Skip to content
Home » தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #19 – பாண்டிய நாட்டுப் போர்கள்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #19 – பாண்டிய நாட்டுப் போர்கள்

பாண்டிய நாட்டுப் போர்கள்

முதலாம் ராஜேந்திர சோழனுக்குப் பிறகு அடுத்தடுத்து ஆட்சி செய்த அவனுடைய வீர மகன்களான முதலாம் ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீர ராஜேந்திரன் ஆகியோர் அவன் அமைத்த அரசைக் கட்டிக் காத்தார்கள். ஆனால் முதல் குலோத்துங்கன் காலத்திலிருந்து சோழப் பேரரசின் பரப்பு சுருங்க ஆரம்பித்தது.

கலிங்கப்போரில் குலோத்துங்கன் பெரு வெற்றி அடைந்தாலும் அதற்குப் பின் அவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகளில் அங்கே இருந்த அரசர்கள் கலகம் செய்து தன்னாட்சி செய்ய முற்பட்டனர். இவற்றை குலோத்துங்கனும் அவன் மகன் விக்கிரம சோழனும் ஓரளவுக்கு அடக்கினாலும், நாட்டின் பல பகுதிகளை அவற்றிற்குச் சொந்தமான அரசர்களிடமே கொடுத்து அவர்களைச் சோழர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக ஆட்சி செய்யப் பணித்தனர்.

இதனால் மதுரையில் பாண்டிய வம்சம் மீண்டும் துளிர்விட்டது. சடையவர்மன் பராந்தக பாண்டியன், மாறவர்மன் ஶ்ரீவல்லபன் போன்றோர் சோழர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக ஆட்சிசெய்தனர்.

இதே நிலைதான் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்திலும் இரண்டாம் ராஜராஜன் காலத்திலும் தொடர்ந்தது. இரண்டாம் ராஜராஜன் இறக்கும்போது அவனுடைய குழந்தைகள் மிகச் சிறுவயதினராக இருந்ததால் தன்னுடைய உறவினனான எதிரிலிப் பெருமாள் என்பவனுக்கு இரண்டாம் ராஜாதிராஜன் என்ற அபிஷேகப் பெயருடன் பட்டம் கட்டி வைத்தான். இரண்டாம் ராஜாதிராஜ சோழனுக்கு அமைச்சனாகவும் சேனாதிபதியாகவும் இருந்தவன் திருச்சிற்றம்பலமுடையான் பெருமாள் நம்பிப் பல்லவராயன்.

அதே சமயத்தில் மதுரையில் பராக்கிரமபாண்டியன் ஆட்சி செய்துகொண்டிருந்தான். ஒரே நேரத்தில் பாண்டியர்களின் தாயாதிகள் பல இடங்களில் இருந்து ஆட்சி செய்தார்கள் என்பதையும் அவர்களின் மைய அதிகாரம் மதுரையில் இருந்தது என்பதையும் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். அதே முறையில் திருநெல்வேலியிலிருந்து பராக்கிரம பாண்டியனின் உறவினனான குலசேகர பாண்டியன் ஆட்சிசெய்தான். ஆனால் அவனுக்கு மதுரைச் சிங்காதனத்தின் மீது ஒரு கண் இருந்தது. அதைக் கைப்பற்றத் திட்டமிட்டு படைதிரட்ட ஆரம்பித்தான் குலசேகரன்.

இந்தச் செய்தி பராக்கிரம பாண்டியனை எட்டியது. சோழர்களிடம் உதவிகேட்டு மீண்டும் ஒருமுறை அவர்களைப் பாண்டிய நாட்டில் புகவிட விரும்பாத பராக்கிரம பாண்டியன், தன்னுடைய நண்பனான இலங்கை அரசனிடம் உதவி கேட்டான். இலங்கை அரசனான பராக்கிரம பாகு, தன்னுடைய படைத்தலைவனும் பெருவீரனுமான இலங்காபுரத் தண்டநாயகனின் தலைமையில் ஒரு படையை பராக்கிரம பாண்டியனுக்கு உதவி செய்வதற்காக அனுப்பினான். ஆனால் அதற்குள் காரியம் மிஞ்சிவிட்டது.

மின்னல் வேகத் தாக்குதல் ஒன்றை மதுரையின் மீது தொடுத்த குலசேகர பாண்டியன், பராக்கிரம பாண்டியனைப் போரில் தோற்கடித்து அவனையும் கொன்றுவிட்டான். பராக்கிரமனின் மகனான வீரபாண்டியன் மலைநாட்டிற்குத் தப்பியோடினான். குலசேகரன் மதுரையைக் கைப்பற்றிக்கொண்டு ஆட்சிபீடத்தில் ஏறினான்.

இலங்காபுரன் தன் படையோடு ராமேஸ்வரத்திற்கு வந்து இறங்கிய உடன் இந்தச் செய்திகள் அவனுக்குச் சொல்லப்பட்டன.

ஆத்திரமடைந்த அவன், பாண்டிய நாட்டில் உள்ள ஊர்களைச் சூறையாடினான். முதலில் ராமேஸ்வரம் கோவிலைத் தாக்கி அதன் பல பகுதிகளை அழித்தான். கோவில் பூஜைகளை நிறுத்திவிட்டான். அடுத்ததாக பாம்பனையும், வடலி என்ற கிராமத்தையும் இலங்கைப் படைகள் தாக்கின. வடலியில் இருந்த ஆளவந்த பெருமாள் என்ற தலைவர் கொல்லப்பட்டார். அங்கேயிருந்த பல விளைநிலங்கள் அழிக்கப்பட்டன.

நாட்டின் கிழக்கு எல்லைப் புறங்கள் இலங்கைப் படைகளால் சூறையாடப்படுவதைக் கேள்விப்பட்ட குலசேகர பாண்டியன், கொங்குநாட்டில் ஆட்சி செய்துகொண்டிருந்த தன் மாமனிடம் இருந்து படையுதவி கேட்டு அந்தப் படையையும் சேர்த்துக்கொண்டு இலங்காபுரனின் படைகளோடு மோதினான். பரமக்குடி, நெட்டூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற போர்களிலும் இலங்கைப் படைகளே வெற்றி பெற்றன.

குலசேகர பாண்டியன் அங்கிருந்து பின்வாங்கினான். அதன்பின் மானாமதுரையைத் தாக்கிய இலங்காபுரன் அங்கிருந்த சிற்றரசர்களை விரட்டிவிட்டான். திருவாடானை அருகே இருந்த அஞ்சுகோட்டை என்ற இடத்தையும் தொண்டி, பாசிப்பட்டினம் ஆகிய கடற்கரைத் துறைகளையும் இலங்கைப் படைகள் தன் கட்டுக்குள் கொண்டுவந்தன.

அதன்பின் திருப்பத்தூருக்கு அருகில் இருந்த செம்பொன்மாரி என்ற இடத்தைப் பிடித்து அங்கே ஆட்சிசெய்துகொண்டிருந்த மழவச்சக்கரவர்த்தியை எதிர்த்து இலங்கைப் படைகள் போரிட்டன. மிகவும் வலுவான கோட்டையாக இருந்த அந்த இடத்தை அரைநாளில் பிடித்து மழவச்சக்கரவர்த்தியை விரட்டிவிட்டான் இலங்காபுரன். சிறுவயல், திருக்கானப்பேர் (காளையார்கோவில்) ஆகிய இடங்களும் இலங்கைப் படைகள் கைக்குச் சென்றன. அடுத்ததாக மதுரையை நோக்கித் தன் படைகளைச் செலுத்தினான் இலங்காபுரத் தண்டநாயகன்.

தொடர்ந்து இலங்கைப் படைகள் வெற்றி பெறுவதைக் கண்ட குலசேகரன், மதுரையை விட்டு தன்னுடைய இருப்பிடமான திருநெல்வேலிக்கு ஓடிவிட்டான். அதன் காரணமாக எளிதாக மதுரையைப் பிடித்த இலங்காபுரன், பராக்கிரம பாண்டியனின் மகனான வீரபாண்டியன் மலைநாட்டில் மறைந்திருப்பதை அறிந்துகொண்டு, அவனைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வருமாறு ஆணையிட்டான். அதன்படி மதுரை வந்த வீரபாண்டியனை அரியணையில் ஏற்றி பட்டாபிஷேகமும் செய்துவைத்தான்.

இதற்கிடையில் தன்னுடைய உறவினர்களிடமிருந்து படையுதவி பெற்றுக்கொண்டு மதுரை நோக்கி வந்தான் குலசேகரபாண்டியன். சாத்தூர் அருகே உள்ள மங்கலம் என்ற இடத்தைக் கைப்பற்றிகொண்ட அவன், அடுத்து ஶ்ரீவில்லிப்புத்தூரைத் தாக்கி அந்தக் கோட்டையையும் தன்வசப்படுத்திக்கொண்டான்.

குலசேகரன் மீண்டுமொருமுறை பெரும்படை ஒன்றைத் திரட்டிக் கொண்டு தன்னை நோக்கி வருவதை அறிந்த இலங்காபுரன், தன்னுடைய அரசனான பராக்கிரமபாகுவிடம் மேலும் அதிகப் படைகளை அனுப்பச்சொல்லி உதவி கோரினான். அதை ஏற்ற பராக்கிரமபாகு ஜகத்விஜயத் தண்டநாயகன் என்பவனின் தலைமையில் இன்னொரு படையைத் தமிழகத்திற்கு அனுப்பினான்.

இலங்காபுரனும் ஜகத்விஜயனும் ஒன்று சேர்ந்து குலசேகர பாண்டியனை ஶ்ரீவில்லிப்புத்தூரில் தாக்கினர். அங்கே நடந்த போரிலும் தோல்வியுற்று தெற்கு நோக்கித் தப்பியோடிய பாண்டியப் படைகளை குற்றாலம் வரைக்கும் துரத்திச் சென்று அங்கேயும் தோற்கடித்தன இலங்கைப் படைகள்.

இதற்கிடையில் மதுரையில் கலகம் செய்த பாண்டி நாட்டுச் சிற்றரசர்கள், வீரபாண்டியனை மீண்டும் அங்கிருந்து விரட்டிவிட்டனர். இதனால் பெரும் ஆத்திரம் அடைந்த இலங்காபுரன் அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கத் தீர்மானித்தான். பாண்டிய நாட்டின் வட எல்லைக்குப் படை எடுத்துச் சென்று கீழை மங்கலம், மேலைமங்கலம் ஆகிய சிற்றரசுகளை பாண்டிய ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். பொன்னமராவதிக் கோட்டையைத் தாக்கி அதன் தலைவனான நிஷதராசனைக் கொன்று அந்த ஊரில் உள்ள மூன்றடுக்கு மாளிகையைத் தீக்கிரை ஆக்கினான். போதாக்குறைக்கு அங்குள்ள வீடுகளையும் வயல்களையும் கொளுத்திவிட்டு மதுரை திரும்பினான்.

மதுரையில் வீரபாண்டியன் அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். வீரபாண்டியனின் முடிசூட்டு விழாவை விமரிசையாகக் கொண்டாடத் தீர்மானித்த இலங்காபுரன், மழவச் சக்கரவர்த்தி, மழவராயன், தலையூர் நாடாள்வார் போன்ற சிற்றரசர்கள் அனைவரையும் மதுரைக்கு அழைத்தான். கீழைமங்கலத்தையும் மேலை மங்கலத்தையும் மழவராயனுக்கும் தொண்டு, கருந்தங்குடி, திருவேகம்பம் ஆகிய இடங்களை மழவச்சக்கரவர்த்திக்கும் வழங்கி வீரபாண்டியனுக்கு உதவியாக அவர்களை ஆட்சி செய்யப் பணித்துவிட்டு பாண்டிய நாட்டிலேயே சிலகாலம் தங்கியிருக்கத் தீர்மானித்தனர் இலங்கைப் படைத்தலைவர்கள்.

தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்த குலசேகர பாண்டியன் சோழ நாட்டிற்குச் சென்று அங்கே ஆட்சிசெய்துகொண்டிருந்த இரண்டாம் ராஜாதிராஜனிடம் உதவி கோரினான். அதை ஏற்று தன்னுடைய படைத்தலைவனான பெருமாள்நம்பிப் பல்லவராயன் தலைமையில் ஒரு பெரும்படையை அனுப்பினான் ராஜாதிராஜன்.

இதைக் கேள்விப்பட்ட இலங்காபுரன், மதுரையைக் காக்குமாறு ஜகத் விஜயனிடம் சொல்லிவிட்டு திருப்பத்தூரின் அருகில் உள்ள கீழ்நிலை என்ற இடத்திற்குச் சென்று அங்கே சோழப்படைகளுடன் மோதினான். அங்கே இலங்கைப் படைகள் வெற்றி பெற்றன. பிறகு தொண்டியிலும் பாசிப்பட்டினத்திலும் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட போரிலும் இலங்காபுரனே வெற்றி பெற்று சோழப்படைகளை தோற்கடித்துத் துரத்தினான்.

இலங்காபுரனிடம் தோல்வியடைந்த சோழர்கள் இதனால் பெரும் அச்சம் அடைந்ததாகவும், தங்களுக்கு வெற்றியைத் தேடித்தரவேண்டி பல்லவராயரின் தலைமையில் இருபத்து எட்டு நாட்கள் அகோரபூஜை செய்ததாக ஆரப்பாக்கம் கல்வெட்டு தெரிவிக்கிறது. இந்த அகோரபூஜை துர்க்கையை வேண்டிச் செய்யப்பட்ட பூஜை என்பது ஆய்வாளர்களின் கருத்து.

ஆரப்பாக்கம் கல்வெட்டு
ஆரப்பாக்கம் கல்வெட்டு

பூஜை முடிந்த பிறகு, பாண்டிய நாட்டிற்குச் சென்று இலங்கைப் படைகளை அங்கிருந்து அகற்றும் படியும் இலங்கைத் தண்டநாயகர்களான இலங்காபுரன், ஜகத்விஜயன் ஆகியோரின் தலைகளைக் கோட்டை வாயிலில் தொங்க விடுமாறும் பெருமாள்நம்பிப் பல்லவராயனுக்கு இரண்டாம் ராஜாதிராஜ சோழன் ஆணையிட்டான். அதை ஏற்று பெரும்படையோடு பெருமாள்நம்பிப் பல்லவராயன் பாண்டிய நாட்டில் புகுந்தான்.

இலங்காபுரனும் ஜகத்விஜயனும் சோழப்படைகளோடு கடுமையாகச் சண்டையிட்டனர். இந்தப் போரில் சோழப்படைகள் பெருவெற்றி பெற்றன. இலங்கைத் தண்டநாயகர்கள் இருவரும் போரில் கொல்லப்பட்டனர். அவர்கள் இருவரின் தலைகளையும் மதுரைக் கோவில் வாசலில் நட்டுவைத்தான் பல்லவராயன்.

பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டு
பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டு

இப்படியாக பாண்டியர்களின் தாயாதிச்சண்டையின் முதல் அத்தியாயத்தில் வீரபாண்டியன் மறுபடியும் தப்பி ஓட நேரிட்டது. குலசேகர பாண்டியனை மீண்டும் மதுரையில் அரியணையில் அமர்த்திவிட்டு சோழநாடு திரும்பினான் பல்லவராயன்.

ஆனால் விஷயம் அதோடு முடிந்துவிடவில்லை.

(தொடரும்)

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *