Skip to content
Home » தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #7 – யானைப் போர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #7 – யானைப் போர்

யானைப் போர்

தகடூர்க் கோட்டையை சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையின் படைகள் முற்றுகையிட்டிருக்கின்றன. உள்ளே அதியமான் எழினி எந்த நேரமும் கோட்டைக் கதவைத் திறந்துகொண்டு சேரர்களோடு போரிட ஆயத்தமாக இருக்கிறான். இந்தப் போரைத் தடுப்பதற்காக புலவர்கள் அரிசில்கிழாரும் பொன்முடியாரும் கோட்டைக்குள் சென்று, அதியனிடம் ‘என்ன இருந்தாலும் சேரமான் உன்னுடைய அண்ணன் முறையைச் சேர்ந்தவன், அவனுக்கு விட்டுக்கொடுத்துச் செல்லக் கூடாதா’ என்று வேண்டுகோள் விடுத்தனர் என்று பார்த்தோம்.

ஆனால் அவர்கள் சொல்லைக் கேட்பதாகத் தெரியவில்லை எழினி. அவனோடு இருந்த மற்ற வேளிர்கள் அவனுக்குத் தூபம் போட்டனர். காவற்காட்டுப்போரில் தான் அடைந்த தோல்விகளால்தான் சேரன் புலவர்களைத் தூது அனுப்பியிருக்கிறான் என்று அதியனுக்குப் போதனை செய்தனர். அதனால் எழினி புலவர்களிடம் ‘சேரன் அவ்வளவு வலிமையுடையவன் என்றா சொல்கிறீர்கள், அப்படிப்பட்ட வலிமை உடையவனை வெல்வதே எனக்குப் பெருமை’ என்று சொல்லி நகைத்தான். ‘தம்பி என்று நினைப்பவன், என்னுடைய நாட்டை நானே ஆளட்டும் என்று ஒப்புக்கொள்ளவேண்டியதுதானே’ என்று சீற்றத்துடன் கூறவும் செய்தான். இம்முறையும் தூது தோற்றுவிட்டதால் வருத்தத்துடன் இரண்டு புலவர்களும் சேரன் பாசறைக்குத் திரும்பினர்.

‘கொல்லிப் பொருந கொடித்தேர்ப் பொறைய ! நின் வளனும் ஆண்மையும் கைவண்மையும்’ நான் அதியனுக்கு எடுத்துச் சொன்னேன் ஆனாலும் அவன் என் பேச்சைக் கேட்கவில்லை என்று அரிசில் கிழார் சேரமானிடம் கூறினார். அதியமானின் முடிவு போரே என்பதைத் தெரிந்துகொண்ட இரும்பொறை, தன்னுடைய யானைப்படைகளை அழைத்து கோட்டையைத் தாக்கும்படி ஆணையிட்டான்.

யானைப்போர்

தமிழகத்தின் மூவேந்தர்களிடமும் யானைப்படை இருந்ததென்றாலும், காடுகள் நிறைந்த சேரநாட்டின் யானைப் படைகளுக்குத் தனிச்சிறப்பு உண்டு. வலிமையான அந்த யானைகள், மிச்சமிருந்த காவற்காட்டை அழித்து தகடூர்க் கோட்டையை நோக்கி முன்னேறின. யானைப்படை வருவதை அறிந்த தகடூரின் படைத்தலைவர்களில் ஒருவன், குதிரைப்படைக்குத் தலைமை தாங்கி கோட்டைக்கதவைத் திறந்து தன் வீரர்களுடன் வெளியே வந்தான். இரு தரப்பினருக்கும் கடும் போர் மூண்டது. குதிரைகள் யானைப் படையினுள் ஊடுருவின. வேல்களாலும் வால்களாலும் யானைகளில் மேலிருந்த வீரர்களை அதியனின் வீரர்கள் பலர் கொன்றார்கள். அதேபோல யானை மேலிருந்து குதிரைப்படை வீரர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தினர் சேர வீரர்கள்.

போரில் யாருக்கும் வெற்றி-தோல்வி இல்லாவிட்டாலும் அன்றைய தினத்தின் முடிவில் யானைப்படையின் முன்னேற்றம் தேக்கப்பட்டது. அப்படி யானைகளைத் தேக்கிவிட்டு கோட்டைக்குள் திரும்பிய ஒரு வீரனைப் பார்த்து கோட்டைக்காவலன் ஒருவன் ‘சேர வீரர்களை வெட்டி வீழ்த்தியது சரி, ஆனால் யானைகளையும் வீழ்த்தியிருக்கலாமே’ என்று கேட்டான். அதற்குப் பதிலளித்த குதிரைப்படை வீரன், ‘தானும் விலங்கால் ஒருகைத்தால் வெல்கை நன்றென்னும் நலங்காணேன் நாணுத் தரும் (புறத்திரட்டு 1320)’ என்றானாம். அதாவது யானை என்பது ஒரு விலங்கு, அதிலும் ஒரு கை மட்டுமே உடையது. அப்படிப்பட்ட யானையை வீழ்த்துவது என் வீரத்திற்கு நாணத்தைத் தரும் செயல் என்றான்.

அடுத்த நாள், யானைகள் மீண்டும் கோட்டையைத் தாக்க முன் சென்றன. தங்கள் துதிக்கையில் மரங்களை எடுத்துக்கொண்டு கோட்டைக் கதவுகளை அவை இடிக்க முயன்றன. மறுபடியும் அதியனின் குதிரைப்படை வீரர்கள் யானைப் படையைத் தாக்க ஆரம்பித்தனர். முந்தைய நாள் போல இம்முறை யானைகளை அவர்கள் விட்டுவைப்பார்கள் என்று தோன்றாததால், சேரர் படைத்தலைவன் தன் வீரர்களுக்கு ஒரு ஆணை பிறப்பித்தான்

கட்டி யன்ன காரி மேலோன் தொட்டது கழலே கையது வேலே
சுட்டி யதுவும் களிறே ; யொட்டிய
தானை முழுதும் விடுத்துநம் யானை காமினவன் பிறிதெறி யலனே (புறத் – 1372)

கரிய நிறமுடைய குதிரைகளின் மேலே ஏறி வருகிறவர்களைப் பாருங்கள். பல போர்களில் வென்றதற்கு அடையாளமாக வீரக்கழலைக் காலில் அணிந்திருக்கிறார்கள். அவர்கள் கையிலிருக்கும் வேல்களுக்குக் குறி நம்முடைய யானைகளே ஆகும். நம்முடைய படைபலத்தை முழுவதுமாகக் காட்டி நம் யானைகளைக் காப்பாற்றுங்கள் என்றான் அவன். அப்படியும் அதியனின் வீரர்கள் எறிந்த வேல்கள் யானைகளைக் காயப்படுத்தி வீழ்த்தின. இதன் காரணமாகப் பயங்கரமாகப் பிளிறிக்கொண்டு யானைகள் பின்னே திரும்பி சேரர்படைகளுக்கு சேதத்தை விளைவிக்க ஆரம்பித்தன. ஆயினும் தங்கள் திறமையால் அவற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்து கோட்டைக்கதவுகளை இடிக்க அவற்றை உந்தித்தள்ளினர் சேர வீரர்கள். இதனால் கோட்டையின் பல இடங்களில் சேதம் ஏற்பட்டு விரிசல் உண்டானது. அத்தோடு அன்றைய போர் முடிந்தது.

கோட்டை பலவீனமாகத் தொடங்கிவிட்டதை அறிந்த அதியனின் பக்கமிருந்த வேளிர் மன்னன் ஒருவன், அன்றிரவு தன்னுடைய வீரன் ஒருவனை அழைத்தான். ‘வீரனே, சேரர் படைபலம் அதிகம். நம்முடைய அரண்களுக்கு அவர்கள் சேதம் விளைவிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆகவே நீ இப்போதே சென்று சேரர்களின் முக்கியப் படைத்தலைவனையும் முடிந்தால் சேரமானையும் யாருக்கும் தெரியாமல் கொன்றுவிட்டு வந்துவிடு. இதனால் நமது வெற்றி எளிதாகிவிடும்’ என்று கூறினான். இதைக்கேட்ட அந்த வீரன் சீறி எழுந்தான்.

பரவைவேற் றானைப் பகலஞ்சு வேனா
இரவே எறியென்றாய் என்னை – விரைவிரைந்து
வேந்தன்நீ யாயினாய் அன்றிப் புகுவதோ
போந்தென்னைச் சொல்லிய நா (புறத் – 3̀19)

‘பகலில் சென்று எதிரியோடு போர் செய்யச் சொல்லியிருந்தால் உன்னுடைய ஆணையை உடனே நிறைவேற்றியிருப்பேன். ஆனால் என்னை இரவினில் சென்று ஒரு இழிசெயலைச் செய்யச் சொல்லுகிறாய். தூங்குகிற பகைவர்களைக் கொல்வது எனக்கு ஆண்மையாகுமா? என்னுடைய ஆண்மையைப் பழித்த நீ என்னுடைய அரசன் என்பதால் இந்த அளவோடு உன்னை மன்னித்து விடுகிறேன். வேறு யாராவது என்னிடம் இப்படிச் சொல்லியிருந்தால் அவனுடைய நாக்கை வெட்டி வீழ்த்தியிருப்பேன்’ என்று முழங்கினான் அவன். ஒரு சாதாரணப் படை வீரனுக்கு இருந்த வீர உணர்ச்சியும் அற உணர்ச்சியும் இந்தச் செயலால் விளங்குகிறதல்லவா.

மறுநாள் காலையில், கோட்டையில் ஆங்காங்கே வெடிப்பு கண்டிருந்த பகுதிகளை அதியனின் வீரர்கள் வந்து பார்த்தனர். அந்த வெடிப்பின் மூலம் வந்த சூரிய ஒளி ஒரு படைத்தலைவனின் வேலின் மீது பட்டு பிரதிபலித்தாம். ‘அதிராது அற்ற நோக்கு ஞாயிலுள் கதிர்விடு சுடரின் விளங்கும் வெள்வேள்’ என்று அந்த வீரனின் வேலைப் பற்றியும் அந்த நிலையிலும் கலங்காமல் கோட்டையைக் காக்க முனையும் அவன் திறனைப் பற்றியும் புலவர் ஒருவர் பாடினார்.

அதே சமயம் கோட்டையின் சேதத்தை அறிந்த சேரமான் தன்னுடைய படைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து கோட்டையைத் தாக்க ஆணையிட்டான். இதனால் கோட்டையின் பல பகுதிகளைக் காவல் காத்துக்கொண்டிருந்த தலைவர்கள் சேரர் படைகளோடு போரிட நேரிட்டது. சேரர்களின் வில்வீரர்களும் வேல் வீரர்களும் கோட்டையின் மேல் பொறிகளைச் செலுத்த முயன்ற வீரர்களை அழித்தபடி முன்னேறினர். கோட்டைக்குள் இருந்து எறியப்பட்ட வேல்கள் பல சேர வீரர்களின் உயிரைக் குடித்தன. அதியனின் படைத்தலைவன் ஒருவன் வீரப்போர் புரிந்து சேரர்களின் யானை ஒன்றை வெட்டி வீழ்த்தினான். ஆனால் சேரர் படைத்தலைவன் எறிந்த வேல் ஒன்றால் மாண்டுபோனான். அத்தோடு அன்றைய போர் முடிந்தது.

அடுத்த நாள் போர் தொடங்கியபோது, கோட்டைக்குள் இருந்து வீரமிக்க ஒருவன் முன்வந்து சேரர்களோடு போர் புரிய நின்றான். அவனைக் கண்டு வியந்த சேரர் படைத்தலைவன் அவன் யார் என்று கேட்டான். அதற்கான பதிலை அரிசில்கிழார் ஒரு பாடலின் மூலமாகச் சொன்னார்

தோல்தா தோல்தா என்றி; தோலொடு
துறுகல் மறையினும் உய்குவை போலாய்;
நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி
அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்
பேரூர் அட்ட கள்ளிற்கு
ஓர்இல் கோயின் தேருமால் நின்னே (புறநானூறு 300)

‘படைத்தலைவனே, கேடயம் மட்டுமல்ல, பெரும் பாறாங்கல்லை வைத்து உன்னை மறைத்துக்கொண்டாலும் நீ தப்ப முடியாது. நேற்று யானை ஒன்றை வீழ்த்தி அதன்பின் உன்னால் வேல் எறிந்து கொல்லப்பட்டவனுடைய தம்பி இவன். உன்னைத்தான் தேடுகிறான்’ என்று எச்சரித்தார் புலவர். இந்நிகழ்வையே புறத்திறட்டும் ‘பரூமத யானை பதைப்ப நூறி அடுகளத் தொழிந்தோன் தம்பி! தொடுகழல் நொச்சித் தெரியல் நெடுந்தகை! அச்சம் அறியான் ஆரணங்கினனே’ (புறத் 1342) என்று படம்பிடித்துக் காட்டுகிறது. ஆயினும் சேரர் படைத்தலைவனும் அவன் வீரர்களும் இதைக் கேட்டு அஞ்சவில்லை. முன்னேறி அதியனின் படைகளைத் தாக்கத் தொடங்கினர்.

நெடுங்கோளாதன்

தகடூரில் ஒரு மூதாட்டி வசித்து வந்தாள். அவளுக்கு நெடுங்கோளாதன் என்ற ஒரு மகன் இருந்தான். அன்றைய போரில் அஞ்சாமல் சேரர் படைகளை எதிர்த்துப் போரிட்டான் அவன். ‘வறுந்தலை முதியாள் அஞ்சுதக் கனளே, வெஞ்சமத்து என்செய்கென்னும் வேந்தர்க்கு அஞ்சல் என்பதோர் களிறீன்றனளே’ என்று பகைவர்களை வெட்டி வீழ்த்திக்கொண்டிருக்கின்ற இவள் மகன் மட்டுமல்ல, இவளும் அஞ்சுதற்கு உரியவள் என்று அவளை ஊர் மக்கள் போற்றினராம். அந்த மூதாட்டிக்கு அவன் ஒருவனே மகன், அவன் மட்டுமே அவளுக்குத் தள்ளாத காலத்தில் துணை. இருந்தாலும் தன் மகன் போர்க்களத்திற்குச் சென்று வீரச்செயல்கள் நிகழ்த்துவதை அறிந்து பெருமையே கொண்டிருந்தாளாம் அவள்

தருமம் ஈதேயாம் தானமும் ஈதேயாம்
கருமமும் காணுங்கால் ஈதாம் – செருமுனையில்
கோள்வாள் மறவர் தலைதுமிய என்மகன்
வாள்வாய் முயங்கப் பெறின் (புறத் – 1403)

தான, தருமங்கள் செய்வது மட்டுமா புண்ணியத்தைத் தரும்? தன்னுடைய கருமத்தைக் கைவிடாதபடி செய்வதும் புண்ணியமே. நாட்டைக் காக்கும் பணியில் என்னுடைய மகன் பகைவர் வாள் பட்டு மடிந்தால் அதுவே எனக்குத் தருமமும் கருமமும் ஆகும் என்று நினைத்தாளாம் அந்த மூதாட்டி. அதுபோலவே நடந்தும் விட்டது. எவ்வளவு பெரிய வீரனானாலும் வலிமைமிக்க சேரர் படையை எதிர்த்து நிற்க இயலுமா? போர்க்களத்தில் நெடுங்கோளாதன் மடிந்தான் என்ற செய்தி அவளை வந்தடைந்தது. அன்றைய போரின் முடிவில் போர்க்களத்திற்குச் சென்றாள் அந்தத் தாய். அவளோடு துணையாகச் சென்றவர்கள் ‘தாயே! அதோ கிடக்கின்றான் உன் மகன்’ என்று அடையாளம் காட்டுகின்றனர்.

எற்கண்டறிகோ? எற்கண்டறிகோ ?
என்மகன் ஆதல் எற்கண்டறிகோ?
கண்ணே, கணை மூழ்கினவே; தலையே,
வண்ணமாலை வாய்விடக் குறைந்தன;

நெஞ்சே வஞ்சரங் கடந்தன குறங்கே
நிறங்கரந்து பல்சரம் நிறைந்தன அதனால்
அவிழ்பூ வம்பணைக் கிடந்த காளை
கவிழ்பூங் கழற்றின் காய் போன்றனனே! (புறத் 1405)

எதைக் கண்டு நான் இவன் என் மகன் என்பதை அறிவேன்? கண்களை கணைகள் குத்திக்கிழித்திருக்கின்றன.. தலை வாளால் வெட்டப்பட்டிருக்கிறது. நெஞ்சிலும் தொடையிலும் உடல் முழுவதும் அம்புகள் துளைத்திருக்கின்றன. இந்த அம்புப் படுக்கையில் கிடக்கும் இவனை என் மகன் என்று எப்படி நான் அறிவேன் என்று புலம்பியபடி தானும் உயிர்துறந்தாளாம் அந்தத் தாய். போரினால் உண்டாகும் அழிவுதான் எத்தனை கொடியது.

போரில் தங்கள் படைக்கு சேதம் அதிகமாவது கண்ட அதியமான் எழினி தானே போருக்குச் செல்வதென்று முடிவெடுத்தான். அன்றிரவு ‘பெருஞ்சோறு’ என்னும் தன் படைகளுக்கு விருந்து அளிக்கும் நிகழ்வை நடத்தினான் எழினி. அந்நிகழ்வில் படைகளோடு தானும் அமர்ந்து அவன் உணவு அருந்தியதை ‘உண்டியின் முந்தான் உடனுண்டான் தண்தேறல்’ என்று புகழ்ந்து பாடினார் புலவர் ஒருவர். மறுநாள் காலையில் அவன் போருக்குப் புறப்படும் தருவாயில் அவனை வழிமறித்தான் அவனுடைய பிரதான படைத்தலைவனான பெரும்பாக்கன் என்பவன். தான் முதலில் செல்வதாகவும் பகைவரை வென்று வருவதாகவும் எழினியிடம் அவன் கோரிக்கை விடுத்தான். அதை ஏற்று பெரும்பாக்கனை அனுப்பிவைத்தான் அதியமான்.

மறுபுறம், அதியன் போருக்கு வருவதைக் கேள்விப்பட்ட பெருஞ்சேரல் இரும்பொறை தானே போர்க்களத்திற்கு வந்து நின்றான். எழினிக்குப் பதிலாக இன்னொருவன் வருவதைக் கண்டு திகைத்த அவன், வருபவன் யாரென்று அரிசில்கிழாரிடன் கேட்டான்.

மெய்ம்மலி மனத்தில் நம்மெதிர் நின்றோன்
அடர்வினைப் பொலிந்த சுடர்விடு பாண்டிற்
கையிகன் தமருன் தையணற் புரவித்
தளையவிழ் கண்ணி யிளையோன் (தொல்காப்பிய உரை)

சுடர் விடுகின்ற தேரில் ஏறி வருபவன் தகடூரின் சேனாதிபதியான பெரும்பாக்கன். இவன் மின்னல் போலப் போர் செய்யக்கூடியவன். வேலினால் கணநேரத்தில் உன்னைக் கொல்லக்கூடியவன் என்று எச்சரித்தார் அரிசில்கிழார். அதைக் கேட்டு நகைத்த சேரமான், தன்னுடைய குதிரையை பெரும்பாக்கனின் முன்னே கொண்டு சென்று அவனோடு மோதினான். இருவருக்கும் ஏற்பட்ட கடுமையான போரின் முடிவில் பெரும்பாக்கன் கொல்லப்பட்டான்.

தொடர்ந்து சேரர் படை வெற்றிமுகத்தில் இருப்பதை அறிந்த எழினி உடனடியாகப் போர்க்களத்திற்கு வந்தான். இருதரப்பிலும் அரசர்கள் முன்னிற்க போர் மிக உக்கிரமாக நடந்தது. சேர வீரன் எறிந்த வேல் ஒன்றினால் படுகாயம் பட்ட அதியமான் களத்தில் வீழ்ந்து மடிந்தான். அதியனின் வீழ்ச்சியைக் கேட்ட தகடூரின் படை சிதறி ஓடியது. சேர வீரர்கள் ‘வெற்றி வேல், வீர வேல்’ என்று வெற்றி முழக்கமிட்டனர். பெரும் வீரனும் வள்ளலுமான அதியமான் மறைந்ததைக் கண்ட சான்றோர்கள் வருந்தினர்.

கன்றுஅமர் ஆயம் கானத்து அல்கவும்
வெங்கால் வம்பலர் வேண்டுபுலத்து உறையவும்
களம்மலி குப்பை காப்பில வைகவும்
விலங்குபகை கடிந்த கலங்காச் செங்கோல்
வையகம் புகழ்ந்த வயங்குவினை ஒள்வாள்
பொய்யா எழினி பொருதுகளம் சேர (புறநானூறு 230)

‘கன்றுகளோடு கூடிய பசுக்களின் கூட்டம் காட்டில் பயமின்றி உலவவும், வெப்பமிக்க பாலை நிலத்தில் வழிப்போக்கர் கொள்ளையருக்கு அஞ்சாமல் செல்லவும், குவியல் குவியலாக நெல் காவலின்றிக் கிடக்கவும் காரணமாக இருந்த வளையாத செங்கோல் உடைய அதியமான் எழினி இறந்துபட்டான். இது கூற்றத்தின் தவறன்றி வேறென்ன ?’ என்று புலம்பினார் அரிசில்கிழார். சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையின் மனத்திலும் மகிழ்ச்சியில்லை. என்ன இருந்தாலும் சேரர் குடியைச் சேர்ந்தவனல்லவா எழினி. அதனால் அதியனின் ஈமச்சடங்குகளைத் தானே முன்னின்று செய்தான் இரும்பொறை. அதியனின் வம்சத்தைச் சேர்ந்த மற்ற ஒருவனுக்கு முடிசூட்டிவிட்டுக் கருவூர் திரும்பினான் சேரமான்.

ஆயினும் இரும்பொறையின் இந்த வெற்றி வரலாற்றின் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட்டது.

‘தகடூர் எறிந்து நொச்சிதந் தெய்திய
அருந்திறல் ஒள்ளிசைப் பெருஞ்சேரல் இரும்பொறை’

பதிற்றுப்பத்தின் பதிகம் இவனை ‘தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை’ என்று புகழ்கிறது.

(தொடரும்)

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

2 thoughts on “தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #7 – யானைப் போர்”

  1. அருமை.
    அத்தனை சாஸ்த்திரங்களிலும் சிறந்து விளங்கிய தமிழினம், உலகத்தை ஒரு குடையின் ஆண்டிருக்க வேண்டிய தமிழினம் எப்படித் தங்களுக்குள் சண்டையிட்டு மிகக் கேவலமாக நடந்து கொண்டது என்பதைப் படிக்கும் போது வருத்தமே மேலிடுகிறது.

Comments are closed.