Skip to content
Home » தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #11 – மருதூரும் மங்கலபுரமும்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #11 – மருதூரும் மங்கலபுரமும்

பாண்டியர்கள்

தமிழகத்தை ஆண்ட அரசர்களில் வேளிர் குலத்திற்குச் சிறப்பான பெருமை உண்டு. இவர்கள் வடக்கிலிருந்து புலம்பெயர்ந்து தமிழகத்தில் சிற்றரசர்களாக சங்க காலத்தில் இருந்தனர் என்பது பல்வேறு இலக்கியங்கள் அளிக்கும் செய்தி. வேளிர்கள் யாதவ வம்சத்தினர் என்றும், அகத்தியர்தான் இவர்களை தமிழகத்திற்கு அழைத்து வந்தார் என்றும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.

இந்த வேளிர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சேர நாட்டின் தென் பகுதியை ஆட்சி செய்த ஆய் வேளிர். சங்க காலத்தில் இருந்த கடையேழு வள்ளல்களில் ஒருவனாக இந்த வம்சத்தில் வந்த ஓர் அரசன் குறிப்பிடப்படுகிறான். சிறுபாணாற்றுப்படை போன்ற இலக்கியங்கள் ஆய் வம்ச அரசர்களைப் பற்றிச் சிறப்புடன் பேசுகின்றன. பொதிகை மலைத்தலைவன் என்று ஆய் வேளிர்கள் குறிப்பிடப்படுவதிலிருந்து அவர்கள் தென்தமிழகத்தின் சில பகுதிகளை ஆண்டவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இன்று கேரளாவில் வேணாடு என்று அழைக்கப்படும் பகுதியிலிருந்து தெற்கே கன்னியாகுமரி வரை ஆய் வம்சத்து அரசர்களின் ஆட்சி இருந்தது. இன்றைக்கும் அந்தப் பகுதியில் ஆய்குடி என்ற ஊர் இருக்கிறது. அதுவே ஆய் நாட்டின் தலைநகர் என்று சொல்வதுண்டு. மேற்குத் தொடர்ச்சி மலைகளே இந்நாட்டரசர்களுக்கு அரணாகவும் இருந்தது.

மற்றொரு புறம் கடற்பகுதி. அங்கே இருந்த விழிஞம் போன்ற துறைமுகங்களும் இந்த அரசர்களின் வசம் இருந்தன. ‘ஆய்’ என்பது ஆயர் என்ற சொல்லிலிருந்து வருவதால் இவர்களும் யாதவ குலத்தில் இருந்து வந்தவர்கள் என்பது ஆய்வாளர்களின் கருத்து. அதற்கேற்ப விக்கிரமாதித்த வரகுணன் என்ற அரசன் அளித்த செப்பேடு ஒன்றில் வ்ருஷ்ணி குலத்தின் பெருமை நான்கு ஸ்லோகங்களில் கூறப்பட்டு, ஆய் குலத்தில் வந்த அரசர்கள் அந்த வ்ருஷ்ணி குலத்தோன்றல்கள் என்று புகழப்பட்டுள்ளது.

சங்க காலத்திலிருந்தே இவர்கள் சேர அரசர்களின் சிற்றரசர்களாக இருந்தனர் என்றாலும் சில காலகட்டங்களில் இவர்கள் தன்னாட்சியும் செய்திருக்கின்றனர். சங்ககாலத்தைப் பொருத்தவரை ஆய் அண்டிரன் என்ற அரசன் இந்தப் பரம்பரையைச் சேர்ந்த சிறந்த அரசனாகப் புகழப்படுகிறான். புறநானூற்றுப் பாடல் ஒன்றில்,

‘வடதிசை யதுவே வான்தோய் இமையம்,
தென்திசை ஆஅய் குடி இன்றாயின்,
பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகே’

வட திசையில் உள்ள இமயமும் தென் திசையில் இருக்கும் ஆய்குடியும் இல்லையென்றால் இந்த உலகம் தலைகீழாக மாறிவிடும் என்றெல்லாம் புகழப்படும் அரசு இவனுடையது. கடலோடியான தாலமியும் நெல்சிந்தா என்ற நீலகண்ட நகரத்திலிருந்து கன்னியாகுமரி வரைப்பட்ட நிலப்பகுதி இவர்களுடையது (ஆயோய்) என்று குறிப்பிட்டுள்ளார்.

களப்பிரர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் மூவேந்தர்களுடைய ஆட்சி அகன்ற போதிலும், ஆய் வேளிர்களின் வம்சம் தொடர்ந்து ஆட்சி செய்து கொண்டிருந்ததாகவே தெரிகிறது. அதன் பின் தற்போதைய திருநெல்வேலி, நாகர்கோவில் மாவட்டங்கள் அடங்கிய பகுதி இவர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. களப்பிரர் ஆட்சியைத் தொடர்ந்து பாண்டியர்களின் ஆட்சி மதுரையில் ஏற்பட்டபோது, ஆய் வேளிருக்கும் பாண்டியர்களுக்கும் சிறு சிறு உரசல்கள் ஏற்பட்டன.

நெடுமாற பாண்டியனுக்குப் பின் அவனுடைய மகனான கோச்சடையன் ரணதீரன் பாண்டிய அரசுக்கட்டில் ஏறினான். இவன் வீரம் மிக்கவன் என்பதையும் நெல்வேலியில் சாளுக்கியப் படைகள் தோற்கடிக்கப்பட்டதில் பெரும் பங்கு வகித்தவன் என்பதையும் பார்த்தோம். தந்தையைப் போல சிறந்த சிவபக்தனாக இருந்தாலும், பாண்டியப் பேரரசின் விரிவாக்கத்தில் இவன் கவனம் செலுத்தினான். தென் பாண்டி நாட்டில் இவன் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முயன்றபோது அங்கே ஏற்கெனவே ஆட்சி செய்துகொண்டிருந்த ஆய் வேளிரோடு போர் புரிய நேரிட்டது.

போரில் ஆய் வேளிரும் சளைத்தவர்கள் அல்ல. அவர்களிடமும் ஒரு பெரும் படை இருந்தது. இந்த இரண்டு அரசர்களுக்கு இடையே முதல் போர் மருதூர் என்ற இடத்தில் நடந்தது. பாண்டியர்களின் வம்சாவளியைக் குறிப்பிடும் வேள்விக்குடிச் செப்பேடுகள் ரணதீரனின் முதல் போராக மருதூர்ப் போரையே குறிப்பிடுகின்றன.

‘பொருதூருங் கடல்தானையை மருதூருண் மாண்பழித்து
ஆய்வேளை அகப்பட எய்யென்னாமை எறிந்தழித்துச்
செங்கொடியும் புதான்கோட்டுச் செருவென்றவர் சினந்தவிர்த்து’

என்கிறது அச்செப்பேடுகள். இந்த வரிகளிலிருந்து ஆய் நாட்டின் மீது படையெடுத்துச் சென்ற ரணதீரன் அவர்களின் கடல் போன்ற படைகளை பல இடங்களில் தோற்கடித்தான் என்று தெரிகிறது. மருதூர் என்று இங்கே குறிப்பிடப்படும் ஊர் தற்காலத்தில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள திருப்புடைமருதூராகவே இருக்கக்கூடும்.

தென் பாண்டி நாட்டில் தன்னுடைய ஆட்சிப்பரப்பை விரிக்க வேண்டியே ரணதீரன், மருதூரில் ஆய் வேளிரைத் தோற்கடித்தது மட்டும் அல்லாமல், தொடர்ந்து அவர்களோடு போர் புரிந்தான். செங்கோடு அல்லது செங்கொடி, புதான் கோடு ஆகிய இரு இடங்களிலும் கூட பாண்டியப்படைகள் ஆய்வேளிரைத் தோற்கடித்தன. வேள்விக்குடிச் செப்பேடுகள் இங்கே குறிப்பிடும் செங்கொடி, தற்போது செங்கோட்டை என்று அழைக்கப்படும் ஊர். போலவே புதான்கோடு என்பது குமரிக்கு அருகே உள்ள அதங்கோடு என்ற ஊர்.

தொல்காப்பிய காலப் புலவரான அதங்கோட்டு ஆசான் வாழ்ந்த ஊர் அது. ஆய் வேளிரோடு போரிட்டு இப்படித் தென் தமிழகம் முழுவதையும் தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டு வந்த பெருமை கோச்சடையன் ரணதீரனையே சேரும். இந்தக் காரணங்களால், ஆய் வேளிரின் ஆட்சிப் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குப் பகுதியில் சுருங்கிவிட்டது. பாண்டியப் பேரரசும் வலுவடைந்தது.

இது ஒருபுறமிருக்க, பொதுப்பகைவனான சாளுக்கிய விக்கிரமாதித்தனைத் தோற்கடித்ததாலோ என்னவோ பல்லவ அரசர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே சுமுகமான உறவு நிலவியது. இது அவர்களுக்கிடையே ஏற்பட்ட மண உறவால் மேலும் வலுப்பட்டது. பல்லவ அரசகுமாரியை கோச்சடையன் ரணதீரன் மணந்துகொண்டான்.

அடுத்தபடியாக தன்னுடைய ஆட்சிப்பரப்பை விரிவுபடுத்தும் முயற்சியில் இருந்த ரணதீரனின் கவனம் தமிழகத்தின் மேற்குப் பகுதியில் இருந்த கொங்கு நாட்டின் மீது சென்றது. அப்போதைய கொங்கு நாடு கேரளத்தின் வடபகுதிகளையும் தென் கன்னடப்பகுதிகளையும் தன்னுள்ளே அடக்கியதாக இருந்தது. அங்கே ரணதீரன் பெற்ற வெற்றியைப் பற்றி வேள்விக்குடிச் செப்பேடுகள் இப்படிப் புகழ்கின்றன.

‘கொங்கலரு நறும்பொழில்வாய்க் குயிலோடு மயிலகவும்
மங்கலபுரமெனும் மாநகருண் மகாரதரை எறிந்தழித்து’

இங்கே மகாரதர் என்பதற்கு பெரும் தேர் வீரர் என்று பொருள். அப்படிப் பெரிய வீரர்கள் கொண்ட படை அங்கே யாரிடம் இருந்தது என்று பார்த்தால், தென் கன்னடப்பகுதியில் அக்காலத்தில் அலுபா என்ற வம்சத்தின் அரசர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்தனர். இவர்களுக்கும் ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. பொயு 2ம் நூற்றாண்டிலிருந்து தென் கன்னடப் பகுதியில் அலூபா வம்சத்தினரின் ஆட்சி இருந்ததாகக் குறிப்புகள் உண்டு.

சாளுக்கிய வம்சம் மேலெழுந்தபோது இவர்கள் சாளுக்கியர்களின் சிற்றரசர்களாக இருந்தனர். அவர்களுடைய தலைநகராக மங்கலபுரம் இருந்தது (தற்போதைய மங்களூர்). ரணதீரன் இந்த ஊரின் மீது படையெடுத்து அந்த அரசர்களை வென்றதைத்தான் வேள்விக்குடிச் செப்பேடுகள் இப்படிக் குறிப்பிடுகின்றன. “மதுர கருநாடகன்” என்ற சிறப்புப் பெயரும் கோச்சடையன் ரணதீரனுக்கு உண்டு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சாளுக்கியர்களின் சிற்றரசர்களாக இருந்த அலுபர்களுக்கும் அவர்களின் எதிரியான பாண்டியர்களுக்கும் பகைமை இருந்ததில் ஆச்சரியம் இல்லை. எப்படி சாளுக்கியர்களின் மற்றொரு சிற்றரசான கங்கர்கள் பல்லவர்களோடு பகைமை கொண்டு சாளுக்கியப் படைகளோடு சேர்ந்துகொண்டு தமிழகத்தைத் தாக்கினரோ அதே போன்று அலுபர்களும் செய்யக்கூடும் என்ற எண்ணத்தால் அதை முறியடிக்க மங்கலபுரத்தை ரணதீரன் தக்கியிருக்கக்கூடும்.

மங்கலபுரம் என்பது தமிழகத்தில் திருச்சிக்கு அருகே இருக்கும் ஓர் ஊர் என்றும் அங்கே பாண்டியன் தோற்கடித்தது சாளுக்கியர்களையோ அல்லது அங்கே ஆண்ட வேறு ஒரு அரசனையோ என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால், பெருவளநல்லூரில் தோற்றுச் சென்ற பிறகு கொங்குப் பகுதிக்கு எந்தச் சாளுக்கியப் படையும் வந்ததாக குறிப்பு ஏதும் இல்லை. தவிர மகாரதர்கள் என்று அழைக்கப்பட்ட பேரரசர்கள் யாரும் அங்கே அக்காலத்தில் ஆட்சி செய்ததாக தகவல் ஏதும் இல்லை. இக்காரணங்களால் அலுபா அரசர்களோடு நடந்ததே இந்தப் போர் என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியதாக இருக்கிறது.

மகாரதர் என்று அலுபர்களைக் குறிப்பிடுவதால் அவர்களது படையும் வலுவானதாகவே இருந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. மதுரையிலிருந்து மங்களூர் வரை படை திரட்டிச் சென்று அவர்களைத் தோற்கடித்து மேல் கொங்கு என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட தென் கன்னட- வட கேரளப்பகுதிகளை தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான் பாண்டியன் ரணதீரன். இதன் விளைவாக அலுபா வம்சத்தினரின் கொடிகளிலும் நாணயங்களிலும் பாண்டியர்களின் மீன் சின்னம் இடம்பெற்றது என்று கருதுகிறார் வரலாற்று ஆய்வாளர் திரு. நாகசாமி.

இப்படிப் பல்லவ-பாண்டிய அரசுகள் தமிழகம் முழுவதையும் தங்களது ஆட்சியின் கீழ் கொண்டுவந்ததாலும், அந்த இரண்டு அரசுகளுக்கும் இடையே சுமுக உறவு இருந்ததாலும் தமிழகத்தில் சில காலம் அமைதி நிலவியது. அது நீடித்ததா?

(தொடரும்)

பகிர:
nv-author-image

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *