தன்னுடைய படைத்தலைவர்களான இலங்காபுரத் தண்டநாயகனையும் ஜகத்விஜயத் தண்டநாயகனையும் போரில் கொன்றது மட்டுமின்றி அவர்களது தலைகளை மதுரைக் கோட்டை வாசலில் தொங்கவிட்ட சோழர்கள் மீது இலங்கை மன்னன் பராக்கிரமபாகு பெரும் ஆத்திரம் கொண்டான். சோழர்களை எதிர்க்கப் படை ஒன்றையும் திரட்டினான். வட இலங்கையில் உள்ள ஊரத்துறை, புலச்செரி, மாதோட்டம், வல்லிகாமம், மட்டிவாழ் என்ற ஊர்களில் படைகளும் சோழ நாடு செல்லப் படகுகளும் திரட்டப்பட்டன.
வலுவான படை ஒன்றைத் திரட்டிக்கொண்டிருக்கும்போதே தவறு ஒன்றையும் செய்தான் பராக்கிரமபாகு. அவனுடைய சகோதரி மித்தா என்பவளின் மகனான ஶ்ரீவல்லபனுக்கும் அவனுக்கும் தகராறு மூண்டது. அதன் விளைவாக ஶ்ரீவல்லபன் தன் மாமன் மீது கோபித்துக்கொண்டு இலங்கையிலிருந்து கிளம்பி சோழ நாட்டில் வந்து தஞ்சம் புகுந்தான்.
அவனைச் சோழ நாட்டுத் தளபதிகள் அன்புடன் வரவேற்று மன்னன் ராஜாதிராஜனிடம் அழைத்துச் சென்றனர். விருந்தோம்பலில் மகிழ்ந்த ஶ்ரீவல்லபன், சோழர்களை எதிர்த்துத் தன் மாமன் படை திரட்டும் விஷயத்தைச் சொன்னான். எதிரி முன்னேறித் தாக்குமுன்பு தானே அவர்களைத் தாக்கி அழிப்பதே சிறந்த போர் வியூகம் என்பதை உணர்ந்திருந்த ராஜாதிராஜன், தன்னுடைய படைத்தலைவர்களில் ஒருவனான வேதவனமுடையான் அம்மையப்பனான அண்ணன் பல்லவராயனை அழைத்து ஒரு படையுடன் அவனை இலங்கைக்கு அனுப்பி வைத்தான். அந்தப் படையோடு ஶ்ரீவல்லபனும் சென்றான்.
எந்தெந்த இடங்களில் எல்லாம் சோழர்களை எதிர்க்கப் படை திரட்டப்பட்டதோ அந்த இடங்களை எல்லாம் சோழர்களின் படைகள் தாக்கியழித்தன. ஊரத்துறையும் வல்லிகாமமும் மட்டிவாழும் சோழர் படைகளால் சூறையாடப்பட்டன. புலச்சேரி அழிக்கப்பட்டது. அதன்பின் மாதோட்டத்தையும் கைப்பற்றிக்கொண்டு அங்கிருந்து யானைகளையும் பெரும் செல்வத்தையும் கைப்பற்றியது சோழர் படை.
சில சிங்களப் படைத்தலைவர்கள் போரில் கொல்லப்பட்டனர். பலர் சிறைப்பிடிக்கப்பட்டனர். ‘ஈழமண்டலத்தில் கீழ் மேல் இருபது காதத்திற்கு மேற்படவும் தென்வடல் முப்பது காதத்திற்கு மேற்படவும் அழித்து’ பராக்கிரம பாகு திரட்டியிருந்த படை முழுவதையும் நிர்மூலம் செய்தபிறகு, அண்ணன் பல்லவராயன் வெற்றியோடு சோழ நாடு திரும்பினான். தான் திரட்டிவந்த செல்வங்கள் அனைத்தையும் அரசன் ராஜாதிராஜனிடம் கொடுத்தான். இந்தப் படையெடுப்பில் இலங்கையின் பகுதிகள் எதுவும் சோழ நாட்டின் கீழ் கொண்டுவரப்படவில்லை என்பதும், தங்களைத் தாக்க முனைந்த படைகளை அழிப்பது மட்டுமே இந்தச் சோழர் படையெடுப்பின் நோக்கம் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயங்களாகும்.
தான் திரட்டிய படைகள் அழிக்கப்பட்டதோடு பெரும் பொருட்சேதத்தையும் சந்தித்த நிலையில் சிறிதுகாலம் சும்மா இருந்த பராக்கிரமபாகுவிற்கு சோழர்களைத் தோற்கடிக்கவேண்டும் என்ற முனைப்பு சிறிதும் குறையவில்லை. அதன் அடுத்த கட்ட முயற்சியாக பாண்டிய மன்னன் குலசேகரனுக்குப் பரிசுகள் கொடுத்து அவனைத் தன் நண்பனாக்கிக் கொள்ளத் திட்டமிட்டான். அதற்கான ஒரு குழுவையும் மதுரைக்கு அனுப்பி வைத்தான்.
குலசேகரபாண்டியனுக்கும் சோழர்களின் பிடியில் இருந்து விடுபடவேண்டும் என்ற ஆசை தோன்றியிருந்தது. ஆகவே எந்தப் பராக்கிரமபாகுவின் படைகளைத் தோற்கடிக்க சோழர்களிடம் உதவி கேட்டானோ, அவனுக்கே நட்புக்கரம் நீட்டி சோழர்களுக்கு விரோதமாகத் திரும்பினான் குலசேகரன். இது ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும் என்றும் பாண்டியநாட்டிற்கு நல்லதல்ல என்றும் அவனுடைய அதிகாரிகளான ராஜராஜக் கற்குடிமாராயன், ராஜகம்பீர அஞ்சுகோட்டை நாடாழ்வான் ஆகியோர் அவனுக்கு ஆலோசனை சொன்னார்கள்.
அவர்களின் யோசனையைக் கேட்ட மறுத்தது மட்டுமல்லாமல், அவர்களையும் சோழநாட்டு எல்லைக்குச் செல்லும்படி நாடு கடத்தினான் குலசேகரன். அதுமட்டுமல்லாமல், மதுரைக் கோட்டை வாசலில் இருந்த இலங்கைத் தண்டநாயகர்களின் தலைகளையும் அங்கிருந்து எடுத்துவிடும்படி சொன்னான். இந்தச் செய்திகள் சோழ அரசன் ராஜாதிராஜனுக்கு எட்டின.
பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று குலசேகரனின் நன்றி கெட்ட செயலுக்குத் தகுந்த பாடம் கற்பிக்கும்படி அண்ணன் பல்லவராயனுக்கு ஆணையிட்டான் ராஜாதிராஜன். மதுரையை முற்றுகையிட்ட சோழப்படைகள், குறைவான நேரத்தில் குலசேகர பாண்டியனைத் தோற்கடித்து அவனை தெற்கு நோக்கித் துரத்தின.
மலைநாட்டில் மறைந்துகொண்டிருந்த பராக்கிரமபாண்டியனின் மகன் வீரபாண்டியன் மீண்டும் மதுரைக்கு அழைத்து வரப்பட்டான். அவனுக்கு மதுரை அரியணையை அளித்து முடிசூட்டிவிட்டு சோழநாடு திரும்பினான் அண்ணன் பல்லவராயன். இந்தப் போர் நிகழ்ச்சிகள் எல்லாம் பொயு 1167லிருந்து 1175 வரை நடந்திருக்கவேண்டும் என்பது ஆய்வாளர்கள் கருத்து.
அதன்பின் சிறிதுகாலம் தமிழகத்தில் அமைதி நிலவியது. பொயு 1178இல், இரண்டாம் ராஜராஜனின் மகனான மூன்றாம் குலோத்துங்கன் தகுந்த வயதை எட்டியதும் அவனுக்குப் பட்டம் கட்டி சோழ அரசனாக முடிசூட்டிவிட்டு வேங்கி நாட்டிற்குச் சென்றுவிட்டான் இரண்டாம் ராஜாதிராஜன். சோழ நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட செய்தியைக் கேள்விப்பட்ட இலங்கை அரசன் பராக்கிரமபாகு, அவர்களைத் தோற்கடிக்க மீண்டும் ஒரு முயற்சியை மேற்கொண்டான். அப்போது மதுரையை ஆண்டுகொண்டிருந்த வீரபாண்டியனுக்குத் தூது அனுப்பி அவனுடைய நட்பைக் கோரினான்.
அடிக்கடி மதுரைக்கு அழைத்துவரப்பட்டு ஆட்சிப்பொறுப்பில் சில நாளும் அதன்பின் காட்டிற்குத் தப்பியோடி அங்கே சில நாட்களுமாகப் பொழுதைக் கழித்த வீரபாண்டியனுக்கும் தன்னாட்சி செய்வதில் ஆர்வம் பிறந்தது. இலங்கை அரசனின் நட்பை ஏற்றுக்கொண்ட அவன், சோழர்களுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினான். இம்முறை குலோத்துங்கன் தானே நேரடியாகக் களத்தில் இறங்கினான். மதுரை நோக்கி தன்னுடைய படைகளோடு சென்ற அவன், வீரபாண்டியனைத் தோற்கடித்து அவனுடைய ஏழகப்படைகளையும் அவனுக்கு உதவியாக வந்திருந்த இலங்கைப் படைகளையும் அழித்தான்.
வீரபாண்டியன் மீண்டும் ஒரு முறை சேரநாட்டை நோக்கித் தப்பி ஓடினான். அப்போது குலசேகர பாண்டியன் இறந்துவிட்டபடியால் அவனுடைய மகனான விக்கிரமபாண்டியனுக்கு பாண்டிய அரசை அளித்துவிட்டுச் சோழ நாடு திரும்பினான் குலோத்துங்கன்.
சேரநாட்டிற்குச் சென்ற வீரபாண்டியன், சேர அரசனிடம் உதவி கேட்டு அங்கிருந்து ஒரு படையைத் திரட்டிக்கொண்டு வந்து பொயு 1180ல் மதுரை அரசைக் கைப்பற்ற முனைந்தான். இதனால் இரண்டாவது முறை குலோத்துங்கன் பாண்டிய நாடு நோக்கிப் படையெடுக்க வேண்டியதாயிற்று.
மதுரைக்குத் தென்கிழக்கே நெட்டூர் என்ற இடத்தில் இந்த இரு படைகளும் மோதின. மிகக் கடுமையாக நடந்த இந்தப் போரில் வீரபாண்டியனுடைய படைகளும் சேரப்படைகளும் அடியோடு அழிக்கப்பட்டன. வீரபாண்டியனுடைய மனைவியையும் அவனுடைய அரண்மனைப் பெண்டிரையும் ‘வேளம் ஏற்றினான்’. வேளம் ஏற்றுவது என்பது எதிரி நாட்டுப் பெண்களைக் கொண்டுவந்து தன்னுடைய அரண்மனை அந்தப்புரத்தில் பணிப்பெண்களாக வைப்பதாகும்.
நாடு திரும்பிய குலோத்துங்கனை, வீரபாண்டியனும் சேர அரசனும் சந்தித்து சமாதானத்தையும் மன்னிப்பையும் வேண்டினர். அதை ஏற்றுக்கொண்ட குலோத்துங்க சோழன் வீரபாண்டியனை பாண்டிய நாட்டின் ஒரு பகுதியை ஆளுமாறு சொன்னான். சேரனுக்குச் செல்வங்களை அளித்து அவனுடைய நாட்டிற்கு அனுப்பி வைத்தான்.
மதுரையில் சில ஆண்டுகள் அமைதியாக ஆட்சி செய்துவிட்டு விக்கிரமபாண்டியன் இறைவனடி சேர்ந்தான். அவனுக்கு இரண்டு வீர மகன்கள் இருந்தனர். மூத்த மகனான ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் பொயு 1190ல் அரியணை ஏறினான். அவனுக்கு அவன் தம்பி சுந்தரபாண்டியன் உறுதுணையாக இருந்தான்.
தம்பியுடையான் படைக்கஞ்சான் என்ற முதுமொழியின் படி, சோழநாட்டிலிருந்து விடுபட இருவரும் தீர்மானித்தனர். அதன் காரணமாக சோழர்களுக்குக் கப்பம் கட்டுவதை நிறுத்தினான் குலசேகர பாண்டியன். இதன் காரணமாக வெகுண்ட குலோத்துங்கன் மூன்றாம் முறையாகப் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். பாண்டியர்களும் படை ஒன்றைத் திரட்டியிருந்தனர். இரு படைகளும் மட்டியூர், கழிக்கோட்டை ஆகிய இடங்களில் போரிட்டன. மீண்டும் ஒரு கடுமையான போரைப் பாண்டிய நாடு சந்தித்தது.
இரண்டு இடங்களிலும் சோழப்படைகள் பாண்டியர்களைத் தோற்கடித்தன. மதுரையில் வெற்றியோடு நுழைந்த குலோத்துங்கன் அங்கேயுள்ள பல மண்டபங்களை இடித்தான். பாண்டியர்களின் அரண்மனைகள் பல தரைமட்டமாக்கப்பட்டன. அதன்பின் மதுரைக் கொலுமண்டபத்தில் வீராபிஷேகமும் விஜயாபிஷேகமும் செய்துகொண்ட குலோத்துங்கன் சோழ பாண்டியன் என்ற பெயரோடு முடிசூட்டிக்கொண்டு திரிபுவன வீரன் என்ற பெயரையும் சூடிக்கொண்டான்.
மதுரையில் சில காலம் தங்கியிருந்து சொக்கநாதப் பெருமானுக்கு திருவிழாக்கள் நடத்தி கோவிலுக்குப் பொன்வேய்ந்த திருப்பணியையும் செய்தான் குலோத்துங்கன். அதன்பின் குலசேகரபாண்டியனை அழைத்து மீண்டும் அவனுக்கு அரசைக் கொடுத்து விட்டு சோழநாடு திரும்பினான்.
ஆனால் சோழப்படைகள் மதுரையில் செய்த அழிவுகளும் வேளம் ஏற்றுவது போன்று பாண்டியர்களுக்கு அவர்கள் செய்த அவமானங்களும் பாண்டியர் மனத்தில் ஆறாத வடுவாகப் பதிந்துபோயிற்று. அதன் எதிர்விளைவு எப்படியிருந்தது ?
(தொடரும்)