமலையை வென்று சேரனிடம் கொடுத்தால் ஒரு பேரரசனின் நட்பைப் பெற்ற மாதிரியும் ஆயிற்று என்று கணக்கிட்டான் காரி. கடையேழு வள்ளல்களில் காரியும் ஒருவன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பெரும்படையுடன் கொல்லிக்கூற்றத்தின் மீது தாக்குதல் ஒன்றைத் தொடுத்தான் காரி. இந்தப் போரில் ஓரி கொல்லப்பட்டான். கொல்லிக்கூற்றமும் வீழ்ந்தது. அதை சேரர்களுக்குக் கொடுத்து அவர்களுடைய நட்பைப் பெற்றான் காரி.
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல் இசை நிறுத்த வல் வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த (அகம் 209)
என்று அகநானூறு இதைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
தன்னுடைய நண்பனான ஓரியைக் கொன்ற ஆத்திரம் ஒருபுறமிருக்க அவனுடைய நாட்டை சேரர்களுக்கு அளித்ததால் மலையமானின் மீது அதியமான் பெரும் கோபம் கொண்டான். ஆனால் சேரர்களுடைய ஆதரவு அவனுக்கு இருந்ததால், அவனை வெல்ல தகுந்த சமயத்தை நோக்கிக் காத்திருந்தான். அது விரைவில் அவனுக்குக் கிடைத்தது.
அச்சமயத்தில் பாண்டிய நாட்டில் உள்ள சில சிற்றரசர்கள், பாண்டிய மன்னனுக்கு எதிராகக் கலகம் செய்தனர். அவர்களை அடக்க செல்வக்கடுங்கோன் வாழியாதனின் உதவியை நாடினான் பாண்டியன். தன்னுடைய நண்பனுக்கு உதவும் பொருட்டு சேரமன்னன் ஒரு படையுடன் பாண்டிய நாட்டிற்குச் சென்றான். சிக்கப்பள்ளி என்ற இடத்தில் (தற்போது உத்தரகோச மங்கைக்கு அருகில் உள்ளது) நடந்த போரில் பாண்டியர்கள் வென்றாலும் அவர்களுக்கு உதவியாகச் சென்ற வாழியாதன் கொல்லப்பட்டான். இதனால் சேர நாடு அரசனை இழந்தது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட அதியமான், தன்னுடைய நண்பர்களான சோழர்களின் உதவியுடன் திருக்கோவிலூரின் மீது படையெடுத்துச் சென்று மலையமான் காரியைக் கொன்றுவிட்டான். திருக்கோவிலூரையும் தன்னுடைய அரசோடு சேர்த்துக்கொண்டான்.
சேரநாட்டின் புதிய அரசனாக செல்வக்கடுங்கோ வாழியாதனின் மகனான பெருஞ்சேரல் இரும்பொறை பொறுப்பேற்றான். பதவியேற்ற சில நாட்களில் சேரநாட்டைச் செம்மைப்படுத்துவதில் கவனம் செலுத்தினான் இரும்பொறை. அவன் பெரிய வீரன் மட்டுமல்ல, சிறந்த குணங்கள் கொண்டவனாகவும் இருந்தான். அந்நாளில் அரசனின் முரசுக்கு பெரு மதிப்பு உண்டு. பதவியேற்ற பிறகு ஒரு நாளில் முரசுக்கு நீராட்டு விழா ஒன்றை நடத்தினான் இரும்பொறை.
அப்போது அவனைக் காண மோசிகீரனார் என்ற புலவர் வந்தார். அவர் வந்த சமயம் அரசன் அரண்மனையில் இல்லை. அவனுடைய முரசை நீராட்டுவதற்கு எடுத்துச் சென்றிருந்தனர். களைப்பால் அயர்ந்திருந்த மோசிகீரனார், அந்த முரசு வைக்கப்பட்டிருந்த கட்டிலில் அயர்ந்து தூங்கிவிட்டார். உண்மையில் அது பெரும் குற்றமாகும். ஆனால், மோசிகீரனார் விழித்துப் பார்த்தபோது அரசனான பெருஞ்சேரல் இரும்பொறை தனக்குக் கவரி வீசிக்கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
என்னைத் தெறுவர
இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும், நல் தமிழ் முழுது அறிதல்;
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சி, தண்ணென
வீசியோயே (புறம் 50)
என்னை வாளால் இரண்டாக வெட்டிப்போடாமல் இருந்ததே நல்ல தமிழ் அறிந்தவனான உன்னுடைய அருஞ்செயல். அதோடு விடாமல், என் அருகே வந்து உன் வலிமை மிக்க தோள்களால் குளிர்ந்த காற்று வரும்படி எனக்குக் கவரி வீசினாயே! உன்னை எவ்வாறு புகழ்வது என்று வியந்தார் அந்தப் புலவர்.
இப்படிச் சிறந்த பண்பு உள்ளவனாக இருந்த இரும்பொறையின் ஆட்சியில் ஒரு பிரச்னை எழுந்தது. முசிறிக்கு அருகில் திருக்காமூர் என்ற ஊர் இருந்தது. அந்த ஊரின் தலைவனாக இருந்த கழுவுள் என்பவன், அக்கம் பக்கத்தில் உள்ள இடங்களில் புகுந்து அட்டகாசம் செய்துவந்தான். கால்நடைகளையும், செல்வங்களையும் கொள்ளை அடிப்பது, வயல்களைப் பாழ் செய்வது போன்ற அவன் செய்த அடாத செயல்களைக் கண்ட அப்பகுதியை ஆண்ட வேளிர்கள், காமூரின் மீது தாக்குதல் ஒன்றைத் தொடுத்தனர்.
முடிவில் காமூர் தீக்கிரை ஆகியது. கழுவுள் தப்பி ஓடிவிட்டான். ஓடியவன் சும்மா இல்லை, ஓரிக்குப் பின்பு தலைவன் இல்லாமல் தவித்த கொல்லிக்கூற்றத்திற்குச் சென்று தானே அப்பகுதியின் அரசன் என்று பிரகடனம் செய்து கொண்டான். சேரர்களுக்கு எதிராக அப்படிப்பட்ட ஒரு ‘தாதா’ இருப்பது நல்லது என்று நினைத்த அதியமானின் நண்பர்களான குறுநில மன்னர்கள் சிலர் அவனுக்கு ஆதரவு கொடுத்தனார்.
இந்தச் செய்திகளை எல்லாம் அறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை ஆத்திரமடைந்தான். சேரர்களின் நண்பனான மலையமான் அழிந்தது மட்டுமல்லாமல், அவன் கொடுத்த இடமான கொல்லிக்கூற்றமும் இப்படி மாற்றான் கைக்குச் சென்றதை அவனால் சகித்துக்கொள்ள இயலவில்லை. படை ஒன்றை திரட்டிக்கொண்டு கொல்லிக்கூற்றத்திற்குச் சென்றான் இரும்பொறை. சேரர்களின் பெரும்படை வருவதை அறிந்த கழுவுள்ளின் நண்பர்களான மன்னர்கள் ‘அற்ற குளத்து அறுநீர்ப்பறவைகள்’ போல அவனைக் கைவிட்டு ஓடிவிட்டனர்.
சளைக்காத கழுவுள் சேரமானோடு போரிட்டான். ஆனால் சேரனை வெல்வது முடியாத விஷயம் என்பதை விரைவில் அறிந்து கொண்ட அவன், போர்க்களத்திலிருந்து தப்பி ஓடி சேரமன்னனின் பாசறைக்குச் சென்றான். பெருஞ்சேரல் இரும்பொறையின் காலில் விழுந்து அவனுடைய நட்பைக் கோரினான். அருள்சுரக்கும் உள்ளமுடைய இரும்பொறை அவனை மன்னித்து தன்னுடைய நண்பனாக்கிக் கொண்டான்.
கொல்லிக்கூற்றம் மீண்டும் சேரர்களின் வசம் சென்றது மட்டுமல்லாமல், கழுவுள்ளும் சேரனின் பக்கம் சாய்ந்ததை அதியமான் எழினி அறிந்தான் (இவனை நெடுமான் அஞ்சி என்று சிலர் கூறுவதுண்டு. ஆனால் பதிற்றுப்பத்து எழினி என்றே அழைப்பதால் நாமும் அப்படியே கொள்வோம்). சேரர் படை விரைவில் அவனைத் தாக்கும் என்று அவனோடு இருந்த வேளிர்கள் அவனுக்குத் தூபம் போட்டனர். அதனால் சேரனைத் தாக்க படைகளைத் திரட்ட ஆரம்பித்தான் எழினி.
இந்தச் செய்தியை இரும்பொறை கேள்விப்பட்டான். போர் செய்யும் எண்ணம் அவனுக்கு இல்லை. இருந்தாலும் வந்த சண்டையை விடுவது வீரனுக்கு அழகல்ல என்ற காரணத்தால் அவனும் படைகளைத் திரட்ட ஆரம்பித்தான்.
அந்த நேரத்தில் அரிசில் கிழார் என்ற புலவர் பெருஞ்சேரல் இரும்பொறையைக் காணவந்தார். ஏதோ வந்தோம், அரசனைப் புகழ்ந்து பாடி பரிசு பெற்றுப்போனோம் என்று இல்லாமல், நாட்டைச் சூழ்ந்துவரும் போர் மேகங்களைக் கவனித்தார் அவர். அழிவு தரும் போரைத் தடுப்பதே நல்லது என்று சேரமானுக்கு அறிவுரை சொன்னார். எழினியும் நல்லவனே ஏதோ ஒரு காரணத்தால்தான் போருக்குத் தயாராகிறான். அவனிடம் நான் தூது சென்று வருகிறேன் என்று கோரிக்கை விடுத்தார் அரிசில் கிழார். போரைத் தவிர்க்க விரும்பிய சேரனும் அதற்கு ஒப்புக்கொண்டான்.
அரிசில்கிழாரின் தூது பலித்ததா? ஏற்படவிருந்த போரை அவர் தடுத்து நிறுத்தினாரா?
(தொடரும்)