‘எண்ணற்ற வீரர்களும் யானைகளும் குதிரைகளும் நடந்து சென்றதால் கிளம்பிய தூசி சூரியனின் வெம்மையைக் குறைத்து, அதன் ஒளியை சந்திரனின் ஒளியைப் போல மங்கச்செய்தது. போர் முரசுகளின் ஒலி இடியின் ஓசையைப் போல பயமுறுத்தியது. வீரர்களின் உறையிலிருந்து வெளிப்பட்ட வாட்கள் மின்னல் போலக் கண்களைப் பறித்தன.
‘யானைகள் மேகக்கூட்டங்கள் நகர்வதைப் போல நகர்ந்து மழைக்காலத்தை நினைவூட்டின. உயரமான குதிரைப் படைகள் போர்க்களத்தில் நகர்ந்து வந்த காட்சி கடல் அலைகள் நகர்வதைப் போலத் தோற்றமளித்தது. அந்தக் குதிரைகளுக்கு இடையில் யானைகள் புகுந்து குழப்பம் விளைவித்தது, கடலில் திமிங்கிலம் போன்ற பெரும் உயிரினங்கள் செல்லும்போது ஏற்படும் சுழலை ஒத்திருந்தது. படைவீரர்கள் முழக்கம் செய்வதற்காக எடுத்த சங்குகள், கடலிலிருந்து கிளம்பிய சங்குகளின் எண்ணிக்கைக்குச் சமமாக இருந்தது. கத்திகளும் கேடயங்களும் களத்தில் பறந்தன.’
தற்போது கிரிக்கெட் போட்டிகளுக்கு அளிக்கப்படும் நேர்முக வர்ணனையைப் போல கூரம் செப்பேடுகளில் தரப்பட்டுள்ள போர் வர்ணனைதான் நாம் மேலே பார்த்தது. தமிழகத்தில் முதல் முதலாக, இவ்வளவு விரிவாகப் பதிவுசெய்யப்பட்ட இந்தப் போர் எங்கே நடந்தது ? இதைப் பற்றித் தெரிந்துகொள்ள சற்றே பின்னோக்கிச் செல்லவேண்டும்.
சாளுக்கிய விக்கிரமாதித்தன், காஞ்சியை வென்று அதன் பின் உறையூர் வரை வந்து, பாண்டியர்களுடன் நெல்வேலியில் போரிட்டு, தோல்வியடைந்து மீண்டும் உறையூர் திரும்பினான் என்றும் அதன் பின் சாளுக்கிய நாடு திரும்புவதற்கான ஆயத்தங்களைச் செய்தான் என்றும் பார்த்தோம். இந்தக் காலகட்டத்தில் காஞ்சியிலிருந்து வெளியேறிய பல்லவன் பரமேஸ்வரவர்மன், ஆந்திர நாடு சென்றிருந்தான். இரண்டாம் புலகேசியின் சகோதரனான குப்ஜ விஷ்ணுவர்த்தனன் வேங்கியின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்ததையும் அவனே கீழைச் சாளுக்கிய வம்சத்தை ஸ்தாபித்தவன் என்பதையும் பார்த்தோம்.
புலகேசியின் மறைவுக்குப் பிறகு, இந்த வம்சம் ஆந்திர நாட்டில் தன்னாட்சியை ஏற்படுத்தியது. இதை வாதாபிச் சாளுக்கியர்கள் விரும்பவில்லை. ஆகவே அவர்களுக்கு இடையே உரசல் மூண்டது. வலுவான படைபலத்தைக் கொண்ட விக்கிரமாதித்தனைத் தோற்கடிக்க வேண்டுமென்றால் தன்னிடமும் பெரும் படை ஒன்று வேண்டும் என்று புரிந்துகொண்ட பரமேஸ்வரவர்மன், இந்தப் பூசலைப் பயன்படுத்திக்கொண்டான்.
ஆந்திர அரசிடம் உதவி கோரி அங்கிருந்து ஒரு படையை அழைத்து வந்தான். இந்தப் படையோடு பல்லவப் படைகளும் சேர்ந்து கொண்டன. விக்கிரமாதித்தன் தெற்கு நோக்கிச் சென்றிருப்பதை அறிந்த பரமேஸ்வரவர்மன், அவனைச் சந்திக்க தானும் தென் தமிழகத்தை நோக்கி விரைந்தான். சாளுக்கிய நாடு திரும்பிக்கொண்டிருந்த விக்கிரமாதித்தனின் படைகளும் பல்லவன் பரமேஸ்வரவர்மனின் படைகளும் உறையூருக்கு வடகிழக்கே கிட்டத்தட்ட 30 கிமீ தொலைவில் உள்ள பெருவளநல்லூர் என்ற இடத்தில் சந்தித்துக்கொண்டன.
அங்கே நடைபெற்ற போர் வர்ணனைதான் பல்லவர்களின் கூரம் செப்பேட்டில் இப்படிப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட வரிகளில் இந்தப் போர் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
நெல்வேலிப் போரில் தோல்வியடைந்து சோர்வடைந்திருந்தாலும் சாளுக்கியப் படைகள் பல்லவர்களோடு வீரமாகப் போரிட்டன. இந்தப் போரைப் பற்றி கூரம் செப்பேடுகள் மேலும் கூறுவதாவது
‘போர் வீரர்கள் நாகம், திலக, புன்னாகம் போன்ற மரங்கள் காடுகளில் நிற்பதைப் போல அணி அணியாக நின்றனர். வீரர்கள் போரிட்டு களத்தில் வீழ்ந்து கிடந்த காட்சி காண்டாமிருகத்தால் முறிக்கப்பட்டு மரங்களும் செடிகளும் காடு எங்கும் வீழ்ந்து கிடந்ததைப் போல இருந்தது. வீரர்களின் விற்களில் இருந்து கிளம்பிய அம்புகளின் ஒலி, காட்டில் காற்றடிக்கும்போது கேட்கும் பேரொலியைப் போல இருந்தது. அம்புகள் வீரர்கள் இடையே வேகமாகப் பறந்து சென்றபோது அவற்றைப் பிடித்து ஒடித்து வீழ்த்தினர் சிலர். ஈட்டிகளும், அங்குசங்களும் குத்துவாட்களும் கதைகளும் வேல்களும் கேடயங்களும் போர்க்களமெங்கும் பறந்தன. யானைகள் ஒன்றோடொன்று முட்டிக்கொண்டபோது அவற்றின் தந்தங்களால் ஒன்றையொன்று குத்திக்கொண்டு அவற்றை எடுக்க முடியாது தத்தளித்தன.
‘குதிரை வீரர்களின் வாட்கள் ஒன்றோடொன்று சண்டையிட்ட போது அவை பின்னிக்கொண்டு பிரிக்கமுடியாமல் நின்றன. வாளோடு வாள் சண்டையிடுவதில் பிரசித்தி பெற்ற வீரர்கள் எதிரிகளின் தலைமயிரைப் பிடித்துக்கொண்டு சண்டையிட்டனர். வீரர்களின் கதைகள் மோதும்போது பெரும் ஓசை கிளம்பியது. குருதியும் யானைகளின் மத நீரும் கலந்து நிலத்தின் மஞ்சள் ஆறாக ஓடியது. வீரர்கள், யானைகள், குதிரைகளுடைய தலைகள், கைகள், தொடைகள், பற்கள் ஆகியவை போர்க்களமெங்கும் சிதறிக்கிடந்தன.
‘இரண்டு படைகளும் முன்னும் பின்னும் ஓடிப் போர்புரிந்தன. ஆறாக ஓடிய குருதியின் மேல் பாலம் போன்று யானைகள் வீழ்ந்து கிடந்தன. அவற்றின் மேல் ஏறி வீரர்கள் போரிட்டனர். வெற்றியென்னும் அதிர்ஷ்ட தேவதை ஊஞ்சலைப் போல இரு தரப்புக்கும் இடையே ஆடினாள். போரில் இறந்த வீரர்கள் கையில் வாட்கள் அப்படியே இருந்தன. அவர்கள் போரிட்ட நிலையிலேயே இறந்து கிடந்தனர். தங்கள் கடமையை நிறைவேற்றிய அவர்களின் உதடுகள் கடிக்கப்பட்ட நிலையிலும் கண்கள் சிவந்திருந்தும் காணப்பட்டன. அவர்கள் அணிந்திருந்த அணிகலன்களோ பொடிப்பொடியாகிக் கிடந்தன. ராட்சசர்களும் பேய்களும் குருதியைக் குடித்து கூத்தாடி மதிமயங்கின.’
இப்படி இரு தரப்புக்கும் கடுமையாக நடைபெற்ற போரில் அரிவாரணம் என்ற பெயருடைய யானையின் மீதும் அதிசயம் என்ற பெயர் கொண்ட குதிரையின் மீதும் மாறி மாறி ஏறிச் சண்டையிட்டான் பல்லவன் பரமேஸ்வரவர்மன். அரிவாரணம் என்ற யானை ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததாகவும் ஆயிரம் யானைகள் பின் தொடர போர்க்களத்திற்குச் சென்றதாகவும் கூரம் செப்பேடுகள் கூறுகின்றன. அதிசயம் என்ற குதிரை இந்திரனுடைய குதிரையைப் போல மங்களகரமானது என்றும் ரத்தினக்கற்கள் சேர்த்து செய்த சேணத்தை உடையது என்றும் இச்செப்பெடுகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பல நாட்கள் நடந்த இந்தப் போரில், புத்துணர்ச்சியோடு வந்த பல்லவப் படைகளைச் சமாளிக்க முடியாமல் சாளுக்கியப் படை தோல்வியடைந்தது. ஏழு லட்சம் படைவீரர்களோடு போர் புரிந்த விக்கிரமாதித்தன் படுதோல்வியடைந்து தனி ஆளாக கந்தையைப் போர்த்துக்கொண்டு ஓடி ஒளிந்தான் என்று கூரம் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.
எதிரிகளை அழித்துவிட்டு பகை அரசனின் மனத்திலிருந்த பயத்தையும் கவலையையும் போக்கிவிட்டு (மன்னித்துவிட்டு) அனைத்து திசைகளிலும் தன்னுடைய புகழைப் பரப்பிவிட்டு, ஏற்கெனவே அழகான தன்னுடைய உடலில் (அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக) எல்லா ஆபரணங்களையும் பரமேஸ்வரவர்மன் அணிந்துகொண்டான். அவனை வெற்றித்திருமகள் நன்றாகத் தழுவிக்கொண்டாள் என்றும் அச்செப்பேடுகள் புகழ்கின்றன.
பரமேஸ்வரவர்மனின் மகனும் இரண்டாம் நரசிம்மன் என்ற பெயரில் பட்டமேற்றவனுமான ராஜசிம்ம பல்லவன் இந்தப் போரில் தந்தையோடு பங்கேற்றான். அதனால் தன்னை ரணஜெயன் என்று அழைத்துக்கொண்டான். நெல்வேலியிருந்து தோற்றோடிய விக்கிரமாதித்தனைத் தொடர்ந்து வந்த பாண்டியப் படைகளும் இந்தப் போரில் பங்கேற்றிருக்கவேண்டும். விக்கிரமாதித்தனுடைய மகனான விநயாதித்தனுடைய கேந்தூர் செப்பெடு ‘தமிழக அரசர்கள் அனைவரும் ஒன்று கூடி விக்கிரமாதித்தனை எதிர்த்தனர்’ என்று குறிப்பிடுகிறது.
இந்தப் போரைப் பற்றி பின்னால் வந்த பல்லவ அரசர்களும் பெருமையாகக் குறிப்பிடுகின்றனர். இரண்டாம் நந்திவர்மனின் உதயேந்திரச் செப்பேடுகள் ‘பரமேஸ்வரவர்மன் வல்லபனின் (விக்கிரமாதித்தனின்) படைகளை பெருவளநல்லூரில் நடந்த பெரும்போரில் முறியடித்தான்’ என்று உரைக்கிறது. மூன்றாம் நந்திவர்மன் வெளியிட்ட வேலூர்ப்பாளையச் செப்பேடுகள் ‘பரமேஸ்வரவர்மன் தனது பகைவர்களில் ஆணவத்தை அடக்கினன். சாளுக்கிய அரசனது பகை என்ற இருளை அழிக்கும் வீரனாக அவன் இருந்தான்’ என்கிறது.
நரசிம்மவர்மனுக்கு அடுத்தபடியாக சாளுக்கியர்களைப் படுதோல்வி அடையச் செய்ததன் மூலம் பெரும் புகழைப் பெற்றான் பரமேஸ்வரன். இந்தக் காரணத்தால் சிறிது காலத்திற்கு படையெடுப்புகள் இல்லாமல் பல்லவ நாட்டில் அமைதி நிலவியது. ராஜசிம்ம பல்லவனின் ஆட்சிக்காலமும் பெருமளவு அமைதியாகவே இருந்தது என்பது ஆய்வாளர்களின் கருத்து. இந்தக் காரணத்தினால் கோவில் கட்டடக் கலை பல்லவ நாட்டில் பெருமளவு வளர்ச்சியடைந்தது.
(தொடரும்)