சங்ககாலம் முதல் தொடர்ந்து பல்வேறு விதமான போர்களைச் சந்தித்துக்கொண்டிருந்த தமிழகத்தில் ஒரு நீண்ட அமைதி நிலவியது ராஜராஜ சோழன் காலம் முதல் அவன் மகன் ராஜேந்திர சோழன் காலம் வரை என்று சொல்லலாம்.
தமிழகத்தின் வடபகுதியும் மேற்குப் பகுதியும் சோழநாட்டின் ஆட்சிக்கு உட்பட்டே இருந்தன. பாண்டியன் அமரபுஜங்கனை ராஜராஜன் வென்ற பிறகு பாண்டிய நாடு சோழ நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் முழுமையாக வந்தது. சேர அரசன் பாஸ்கர ரவிவர்மனை ராஜராஜன் தோற்கடித்த பிறகு அங்கிருந்தும் எதிர்ப்புகள் எழவில்லை.
ராஜேந்திர சோழன் பட்டமேறியபிறகு அவன் மகனை சுந்தர சோழ பாண்டியன் என்ற பெயரில் மதுரையில் பட்டாபிஷேகம் செய்து சோழர்களுடைய ஆட்சியை அசைக்கமுடியாமல் பாண்டிய நாட்டில் நிலைநிறுத்தினான். இப்படியாக தமிழகம் முழுவதும் சோழநாட்டின் கீழ் தொடர்ந்து சில தசாப்தங்கள் இருந்ததால், போர்களுக்கான அவசியமே ஏற்படவில்லை.
அதன் காரணமாக சோழர்களின் கவனம் வடக்கில் மேலைச் சாளுக்கியர்களை அடக்குவதிலேயே இருந்தது. அதன் முத்தாய்ப்பாக ராஜேந்திரன் வங்காளம் வரை படையெடுத்துச் சென்று அங்கிருந்து கங்கையைக் கொண்டுவந்து கங்கை கொண்ட சோழபுரத்தில் தான் கட்டிய கோவிலில் அபிஷேகம் செய்தான்.
அதை அடுத்து கடலைக் கடந்து சோழர் கடற்படை கடாரத்தைத் தாக்கியது. ஶ்ரீவிஜயப் பேரரசின் கடல்பலத்தை நொறுக்கியது சோழர்களின் இந்தப் படையெடுப்பு. இப்படிச் சென்ற இடமெல்லாம் வெற்றி அடைந்த பிறகு தன்னுடைய மகனான ராஜாதிராஜனுக்கு பொயு 1018ல் இளவரசுப் பட்டம் சூட்டிவிட்டு ஓய்வெடுத்தான் ராஜேந்திர சோழன்.
இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு பாண்டியர்களும் சேரர்களும் தலை தூக்க முற்பட்டனர். பாண்டிய வம்சத்தில் வந்த மானாபரணன் என்ற பாண்டியன் தென்பாண்டி நாட்டில் கலகம் செய்தான். அவனுக்குத் துணையாக சுந்தரபாண்டியன் என்ற இளவரசனும் கன்னியாகுமரியை ஒட்டிய பகுதியை ஆட்சி செய்த வீர கேரளன் என்ற அரசனும் இருந்தனர். ஆகவே, இந்தக் கலகத்தை அடக்க ராஜாதிராஜன் ஒரு படையோடு புறப்பட்டான். இந்த விவரங்களை ராஜாதிராஜனின் மெய்க்கீர்த்தி விவரிக்கிறது.
மன்னுபல் லூழியுள் தென்னவர் மூவருள்
மானாபரணன் பொன்முடி யானாப்
பருமணிப் பசுந்தலை பொருகளத் தரிந்து
முதலில் பாண்டிநாட்டில் புகுந்த அவன் மானாபரணனைப் போரில் தோற்கடித்து கொன்றான். அவனுடைய பொன்முடியை அகற்றி களத்தில் அவனுடைய தலையை அரிந்ததாக மெய்க்கீர்த்தி தெரிவிக்கிறது.
அந்தமில் பெரும்புகழ்ச் சுந்தரபாண்டியன்
கொற்றவெண் குடையுங் கற்றை வெண் கவரியும்
சிங்காதனமும் வெங்களத் திகழ்ந்துதன்
முடிவிழத் தலைவிரித்தடி தளர்ந்த தோடத்
தொல்லை முல்லையூர்த் துரத்தி
அதன் பின் முல்லையூர் என்ற இடத்தில் சுந்தரபாண்டியனைச் சந்தித்த அவன், போர்க்களத்தில் வெண்கொற்றைக் குடை, கவரி, சிங்காதனம் ஆகியவற்றை இழந்து தப்பி ஓடும்படி செய்தான். அதன்பின், தமிழ்நாட்டின் தென்பகுதிக்குச் சென்ற சோழப்படைகள் அங்கே வீரகேரளனின் படைகளோடு மோதின.
வாரள வியகழல் வீரகே ரளனை
முனைவயிற் பிடித்துத் தனது வாரணக்
கதக்க ளிற்றினால் உதைப்பித் தருளி
வீரகேரளனைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்து, அவனைத் தன்னுடைய யானையினால் உதைத்துக் கொன்று அவனுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளையும் கைப்பற்றிக்கொண்டான் ராஜாதிராஜன்.
இந்த வீரகேரளன் என்பவன் தமிழகத்தின் தென்பகுதியோடு சேரநாட்டின் தென்பகுதியையும் ஆட்சி செய்த ஓர் அரசனாக இருக்கக்கூடும். அப்போது சேரநாட்டின் அரசனாக இருந்தவன் பாஸ்கர ரவிவர்மன் மனுகுலாதித்யன்.
தலைநகரான மகோதையிலிருந்து ஆட்சி செய்தவன் அவன். சேர நாடு முழுவதும் அப்போது பல்வேறு சிற்றரசர்களால் ஆட்சி செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. மத்திய அரசின் அதிகாரம் குறைந்து ஒரு நெகிழ்வான கூட்டாட்சி முறை அப்போது அங்கே இருந்தது.
இருப்பினும் பாண்டியர்களுக்கு ஆதரவாக வீரகேரளன் உதவி புரிந்தது, பாஸ்கர ரவிவர்மனின் ஆசியுடனே என்று ராஜாதிராஜன் நினைத்திருக்கலாம். மேலும், சேரநாட்டின் பல்வேறு பகுதிகளை ஆண்டு கொண்டிருந்த அரசர்கள் அனைவரையும் தோற்கடித்து சோழநாட்டின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதே சோழர் ஆதிக்கம் வலுப்பெறுவதற்கான வழி என்று ராஜாதிராஜன் கருதியிருக்கலாம். ஆகவே சேரநாட்டின் ஊடே தனது திக்விஜயத்தை சோழப்படைகள் தொடர்ந்தன.
முதலில் திருவனந்தபுரம் வழியாக சேரநாட்டில் புகுந்த சோழப்படைகள் ஆய்குல அரசர்கள் ஆட்சிக்கு உட்பட்ட காந்தளூர்ச்சாலையை அழித்தன. ‘வேலை கெழு காந்தளூர்ச்சாலை கலமறுத்து’ என்று இந்த நிகழ்வை ராஜாதிராஜனின் மெய்க்கீர்த்தி குறிக்கிறது.
அதன்பின் அருகே உள்ள வேணாட்டில் புகுந்தன. வேணாடு என்பது தற்போதைய கொல்லம் பகுதி. பின்னால் இது விரிவடைந்து ஆய் நாட்டையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டது. ‘வேள் நாடு’ என்பதே வேணாடு என்று திரிந்தது என்று அறிஞர்கள் கூறுகின்றனர். சேரநாட்டின் தென்பகுதியில் இருந்த வலிமையான அரசு அது.
அங்கிருந்த அரசனைக் கொன்று அவனை வீரசுவர்க்கம் அனுப்பியதை ‘வேணாட்டரசை சேணாட்டொதுக்கி’ என்று ராஜாதிராஜன் மெய்க்கீர்த்தி குறிப்பிடுகிறது. அவனுக்கு உதவ வந்த மற்றொரு சிற்றரசனான கூபக நாட்டு வேந்தனையும் தோற்கடித்து புறமுதுகிட்டு ஓடச்செய்தான் ராஜாதிராஜன். வேணாட்டை வெற்றி கொண்டு சேரர்களின் தலைநகரான மாக்கோதையை நோக்கிச் சென்றன சோழர்களின் படைகள்.
சோழப்படைகள் முன்னேறி வருவதைக் கண்ட சேரமன்னன் தன் தலைநகரை விட்டு காட்டில் ஓடி ஒளிந்துகொண்டான்.
‘மிடல்கெழு வில்லவன் குடர்மடிக் கொண்டுதன்
நாடுவிட் டோடிக் காடுபுக் கொளிப்ப
வஞ்சியும் புதுமலர் தலைந்தாங் கொஞ்சலில்’
என்கிறது மெய்க்கீர்த்தி. இப்படி சேரர் தலைநகரை அதிக சேதமில்லாமல் கைப்பற்றிய சோழப்படைகள், அதன்பின் மேலும் முன்னேறி வடக்கே சென்றன. அடுத்து அவர்கள் வெற்றி கொண்டது சேரநாட்டின் வடபகுதியை. ‘மேவு புகழ் இராமகுட மூவர் கெட முனிந்து’ சோழர்கள் வெற்றி கொண்டனர் என்கிறது மெய்க்கீர்த்தி.
இந்த வரிகள் இராமகுடம் என்ற அரசை ஆண்ட மூன்று இளவரசர்களை சோழப்படைகள் வெற்றி கொண்டனர் என்று குறிப்பிடுவதாக ஆய்வாளர்கள் கருதினர். ஆனால் எலிமலை என்ற சேரநாட்டின் வடபகுதியை (தற்போது தென் கர்நாடகாவில் உள்ளது) ஆண்ட அரச வம்சமே ராமகுடம் என்று அழைக்கப்பட்டது என்பது ஒரு கல்வெட்டால் தெரியவந்தது. அது கோலத்துநாடு என்றும் அழைக்கப்பட்டது.
‘கோலம்’ எனப்பட்ட தெய்வ ஆட்டங்களை அதிகமாக ஆடும் இடம் என்பதால் அதற்குக் கோலத்துநாடு என்று பெயர் வந்தது. தற்போதைய கேரளாவின் வடபகுதியும் கர்நாடகாவின் தென்பகுதியும் அடங்கியது கோலநாடு. அதை ஆண்டவர்கள் ‘ராமகட மூஷிகர்கள்’ என்று வடமொழியில் அழைக்கப்பட்டனர்.
மூஷிகர் என்பது அங்குள்ள பழங்குடியினரின் பெயராக இருந்திருக்கக்கூடும் என்கிறார் ஆய்வாளர் எம்.ஜி.எஸ் நாராயணன். க்ஷத்திரியர்கள் அனைவரையும் வென்று சேரநாட்டை தன் இருப்பிடமாக ஆக்கிக்கொண்ட பரசுராமனால் முடிசூட்டப்பட்டவர்கள் இவர்கள் என்கிறது தொன்மங்கள்.
பொயு 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராமகுட மூவர் திருவடியான காரிவர்மனின் கல்வெட்டு ஒன்று எலிமலைப் பகுதியில் கிடைத்துள்ளது. அதில் ராஜேந்திர சோழ சமய சேனாதிபதி என்பவனைப் பற்றிய செய்தி இருப்பதைக் கொண்டு ராஜாதிராஜன் படையெடுப்பின் போது அங்கே ஆட்சி செய்தவன் காரிவர்மனே என்கிறார் சதாசிவப் பண்டாரத்தார்.
இப்படிச் சேரநாட்டின் தென்பகுதியான வேணாட்டிலிருந்து வடபகுதியான எலிமலை வரை வெற்றி கொண்ட ராஜாதிராஜன், தன் திக்விஜயத்தை முடித்துகொண்டு சோழநாடு திரும்பினான். அந்தப் பகுதிகளையெல்லாம் அடுத்து ஆட்சி செய்தவர்கள் சோழர்களுக்கு அடங்கி ஆட்சி செய்யும்படியான நிலையை ஏற்படுத்தினான் அவன்.
ஆனால் இந்நிலை நீண்டநாள் நீடிக்கவில்லை. ராஜாதிராஜனின் இந்த அதிரடித் தாக்குதலால் சேரர்களின் அரசு நிலைகுலைந்தது. ஏற்கெனவே அதிகாரம் குறைந்த நிலையில் ஆட்சி செய்துகொண்டிருந்த மாக்கோதை அரசர்கள், மேலும் வலுவிழந்தனர். வடக்கிலிருந்து தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருந்த குடியேற்றங்களாலும், கடல் கடந்து வணிகம் செய்ய வந்த அந்நியர்களும் இங்கே வந்து குடிபுகுந்ததாலும் சேரநாடு பல குழப்பங்களைச் சந்தித்தது. வேணாடு, கோலத்துநாடு, வள்ளுவநாடு போன்ற பகுதிகளை ஆண்ட சிற்றரசர்கள் தன்னாட்சி பெறத் தலைப்பட்டனர்.
இவர்களை ஒடுக்க முதல் குலோத்துங்க சோழன் காலத்திலும் அவன் மகனான விக்கிரம சோழன் காலத்திலும் இருமுறை சோழர்கள் படையெடுத்தனர். ஆனாலும் அவர்களால் சேரர்களின் மத்திய அரசை மேலும் வலுவிழக்கச் செய்ய முடிந்ததே தவிர, சேரநாட்டின் பகுதிகளை சோழநாட்டின் ஆட்சியின்கீழ் கொண்டு வர முடியவில்லை. முடிவில், சேர நாடு 17 பகுதிகளாகப் பிரிந்தது. அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த அரசர்கள் தன்னாட்சி செய்ய ஆரம்பித்தனர். அது தமிழகத்தின் வேர்களிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது.
(தொடரும்)