‘தொண்டை நாடு பரவி’ அபராஜித வர்மனைக் கொன்று பல்லவ நாட்டை ஆதித்த சோழன் சோழநாட்டுடன் சேர்த்துக்கொண்ட பிறகு கொங்கு நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அதையும் வென்றான். இப்படி வட தமிழகம் முழுவதும் சோழநாட்டின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்ததால், ஆதித்தனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த அவன் மகனான முதல் பராந்தக சோழன், தென் தமிழகத்தின் மீது தனது கவனத்தைச் செலுத்தினான். தொடர்ந்து நடந்த போர்களால் பலவீனமடைந்திருந்த பாண்டியர்களைத் தோற்கடிப்பது பராந்தகனுக்கு எளிய செயலாகவே இருந்தது.
சோழர்களின் வலுவான படை பாண்டியநாடு நோக்கி வருவதை அறிந்த பாண்டிய மன்னனான ராஜசிம்ம பாண்டியன், இலங்கை அரசன் ஐந்தாம் காசிபனை உதவிக்கு அழைத்திருந்தான். அதை ஏற்று இலங்கை அரசனும் தன்னுடைய படைத்தலைவனான சக்க சேனாதிபதியின் தலைமையில் ஒரு படையை அனுப்பியிருந்தான். இருப்பினும் இந்தக் கூட்டுப் படையாலும் சோழர்களை வெல்ல முடியவில்லை.
சோழர்களிடம் தோற்றாலும், பாண்டியர்களது குலதனங்களான மணிமுடியையும், ரத்தின ஹாரத்தையும் பிறவற்றையும் இலங்கையில் மறைத்து வைத்துவிட்டு ராஜசிம்ம பாண்டியன் தலைமறைவானான். அதன்பின் பாண்டிய நாடு முழுவதும் சோழர்களின் ஆட்சியின் கீழ் வந்தது.
பாண்டியர்களுக்கு உதவிய இலங்கை அரசனின் மீதும் ஆத்திரமடைந்த பராந்தக சோழன் இலங்கையின் மீது படையெடுத்தான். அப்போது அங்கே நான்காம் உதயன் ஆட்சி செய்துகொண்டிருந்தான். சோழப் படை இலங்கைப் படையைத் தோற்கடித்தாலும், உதயன் பாண்டியர்களின் குலதனங்களை எடுத்துக்கொண்டு இலங்கையின் தென்பகுதியான ரோஹண நாட்டிற்குச் சென்றுவிட்டான்.
பாண்டிய நாட்டையும் இலங்கையையும் வென்ற காரணத்தால் முதல் பராந்தகனது கல்வெட்டுகள் அவனை ‘மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி’ என்று புகழ்கின்றன. இப்படி தமிழகம் முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்த அரசன் என்ற பெருமையை முதலில் பெற்றவன் முதல் பராந்தக சோழன்.
சோழ அரசை வலுவான நிலைக்குக் கொண்டு வந்துவிட்டு அக்கம் பக்கத்திலுள்ள அரசர்களிடம் நட்புப் பேணுவதில் கவனம் செலுத்தினான் பராந்தகன். சேர அரசரின் மகளை மணந்தவன் அவன். அடுத்ததாக, வடக்கில் அப்போது வலுவாக இருந்த ராஷ்ட்ரகூடர்களிடம் மண உறவு வைத்துக்கொள்ள முனைந்தான். தன்னுடைய மகளான வீரமாதேவியை ராஷ்ட்ரகூட அரசன் மூன்றாம் இந்திரனின் மகனான நான்காம் கோவிந்தனுக்கு திருமணம் செய்துகொடுத்து அவர்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொண்டான்.
மேலும் திருப்புறம்பியம் போரில் பல்லவ-சோழர்கள் சார்பில் போர் புரிந்த கங்க மன்னர்களுடனும் பராந்தகனின் நட்பு தொடர்ந்தது. கங்க மன்னன் இரண்டாம் ப்ருதிவீபதி சோழர்களுடன் சேர்ந்து செப்பேடு (உதயேந்திரம் செப்பேடுகள்) வெளியிடும் அளவிற்கு இந்த நட்பு இருந்தது.
பராந்தக சோழனுக்கு நான்கு மகன்கள். அவர்களில் முதல் மகனும் பெருவீரனுமான ராஜாதித்தனுக்கு இளவரசுப் பட்டம் கட்டிவைத்தான் அவன். இவ்வாறாக, தனது ஆட்சியை மிகத் திறமையாக நிலைநிறுத்தி சுற்றிலும் பகைவர்களே இல்லாத நிலைக்குக் கொண்டு வந்து சோழப் பேரரசின் பெருமையைப் பல மடங்கு உயர்த்திய பராந்தகனுக்கு பிரச்சனை எதிர்பாராத விதமாக வந்தது. அது பற்றித் தெரிந்து கொள்ள ராஷ்ட்ரகூட அரசியலைக் கொஞ்சம் ஆராயவேண்டும்.
ராஷ்ட்ரகூட அரசன் மூன்றாம் இந்திரனின் முதல் மகன் இரண்டாம் அமோகவர்ஷன். இந்திரனுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்ற அவனை, அவனது தம்பியும் பராந்தக சோழனின் மாப்பிள்ளையுமான நான்காம் கோவிந்தன் கொன்றுவிட்டு ஆட்சியைப் பிடித்தான். அதோடு விடாமல், ஒரு கொடுங்கோல் ஆட்சியைத் தனது நாட்டு மக்களுக்கு அளித்தான் கோவிந்தன். இதனால் மக்கள் அவன் மீது பெரும் அதிருப்தி அடைந்திருந்தனர்.
ராஷ்ட்ரகூடச் சிற்றரசர்களும் அரசு அதிகாரிகளும் கூட கோவிந்தனின் ஆட்சியை விரும்பவில்லை. இந்த நிலையில் பொயு 934ல் கீழைச்சாளுக்கிய நாட்டில் ஏற்பட்ட ஒரு அரசுரிமைப் போட்டியில் தலையிட்ட கோவிந்தன், அங்கே நடைபெற்ற போரில் பங்கேற்றான்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டான் மூன்றாம் இந்திரனின் சகோதரனான மூன்றாம் அமோகவர்ஷனின் மகனும் பெரும் அறிவாளியும் திறமைசாலியுமான மூன்றாம் கிருஷ்ணதேவன். உள்நாட்டுக் கலகத்தை ஏற்படுத்தி ராஷ்ட்ரகூட அரசைக் கவர்ந்துகொண்டு தன் தந்தையான மூன்றாம் அமோகவர்ஷனை அரசனாக ஆக்கிவிட்டான் அவன்.
வலுவான எதிரியான கிருஷ்ணனைத் தவிர அதிகார வர்க்கமும் மக்களுமே தனக்கு எதிராக இருப்பதைக் கண்ட கோவிந்தன், தன் மாமனாரான பராந்தக சோழன் வீட்டில் தன் மனைவியுடன் வந்து தங்கினான். ‘கன்னரதேவன்’ என்று அழைக்கப்பட்ட மூன்றாம் கிருஷ்ணன், அதோடு இல்லாமல் கங்க நாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டு அரசனைக் கொன்று அந்த வம்சத்தின் கிளையைச் சேர்ந்த இரண்டாம் பூதுகன் என்பவனை கங்க நாட்டின் அரசனாக்கினான். அவனுக்கு தன் சகோதரியான ரேவக நிம்மடியைத் திருமணம் செய்து கொடுத்து கங்க அரசர்களோடு நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொண்டான் கிருஷ்ணன்.
இதைப் பற்றிக் கவலைப்படாமல், தனது மாப்பிள்ளையான கோவிந்தன் இழந்த அரசைத் திரும்பப் பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு பராந்தக சோழன் பொயு 939ல் ஒரு படையை ராஷ்ட்ரகூடர்களுக்கு எதிராக அனுப்பி வைத்தான். அப்போது அங்கே மூன்றாம் கிருஷ்ணன் அரியணை ஏறியிருந்தான். அவனுக்குத் துணையாக கங்க மன்னன் பூதுகன் ஒரு படையோடு வந்தான்.
ராஷ்ட்ரகூட நாட்டில் பொயு 940ம் ஆண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட இந்தப் போரில் சோழர் படை தோல்வியுற்றது. தன் நிலையை ஸ்திரப்படுத்திக்கொண்ட கிருஷ்ணன், தனது உள்நாட்டுப் பிரச்சனையில் சோழர்கள் தலையிட்டதை ரசிக்கவில்லை. சோழர்கள் மீது பெரும் பகை கொண்ட அவன், அவர்களைத் தோற்கடிக்கப் படை திரட்டத்தொடங்கினான்.
இப்படி சோழநாட்டிற்கு வடக்கில் இருந்த அரசர்கள் பகைவர்களாக மாறிவிட்டதால், வட தமிழகத்தைப் பலப்படுத்த தன் மகனும் இளவரசனுமான ராஜாதித்தனின் தலைமையில் ஒரு பெரும் படையை திருமுனைப்பாடி நோக்கி அனுப்பினான் பராந்தக சோழன்.
போர் ஏதும் தொடங்காத காலத்தில், இந்த வீரர்களைக் கொண்டு ஒரு பெரும் ஏரியைத் தன் தகப்பனான பராந்தக வீரநாராயணன் பெயரில் ஏற்படுத்தினான் ராஜாதித்தன். இதுவே வீரநாராயண ஏரி (வீராணம்) என்ற பெயரில் விளங்குகிறது. தவிர, திருமுனைப்பாடி நாட்டை வளப்படுத்தி பல நற்செயல்களைச் செய்தான் ராஜாதித்தன். அங்கேயுள்ள பல கல்வெட்டுகள் இவற்றை உணர்த்துகின்றன.
சுமார் ஒன்பது ஆண்டுகள் தாமதித்து, வலுவான படை ஒன்றைத் திரட்டிய பின் பொயு 949ம் ஆண்டு மூன்றாம் கிருஷ்ணன் அந்தப் படையோடு சோழநாட்டில் பகுந்தான். அவனுக்குத் துணையாக அவனுடைய மைத்துனன் இரண்டாம் பூதுகன் கங்க நாட்டுப் படையோடு வந்தான். சோழர் படையின் பலமும் அல்பசொல்பமானதல்ல. இரு படைகளும் அரக்கோணத்திற்கு அருகில் உள்ள தக்கோலம் என்ற இடத்தில் மோதிக்கொண்டன.
பல நாட்கள் கடுமையான போர் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான போர் வீரர்கள் இதில் இறந்து பட்டனர். இரு தரப்புப் படைகளும் தங்களுடைய நிலையை விட்டுவிடாமல் மோதிக் கொண்டன. போரில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி இரு தரப்பிற்கும் சென்றது. ஒரு கட்டத்தில் யானை மீதிலிருந்து போர் செய்துகொண்டிருந்த ராஜாதித்தன் மேல் கங்க மன்னனாகிய இரண்டாம் பூதுகன் அம்பு ஒன்றை விட்டு அவரைக் கொன்றான். இந்த நிகழ்வு மாண்டியா அருகில் உள்ள ஆதக்கூரில் கிடைத்த ஒரு கல்வெட்டில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் உள்ள கன்னட வாசகம்

எபிக்ராபியா இண்டிகா – தொகுதி 2

அதன் மொழிபெயர்ப்பு
மூலத்தில் உள்ள வாசகத்தை ‘பிசுகயே கள்ளனாகி’ என்று படித்த வரலாற்று அறிஞர் ப்ளீட், இதற்கு பூதுகன் யானை மேல் அம்பாரியில் வஞ்சகமாக மறைந்திருந்து ராஜாதித்தனைக் கொன்றான் என்று பொருள் கொண்டு அதையே பதித்தும் வைத்தார். ஆனால், அண்மைக்காலத்தில் இந்த வரிகளை ‘பிசுகயே களனாகி’ என்று சில அறிஞர்கள் படித்து யானை மேல் இருந்த அம்பாரியைப் போர்க்களமாக்கி பூதுகன் ராஜாதித்தரைக் கொன்றான் என்று கூறுகின்றனர்.
பிரதான படைத்தலைவனும் இளவரசனுமாகிய ராஜாதித்தனை இழந்த சோழப்படைகள் ஊக்கம் இழந்து தோற்று ஓடத்தொடங்கின. வெற்றி அடைந்த ராஷ்ட்ரகூட அரசன் மூன்றாம் கிருஷ்ணன் கிட்டத்தட்ட தொண்டை மண்டலம் முழுவதையும் கைப்பற்றிக்கொண்டான். அந்தப் பகுதிகளில் கிடைக்கும் அக்காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் இதற்குச் சான்றாக விளங்குகின்றன.
இந்த வெற்றியைத் தனக்குத் தேடித்தந்த பூதுகனுக்கு சூத்ரகன், சாகர திரிநேத்ரன் ஆகிய பட்டங்களை கன்னரதேவன் வழங்கினான். தவிர, வனவாசி, பன்னீராயிரம், பெல்வோலா, பெலெகெரே, கிசுகாடு, பெகெநவாடு ஆகிய பகுதிகளையும் பூதுகன் பெற்றான். இந்தத் தோல்வியின் காரணமாக தொண்டை நாட்டை இழந்த சோழர்கள் மீண்டும் அதை மீட்க சில காலம் ஆயிற்று.
எந்தத் தொண்டை மண்டலத்தை யானையின் மீதிருந்து அபராஜித பல்லவனைக் கொன்று ஆதித்த சோழன் வென்றானோ, அதே தொண்டை மண்டலத்தை ராஜாதித்த சோழனை யானை மீதிருந்து போர் புரிந்து கொன்று ராஷ்ட்ரகூடனான மூன்றாம் கிருஷ்ணன் வென்றது ஒரு விந்தைதான்.
(தொடரும்)

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில்
தொடர்ந்து எழுதி வருபவர். ‘அர்த்தசாஸ்திரம்’, ‘கிழக்கிந்தியக் கம்பெனி’, ‘பழந்தமிழ் வணிகர்கள்’ போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், ‘சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு’. தொடர்புக்கு : kirishts@gmail.com