Skip to content
Home » தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #12 – பல்லவ பாண்டியப் போர்கள்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #12 – பல்லவ பாண்டியப் போர்கள்

இரணியவர்மனைச் சந்திக்கும் பல்லவ அதிகாரிகள்

பொயு 7ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்லவர்களும் பாண்டியர்களும் தமிழகத்தை இரு பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டு ஆட்சி செய்தனர் என்பதையும் அதனால் தமிழகத்தில் அமைதி நிலவியது என்பதையும் பார்த்தோம்.

இரண்டு அரசுகளுக்கும் இடையே இருந்த நெருங்கிய உறவு இதற்குப் பேருதவி புரிந்தது. கோ சடையன் ரணதீரன், தனக்குப் பல்லவ அரசகுமாரி மூலம் பிறந்த மகனுக்கு பல்லவ அரசனான ராஜசிம்மனின் பெயரை வைக்குமளவிற்கு இரு அரசுகளும் நெருக்கமாக இருந்தன. ஆனால் இந்த அமைதி நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை.

ராஜசிம்ம பல்லவனுக்குப் பிறகு பல்லவ அரியணையில் ஏறிய இரண்டாம் பரமேஸ்வரவர்மன், சாளுக்கியர்களின் தாக்குதலை மீண்டும் சந்திக்க நேரிட்டது. சாளுக்கிய இளவரசனான இரண்டாம் விக்கிரமாதித்தன், தன்னுடைய முப்பாட்டன் முதலாம் விக்கிரமாதித்தனைப் போலவே பல்லவர்கள் மீது பழிதீர்க்க அடங்கா ஆர்வத்துடன் காத்திருந்தான். இரண்டாம் பரமேஸ்வரன் அரியணை ஏறியவுடன், கங்கர்கள் துணையுடன் பல்லவர்கள் மீது படையெடுத்து அவர்களைத் தோற்கடித்தான்.

இந்தத் தோல்விக்கு எதிர்வினையாக சிறிது காலத்திற்குப் பிறகு, பரமேஸ்வரவர்மன் கங்கர்கள் மீது படையெடுத்தான். விளிந்தை என்ற இடத்தில் நடைபெற்ற போரில் கங்க அரசன் ஶ்ரீபுருஷனால் அவன் கொல்லப்பட்டான். ‘தன்னுடைய வெண்கொற்றக்குடையையும் உக்ரோதயம் என்ற ஆபரணத்தையும் காடுவெட்டி இந்தப் போரில் இழந்தான்’ என்று கங்கர்களின் கல்வெட்டு ஒன்று கூறுகிறது.

இப்படி அகாலத்தில் பல்லவ அரசன் இறந்துபட்டதால், அடுத்த அரசன் யார் என்ற குழப்பம் பல்லவ நாட்டில் ஏற்பட்டது. பரமேஸ்வர வர்மனுக்கு சித்திரமாயன் என்ற மகன் இருந்தான். ஆனால் என்ன காரணத்தாலோ, அவனை அடுத்த அரசனாக நியமிக்க பல்லவ அதிகாரவர்க்கம் விரும்பவில்லை. வேறொரு அரசனைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர்.

பல்லவ அரசனாக இருந்த சிம்மவிஷ்ணுவிற்கு பீமவர்மன் என்ற சகோதரன் இருந்தான். சிம்மவிஷ்ணு காலத்தில் பீமவர்மனின் குடும்பம் இடம் பெயர்ந்து தென்கிழக்கு ஆசியாவில் ஏதோ ஒரு நாட்டில் வாழ்ந்து வந்தனர். பீமவர்மனின் வம்சத்தில் வந்த இரணியவர்மனை ‘மூலப்பிரகிருதியாரும் அமைச்சர்களும்’ கண்டனர். பல்லவ அரசுப் பொறுப்பை ஏற்குமாறு இரணியவர்மனை அவர்கள் வற்புறுத்தினர். ஆனால் இரணியவர்மன் ஆட்சியை ஏற்க மறுத்துவிட்டான். தங்கள் முயற்சியில் மனம் தளராத முதல் அமைச்சர் தரணிகொண்ட போசரும், காடக முத்தரையரும் ஏனைய அதிகாரிகளும் இரணியவர்மனின் மகன்களில் ஒருவரை பல்லவ அரசுக்குத் தருமாறு கோரினர்.

 

இரணியவர்மனைச் சந்திக்கும் பல்லவ அதிகாரிகள்
இரணியவர்மனைச் சந்திக்கும் பல்லவ அதிகாரிகள் – காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோவில் சிற்பம்

இரணியவர்மனைச் சந்திக்கும் பல்லவ அதிகாரிகள் – காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோவில் சிற்பம்

இரணியவர்மனும் தன்னுடைய நான்கு மகன்களை அழைத்து இந்தக் கோரிக்கையைத் தெரிவித்தான். ஆனால் அவனுடைய முதல் மூன்று மகன்களான ஶ்ரீமல்லன், இரணமல்லன், சங்கிராம மல்லன் ஆகியோர் இரணியவர்மனைப் போலவே பல்லவ அரசுப் பொறுப்பை ஏற்க மறுத்து விட்டனர். ஆனால் நான்காவது மகனும் பன்னிரண்டே வயதானவனுமான பல்லவமல்லன், தான் பல்லவ அரசனாக சம்மதம் தெரிவித்தான்.

இதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த தரணிகொண்ட போசரும் மற்ற அரசு அதிகாரிகளும் பல மலைகளையும் கடலையும் தாண்டி காஞ்சி வந்தனர். நந்திவர்மன் என்ற அபிஷேகப் பெயருடன் பல்லவமல்லன் பல்லவ அரசனாகப் பொறுப்பேற்றான். இந்த விவரங்கள் எல்லாம் காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் கோவில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.

வைகுண்டப் பெருமாள் கோவில் கல்வெட்டு
வைகுண்டப் பெருமாள் கோவில் கல்வெட்டு

தனக்குக் கிடைக்கவேண்டிய அரசு வேறொருவனுக்குச் சென்றதைக் கண்ட சித்திரமாயன் ஆத்திரம் அடைந்தான். ஆனால் பெருவாரியான அதிகாரவர்க்கமும் பொதுமக்களும் அவனுக்கு எதிராக நின்றதால், சித்திரமாயனால் ஏதும் செய்ய இயலவில்லை. ஆகவே, அவன் தன்னுடைய உறவினனான பாண்டிய அரசன் ராஜசிம்ம பாண்டியனைச் சரணடைந்தான். சித்திரமாயனுக்குப் பல்லவ அரசைத் திரும்ப அளிப்பதாக உறுதியளித்த ராஜசிம்ம பாண்டியன், அதற்கான தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தான்.

ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சில நாட்களில், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும் நாதன் கோவில் என்று அழைக்கப்பட்டதும் சோழர் தலைநகர்களில் ஒன்றான பழையாறையின் ஒரு பகுதியாக விளங்கியதுமான நந்திபுர விண்ணகரத்தைத் தரிசிக்க பல்லவ மல்லன் வந்திருந்தான். அந்த நந்திபுரக் கோட்டைக்குள் பல்லவன் தங்கியிருப்பதைக் கேள்விப்பட்ட ராஜசிம்ம பாண்டியன் ஒரு பெரும் படையுடன் சென்று கோட்டையை முற்றுகையிட்டான். எதிர்பாராத சமயத்தில் ஏற்பட்ட இந்த நிகழ்வினால் நந்திவர்ம பல்லவமல்லன் கோட்டைக்குள் அகப்பட்டுக்கொண்டான்.

அப்போது பல்லவர்களின் சேனாதிபதியாக இருந்தவன் ‘வில்வலம்’ என்ற ஊருக்கும் வேகவதி ஆற்றுக்கும் தலைவனாக இருந்தவனும் ‘பூசான்’ என்ற மரபில் பிறந்தவனுமான உதயசந்திரன். பெரும் வீரனும் அறிவாளியுமான உதயசந்திரன், தன்னுடைய அரசன் முற்றுகையில் சிக்கிக்கொண்டதை அறிந்த பிறகு ஒரு பெரும் படையுடன் விரைந்து வந்தான்.

பாண்டியர்களின் படையை பின்னாலிருந்து பல்லவப் படைகள் தாக்கின. அதே சமயம் கோட்டைக்குள் இருந்து வெளியே வந்த நந்திவர்மனும் தன்னுடன் வந்த படை வீரர்களைக் கொண்டு பாண்டியப் படைவீரர்களைத் தாக்கினான். இப்படி இரு புறமும் தாக்கப்பட்டதால் திக்குமுக்காடிய பாண்டியப் படை சிதறி ஓடியது. நந்திவர்மனும் விடுவிக்கப்பட்டான்.

ஓடிய பாண்டியப் படைகளை பல்லவப் படைகள் துரத்தின. இரு தரப்பினரும் பாண்டிய நாட்டு எல்லையான புதுக்கோட்டைப் பகுதியில் பல இடங்களில் மோதிக்கொண்டன. இந்தப் போர்களைப் பற்றி இரண்டாம் நந்திவர்மனின் உதயேந்திரம் செப்பேடுகள் பின்வருமாறு விவரிக்கின்றன

‘நந்திபுரக் கோட்டையில் தமிழக மன்னர்களால் நந்திவர்மன் முற்றுகையில் அகப்பட்டதைக் கேள்விப்பட்ட உதயசந்திரன் எதிரிகளில் படையில் காலனைப் போல ஊடுருவினான். நிம்பவனம், சூதவனம், சங்கிரகிராமம், மண்ணைக்குறிச்சி, நெல்வேலி, சூரவழுந்தூர் ஆகிய இடங்களில் பல்லவர்களுக்கு வெற்றியைத் தேடித்தந்தான்’ என்று அந்தச் செப்பேடுகளில் உள்ளது.

இரண்டாம் நந்திவர்மனின் உதயேந்திரம் செப்பேடுகள்
இரண்டாம் நந்திவர்மனின் உதயேந்திரம் செப்பேடுகள்

பாண்டியர்களின் வேள்விக்குடிச் செப்பேடுகள் இந்தப் போர்களின் விவரங்களைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றன.

‘மத்தயானை செலவுந்தி மானவேல் வலனேந்திக்
கடுவிசையா லெதிர்ந்தவரை நெடுவயல்வாய் நிகரழித்துக்
கறுவடைந்த மனத்தவரைக் குறுமுடைவாய்க் கூர்ப்பழித்து
மன்னிக்கிறுச்சியுந் திருமங்கையு முன்னின்றவர் முரணழித்து
மேவலோர் கடற்றானையோ டேற்றெதிரே வந்தவரைப்
பூவலூர்ப் புறங்கண்டும்
கொடும்புரிசை நெடுங்கிடங்கிற் கொடும்பா ளூர்க்கூடார்
கடும்பரியுங் கடுங்களிறுங் கதிர்வேலிற் கைக்கொண்டும்
சேவ….கூடாத பல்லவனைக் குழும்பூருட் டேசழிய
எண்ணிறந்த மால்களிறு மிவுளிகளும் பலகவர்ந்தும்
தரியலராய்த் தனித்தவரைப் பெரியலூர்ப் பீடழித்தும்’

பாண்டியர்களின் வேள்விக்குடிச் செப்பேடுகள்
பாண்டியர்களின் வேள்விக்குடிச் செப்பேடுகள்

அதாவது மதங்கொண்ட யானையைப் போல எதிரிகளின் படைக்குள் ஊடுருவி பெருமை பொருந்திய வேலை ஏந்தி எதிர்த்தவர்களை எல்லாம் நெடுவயல் என்ற ஊரில் அழித்து, கோபம் கொண்ட மனத்தவர்களை குறுமடை என்ற இடத்தில் சந்தித்து அவர்களில் பெருமையையும் வீரத்தையும் அழித்து, மன்னிக்குறிச்சி, திருமங்கை ஆகிய ஊர்களில் எதிரிகளில் வலிமையை அழித்து, பகைவர்களுடைய கடல் போன்ற சேனையை பூவலூரில் தோற்று ஓடச்செய்து, வளைந்த பெரும் மதில் சுவர்களையும் ஆழமான அகழிகளையும் கொண்ட கொடும்பாளூரில் எதிரிகளில் யானைகளையும் குதிரைகளையும் ஒளி பொருந்திய வேலினால் கைக்கொண்டு, தன்னுடன் இணக்கமாகச் செல்லாத பல்லவனின் ஒளியை குழும்பூரில் மங்கச்செய்து, எண்ணிக்கையில்லாத யானைகளையும் குதிரைகளையும் இன்னும் பல போர்த்தளவாடங்களையும் கவர்ந்து பகைவர்களின் பெருமையை பெரியலூரில் அழித்து வெற்றியடைந்தான் ராஜசிம்ம பாண்டியன் என்று அந்தச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

அதெப்படி பல்லவர் பாண்டியர் என்ற இருதரப்பும் வெற்றியடைந்ததாகச் சொல்லிக்கொள்ள முடியும்? சற்று ஆராய்ந்தால், இங்கே குறிப்பிடப்பட்ட ஊர்களில் மண்ணிக்குறிச்சியைத் தவிர மற்ற ஊர்கள் எல்லாம் உதயேந்திரம் செப்பேட்டிலும் வேள்விக்குடிச் செப்பேட்டிலும் வேறுபடுவதைக் காணலாம்.

நந்திபுர வெற்றியைத் தொடர்ந்து பல்லவ பாண்டியப் படைகள் மேற்குறிப்பிட்ட ஊர்கள் அனைத்திலும் போர் புரிந்திருக்கின்றன. அதில் சில இடங்களில் பல்லவர்களுக்கும் சில இடங்களில் பாண்டியர்களுக்கும் வெற்றி கிடைத்திருக்கிறது. இதில் மண்ணிக்குறிச்சி என்பது மணக்குடி என்ற ஊர் (அறந்தாங்கியின் அருகில் இருப்பது) நிம்பவனம் என்பது வேப்பங்காடு, சூதவனம் என்பது கோவிலூர், சங்கரகிராமம் என்பது சங்கரனார் குடிக்காடு என்று சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இப்படிப் பல இடங்களில் போர் நடந்தாலும் முடிவில் இரு தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி ‘டிராவில்’ இந்தச் சுற்று முடிந்ததாகவே நாம் கருதலாம். இந்தப் போர்களில் ஒன்றில் ‘அல்லிமலர் இதழ்போல் ஒளிர்ந்த தன் வாளால் சித்திரமாயனையும் மற்றும் பலரையும்’ உதயசந்திரன் கொன்றான் என்று உதயேந்திரம் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

ஆகவே, தனக்குப் போட்டியாக இருந்த சித்திரமாயன் இறந்ததால், நந்திவர்மன் தனது அரசை நிலைப்படுத்திக்கொண்டான். ஆகவே ஒரு வகையில் பல்லவர்களுக்கு இது வெற்றிதான். பல்லவ பாண்டிய எல்லைகள் இந்தப் போர்களினால் அதிகம் மாற்றம் அடையவில்லை. ஆயினும் இந்தக் காலகட்டத்தில் தோன்றிய பல்லவ பாண்டியப் பகை சில ஆண்டுகள் நீடித்து மேலும் பல போர்களுக்கு வழிவகுத்தது.

(தொடரும்)

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

1 thought on “தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #12 – பல்லவ பாண்டியப் போர்கள்”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *