Skip to content
Home » தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #16 – சேவூர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #16 – சேவூர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் – சேவூர்

சோழநாட்டின் வடக்குப் பகுதியில் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருந்த கங்கர்களையும் ராஷ்ட்ரகூடர்களையும் சமாளிப்பதில் முதல் பராந்தக சோழன் மும்முரமாக இருந்த காலகட்டத்தில், தெற்கே பாண்டியர்கள் தாங்கள் இழந்த அரசை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர்.

பராந்தகனால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்ட ராஜசிம்ம பாண்டியனின் மகனான வீரபாண்டியன் ஒரு வலுவான படையைத் திரட்டி சோழர்களைத் தாக்க தகுந்த சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான். தக்கோலப் பெரும்போரில் தோல்வியடைந்து தொண்டை மண்டலத்தை பறிகொடுத்தது மட்டுமின்றி, தன்னுடைய மகனும் இளவரசனுமான ராஜாதித்தனை இழந்த பராந்தகன் அதன்பின் நீண்ட நாள் உயிர் வாழவில்லை. பராந்தக சோழனுக்குப் பிறகு அவனுடைய இரண்டாம் மகனான கண்டராதித்த சோழன் அரியணை ஏறினான்.

கண்டராதித்த சோழன் பெரும் சிவபக்தன். அதுமட்டுமின்றிப் பெரும் தமிழ்ப் புலவனாகவும் விளங்கினான். சைவத் திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் கண்டராதித்தன் பாடிய பதிகங்கள் திருவிசைப்பா என்ற தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

‘சீரான் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத் தாடிதன்னைக்
காரார் சோலைக் கோழி வேந்தன் தஞ்சையர் கோன்கலந்த
ஆரா இன்சொற் கண்டராதித்தன் அருந்தமிழ் மாலை வல்லார்
பேரா வுலகிற் பெருமையோடும் பேரின்பம் எய்துவரே’

என்று அந்தப் பதிகத்தில் தஞ்சையர் கோன் என்றும் கோழி வேந்தன் என்றும் தன்னைக் குறிப்பிட்டுக்கொள்கிறான் இந்த அரசன். இப்படிச் சிவபக்தியில் தன்னை ஈடுபடுத்தியதால், போர்களிலோ நாட்டை விஸ்தரிப்பதிலோ இவன் உள்ளம் செல்லவில்லை.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட வீரபாண்டியன் மதுரையைக் கைப்பற்றிக் கொண்டான். அது மட்டுமின்றி சோழர்களின் மீது தாக்குதல் ஒன்றையும் தொடுத்தான். பொயு 953ல் நடந்த இந்தப் போரில் வீரபாண்டியன் பெரு வெற்றி பெற்றான். அதோடு மட்டுமல்லாமல் சோழன் ஒருவனை அவன் போரில் கொன்றிருக்கவேண்டும் என்பதும் தெரிகிறது.

இந்தக் காரணத்தால் அவன் தனது கல்வெட்டுகளில் தன்னை ‘சோழன் தலை கொண்ட கோ வீரபாண்டியன்’ என்று அழைத்துக்கொள்கிறான். மதுரைக்கு அருகே இந்த வெற்றியின் நினைவாக சோழகுலாந்தகச் சதுர்வேதி மங்கலம் என்ற ஊரையும் அவன் அமைத்தான். அது தற்போது சோழவந்தான் என்று அழைக்கப்படுகிறது.

வீரபாண்டியனால் கொல்லப்பட்ட சோழன் யாரென்பது தெரியவில்லை. முதல் பராந்தக சோழனுக்கு நான்கு மகன்கள் என்பதும் அவர்களின் பெயர்கள் ராஜாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சயன், உத்தமசீலி என்பதும் பல்வேறு கல்வெட்டுகளால் தெரியவருகிறது. இதில் உத்தமசீலியைப் பற்றி அதிகம் தகவல் இல்லை (கண்டியூர் வீரட்டேஸ்வரர் கோவில் கல்வெட்டு உத்தமசீலி விளக்கேற்ற நிவந்தம் கொடுத்த செய்தி ஒன்றைப் பேசுகிறது).

ஆகவே வீரபாண்டியன் கொன்றது சோழ இளவரசனான உத்தமசீலி என்பது சில ஆய்வாளர்களின் கருத்து. எப்படியிருந்தாலும் இழந்த பகுதிகளை மீட்டெடுத்து வீரபாண்டியன் சுதந்தரமாக ஆட்சி செய்யத் தொடங்கினான் என்பது பாண்டிய நாட்டில் பல்வேறு இடங்களில் கிடைக்கும் அவனுடைய கல்வெட்டுகளால் தெரியவருகிறது.

கண்டராதித்தனின் ஆட்சிக்காலத்தில் தொண்டை மண்டலத்தையும் பாண்டி நாட்டையும் இழந்து சோழ நாடு முன்பு போலச் சுருங்கிவிட்டது. கண்டராதித்தன் ‘மேற்கெழுந்தருளிய’ பிறகு (அவர் மேற்குத் திசை நோக்கி யாத்திரை சென்றதாகவும் திரும்ப வரவில்லை என்றும் கூறப்படுகிறது) பராந்தக சோழனின் மூன்றாம் மகனான அரிஞ்சய சோழன் சோழ அரசுப்பொறுப்பை ஏற்றுக்கொண்டான்.

கண்டராதித்தனுக்கு அவனுடைய இரண்டாம் மனைவியான செம்பியன் மாதேவி மூலம் மதுராந்தகன் என்ற மகன் இருந்தான். ஆனால் கண்டராதித்தன் மறைந்த போது அவன் சிறுவனாக இருந்ததால், அரிஞ்சய சோழன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டான்.

சோழ நாடு இழந்த பகுதிகளை, குறிப்பாகத் தொண்டை மண்டலத்தை மீட்பதில் கவனம் செலுத்தினான் அரிஞ்சயன். ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே, ராஷ்ட்ரகூடர்கள் தொண்டை நாட்டில் தங்கள் பிரதிநிதிகளாக ஆட்சி செய்யப் பணித்திருந்த சிற்றரசர்களோடு மோதினான் இவன். அந்த முயற்சியில் ஆற்றூர் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் வீரமரணமடைந்து ஆற்றூர்த் துஞ்சிய அரிஞ்சயன் என்ற பெயர் பெற்றான். பின்னாளில் இவனது பேரனான ராஜராஜ சோழன் மேல்பாடி என்ற இடத்தில் இவனுக்குப் பள்ளிப்படைக் கோவில் ஒன்று எடுத்தான்.

குறுகிய காலத்திலேயே அரிஞ்சய சோழன் இறந்துபட்டதால் அவனது மகனான சுந்தர சோழன் இரண்டாம் பராந்தகன் என்ற பெயருடன் பொயு 957ல் ஆட்சிக் கட்டிலில் ஏறினான். தன்னுடைய தகப்பனைப் போலவே இவனும் சோழ நாடு இழந்த பகுதிகளை மீட்பதில் கவனம் செலுத்தினான். முதலில் தொண்டை நாட்டின் பகுதிகளை அங்கே இருந்த ராஷ்ட்ரகூடர்களின் பிரதிநிதிகளான சிற்றரசர்களிடமிருந்து சிறிது சிறிதாக மீட்டான். இதற்குப் பல்லவ வம்சத்தில் வந்தவனான பார்த்திபேந்திரன் என்ற சிற்றரசன் உதவியாக இருந்தான்.

பொயு 963 வாக்கில் தொண்டை நாட்டின் பகுதிகள் சுந்தர சோழனது ஆட்சியின் கீழ் வந்தன. போலவே, தெற்கிலும் பாண்டியர்களை ஒடுக்குவதில் கவனம் செலுத்திய இந்த அரசன், பொயு 962ல் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். இரு தரப்பும் சேவூர் என்ற இடத்தில் மோதின.

இந்தச் சேவூர் எது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. சிலர் இது கொங்கு நாட்டில் இருக்கும் சேவூர் என்று கூறுகின்றனர். ஆனால் பாண்டியர்களும் சோழர்களும் கொங்கு நாட்டிற்கு ஏன் சென்று மோதவேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஆகவே இது சோழ-பாண்டிய நாட்டு எல்லையில் இருந்த ஊராகவே இருக்கவேண்டும்.

சேவூர்ப்போரில் வீரபாண்டியனுக்கு உதவியாக இலங்கை அரசனான நான்காம் மகிந்தன் தன்னுடைய படையை அனுப்பியிருந்தான். ஆனால், இந்தப் போரில் பாண்டியர்கள் தோல்வியடைந்தனர். வீரபாண்டியன் போர்க்களத்தை விட்டு ஓடி மறைந்துகொண்டான். வெற்றி பெற்ற சுந்தர சோழன் தன்னை ‘மதுரை கொண்ட கோ ராஜகேசரி வர்மன்’ என்றும் ‘வீரபாண்டியனைச் சுரம் இறக்கிய பெருமாள்’ என்றும் அழைத்துக்கொள்கிறான்.

வெற்றியோடு தஞ்சை திரும்பிய சுந்தரசோழனின் மகிழ்ச்சி நீண்டநாள் நீடிக்கவில்லை. மலைப்பகுதியிலிருந்து வெளியே வந்த வீரபாண்டியன் மீண்டும் மதுரையைக் கைப்பற்றி ஆட்சி செய்யத் தொடங்கினான். பொயு 966ல் தன்னுடைய மூத்த மகனான ஆதித்த கரிகாலனுக்கு இளவரசுப் பட்டம் கட்டிவைத்து அவன் தலைமையில் ஒரு பெரும் படையை மீண்டும் பாண்டிய நாட்டிற்கு அனுப்பி வைத்தான் சுந்தர சோழன்.

ஆதித்த கரிகாலனுக்குத் துணையாக பல்லவன் பார்த்திபேந்திரனும் கொடும்பாளூர் அரசன் பூதிவிக்கிரம கேசரியும் சென்றனர். மீண்டும் மீண்டும் தங்களுக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கும் பாண்டிய வம்சத்தை ஒரேயடியாக அழிக்கவேண்டும் என்ற ஆவேசத்தோடு சோழப்படைகள் கடுமையாகப் போர் செய்தன. போரில் இறுதியில் ஆதித்த கரிகாலன், வீரபாண்டியனின் தலையை வெட்டி எறிந்தான். அதோடு மட்டுமல்லாமல், அந்தத் தலையை எடுத்துக்கொண்டு தஞ்சாவூர் வரை ஊர்வலமாக வந்து, தஞ்சாவூர்க் கோட்டை வாசலில் அதைத் தொங்கவிட்டான். இந்தச் செய்தியை எசாலம் செப்பேடுகள் இவ்வாறு குறிப்பிடுகின்றன.

‘தத்ப்ராதா கரிகால சோள ந்ருபதி வீரச்ரியா லிங்கிதோ
ஹத்வா பாண்ட்ய நரேந்த்ர மாஹவமுகே சித்வா ததீயம் சிர
தஞ்சா த்வார கதோருதாரு சிரஸி நியஸ யோத்தமாங்கம் ரிபோ
ஸப்தாம்போ நிதிமேகலாம் வஸுமதீம் பாலோ அப்யரக்ஷத் சிரம்’

இதன் பொருள் ‘ராஜராஜனின் அண்ணனான கரிகாலன் பாண்டிய மன்னனின் தலையைத் துண்டித்ததுடன், அந்தத் தலையை தஞ்சாவூர் கோட்டை வாசலில் உள்ள ஒரு மரத்தில் தொங்கவிட்டான்’ என்பதாகும்.

அதற்குப் பிறகு ஆதித்த கரிகாலன் மட்டுமின்றி பார்த்திபேந்திர வர்மனும் பூதிவிக்கிரம கேசரியும் கூட தங்கள் கல்வெட்டுகளில் தங்களை ‘வீரபாண்டியன் தலை கொண்ட’ என்ற அடைமொழிகளோடு அழைத்துக்கொள்ளத் தொடங்கினர்

ஆதித்த கரிகாலன் கல்வெட்டு
ஆதித்த கரிகாலன் கல்வெட்டு
பார்த்திபேந்திரன் கல்வெட்டு
பார்த்திபேந்திரன் கல்வெட்டு – உத்தரமேரூர்

இப்படி அதுவரை தமிழக வரலாற்றிலேயே இல்லாத ஒரு கொடூரமான செயலைச் செய்தவன் ஆதித்த கரிகாலன். அதன் காரணமாக ஆத்திரமடைந்த பாண்டிய நாட்டு அதிகாரிகள் சிலர் சோழ நாட்டில் உயர்பதவிகளில் இருந்த தன் உறவினர்களோடு சேர்ந்து ஆதித்த கரிகாலனைப் படுகொலை செய்தனர். உடையார்குடியில் இருந்த ஒரு கல்வெட்டால் இது அறியப்படுகிறது.

சேவூரில் நடைபெற்ற இந்தப் போரோடு பாண்டிய நாட்டில், பாண்டியர்களது ஆட்சி அறவே அழிந்துபோனது. மீண்டும் அவர்கள் ஆட்சியை மீட்க சில நூற்றாண்டுகள் காத்திருக்கவேண்டியதாயிற்று.

(தொடரும்)

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *