மிகச்சிறிய வயதிலேயே அரியணை ஏறிய நந்திவர்ம பல்லவ மல்லன், தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே அதிக காலம் ஆட்சி செய்த மன்னர்களில் ஒருவன். கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் இரண்டாம் நந்திவர்மன் ஆட்சி செய்ததாக வரலாறு கூறுகிறது.
தன்னுடைய ஆட்சிக்காலத்தின் ஆரம்பப் பகுதியில் உட்பகைவர்களாலும், வெளியிலிருந்து தொல்லை கொடுத்த எதிரிகளாலும் சிக்கல்களைச் சந்தித்தாலும் தன்னுடைய தளபதியான உதயசந்திரனின் உதவியால் அவற்றைச் சமாளித்து நிலையான ஆட்சியை பல்லவ நாட்டில் அவனால் ஏற்படுத்த முடிந்தது.
ஆட்சியை ஸ்திரப்படுத்திய பிறகு நாட்டின் நலனில் கவனம் செலுத்தியது மட்டுமல்லாமல் ஆன்மிகப்பணியிலும் அவன் ஈடுபட்டான். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வாரின் சீடனாகிய நந்திவர்மன், பரமவைஷ்ணவனாகத் திகழ்ந்தான்.
‘மன்னவன் தொண்டையர்கோன் வணங்கும் நீள்முடி மாலை வயிரமேகன்
தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி’
என்று தன்னுடைய பாசுரங்களில் திருமங்கையாழ்வார் நந்திவர்ம பல்லவனைக் குறிப்பிட்டுப் பாடுகிறார். காஞ்சியிலுள்ள பரமேஸ்வர விண்ணகரம், பழையாறை நந்திபுர விண்ணகரம் என்று பல விஷ்ணு கோவில்களுக்குத் திருப்பணி செய்தான் நந்திவர்மன். காசக்குடிச் செப்பேடுகள் இவனை ‘ஹரி சரணபரன்’ என்றும் தண்டன் தோட்டச் செப்பேடுகள் ‘முகுந்தன் திருவடிகளைத் தவிர வேறு ஒன்றிற்கும் தலை வணங்காதவன்’ என்றும் குறிப்பிடுகின்றன.
அதே சமயம், பாண்டிய நாட்டில் ராஜசிம்ம பாண்டியனுக்கு அடுத்தபடியாக அவனுடைய மகனான பராந்தக நெடுஞ்சடையன் பொயு 765ல் அரியணை ஏறினான்.
‘பரமவைஷ்ணவன் தானாகி நின்றிலங்கும்
மணி நீண்முடி நிலமன்னவன் நெடுஞ்சடையன்’
என்று ஶ்ரீவரமங்கலச் செப்பேடுகள் குறிப்பிடுவதிலிருந்து இவனும் வைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பின்பற்றியவன் என்று அறியலாம். ஆனைமலை நரசிம்மர் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உட்பட பாண்டிய நாட்டில் பல குடைவரைக் கோவில்கள் இவன் காலத்தில் கட்டப்பட்டன.
பெரும் வீரனான நெடுஞ்சடையன், முதலில் தன்னுடைய கவனத்தைக் கொங்கு நாட்டின் மீது செலுத்தினான். கொங்கு தேசத்தை அவனுடைய தந்தையான ராஜசிம்ம பாண்டியன் ஏற்கெனவே கைப்பற்றியிருந்தாலும் அதியனின் வம்சத்தில் தோன்றிய அரசன் ஒருவன் அதை மீண்டும் கைப்பற்றி தன்னாட்சி செய்ய முயன்று கொண்டிருந்தான். ஆகவே நெடுஞ்சடையன் கொங்கு நாட்டின் மீது படையெடுக்க வேண்டியதாயிற்று.
‘காவிரி வடகரை ஆயிரவேலி அயிரூர் தன்னிலும்
புகழியூரிலுந் திகழ்வேல் அதியனை
ஓடுபுறங் கண்டவனொலியுடை மணித்தே
ராடல் வெம்மா அவை உடன் கவர்ந்தும்’
என்று ஶ்ரீவரமங்கலச் செப்பேடுகள் இந்தப் போர் வெற்றியைப் புகழ் பாடுகின்றன. ஆயிரவேலி அயிரூரில் கொங்கு அரசனோடு பாண்டியன் சண்டையிட்டபோது, அதியனுக்கு உதவியாக பல்லவன் நந்திவர்மன் தன் படையை அனுப்பி வைத்தான். இப்படிப்பட்ட திடீர்த் தலையிட்டுக்கான காரணம் சரிவரத் தெரியவில்லை.
அதியன் பல்லவனின் நண்பனாக இருந்திருக்கலாம் அல்லது கொங்கு நாட்டைவென்ற பிறகு பல்லவ நாட்டின் மீது நெடுஞ்சடையன் திரும்பக்கூடும் என்ற எச்சரிக்கை இதற்குக் காரணமாக இருக்கலாம். எப்படி இருந்தாலும் அதியனுக்கு உதவ வந்த பல்லவனையும் சேரனையும் பராந்தக நெடுஞ்சடையன் தோற்கடித்தான்.
‘பல்லவனும் கேரளனும் ஆங்கவர்க்குப் பாங்காகிப் பல்படையோடு பார்ஞெளியப் பவ்வமெனப் பரந்தெழுந்து குடபாலும் குணபாலும் மணுகவந்து விட்டிருப்ப வெல்படையோடு மேற்சென்றங்கு இருவரையும் இருபாலும் இடரெய்தப் படைவிடுத்து’
என்று நெடுஞ்சடையன் தோற்கடித்தகாக ஶ்ரீவரமங்கலச் செப்பேடுகள் மேலும் குறிக்கின்றன.
ஆனால், கொங்கு நாட்டு அரசனோடு ஏற்பட்ட போரில் எதிர்பாராத விதமாக பல்லவன் தலையிட்டதை பாண்டியன் ரசிக்கவில்லை என்பது தெளிவு. ஏற்கெனவே நீறுபூத்த நெருப்பாக இருந்த பல்லவ பாண்டியப் பகையை ஊதிவிட்டது போல ஆகிவிட்டது இந்தச் செய்கை. இதன் காரணமாக பல்லவன் இரண்டாம் நந்திவர்மனோடு பாண்டியன் நெடுஞ்சடையன் நேரடியாக மோதினான்.
‘நாற்பெரும் படையும் பாற்படப் பரப்பிக்
கருதாதுவந் தெதிர்மலைந்த காடவனைக் காடடையப்
பூவிரியும் புனற்கழனிக் காவிரியின் றென்கரைமேல்
தண்ணாக மலர்ச்சோலைப் பெண்ணாகடத் தமர்வென்றும்’
(வேள்விக்குடிச் செப்பேடுகள்)
நான்கு பெரும் படைகளோடு வந்த பல்லவ மன்னவனை மலர்சோலைகள் நிறைந்த பெண்ணாகடம் என்ற ஊரில் நெடுஞ்சடையன் சந்தித்தான். பல்லவனின் படைகள் அளவில் பெரியதாக இருந்தாலும் பாண்டியப் படைகளும் சளைக்காமல் சண்டையிட்டன. பாண்டியனின் மிகச்சிறந்த படைத்தலைவனான மாறன் காரி இந்தப் போரில் பங்குபெற்றான். கடுமையான இந்தப் போரில் பாண்டியர்களே வெற்றி பெற்றனர்.
தற்போது பெண்ணாடம் என்று வழங்கப்படும் ஊர் இது இல்லை என்றும் காவிரியின் தென்கரையில் உள்ள ஒரு ஊர் என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் குறிப்பிடுவதால், இது தஞ்சாவூருக்கு அருகில் உள்ள ஒரு ஊர் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனவே இந்தப் போர் பாண்டிய-பல்லவ நாட்டு எல்லையாக அப்போது விளங்கிய சோழ நாட்டில் நடைபெற்றிருக்க வேண்டும் என்பது தெளிவு.
அதியனை மட்டுமல்லாது, பல்லவர்களையும் தோற்கடித்து பெரும் புகழ் பெற்றான் பராந்தக நெடுஞ்சடையன். அவன் காலத்தில் தொடங்கிய பல்லவர்களின் மீதான பாண்டியர்களின் ஆதிக்கம், இரண்டாம் நந்திவர்மனின் மகனான தந்திவர்மனின் காலத்திலும் தொடர்ந்தது. ‘கொற்றவர்கள் தொழு சுழற்காற் கோ வரகுண மகராசன்’ என்று புகழப்பட்ட முதலாம் வரகுணன் காலத்தில் பெண்ணையாற்றங்கரை வரையிலான பல்லவ நாட்டின் பகுதி பாண்டியர் வசமிருந்தது.
தந்திவர்மனின் மகனும் அடுத்து பல்லவ ஆட்சிப்பொறுப்பை ஏற்றவனுமான மூன்றாம் நந்திவர்மன், இந்தக் களங்கத்தை அழிக்க முனைந்தான். பாண்டியர் ஆதிக்கத்தை அகற்ற அவன் முயன்றபோது பாண்டிய அரசனாக ஶ்ரீமாற ஶ்ரீவல்லபன் பொறுப்பேற்றிருந்தான். பல்லவன் படையெழுச்சியைக் கண்ட ஶ்ரீமாறன் தன்னுடைய படைகளுடன் பல்லவ நாட்டிற்குள் புகுந்தான். தொண்டை நாட்டில் வந்தவாசிக்கு அருகில் உள்ள தெள்ளாறு என்ற இடத்தில் பல்லவ பாண்டியப் படைகள் மோதின. பொயு 835-838 வாக்கில் இந்தப் போர் நடந்திருக்கவேண்டும்.
கோரமாக நடந்த இந்தப் போரில் இரு தரப்புப் படைகளும் பெரும் சேதத்தை அடைந்தன. முடிவில் நந்திவர்மன் வெற்றி பெற்றான். இதன் காரணமாக அவன் ‘தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்’ என்று புகழப்படுகிறான். தெள்ளாற்றில் தோற்று ஓடிய பாண்டியப் படைகளை கடம்பூர், வெறியலூர், வெள்ளாறு, பழையாறு என்ற இடங்களிலும் துரத்திச் சென்று விரட்டினான் நந்திவர்மன் என்று அவன் புகழைப் பாடும் நந்திக்கலம்பகம் குறிப்பிடுகிறது.
‘வண்மையால் கல்வியால் மாபலத்தால் ஆள்வினையால்
உண்மையால் பாராள் உரிமையால்-திண்மையால்
தேர்வேந்தர் வானேறத் தெள்ளாற்றில் வென்றானோ(டு)
யார்வேந்தர் ஏற்பார் எதிர்’
என்று இந்தப் போரை பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற புலவர் பாடிப் புகழ்ந்திருக்கிறார். ஆகவே அக்காலத்தில் நடந்த மிக முக்கியமான போர்களில் ஒன்றாக தெள்ளாற்றுப் போரைக் கருதலாம்.
பல்லவர்களுடனான போரில் படுதோல்வி அடைந்து பாண்டிய நாடு திரும்பிய ஶ்ரீமாற பாண்டியனுக்கு உள்நாட்டிலும் தொல்லைகள் தொடங்கின. ஆட்சிக்குப் போட்டியாக வந்த மாயா பாண்டியனையும் அவனுக்குத் துணையாக வந்த இலங்கை அரசனையும் முறியடிப்பதில் கவனம் செலுத்தினான் பரச்சக்ர கோலாகலன் என்று அழைக்கப்பட்ட ஶ்ரீமாறன். ஒருவழியாக அவர்கள் இருவரையும் வென்று தன்னுடைய ஆட்சியை நிலைநிறுத்திக்கொண்ட பிறகு, பல்லவர்களுடன் ஏற்பட்ட போரின் அவமானத்தைத் துடைப்பதில் மீண்டும் ஈடுபட்டான் அவன்.
அச்சமயம், பல்லவ நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று நடந்திருந்தது. பல்லவ மன்னனான மூன்றாம் நந்திவர்மனுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் கம்பவர்மன், இளையவன் நிருபதுங்கவர்மன். இதில் நிருபதுங்கன், ராஷ்ட்ரகூட அரசனான அமோகவர்ஷனின் மகளான சங்காவின் மூலம் நந்திவர்மனுக்குப் பிறந்தவன். அதன் காரணமாகவோ என்னவோ, அடுத்த ஆட்சிப்பொறுப்பை நிருபதுங்கவர்மனுக்கு அளித்தான் நந்திவர்மன். இதை மூத்தவனான கம்பவர்மன் விரும்பவில்லை என்றாலும், தம்பியோடு ஆட்சிப்பொறுப்பில் சேர்ந்துகொண்டான்.
இதைத்தவிர இன்னொரு முக்கியமான அரசியல் மாற்றமும் தமிழகத்தில் நடந்திருந்தது. இடைக்காலத்தில் பல்லவ பாண்டியப் பேரரசுகள் ஆட்சி செய்துகொண்டிருந்தபோது, சிற்றரசாக நீண்ட காலம் இருந்த சோழ நாட்டில் ஒரு புது ஒளி தோன்றியது.
அந்த வம்சத்தைச் சேர்ந்த விஜயாலய சோழன், செந்தலையை ஆண்ட முத்தரையர்களை வென்று சோழ நாட்டில் தன்னுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தியிருந்தான். அதை எதிர்த்துப் போர் புரிய வந்த கம்பவர்மனையும் அவன் தோற்கடித்து தன்னுடைய அரசை நிலைநிறுத்திக்கொண்டிருந்தான். ஆனாலும், அதற்கு மேல் அகலக்கால் வைக்க விரும்பாமல் தகுந்த சமயத்தை எதிர்நோக்கியிருந்தான்.
இந்தக் காலகட்டத்தில்தான் ஶ்ரீமாற ஶ்ரீவல்லபபாண்டியன் பல்லவர்கள் மீது மீண்டும் படையெடுத்தான். வழக்கம்போல, இருநாட்டிற்கும் எல்லையில் இருந்த சோழநாட்டில்தான் பல்லவ பாண்டியப் படைகள் மோதிக்கொண்டன. தற்போது கும்பகோணம் என்று அழைக்கப்படும் குடமூக்கு நகருக்கு அருகில் மிக உக்கிரமான போர் நடந்தது.
இந்தப் போரில் நேரடியாக நிருபதுங்கவர்மன் பங்கு பெறவில்லை. ஆனால் பல்லவப் படைகளுக்குத் துணையாக சேரனும் சோழ அரசனான விஜயாலயனும் சேர்ந்து கொண்டதாகத் தெரிகிறது. இருப்பினும் பாண்டியப் படைகளின் வலிமையும் அல்பசொல்பமானதல்ல. குடமூக்குப் போரில் பாண்டியர்களே வெற்றி பெற்றனர்.
‘குடகுட்டுவர் குணசோழர் தென்கூபகர் வடபுலவர்
அடலழிந்து களஞ்சேர அமர்வல்லான் மகன்படத்தன்
களிறொன்றூ வண்குடந்தைக் கதிகாட்டி யம்புரசீலன்’
என்று தளவாய்புரச் செப்பேடுகளும்,
‘கொங்கலர் பொழிற் குடமூக்கிற் போர்குறித்து
வந்தெதிர்ந்த கங்கபல்லவ சோளகலிங்க மாகதாதிகள்
குருதிப்பெரும் புனற்குளிப்பக் கூர்வெங்கணை தொடைஞெகிழ்த்துப்
பருதியாற்ற லொடுவிளங்கின பரச்சக்ர கோலாலனும்’
என்று சின்னமனூர்ப் பெரிய செப்பேடுகளும் புகழ்கின்றன.

சின்னமனூர்ச் செப்பேடுகள்
அதாவது ‘வாசனைகள் நிரம்பிய மலர்கள் நிறைந்த குடமூக்கில் தன்னை வந்து எதிர்த்த கங்கர்கள், பல்லவர்கள், சோழர்கள், மாகதர்கள் ஆகிய அரசர்கள் குருதி வெள்ளத்தில் குளிக்கும்படி செய்தவனும் கூர்மையும் கொடுமையும் உள்ள அம்புகளை அந்தப் போர்க்களத்தில் செலுத்தி கதிரவனுக்கு இணையாக விளங்கியவனுமான பரச்சக்ர கோலாகலன்’ என்று புகழ்கின்றன சின்னமனூர்ச் செப்பேடுகள்.
இப்படிக் கொடூரமாக நடந்த இந்தப் போரில் ஶ்ரீமாறன் வெற்றி பெற்றதை பல்லவ நிருபதுங்கவர்மனின் பாகூர்ச் செப்பேடுகளும் ஒப்புக்கொள்கின்றன. ‘பாண்டியனிடம் தோல்வியுற்ற பல்லவர் படை’ என்று அது குறிப்பிடுவதால், குடமூக்கில் ஏற்பட்ட தோல்வியையே அது குறிப்பதாகக் கொள்ளலாம்.
ஆனால் விஷயம் இத்தோடு முடிந்துவிடவில்லை. பல்லவப் படைகள் மீண்டும் ஒன்றுகூடி பாண்டியர்களோடு மோதின. இந்தப் போர் நடந்தது அரிசிலாற்றங்கரையில். இம்முறை நிருபதுங்கவர்மனே நேரடியாக ஹோதாவில் இறங்கினான். ஏற்கெனவே ஒரு கடும் போர் செய்து சளைத்திருந்த பாண்டியப் படைகளால் இம்முறை பல்லவப் படைகளை சமாளிக்க இயலவில்லை. அரிசிலாற்றுப் போரில் பல்லவப்படைகள் வெற்றி பெற்றன. ஶ்ரீமாற பாண்டியன் தோல்வியோடு பாண்டியநாடு திரும்பினான்.
அடுத்ததாக பொயு 862ல் ஶ்ரீமாற பாண்டியனின் மகன் இரண்டாம் வரகுண பாண்டியன் பாண்டிய நாட்டில் அரசுரிமை அடைந்தான். ‘பிள்ளைப் பிறைச் சடையணிந்த பினாகபாணி எம்பெருமானை உள்ளதில் இருத்தி உலகங்காக்கின்றவன்’ என்று குறிப்பிடப்படும் இரண்டாம் வரகுணன் பெரும் சிவபக்தன்.
தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து நடந்துகொண்டிருந்த பல்லவ பாண்டியப்போர்களைத் தவிர்க்க விரும்பிய அவன் நிருபதுங்கவர்மனோடு நட்புக்கொண்டான். தொண்டை நாட்டிலுள்ள திருவதிகை வீரட்டானத்தில் உள்ள நிருபதுங்கவர்மனது பதினெட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்றின் மூலம் இரு அரசர்களுக்கும் இருந்த நட்பு தெளிவாகிறது. இந்த நட்புறவின் மூலம் தமிழகத்தில் அமைதி திரும்பும் என்று கனவு கண்டான் அவன்.
வரகுணனின் கனவு பலித்ததா ?
(தொடரும்)

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில்
தொடர்ந்து எழுதி வருபவர். ‘அர்த்தசாஸ்திரம்’, ‘கிழக்கிந்தியக் கம்பெனி’, ‘பழந்தமிழ் வணிகர்கள்’ போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், ‘சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு’. தொடர்புக்கு : kirishts@gmail.com