Skip to content
Home » தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #9 – நெல்வேலி

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #9 – நெல்வேலி

நெல்வேலி

பொயு 642ம் ஆண்டு பரஞ்சோதியின் தலைமையில் சென்ற பல்லவப் படைகள் வாதாபி நகரை நிர்மூலமாக்கியதையும் அந்தப் போரில் இரண்டாம் புலகேசி கொல்லப்பட்டதையும் பார்த்தோம். நரசிம்மவர்ம பல்லவனுக்கு ‘வாதாபி கொண்டான்’ என்ற பெயரை அளித்த இந்தக் கடுமையான போரினால் பெரும் பின்னடைவைச் சந்தித்த சாளுக்கியப் பேரரசில் அதன்பின் சில ஆண்டுகள் பெரும் குழப்பம் நிலவியது.

புலகேசியின் மகன், பெயரன், மருமகள் என்று அடுத்தடுத்து சில பலகீனமான அரசர்கள் அந்த அரசின் ஆட்சிப்பொறுப்பில் இருந்தனர். பொயு 655இல் இரண்டாம் புலகேசியின் மகன்களில் ஒருவனான முதலாம் விக்கிரமாதித்தன் பட்டத்திற்கு வந்தான். அவனுடைய கல்வெட்டுகள் ‘விக்கிரமாதித்தன் தன் தந்தையின் ஆட்சியுரிமையை தன்னுடைய பலத்தால் அடைந்தான். மூன்று அரசர்களை வென்று தன் உரிமையை நிலைநாட்டினான்’ என்றெல்லாம் கூறுகின்றன. இவனும் தன் தந்தையைப் போலவே வீரனாகவும் வலிமை உடையவனாகவும் இருந்தான் என்பது இந்தக் குறிப்புகளால் தெரிகிறது.

பல்லவர்களால் தங்கள் கோ நகரான வாதாபி அழிக்கப்பட்டது விக்கிரமாதித்தனின் மனதில் ஆறாத வடுவாக இருந்தது என்பது அவனுடைய பல கல்வெட்டுக் குறிப்புகளால் தெரிகிறது. பல்லவர்களின் செயலுக்குப் பழிதீர்க்க நினைத்த விக்கிரமாதித்தன் ஒரு வலுவான படையைத் திரட்டிக்கொண்டு தகுந்த சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

இதற்கிடையில் பல்லவநாட்டிலும் ஆட்சி மாற்றங்கள் நடந்திருந்தன. நரசிம்மவர்மனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அவனது மகன் இரண்டாம் மகேந்திரவர்மன் இரண்டு ஆண்டுகளிலேயே மறைந்துவிட, மகேந்திரனின் மகனான பரமேஸ்வரவர்மன் பொயு 670இல் அரியணை ஏறினான். அதே சமயத்தில் தென் தமிழகத்தில் பாண்டியப் பேரரசும் வலிமை அடைந்துகொண்டிருந்தது.

தன்னுடைய பாட்டனாரைப் போல பெரும் படை ஒன்றை பரமேஸ்வரவர்மன் வைத்திருக்கவில்லை என்று தெரிகிறது. பெரும் கலையார்வம் கொண்ட பரமேஸ்வரவர்மன், கோவில்களைக் கட்டுவதில் கவனம் செலுத்தினான். இந்த நிகழ்வுகளைக் கவனித்துக்கொண்டிருந்த விக்கிரமாதித்தன், பொயு 673 வாக்கில் பல்லவ நாடு நோக்கிப் படையெடுத்தான்.

சாளுக்கியப் பெரும் படையொன்று காஞ்சியை அணுகுவதை அறிந்துகொண்ட பரமேஸ்வரவர்மன் நாம் முன்பே பார்த்த பல்லவர்களின் போர் வியூகத்தையே இப்போதும் பயன்படுத்தினான். விக்கிரமாதித்தனை எதிர்க்கக்கூடிய படை வலிமை இல்லாததால், தன் தலைநகரான காஞ்சியை விட்டு நீங்கி வெளியே சென்றுவிட்டான் பல்லவன். எதிர்ப்பேதும் இல்லாமல் எளிதாகக் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றினான் விக்கிரமாதித்தன்.

கத்வல் செப்பேடுகள்
கத்வல் செப்பேடுகள். எபிக்ராபியா இண்டிகா – தொகுதி 10

‘ஶ்ரீவல்லப விக்கிரமாதித்தன், நரசிம்மவர்மனின் புகழை அழித்தான், மகேந்திரனின் வலிமையை முறித்தான், ஈஸ்வரனை (பரமேஸ்வர வர்மனை) தன் அரசியல் அறிவால் வீழ்த்தினான், தென்னகத்தின் பேரழகியான காஞ்சிபுரம் என்னும் கன்னியின் ஒட்டியாணத்தை இறுகப் பிடித்து அவளைக் கைக்கொண்டான். ‘ரணரஸிகனான’ (போர்களில் விருப்பமுள்ள) அவன் தன்னுடைய வலுவான தோள்களால் பல்லவர்களை வென்றான், மாமல்லனின் குடும்பத்தைத் தோற்கடித்த அவனுக்கு ‘ராஜமல்லன்’ என்ற பெயர் பொருத்தமானதன்றோ. ஈஸ்வர-போதிராஜனை (பரமேஸ்வரவர்மனை) தோற்கடித்து பெரும் கோட்டைச் சுவர்களை உடையதும் உடைக்கக் கடினமானதும் ஆழமான அகழிகளை உடையதுமான தென்னகத்தின் ஒட்டியாணமான காஞ்சி நகரைக் கைப்பற்றினான்’ என்று இந்த வெற்றியைப் பற்றி அவனுடைய கத்வல் செப்பேடுகள் புகழாரம் சூட்டுகின்றன.

நரசிம்மனைத் தனியாகக் குறிப்பதிலிருந்தும் மாமல்லனின் குடும்பத்தைத் தோற்கடித்தேன் என்று குறிப்பாக இந்தச் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டிருப்பதிலிருந்தும் நரசிம்மவர்மன் மீதும் பல்லவர்கள் மீதும் அவனுக்கு இருந்த ஆத்திரத்தின் தன்மையை அறிந்துகொள்ளலாம்.

ஆயினும், காஞ்சிபுரத்திற்கோ அருகில் உள்ள மாமல்லபுரத்தின் கலைச்செல்வங்களுக்கோ எந்தக் கெடுதலும் சாளுக்கியர்களால் நேரவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பெருந்தன்மையோடு நடந்துகொண்ட விக்கிரமாதித்தன், தன் தந்தையைப் போலவே தமிழகத்தின் தென் பகுதியை நோக்கித் தன் படையைச் செலுத்தினான். சோழர்களின் தலைநகராக இருந்த உறையூரை அடைந்து அங்கே சில காலம் தங்கியிருந்தான் அவன். அப்போது வெளியிட்டதே நாம் மேலே பார்த்த கத்வால் செப்பேடுகள்.

அந்தச் செப்பேடுகளில் குறிப்பிடப்பட்ட நாட்குறிப்புகளிலிருந்து அது வெளியிடப்பட்ட சரியான தேதி (25-04-674) கிடைக்கப்பெறுகிறது. ‘சோழிக நாட்டின் உரகபுரத்திலிருந்து’ இந்தச் செப்பேடுகளை அவன் அளித்ததாக அதிலுள்ள குறிப்புத் தெரிவிக்கிறது. இதனால் வட தமிழ்நாட்டிலிருந்து உறையூர் வரையிலான பகுதிகளை அவன் கைப்பற்றிவிட்டதை நாம் அறிந்துகொள்ளலாம்.

அத்தோடு தன் திக்விஜயத்தை முடித்துக்கொண்டு சாளுக்கிய நாட்டிற்கு விக்கிரமாதித்தன் திரும்பியிருந்தால் வரலாறு வேறு திசையில் சென்றிருக்கும். ஆனால் ஆசை யாரை விட்டது? அகலக்கால் வைக்கத் தொடங்கிய விக்கிரமாதித்தன், பாண்டியர்கள் மீது படையெடுத்தான்.

பாண்டிய நாட்டில் அப்போது நெடுமாற பாண்டியன் ஆட்சி செய்துகொண்டிருந்தான். திருஞான சம்பந்தரால் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறியவனும் சிவபக்திச் செல்வனுமான நெடுமாறன், 63 நாயன்மார்களில் ஒருவராக வணங்கப்படுபவன். அதே சமயம் பெரிய வீரனும் கூட. சாளுக்கியப் படைகளை பாண்டிய நாட்டிற்குள் உட்புக விடாமல் நாட்டின் எல்லையிலேயே, புதுக்கோட்டைக்கு அருகில் இருந்த நெல்வேலி (தற்போது நெய்வேலி என்று வழங்கப்படும்) என்ற இடத்தில் சந்தித்தான் நெடுமாறன்.

இந்தப் போரைப் பற்றி சேக்கிழார் பெரிய புராணத்தில் ஐந்து பாடல்களில் குறிப்பிடுகிறார்.

ஆய அரசு அளிப்பார் பால் அமர் வேண்டி வந்தேற்ற
சேய புலத் தெவ்வர் எதிர் நெல்வேலிச் செருக் களத்துப்
பாய படைக் கடல் முடுகும் பரிமாவின் பெரு வெள்ளம்
காயும் மதக் களிற்றின் நிரை பரப்பி அமர் கடக்கின்றார்.
(பெரிய புராணம் – நின்ற சீர் நெடுமாற நாயனார் புராணம்)

போரினை வேண்டி நெடுந்தூரத்தில் இருந்து வந்த பகைவர்களோடு நெல்வேலிப் போர்க்களத்தில் நெடுமாறன் போரிட்டான். கடல் போன்று பரவிய அவர்களின் படையில் இருந்த வெள்ளம் போன்ற குதிரைப் படையையும் சினத்தோடு வந்த யானைப் படையையும் கடந்தான் (அழித்தான்) அவன் என்கிறார் சேக்கிழார். ‘போரினை வேண்டி வந்தவர்கள்’ என்று குறிப்பாகச் சொல்வதால், இந்தப் போர் நெடுமாற பாண்டியன் விரும்பியதல்ல, எதிரிகள் போரை வேண்டி வந்ததால் தற்காப்புக்காகவே பாண்டியர்கள் போரிட நேர்ந்தது என்பதே இதன் மூலம் அவர் உணர்த்துவது.

மேலும் அவர் சொல்வது, இருபக்கப் படைகளிலும் போரிட்ட வீரர்கள் வீழ்த்திய யானைகளின் உடல் துண்டுகளும் குதிரைகளின் அறுபட்ட உடல்களும் போர்க்களம் முழுவதும் நிரம்பிக் கிடந்தன. அவற்றோடு போர்வீரர்களின் தலைகள் மலைகளாகக் குவிந்து கிடந்தன. ரத்த ஆறு கடல்போல ஓடியது. முன்பு கடலைத் தடுக்க உக்கிரபாண்டியர் வேல் எறிந்தது போல இப்போதும் எறிய வேண்டுமோ என்று எண்ணுமாறு இருந்தது அந்தக் குருதிக் கடல்.

வெற்றிபெற்ற குதிரைகள் களிப்பால் கனைத்தன. மலைபோன்ற யானைகள் பிளிறின. வீரர்கள் கோஷமிட்ட ஒலிகளும் இவற்றோடு சேர்ந்து கொண்டு ஊழிக்காலத்தில் மேகங்கள் முழக்கமிடுவதுபோல ஒலித்து அச்சத்தை ஏற்படுத்தியது. அத்தோடு வீரர்களின் படைக்கலங்கள் எறியப்படும் ஓசையும், மோதும் ஓசையும் சேர்ந்துகொண்டது. தீப்பொறி பறக்க வாள்களும் வேல்களும் மோதிக்கொண்டன. அவற்றால் வெட்டுண்ட உடல்கள் போர்க்களத்தில் வீழ்ந்துகிடந்தன. பூதங்களும் பேய்களும் அவற்றை உண்டு கூத்தாடின என்றெல்லாம் இந்தக் கோரமான போரின் காட்சிகளை விவரிக்கிறார் சேக்கிழார். அப்படிப் பட்ட கொடிய போரில்

பனை நெடுங்கை மதயானைப் பஞ்சவனார் படைக்குஉடைந்து
முனை அழிந்த வடபுலத்து முதல் மன்னர் படைசரியப்
புனையும் நறும் தொடை வாகை பூழியர் வேம்புடன் புனைந்து.

பனை போன்ற துதிக்கைகளை உடைய மதயானைகளைக் கொண்ட பாண்டியரின் படைகளை எதிர்க்க இயலாமல் வடபுலத்திலிருந்து வந்த சாளுக்கியப் படைகளின் படை சிதறி ஓடியது என்றும் போரில் வெற்றி பெற்றதால் நெடுமாறன் பாண்டியருக்கு உரிய வேப்ப மாலையோடு வெற்றிக்கு உரிய வாகைப் பூவையும் சூடிக்கொண்டான் என்றும் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.

இந்தப் போர் நெடுமாறனின் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியில் (பொயு 674) நடந்ததால் அவனுடைய மகனும் இப்போரில் பங்கு கொண்டிருக்கவேண்டும். சடையன், மாறன் என்று மாறி மாறிப் பெயர் சூட்டிக்கொண்ட பாண்டிய வம்சத்தில் கோ சடையன் என்று பெயர் பெற்ற அவன், இந்தப் போரில் ரணரஸிகன் என்று தன்னை அழைத்துக்கொண்ட விக்கிரமாதித்தனைத் தோற்கடித்ததால் ரணதீரன் என்ற பெயரைப் பெற்றான்.

கடல் போன்ற சாளுக்கியப் படைகளை அனாயாசமாகத் தோற்கடித்த நெடுமாறனின் இந்த வெற்றி ‘வில்வேலிக் கடல்தானையை நெல்வேலிச் செருவென்றும்’ என்று பாண்டியர்களின் வேள்விக்குடிச் செப்பேடுகளும், ‘வில்லவனை நெல்வேலிஉம்…….. புறங்கொண்ட பராங்குசன்’ என்று சின்னமனூர்ச் செப்பேடுகளும் குறிப்பிடுகின்றன.

வேள்விக்குடிச் செப்பேடுகள்
வேள்விக்குடிச் செப்பேடுகள்
சின்னமனூர் (பெரிய) செப்பேடுகள்
சின்னமனூர் (பெரிய) செப்பேடுகள்

இங்கே வில்வேலி என்பது சாளுக்கியப் படைத் தலைவர்களில் ஒருவனாக இருக்கலாம். வில்லவன் என்பது வல்லபன் என்பதன் திரிபு. வல்லபர்கள் என்பது சாளுக்கியர்களின் பொதுப்பெயர். ஆகவே இந்தச் சொல் என்ற சாளுக்கியர்களைக் குறிப்பிடுகிறது என்பது ஆய்வாளர்களின் கருத்து.

நெல்வேலிப் போர் சாளுக்கியர்களோடு நடந்ததுதானா என்று சிலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். ஆனால், வடபுலத்திலிருந்து அக்காலத்தில் வந்த ‘கடல் போன்ற’ சேனை சாளுக்கியர்களுடையது மட்டுமே என்பதாலும், பலர் இந்தப் போரை சிறப்பித்துக் குறிப்பிட்டிருப்பதாலும் இந்த நெல்வேலிப் போர் பாண்டியன் நெடுமாறனுக்கும் சாளுக்கியன் விக்கிரமாதித்தனுக்கும் நடந்ததே என்பதில் சந்தேகமில்லை.

‘நிறை கொண்ட சிந்தையால் நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்’ என்று சுந்தரமூர்த்தி நாயனாரும் இப்போரைச் சிறப்பாகக் குறிப்பிட்டு பாண்டியன் நெடுமாறனுக்குப் புகழாரம் சூட்டுகிறார்.

நெல்வேலியில் தோற்றுத் திரும்பி உறையூர் அடைந்த பிறகு தன்னுடைய நாட்டிற்குத் திரும்ப முனைந்தான் விக்கிரமாதித்தன். அதன்பின் என்ன நடந்தது?

(தொடரும்)

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *