சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் அதியமான் எழினிக்கும் இடையே போர் ஏற்படும் சூழல் உருவாவதைக் கண்டு, அதைத் தடுக்க புலவர் அரிசில் கிழார் எழினியிடம் தூது போனார் என்று பார்த்தோம்.
அரிசில் கிழாரைப் பற்றியும் அவரது தமிழ்ப் புலமை பற்றியும் கேள்விப்பட்டிருந்த எழினி அவரை நன்கு வரவேற்று உபசரித்தான். அவனுக்கு பல்வேறு அறிவுரைகளைச் சொன்ன அரிசில் கிழார் போரினால் ஏற்படும் அழிவுகள் பற்றியும் சேரனின் படைபலத்தை எதிர்த்து தகடூர்ப் படைகள் தடுமாறும் என்பதையும் விளக்கினார்.
ஆனால், தன் முடிவில் உறுதியாக நின்ற எழினி போரை நிறுத்த மறுத்துவிட்டான். இதனால் வேதனையுடன் அரிசில் கிழார் கருவூர் திரும்பினார். அவருடைய முகத்தைப் பார்த்ததுமே தூதின் முடிவு இன்னதென்று தெரிந்து கொண்ட இரும்பொறை அவரிடம் நடந்தது என்ன என்பதை விசாரித்தான். அதற்குப் பதிலாக அதியனின் தேவி சொன்ன கூற்று ஒன்றைச் சொன்னார் அரிசில்கிழார்.
சொல்லுங்காற் சொல்லின் பயன்காணும்; தான்பிறர்
சொல்லிய சொல்லை வெலச்சொல்லும், பல்லார்
பழித்தசொல்தீண்டாமற் சொல்லும்; விழுத்தக்க
கேட்டார்க்குஇனியவாச்சொல்லானேல் – பூக்குழலாய்
நல்வயல்ஊரன்நறுஞ்சாந்துஅணியகலம்
புல்லலின் ஊடல் இனிது (புறத்திரட்டு – 756)
‘என்னைப் பிரிந்து போருக்குச் செல்ல மாட்டேன் என்று இனிய சொல் ஒன்றை அவன் சொல்வான் என்று நினைத்தேன். ஆனால் சொல்லின் பயன் அறிந்து பிறர் சொன்ன சொல்லை வெல்லும் திறமை உடைய அவன், (தூது வந்த அரிசில் கிழாரிடம்) அப்படிச் சொல்லவில்லை. ஆகவே அவனுடைய சந்தனம் அணிந்த மார்பைத் தழுவுவதை விட, ஊடலே இனிது’ என்று தன்னுடைய தோழியிடம் அரசி சொன்னதாகக் கூறினார் அரிசில் கிழார். அப்படிப்பட்ட தேவிக்குத் துன்பம் விளைவிக்குமாறு இந்தப் போர் வந்து சேர்ந்ததே என்று இரும்பொறையும் கலங்கினானாம்.
கருவூரில் படைகள் திரட்டப்பட்டுவிட்டன. அந்தப் படைகளோடு தாமே நேரில் சென்று தகடூரைத் தாக்கி உழிஞைப் போர் செய்வது என்று சேரமான் முடிவு செய்துவிட்டான். ஆனால் அவனுக்கும் சிறு கலக்கம் இருந்தது. இந்தப் படைகள் அதியமானையும் அவனோடு சேர்ந்திருக்கும் மற்ற வேளிர்களையும் தோற்கடிக்கப் போதுமானதா என்று யோசித்தான் அவன்.
அவனுடைய அவையோர் அந்தச் சந்தேகத்தை நீக்கும் படியாக ‘அறக்கோலால் ஆர்வமும் செற்றமும் நீக்கிமற்றியார் கண்ணும் இன்னாத வேண்டா இகல்வேல் மறமன்னர் ஒன்னார்க்கு உயர்த்த படை’ என்று, முறை தவறும் செயல்களில் ஈடுபடாமல் செங்கோன்மையால் மற்றவருக்குத் துன்பம் தரும் செயலை நீக்கும் மன்னனுடைய படை அவனுக்கு எப்போதும் வெற்றியே தேடித்தரும் என்று வாழ்த்தினர். அதற்குப் பதிலளித்த சேரமான் புன்முறுவலோடு சொன்னான்.
அறம் புரிந்தன்றுஅம்ம அரசில் பிறத்தல்
துறந்த தொடர்போடுதுன்னியகேண்மை
சிறந்தார்க்கும் பாடு செயலீயார் தத்தம்
பிறந்தவேல்வென்றிப் பொருட்டு (புறத்திரட்டு 667)
‘ஐயாமார்களே, அறம் செய்ததால் அரசனாகப் பிறப்பார்கள் என்று சொல்வதுண்டு. அது உண்மையல்ல. பலரோடு விட்டுச் சென்ற நட்பைத் திரும்பப் புதுப்பிக்க முடியவில்லை. சான்றோர்க்கு உதவி செய்வோம் என்றால் அதுவும் இயலவில்லை. பிறந்த குடியின் மேன்மையை மனதில் கொண்டு போர் செய்வதற்காக மட்டுமே அரசனாகப் பிறந்திருக்கிறோம்’ என்பது பொருள்.
இங்கே விட்டுச் சென்ற நட்பு என்று அவன் அதியமானைச் சொன்னதாகக் கொள்ளலாம். அதியனும் சேரர் குடியில் பிறந்தவன் அல்லவா. ஆனால், தன்னுடைய குலப்பெருமையைப் பெரிதாகக் கருதி அதியனோடு போர் செய்யும் நிலை வந்துவிட்டதே என்று வருந்தியே அப்படிச் சொன்னான் இரும்பொறை.
வீரமுழக்கத்தோடு சேரர் படைகள் தகடூர் நோக்கிப் புறப்பட்டன. சேரர்களின் தனிச்சிறப்பான யானைப் படைகள் அதன் முன்னிலையில் சென்றன. படைகளுக்குத் தலைமை தாங்கிச் சென்ற இரும்பொறையோடு அரிசில் கிழாரும் சென்றார். அவர்களோடு பொன்முடியார் என்ற புலவரும் சேர்ந்துகொண்டார். அக்காலத்தில் படைகளோடு இப்படிப் புலவர்கள் செல்வது வழக்கமாக இருந்தது.
தகடூரை சேர மன்னனின் படைகள் சுற்றி வளைத்தன. தகுந்த காலத்தில் சேரர்களோடு போர் செய்யவேண்டும் என்ற நினைப்பிலும் தன்னுடைய நண்பர்களான சோழர்கள் தனக்கு உதவி செய்ய வருவார்கள் என்று கருதியும் கோட்டைக் கதவை அடைத்துக்கொண்டு உள்ளேயே தன்னுடைய படைகளோடு காத்திருந்தான் அதியமான் எழினி.
போர்க்காலத்தில் தங்களுடைய கால்நடைகளை எதிரிகள் கவர்ந்து வெட்சிப்போர் செய்யக்கூடும் என்பதால், அவற்றை வேறொரு இடத்தில் பாதுகாப்பாக அதியனின் ஆட்கள் வைத்து அவற்றிற்குக் காவலும் போட்டிருந்தனர். அதைப் பற்றிய செய்தியை ஒற்றர்களின் மூலமாகத் தெரிந்து கொண்ட சேரர் படை வீரர்கள், அவற்றைக் கவர்வதற்குத் திட்டம் போட்டனர். இது போன்ற போர்களுக்குச் செல்வதன் முன்பு போர் வீரர்கள் நல்ல நிமித்தத்திற்குக் காத்துக் கிடப்பதுண்டு. ஆனால் அவர்களில் ஒரு வீரன் ‘நாளும் புள்ளும் கேளா ஊக்கமோடு எங்கோன் ஏயினன் – அரசனே சொன்ன பிறகு நல்ல நாளும் புள் நிமித்தமும் பார்ப்பது தேவையில்லாதது, உடனே ஆநிரைகளைக் கவர்வதற்குப் புறப்படுவோம்’ என்று ஊக்கத்தோடு கூறினான்.
இதைக் கேட்டு எழுச்சியுடன் கிளம்பிய சேரர் படைப் பிரிவினர், அதியனின் கால் நடைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று திடீர்த் தாக்குதல் ஒன்றைத் தொடுத்தனர். அங்கிருந்த காவல் வீரர்களால் சேரர் படைகளைச் சமாளிக்க இயலவில்லை. ஆநிரைகளைக் கவர்ந்து கொண்டு தங்களுடைய பாசறைக்குத் திரும்பத் தொடங்கினர் சேர வீரர்கள். ஆனால், இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட தகடூரின் படை வீரர்கள் விரைந்து வந்து சேரர்களை வழிமறித்துப் போரிட்டனர். கடுமையாக நடந்த இந்தப் போரில் சேரர் படை வீரர் கொல்லப்பட்டனர். ஆநிரைகளும் மீட்கப்பட்டன.
இப்படி முதல் போரில் பின்னடவைச் சந்தித்தாலும், சேரர் படைகள் ஊக்கத்தோடு தகடூர் கோட்டையைத் தாக்கும் முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கின. அதன் முதல் படியாக, கோட்டையின் முன்பிருந்த காவல் காட்டை அழிக்க ஆணையிட்டான் சேரமான் இரும்பொறை. சேரனின் முன்னோடிப் படைகள் அதை அணுகின. அதைக் காக்க அதியனால் நியமிக்கப்பட்டிருக்கும் படையோடு சண்டையிட வேண்டியிருக்கும் என்ற எண்ணத்தோடு வந்த சேரர் படைத்தலைவன், அங்கே வீரர்கள் எவரும் இல்லாததைக் கண்டு திகைத்தான்.
அதே நேரத்தில் திடீரென்று கோட்டைக் கதவு திறந்தது, மின்னல் வேகத்தில் வந்த தகடூரின் குதிரைப் படை வீரர்கள் சேரர் படையினரின் இடையே ஊடுருவி அவர்களை வெட்டி வீழ்த்தினர். இந்த தீடீர்த் தாக்குதலால் நிலைகுலைந்த சேரர் படை சிதறி ஓடியது. நொச்சிப்பூவை அணிந்து வந்த தகடூர் வீரர்கள் திறமையாகப் போர் செய்து சேரர்களைப் பின்னுக்குத் தள்ளினர். இதைக் கண்டு கொதிப்படைந்த சேரர் தலைவன், தன்னுடைய படைகளைத் தடுத்து நிறுத்தி அணிவகுத்தான்.
அவனுக்கு ஆலோசனை சொன்ன படை வீரர்களில் ஒருவன் ‘நிலைமை இன்னதென்று ஒற்றர்களை விட்டு அறிந்துவிட்டு நாம் இங்கே போர் செய்ய வந்திருக்க வேண்டும், இந்தத் தாக்குதலைத் தொடர்ந்தால், நம்முடைய முன்னோடிப் படை முழுவதும் அழிந்து போகும், ஆகவே நாம் பின்வாங்கி விடுவோம்’ என்றான். அதற்கு சேரர் தலைவன் சொன்னான்.
பலர் ஏத்தும் செம்மல் உடைத்தாற்பலர்தொழ
வானுறை வாழ்க்கை இயையுமால்அன்னதோர்
மேன்மை இழப்பப்பழிவருபசெய்பவோ
தாமேயும் போகும் உயிர்க்கு (புறத்திறட்டு 1315)
எப்படியும் போகப் போகும் உயிரைக் காத்துக்கொள்ள, பின்வாங்கிச் செல்வது அழியாப் பழியை உண்டாக்கும். அதை விடுத்து, போர் செய்து வீரசொர்க்கம் அடைவது பலரைப் போற்றச் செய்யும் செயல், அதனால் தேவர்களும் தொழும் வாழ்க்கையை அடையலாம். அப்படிப்பட்ட மேன்மையை அடையப் போர் செய்வதே சிறந்தது என்று தன் வீரர்களை ஊக்கப்படுத்தினான். ஆனால் அதற்குள் தகடூரின் குதிரைப் படை கோட்டைக்குள் சென்று மறைந்துவிட்டது. அந்தப் போரும் அத்தோடு முடிவுக்கு வந்தது.
தன்னுடைய படைகளுக்குப் பெருத்த சேதம் விளைவித்த அந்தப் போர்க்களத்தைக் காண வந்தான் சேரமான். அவனோடு அரிசில் கிழாரும் பொன்முடியாரும் வந்தனர். அவர்களைக் கவலையுடன் நோக்கினான் இரும்பொறை. அவனுடைய உள்ளத்தை அறிந்து கொண்ட அவர்கள் சொன்னது.
கலையெனப்பாய்ந்தமாவும்மலையென
மயங்கமர்உழந்தயானையும்இயம்படச்
சிலையலைத்துஉய்ந்தவயவரும்என்றிவை
பலபுறங்கண்டோர் முன்னாள் ;
…..
நாளை நாமே உருமிசை கொண்ட மயிர்க்கண்
திருமுரசிரங்கஊர்கொள்குவமே
‘அரசனே, கவலை கொள்ளாதே, மான் போலப் பாய்ந்து வந்த குதிரைப் படைகளும் வில் வீரர்களும் மலை போன்ற யானைகளைக் கொண்ட நம்முடைய படையை நிலைகுலையச் செய்துவிட்டாலும், இது போன்ற பல போர்களைக் கண்டது நம் படை. ஆகவே நாளை நம்முடைய வெற்றி முரசு ஒலிக்கத்தான் போகிறது, இந்த ஊரை வெற்றி கொள்ளத்தான் போகிறோம்’ என்று ஆறுதல் சொன்னார்கள்.
காவற்காட்டை அழிக்க மேலும் ஒருமுறை முயற்சி செய்தனர் சேர வீரர்கள். இம்முறை கோட்டைக் கதவைத் திறந்து கொண்டுவந்த தகடூரின் காலாட் படையினர், காவற்காட்டைக் காக்க கடுமையாகப் போர் செய்தனர். அவர்களில் ஒரு வீரன், தன்னுடைய வாளால் பலரை வெட்டிப் போட்டு வீரப்போர் செய்தான். சேரர் படை வீரர்களையே ஒரு கட்டத்தில் அதிர்ச்சியடையச் செய்தது அவனுடைய போர் வல்லமை. முடிவில் பல சேர வீரர்கள் அவன் மீது ஆயுதங்களை எய்தனர். அதனால் உடல் முழுவதும் விழுப்புண்கள் ஏற்பட்டு வீழ்ந்தான் அவன்.
‘குழிபல வாயினும் சால்பா னாதே முழைபடு முதுமரம் போலெவ் வாயும் அடை நுழைந் தறுத்த விடனுடை விழுப்புண்’ – பொந்துகள் நிறைந்த முதிய மரத்தைப்போல இவன் உடல் முழுவதும் விழுப்புண்களே உள்ளன. அவை அவனுக்குச் சிறப்பையே தருகின்றன என்று வியந்தார் தமிழ்ப் புலவர் ஒருவர்.
அந்தப் போரில் தகடூர் வீரன் ஒருவன் எறிந்த வேல், சேரர் படைத் தலைவன் ஒருவனைக் கொன்றுவிட்டது. இதை அறிந்த சேர வீரன் ஒருவன், அந்த வேலுக்கு உரியவனைக் கொன்று அந்த வேலை வெற்றிச் சின்னமாகக் கொண்டுவருவேன். இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று சபதம் செய்தான். அதன்படியே வேலுக்குரியவனைக் கொன்று வெற்றியுடன் திரும்பினான் அவன். அன்றைய போர் அத்தோடு முடிவுக்கு வந்தது.
இரு தரப்பிலும் சேதம் அதிகமாகி போர் முற்றுவதைக் கண்ட அரிசில் கிழாரும் பொன்முடியாரும் போரைத் தடுக்க இன்னும் ஒரு முயற்சி செய்ய நினைத்தனர். பெருஞ்சேரல் இரும்பொறையிடம் சென்ற அவர்கள்
கால வெகுளிப்பொறைய; கேள் நும்பியைச்
சாலுந்துணையும்கழறிச் சிறியதோர்
கோல்கொண்டுமேற்சேறல்வேண்டா, அதுகண்டாய்
நூல்கண்டார் கண்ட நெறி (புறத்திரட்டு 776)
காலனைப் போலக் கோபம் கொண்டு எழுகின்ற பொறையனே, என்ன இருந்தாலும் எழினி உன் தம்பி முறையானவன். அவனது அறியாமையைப் போக்குவதே அண்ணன் முறையிலான உன் செயலாகும் எனவே அறிவுடையோரைக் கொண்டு அவனிடம் தக்கது சொல்லச் செய்வதுதான் சரியான வழி, படை கொண்டு போரிடுவது அல்ல என்று கூறினர்.
அதற்கு ஒப்புக்கொண்ட இரும்பொறை, அவர்களைத் தகடூர்க் கோட்டைக்குள் தக்க பாதுகாப்போடு அனுப்பினான். எழினியிடம் சென்ற அவர்கள் அவனுக்குப் பலவிதமாக அறிவுரை சொன்னார்கள். தகடூர்க் கோட்டையை எந்திரப் பறவைகளாலும் கல்லெறியும் கவண்களாலும் விற்பொறிகளாலும் பலப்படுத்தி வைத்திருந்த போதிலும் அவை வலிமையான சேரப் படைகளினால் அழிக்கப்பட்டுவிடும், கோட்டையும் வீழ்ந்துபடும் என்று அவனுக்கு உரைத்தனர்.
போரிட்டு மடியும் வீரர்கள் உடல்களாலும் அவர்கள்மீது விழுந்து மடியும் அவர்களுடைய மனைவிமார்களாலும் போர்க்களம் விரைவில் நிரம்பும் என்றார் பொன்முடியார். ‘இரு தலைப் புள்ளின் ஓருயிர் போல – அதாவது இரு தலைகளை உடைய ஒரு பறவை உண்டு, ஆனால் அதற்கு ஒரே ஒரு வயிறுதான். ஒரே ஒரு உயிர்தான். அதைப் போல சேரமானும் நீயும் ஒருகுடிப் பிறந்தவர்கள், இருவரில் யார் தோற்றாலும் அது சேர வம்சத்திற்குத்தான் அவமானம். ஆற்றில் விழுந்த ஒருவன் ஆற்றின் போக்கோடு நீந்திச் சென்று தப்பிக்க முயல்வதே சரியானதாகும். அதை விட்டுவிட்டு நீரோட்டத்தை எதிர்த்து நிற்க முயல்வது அறிவீனம். அதைப் போல நீ இப்போது சேரனுக்கு அடங்கிப் போவது ஒருவகையில் உனக்கு வெற்றிதான்’ என்றெல்லாம் எடுத்துச் சொன்னார்கள்.
அவர்களின் அறிவுரையை எழினி ஏற்றானா? போர் முடிவுக்கு வந்ததா?
(தொடரும்)
___________
(பின்குறிப்பு : தகடூர்ப் போரைப் பற்றிய வர்ணனைகளும், விவரங்களும் பதிற்றுப் பத்து என்ற சங்க இலக்கியத்தில் மட்டுமல்லாது தகடூர் யாத்திரை என்ற நூலில் விளக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த நூல் இப்போது கிடைக்கவில்லை. அதிலுள்ள சில பாடல்கள் புறத்திரட்டிலும், நச்சினார்க்கினியார் போன்ற உரையாசிரியர்கள் காட்டிய மேற்கோள்களிலும், கலிங்கத்துப்பரணி உரையிலும் கிடைத்துள்ளன. அவற்றைக் கொண்டு எழுதப்பட்டது இந்தக் கட்டுரை).
Excellent. Enjoying this series….
செம. தமிழ் தமிழ் 👍