சாதவாகனப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் தென்னிந்தியாவில் பல அரசுகள் மேலெழுந்தன. வாதாபியைத் தலைநகராகக் கொண்டு அமைந்த சாளுக்கியப் பேரரசு அவற்றில் முக்கியமானதும் வலிமை மிகுந்ததும் ஆகும்.
சாளுக்கிய வம்சத்தில் பொயு 610ல் ஆட்சிக்கு வந்த பெரும் வீரனும் திறமைசாலியுமான இரண்டாம் புலகேசி தன்னுடைய அரசை விரிவாக்க முனைந்து தக்காணத்தில் இருந்த பல அரச வம்சங்களைத் தோற்கடித்தான். போதாதென்று வட பாரதத்தின் சக்கரவர்த்தியாக இருந்த ஹர்ஷவர்த்தனரோடும் மோதத் துணிந்தான்.
புலகேசியின் திறமையான காலட்படைகள் ஹர்ஷரின் படைகளைத் தோற்கடித்ததாக அவன் புகழ்பாடும் ஐஹோளே கல்வெட்டு குறிப்பிடுகிறது. அதன்பின் தன்னுடைய கவனத்தை கிழக்குத் தக்காணத்தின் மீது திருப்பிய புலகேசி வேங்கியை ஆண்டுகொண்டிருந்த விஷ்ணுகுண்டின வம்சத்தவர் மீது போர் தொடுத்தான். அதில் முக்கியப் பங்கேற்றவன் புலகேசியின் தம்பியான குப்ஜ விஷ்ணுவர்த்தனன்.
இந்தப் போரில் விஷ்ணுகுண்டினருக்கு காஞ்சிபுரத்தை ஆண்டுகொண்டிருந்த பல்லவர்கள் உதவி செய்தனர். ஆனாலும் சாளுக்கியர்களே இப்போரில் வெற்றி பெற்றனர். வேங்கியில் தன்னுடைய பிரதிநிதியாக தம்பி விஷ்ணுவர்த்தனனை புலகேசி நியமித்தான். பின்னாளில் கீழைச்சாளுக்கிய வம்சம் விஷ்ணுவர்த்தனனால் தோற்றுவிக்கப்பட்டது.
போரில் வெற்றி பெற்றாலும், தனது எதிரிகளுக்கு உதவிய பல்லவர்கள் மீது புலகேசியின் கோபம் திரும்பியது. தவிர, குண்டூர் பகுதியை வென்று அதனைத் தங்களுடன் இணைத்துக் கொண்டிருந்தனர் பல்லவர்கள். அதனால், காஞ்சியை நோக்கி தன்னுடைய படைகளை அனுப்பி வைத்தான் இரண்டாம் புலகேசி.
அப்போது காஞ்சியை ஆண்டுகொண்டிருந்தவன் சித்திரகாரப்புலி, விசித்திரசித்தன் என்றெல்லாம் அழைக்கப்பட்ட பல்லவன் மகேந்திரவர்மன். பல்துறை நிபுணனான மகேந்திரன் அப்பர் பெருமானின் முயற்சியால் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறியவன். தமிழ்நாட்டுக் கோவில் கட்டும் கலையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தவனும் மகேந்திர பல்லவனே. ஆனால் அவனிடம் படைபலம் அதிகமாக இல்லை. பெரும் எண்ணிக்கையும் வலிமையும் கொண்ட புலகேசியின் படைகளோடு நேரடியாக மோத விரும்பாத மகேந்திரன், காஞ்சியின் கோட்டைக் கதவுகளை மூடி வைத்துவிட்டான். சாளுக்கியப் படைகள் காஞ்சியை முற்றுகையிட்டன. ஆனால் இரு தரப்பும் தங்களுடைய நிலையை விட்டுக்கொடுக்கவில்லை.
‘அழுக்கில்லாத வெண்சாமரங்களையும் கொடிகளையும் பிடித்துக்கொண்டு ஆறு மடங்கு அதிகமான புலகேசியின் படைகள் காஞ்சியை நோக்கிச் சென்றன. அதிலிருந்து கிளம்பிய தூசி, பல்லவராஜனுடைய ஒளியை மங்கச் செய்துவிட்டது. கடல் போல வந்த புலகேசியின் படைகளைக் கண்டு காஞ்சியின் மன்னன் கோட்டைக்குள் புகுந்து கொண்டான்’ என்று புலகேசியின் ஐஹோளே கல்வெட்டு இந்நிகழ்வை வர்ணிக்கிறது.

பல நாட்கள் நீடித்த இந்த முற்றுகையில் யாருக்கும் வெற்றி தோல்வி கிடைக்காததால், புலகேசியின் படைகள் காஞ்சியின் சுற்றுப்புறங்களை நாசம் செய்தன. அதன்பின் புலகேசி தன் படைகளைத் தெற்கு நோக்கிக் கொண்டு சென்றான். உறையூர் அருகே தமிழகத்தின் மூவேந்தர்களையும் அவன் சந்தித்ததாக ஐஹோளே கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘மதநீர் ஓடும் சாளுக்கியர்களது யானைகளால் துள்ளும் மீன்கள் நிறைந்த காவிரியின் நீரோட்டம் தடைப்பட்டு அந்த நதி கடலில் கலக்க முடியாமல் போயிற்று. கதிரவன் போன்ற தன்னுடைய வெப்பத்தால் பனி போன்ற பல்லவர்களுடைய திறனை மங்கச்செய்து, சேர, சோழ, பாண்டியர்களைக் களிப்புறச் செய்தான் புலகேசி’ என்கிறது அந்தக் கல்வெட்டு.
இதனால், மகேந்திரவர்மனின் படைகளை முற்றுகையிட்டு பல்லவர்களின் பகைவர்களாக இருந்த மூவேந்தர்களை மகிழச்செய்தான் என்ற செய்தி வெளிப்படுகிறதே தவிர, பல்லவர்கள் தோல்வி அடைந்தார்கள் என்பது எங்கும் வெளிப்படையாகத் தெரியவில்லை.
அதன்பின் புலகேசியின் படைகள் சாளுக்கிய நாடு திரும்பத் தொடங்கின. காஞ்சிபுரத்திற்கு அருகில் புள்ளலூர் என்ற இடத்தின் அருகே அந்தப் படைகள் சென்று கொண்டிருந்தபோது, பல்லவர்களின் படைகள் அவர்கள் மீது மின்னல் வேகத்தாக்குதல் ஒன்றைத் தொடுத்தன.
இந்தப் போர் தொடங்கி பல்லவர்களின் போர் வியூகம் இதே முறையில் இருந்ததை நாம் தொடர்ந்து பார்க்கலாம். அதாவது, பகைவர்களின் படைகளை நன்றாகத் தங்களுடைய நாட்டிற்குள் உள்ளிழுத்து அவர்கள் எதிர்பாராத விதத்தில் தாம் விரும்பும் இடத்திலும் நேரத்திலும் திடீர்த்தாக்குதல் நடத்தி அவர்களைத் தோற்கடிப்பது என்பது பல்லவர்களின் போர் வியூகமாக இருந்தது. நெடுந்தூரம் வந்து, முற்றுகையினாலும் அதன் பின் உறையூர் நோக்கிச் சென்று திரும்பிய களைப்பினாலும் சோர்ந்திருந்த புலகேசியின் படைகளால் பல்லவர்களின் இந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை.
இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் காசக்குடிச் செப்பேடுகள் ‘மகேந்திரன் தன்னுடைய முக்கியமான எதிரிகளை புள்ளலூரில் தோற்கடித்தான்’ என்று குறிப்பிடுகிறது. அப்போது பல்லவர்களுக்கு இருந்த ‘முக்கியமான’ எதிரிகள் சாளுக்கியர்கள்தான் என்பதால், அந்தப் போரில் தோற்றது புலகேசியின் சாளுக்கியப்படைகளே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புள்ளலூர்ப்போரில் சாளுக்கியர்களுக்கு உதவியாக கங்க மன்னன் துர்விநீதனும் பங்கேற்றான் என்று தெரிகிறது. சாளுக்கியர்களுடன் மண உறவு கொண்டிருந்த துர்விநீதன் அவர்களுக்கு உதவ வந்ததில் வியப்பு ஏதும் இல்லை. துர்விநீதனுடைய கல்வெட்டுகள் புள்ளலூர்ப்போரைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. தவிர, ‘சீலாதித்தனது சேனைத் தலைவனான பெத்தணி சத்தியாங்கன், மகேந்திரன் சேனையைக் கலக்கிவிட்டு வீர சுவர்க்கம் அடைந்தான்’ என்று கங்க மன்னனுடைய கன்னடக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது.
இதனால், இந்தப் படையெடுப்பில் பல்லவ சேனைகள் ஒருபுறமும் சாளுக்கிய-கங்க சேனைகள் மற்றொரு புறமும் போரிட்டிருக்கிறது என்பது தெளிவு. காஞ்சி முற்றுகையைப் பற்றி பல்லவ ஆவணங்களிலும் இந்த புள்ளலூர்ப் போரைப் பற்றி சாளுக்கிய ஆவணங்களிலும் குறிப்பு ஏதும் இல்லை. அதற்கான காரணங்களை ஊகிப்பதும் எளிது.
பல்லவர்களுக்கு எதிரான தன்னுடைய முதல் படையெடுப்பில் முழு வெற்றியும் அடையாமல் கடைசிப் போரில் தோல்வியுற்றுத் திரும்பிய புலகேசி, மீண்டும் ஒரு படையெடுப்பிற்கான ஆயத்தங்களைச் செய்தான். இதற்கிடையில் பொயு 630ல் பல்லவன் மகேந்திரவர்மனை அடுத்து அவன் மகனான முதலாம் நரசிம்ம வர்மன் காஞ்சி அரியணையில் ஏறினான். நரசிம்மனும் பெரிய வீரன். மல்லர்களைத் தோற்கடித்து மகாமல்லன் என்ற விருதுப்பெயரை அடைந்தவன்.
அவனுக்கு எதிராக சாளுக்கியப் படைகள் மீண்டுமொருமுறை தமிழகத்தை நோக்கி வந்தன. பல்லவர்களின் சிற்றரசர்களும் ஆந்திரத்தின் தென்பகுதியை ஆண்டுகொண்டிருந்தவர்களுமான பாணர்களைத் தோற்கடித்த பின் பல்லவ நாட்டிற்குள் புகுந்தன புலகேசியின் படைகள். பல்லவப் படைகளுக்குத் தளபதியாக இருந்தவர் பின்னால் சிறுத்தொண்ட நாயனார் என்று புகழ் பெற்ற பரஞ்சோதி.
இம்முறையும் சாளுக்கியப் படைகளை பல்லவநாட்டில் உட்புக விட்ட பல்லவர்கள், காஞ்சிபுரத்திற்கு அருகில் பரியலம் என்ற இடத்தில் அவர்களைத் தாக்கினர். அங்கே நடைபெற்ற கடுமையான போரில் சாளுக்கியப் படைகள் தோற்கடிக்கப்பட்டுப் பின்வாங்கின. அவர்களைத் துரத்திச் சென்ற பல்லவப் படைகள் மணிமங்கலம், சூரமாரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற போர்களிலும் சாளுக்கியப்படைகளைத் தோற்கடித்துத் துரத்தின.
இந்த மூன்று இடங்களில் மணிமங்கலம் இன்றும் அதே பெயரில் வழங்குவதால் தெளிவாகத் தெரிகிறது. பரியலம், சூரமாரம் ஆகிய ஊர்கள் இருந்த இடங்களின் விவரம் தெரியவில்லை.
இந்த வெற்றிகளைப் பல்லவர் செப்பேடுகள் பலவிதமாகப் புகழ்கின்றன.

முதலாம் பரமேஸ்வர வர்மனின் கூரம் செப்பேடுகள் ‘நரசிங்கப் பெருமானே தோன்றியது போல் வந்தவனும் பரியலம், மணிமங்கலம், சூரமாரம் ஆகிய இடங்களில் புலகேசி தோற்று ஓடியபோது வெற்றி எனும் மொழியை அவன் முதுகாகிய ஏட்டில் எழுதியவனுமான நரசிம்மவர்மன்’ என்று இப்போரில் நரசிம்மவர்மன் அடைந்த வெற்றிகளைக் குறிப்பிடுகிறது.
இதிலிருந்து பல்லவப் படைகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் புலகேசி புறமுதுகு காட்டி ஓடியது புலப்படுகிறது. இரண்டாம் நந்திவர்மனின் உதயசந்திரமங்கலச் செப்பேடுகள் ‘வாதாபியை அழித்த அகத்தியனைப் போன்ற நரசிம்மன், வல்லப அரசனான புலகேசியை பரியலம், மணிமங்கலம், சூரமாரம் போன்ற இடங்களில் வென்றவன்’ என்று குறிப்பிடுகிறது. அகத்தியர் வாதாபி என்ற அரக்கனை அழித்தது போல நரசிம்மன் வாதாபி நகரத்தை அழித்தது இங்கே சிலேடையாக எழுதப்பட்டிருக்கிறது.
இந்த மூன்று இடங்களிலும் ஒன்றன் பின் ஒன்றாக தோல்வியைச் சந்தித்து சாளுக்கிய நாடு நோக்கி ஓடிய புலகேசியின் படைகளை பரஞ்சோதியின் தலைமையிலான பல்லவப் படைகள் விடாமல் துரத்திச் சென்று சாளுக்கியத் தலைநகரான வாதாபி வரைக்கும் சென்றன. அங்கே நடந்த போரில் புலகேசி கொல்லப்பட்டதும் வாதாபி தீக்கிரையாகப்பட்டதும் வரலாறு.
‘மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வாதாவித்
தொன் நகரம் துகள் ஆகத் துனைகெடும் கை வரை உகைத்துப்
பல் மணியும் நிதிக் குவையும் பகட்டு இனமும் பரித் தொகையும்
இன்னை எண்ணிலகவர்ந்தே இகல் அரசன் முன் கொணர்ந்தார்’
என்று பெரியபுராணம் பரஞ்சோதி வாதாபி சென்று பெற்ற வெற்றியைக் குறிப்பிடுகிறது. அங்கே நரசிம்மவர்மன் தன் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் நிறுவிய ஜெயஸ்தம்பத்தை இன்றும் காணலாம். இந்நிகழ்வுகள் எல்லாம் பொயு 642ல் நடந்தது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
இருப்பினும் சாளுக்கியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையேயான பகை இத்துடன் தீர்ந்துவிடவில்லை.
(தொடரும்)