Skip to content
Home » தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #17 – காந்தளூர்ச்சாலை

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #17 – காந்தளூர்ச்சாலை

காந்தளூர்ச்சாலை

“திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலை கலமருத் தருளி”

தமிழ்நாட்டுப் போர்க்களங்களிலேயே அதிகமான சர்ச்சைக்கு உள்ளான இடமாக இருப்பது காந்தளூர்ச்சாலைதான். இதைப் பற்றிய குறிப்புகள் அதிகமாக இல்லாமலிருப்பது ஒரு புறம் என்றால், இருப்பதையும் முழுதாக ஆராயாமல் சாதாரணப் புனைவு ஆசிரியர்கள், சரித்திரப் புனைவு ஆசிரியர்கள், தங்கள் நோக்கத்திற்கு ஏற்ப வளைப்பவர்கள் என்று ஆளாளுக்கு ஒரு கருத்துச் சொல்லி எல்லாருமாகச் சேர்ந்து குழப்பியடித்த போர்க்களமாகவே இன்று வரை காந்தளூர்ச்சாலை இருக்கிறது.

ஒரு சரித்திரப் புனைவின் அடிப்படையில் எந்தவித வரலாற்று ஆதாரமும் இல்லாமல் ஆதித்த கரிகாலன் கொலைக்கும் காந்தளூர்ச்சாலைக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கதை கட்டுபவர்களும் இதில் அடக்கம். ஆகவே இவற்றையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு கறாரான வரலாற்றுக் குறிப்புகளின் அடிப்படையில் இந்தப் போர்க்களத்தை ஆராயவேண்டும்.

மேற்குறிப்பிட்ட ராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தியில் முதலில் குறிப்பிடப்படுவது காந்தளூர்ச்சாலைதான். ஆனால் இதுதான் ராஜராஜனின் முதல் போரா? அரசுப் பொறுப்பேற்ற பிறகு அவன் முதலில் போர்களில் ஈடுபடக் காரணம் என்ன?

ஆதித்த சோழனின் காலத்தில் அபராஜித பல்லவனோடு முடிவுக்கு வந்த பல்லவ வம்சம் அதன் பிறகு தலை தூக்கவே இல்லை. அவ்வப்போது ஓரிரு சிற்றரசர்கள் அந்தப் பரம்பரையில் தோன்றினாலும் அவர்கள் சோழர்களுக்கும் பின்னால் மேலெழுந்த பாண்டியர்களுக்கும் பெரும் சவாலாக அமையவில்லை. ஆகவே, தொண்டை நாடு பெரும்பாலும் சோழர்களிடமோ அல்லது அவர்களின் சிற்றரசர்களிடமோதான் இருந்தது.

ஆனால் பாண்டிய நாடு அப்படியல்ல. அவர்களுடைய தொடர் அரசுமுறை வியூகத்தின் காரணமாக பாண்டிய வம்சத்தின் ஏதாவது ஒரு கிளை மதுரை அரியணைக்குச் சொந்தம் கொண்டாடிக்கொண்டு இருந்தது. பல நேரங்களில் பஞ்ச பாண்டியர்கள் என்று ஐந்து இடங்களில் பாண்டியர்களின் தாயாதிகள் ஆட்சி செய்ததைக் காணலாம். இதன் காரணமாக பாண்டிய நாட்டில் இருந்து சோழர்களுக்குத் தொடர்ந்து தொல்லைகள் வந்தன. பாண்டியர்களுக்கு உறுதுணையாக இலங்கை அரசர்களும் மேற்கில் ஆய்வேளிர் குல மன்னர்களும் சேரர்களும் செயல்பட்டுக்கொண்டிருந்தனர். போர்களில் பாண்டியர்கள் தோற்றுத் தலைமறைவாகும்போது அவர்களுக்கு அடைக்கலம் அளிப்பது மலைநாடாகவே இருந்தது என்பதை வரலாற்றின் பல இடங்களில் பார்க்கலாம்.

அதே போலத்தான் ராஜராஜனின் காலத்திலும் நடந்தது. வீரபாண்டியனைக் கொன்று மதுரையை மீண்டும் சோழநாட்டோடு ஆதித்த கரிகாலன் இணைத்த பின் சில காலம் அங்கே அமைதி நிலவினாலும், ராஜராஜன் அரியணை ஏறியவுடன் அங்கே அமரபுஜங்கன் என்ற பாண்டியன் தோன்றினான். ஆகவே மீண்டும் ஒரு முறை பாண்டிய நாட்டின் மீது படையெடுக்கவேண்டிய அவசியம் ராஜராஜனுக்கு ஏற்பட்டது. திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இதைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள்

திருவாலங்காட்டுச் செப்பேடுகள்

‘முதன்முதலாக திரிசங்குவின் (தெற்கு) திசையில் ராஜராஜன் தன் திக்விஜயத்தைத் தொடங்கினான். பாண்டியர்கள் தனது வம்சத்தவர், ஆகவே அவர்களைக் காப்பது என் கடமை என்று கர்வம் கொண்டு சோழனோடு போர்புரியவந்த சந்திரன் கூட ராஜராஜனுக்கு வெண்சாமரம் வீசினான். பாண்டியன் அமரபுஜங்கன் தோற்கடிக்கப்பட்டான். அவனைச் சேர்ந்த அரசர்கள் ரகசியமாகப் படைதிரட்டினாலும் ராஜராஜனைப் பார்த்துப் பயந்தனர். பாம்புகள் ஓடி ஒளிவதைப் போல ஒளிந்துகொள்ள நினைத்தனர். சோழ குலத்தின் ஆபரணமான ராஜராஜன் கடலை அகழியாகக் கொண்டதும் பெரும் கொத்தளங்களை உடையதும் உடைய விழிஞத்தைக் கைப்பற்றினான்.’

இதிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியச் செய்திகள்:

⁃ ராஜராஜன் செய்த முதல் போர் அமரபுஜங்கனோடு நடந்தது. தெற்கு நோக்கிய திக்விஜயத்தில் முதலில் வருவது பாண்டியநாடு. எனவே அமரபுஜங்கனை வென்றது முதலில் நடந்தது.

⁃ அவனைச் சேர்ந்த அரசர்கள், ரகசியமாகப் படை திரட்டியவர்கள் ஓடி ஒளிந்தனர் என்ற வரிகளின் மூலம் பாண்டியனுக்கு உதவி செய்த அரசர்களை அடுத்து ராஜராஜன் குறி வைத்தது தெளிவு. அவர்கள் யார் என்பதற்கு அடுத்த வரியிலேயே விடை கிடைக்கிறது

⁃ அடுத்து அவன் போர் செய்து கைப்பற்றியது விழிஞம் துறையை. தற்போதைய அதானி காலம் வரை செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருக்கும் விழிஞத்திற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. இது ஆய் வேளிர்களின் நாட்டில் இருந்த துறைமுகம்.

பொயு 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையனும் விழிஞத்தை வெற்றி கொண்டிருக்கிறான். அதைப் பற்றி ஶ்ரீவரமங்கலச் செப்பேடுகள் சொல்வதென்ன?

ஶ்ரீவரமங்கலச் செப்பேடுகள்

ஶ்ரீவரமங்கலச் செப்பேடுகள்

பெரிய மதில்களை உடைய கடற்கரைப் பட்டினமான விழிஞத்தை (நெடுஞ்சடையன்) வென்றான். வெற்றிப் படைகளை உடைய வேள் மன்னனைத் தோற்கடித்தான் என்கிறது அந்தச் செப்பேடுகள். ஆகவே அக்காலத்திலிருந்து பெரும் மதில்களை உடைய கடற்படைத் தளமாக விழிஞம் இருந்தது என்பதும் அது ஆய் வேள் மன்னனைச் சேர்ந்தது என்பதும் தெளிவாகிறது.

அதே போல ஆய் வேளிர் பாண்டியர்களால் தோற்கடிக்கப்பட்ட பிறகு அவர்களது சிற்றரசர்களாகவே பெரும்பாலும் இருந்தனர். எனவே பாண்டியர்களுக்கு அவர்கள் உதவி செய்ததிலும் வியப்பேதும் இல்லை. அந்த உதவியை உடைக்கவேண்டும் என்ற காரணத்தால்தான் ராஜராஜன் அவர்களது முக்கியக் கடற்படைத் தளமான விழிஞத்தை வென்றான்.

இப்போது காந்தளூர்ச்சாலைக்கு வருவோம். இந்த இடம் எங்கே இருக்கிறது என்பது பற்றி ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு. சதாசிவப் பண்டாரத்தார் இது திருவனந்தபுரத்தின் அருகே உள்ள வலியசாலை என்று குறிப்பிடுகிறார். கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள காந்தளூர் இது என்று சொல்வோரும் உண்டு. ஆனால் காந்தளூர் கடற்கரையில் இருந்தது என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.

முதலாம் ராஜாதிராஜனுடைய மெய்க்கீர்த்தி ‘வேலை கெழு காந்தளூர்ச்சாலை கலமறுத்து’ என்று குறிப்பிடுகிறது. கலிங்கத்துப் பரணியில் ஜெயங்கொண்டார் ‘வேலை கொண்டதும் விழிஞம் அழித்ததும் சாலை கொண்டதும் தண்டு கொண்டு அல்லவோ’ என்று முதலாம் குலோத்துங்கனுடைய புகழைப் பாடுகிறார். வேலை என்றால் கடல். ஆகவே காந்தளூர்ச்சாலை கடலின் அருகே இருந்த ஊர் என்பது புலப்படுகிறது.

கலிங்கத்துப் பரணியைத் தவிர தவிர விக்கிரமசோழனின் சிற்றரசனாக இருந்த சடையவர்மன் பராந்தக பாண்டியனின் மெய்க்கீர்த்தியும் ‘குலவிழிஞம் கைக்கொண்டு கன்னிப்போர் செய்தருளிக் காந்தளுர்ச்சாலை கலமறுத்து’ என்று விழிஞத்துடன் தொடர்புடையதாகவே காந்தளூர்ச்சாலையைக் குறிக்கிறது.

இப்படி கடற்படைத் தளமான விழிஞத்துடன் சேர்ந்து குறிப்பிடப்படுவதால் காந்தளூர்ச்சாலை அதன் அருகே இருந்திருக்கவேண்டும் என்பதும் தெளிவாகிறது. ஆகவே திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள வலிய சாலையே இது என்ற பண்டாரத்தாரின் கருத்தோடு இது ஒத்துப்போகிறது.

இந்தச் சாலையை ஏன் அழிக்கவேண்டும்? அதோடு குறிப்பிடப்படும் கலம் என்பதன் பொருள் என்ன?

ஆய் குல மன்னனான கருந்தடக்கனின் பார்த்திசேகரபுரச் செப்பேடுகள் அந்த ஊரில் அவன் வேதம் கற்பதற்கு ஒரு ‘சாலை’ அமைத்ததையும் அதற்கு காந்தளூரில் உள்ள ஒரு சாலையை மாதிரியாக எடுத்துக்கொண்டதையும் குறிப்பிடுகிறது. பார்த்திவசேகரபுரச் சாலை மீமாம்சம், வியாகரணம், புரோஹிதம் ஆகியவற்றைக் கற்றுக்கொடுக்கும் இடமாகக் குறிப்பிடப்படுகிறது.

தவிர, அதில் வேதம் படிக்கும் மாணவர்கள் ஆயுதங்களைக் கையாளாதவர்களாக இருக்கவேண்டும் என்பது போன்று நிபந்தனைகள் கூறப்படுகின்றன.

இதில் கூறப்பட்ட காந்தளூர்ச்சாலைதான் ராஜராஜன் தாக்கிய சாலை என்று எடுத்துக்கொண்டால் எதற்கு வேதம் ஓதும், ஆயுதம் ஏந்தாத மாணவர்களை ராஜராஜன் தாக்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா? இதற்குப் பதில் சொல்ல முனைந்த சிலர் இங்கே ‘கலம்’ என்பது தகராறுகளைக் குறிக்கும், அதைத் தீர்த்துவைத்ததுதான் கலம் அறுத்தது என்றும், கலம் என்பது உணவுப் பொருள். அது தொடர்பான சர்ச்சையை ராஜராஜன் தீர்த்து வைத்தான் என்றும் பலவிதமாகப் பொருள் சொல்லிவந்தனர்.

ராஜராஜனின் நான்காம் ஆண்டுக் கல்வெட்டிலிருந்து அவனுடைய வீரச்செயலான காந்தளூர்ச்சாலை விவகாரம் குறிப்பிடப்படுகிறது ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்த ஶ்ரீ ராஜகேசரிவர்மன்’ என்றும் ‘சாலை கலமறுத்தருளிய ஶ்ரீ ராஜராஜ தேவன்’ என்றும் கல்வெட்டுகள் ராஜராஜனைக் குறிப்பிடுவதால், வெறும் தகராறுகளைத் தீர்த்த செய்தி இவ்வளவு பெருமையாகக் குறிப்பிடப்படுமா என்று ஒரு கேள்வி எழுந்தது.

அதற்கான விடை செங்கத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்றில் இருந்தது. ‘தண்டேவிச் சாலைய் கலமறுத்து அங்குள்ள மலை ஆளர் தலை அறுத்து’ என்று ராஜராஜனின் வீரச்செயலை அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

தண்டு என்றால் படை. ‘மலை ஆளர்’ என்பது ‘மலை ஆழர்’ என்ற சொல்லின் திரிபு. மேற்குத் தொடர்ச்சி மலையின் பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசிக்கும் மக்களைக் குறிப்பது அது. (அதுவே இப்போது மலையாளி என்று வழங்குகிறது). ஆகவே படையை ஏவி அங்குள்ள மலை ஆளர் என்று அழைக்கப்பட்ட மக்களின் தலையை அறுத்ததாக இந்தக் கல்வெட்டு தெரிவிப்பதை அறியலாம்.

இந்தச் செய்திகளால் அங்கு நடைபெற்றது போர் என்பது தெரிகிறது. வெறும் வேதம் ஓதும் ஆட்களை வெல்ல படை ஏவுவதும் அவர்கள் தலையை அறுப்பதும் பொருந்தாத செயல் என்பதால், பார்த்திவசேகரச் செப்பேட்டில் கூறப்பட்ட சாலையும் மெய்க்கீர்த்தியில் வரும் சாலையும் வேறு வேறு என்பதையும் அறியலாம்.

காந்தளூர் என்பது முற்காலக் காஞ்சியைப் போல, இக்கால மணிப்பால் போல கல்விக்கூடங்கள் நிறைந்த இடமாக இருந்திருக்கக்கூடும். அங்கே வேதம் பயிற்றுவிக்கும் சாலைகளும் போர்ப்பயிற்சி குறிப்பாக கடற்படைப் பயிற்சி அளிக்கும் சாலைகளும் இருந்திருக்கலாம். அப்படி ஒரு கடற்படைப் பயிற்சி சாலையை அழித்த நிகழ்வுதான் காந்தளூர்ச்சாலை கலமறுத்த நிகழ்வு.

இங்கே கலம் என்பதற்கு பல பொருள்கள் உண்டு என்றாலும், மெய்க்கீர்த்திகளில் எந்தப் பொருளில் அது வந்திருக்கிறது என்பதையும் பார்க்கவேண்டும். ராஜேந்திரனின் மெய்க்கீர்த்தி ‘அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி’ என்றே தொடங்குகிறது. ஆகவே கலம் என்பது கப்பல். காந்தளூர்ச்சாலை கப்பல் படைப் பயிற்சி கொடுக்கும் இடம். கடற்படைத் தளமான விழிஞத்திற்கு அருகே இருந்த இந்தப் பயிற்சி நிலையத்தையும் சேர்த்து விழிஞத்தை வென்றவர்கள் படைகொண்டு அழித்திருக்கக்கூடும். அதைத்தான் முதலாம் குலோத்துங்கனின் புகழ் பாடும் ஜெயங்கொண்டாரும் குறிப்பிடுகிறார்.

விழிஞத்தை பலர் முன்பு வென்றிருக்கிறார்கள். ஆனால் குறிப்பாக காந்தளூர்ச்சாலையை வென்றது ராஜராஜன் என்ற காரணத்தால்தான் அவனுடைய வெற்றிகளில் அது சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது. காந்தளூர்ச் சாலை வெறும் நிலப்போர் மட்டுமல்ல. ஆய் குல மன்னர்களின் கடல் பலத்தை உடைக்கும் கடுமையான கடல் போராகவும் இருந்திருக்கூடும். சோழர் கடற்படையின் வலிமையை காட்டிய முதல் போர் என்பதாலும் அது சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது. அப்போது பாண்டியனை வென்றது ஏன் மெய்க்கீர்த்தியில் வரவில்லை என்று கேட்டால், மெய்க்கீர்த்தியின் முத்தாய்ப்பாக வருவதே ‘செழியரைத் தேசு கொள் கோ ராஜகேசரி வர்மன்’ என்று பாண்டியரின் ஒளியை மழுங்கச் செய்த ராஜாராஜனின் புகழைப் பாடும் வரிகள்தான்.

ராஜராஜ சோழனைத் தவிர முதலாம் ராஜாதிராஜ சோழனும், முதல் குலோத்துங்க சோழனும் விக்கிரம சோழனின் ஆட்சியின் கீழ் சிற்றரசனாக இருந்த சடையவர்மன் பராந்தக பாண்டியனும் காந்தளூர்ச்சாலையில் கலம் அறுத்திருக்கிறார்கள். தாக்கி அழிக்கப்பட்ட கல்விக்கூடங்கள் உடனே மீண்டெழுவது எளிதல்ல. ஆனால் அழிக்கப்பட்ட கேந்திரமான படைத்தளங்களும் படைப் பயிற்சி நிலையங்களும் மீண்டும் மீண்டும் உருவாக்கப்படும் சாத்தியங்கள் அதிகம்.

அதனால்தான் தொடர்ந்து சோழ மன்னர்கள் காந்தளூர்ச்சாலை என்ற போர்ப்பயிற்சி நிலையத்தை குறிவைத்துப் போர் தொடுத்திருக்கின்றனர். அப்படிப்பட்ட வகையில் மிகக் குறிப்பிடத்தக்க போர்த்தளமாக காந்தளூர்ச்சாலை மூன்று நூற்றாண்டுகளுக்கு விளங்கியிருக்கிறது.

(தொடரும்)

பகிர:
nv-author-image

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *