இரண்டு முறை படையெடுத்து பெரு வெற்றி அடைந்தாலும் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் சோழநாட்டை முழுமையாக பாண்டியநாட்டின் கீழ் கொண்டுவரமுடியவில்லை. அதற்கான காரணம் துவாரசமுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்களும் போசாளர்கள் என்று தமிழில் அழைக்கப்பட்டவர்களுமான ஹொய்சாளர்களின் தலையீடுதான் என்பதைப் பார்த்தோம். அழையா விருந்தாளியாக தமிழக அரசியலில் புகுந்தது மட்டுமின்றி, போரிட்டுக்கொண்டிருந்த இரு அரசுகளுக்கும் இடையில் சமாதானம் செய்துவைத்து நாடுகளின் எல்லைகளையும் வகுத்துக்கொடுத்தான் ஹொய்சாள மன்னன் வீர நரசிம்மன்.
போதாதென்று பாண்டிய நாட்டில் அடுத்ததாக ஆட்சிக்கு வந்த இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில், ஹொய்சாள மன்னன் வீர சோமேஸ்வரன் தலையிட்டான். அவனுடன் மண உறவு வைத்துக்கொண்டு அவனுக்கும் சோழ மன்னன் மூன்றாம் ராஜேந்திரனுக்கும் நடைபெற்ற போர்களிலும் பங்கு கொண்டான் சோமேஸ்வரன். ஒரு சமயம் மூன்றாம் ராஜேந்திரனுக்கும் இன்னொரு சமயம் சுந்தரபாண்டியனுக்கும் அவன் உதவி செய்தான். அதன் காரணமாக இரு மன்னர்களும் அவனை ‘மாமாடி’ என்று அழைத்தனர்.
பாண்டியர்கள் தங்கள் எல்லைகளை விரிவாக்க முயன்றபோது சோழர்களுக்கு உதவி செய்து பாண்டியர்களை அடக்குவது, அதேபோல சோழர்கள் தங்கள் ஆற்றலை உயர்த்தியபோது பாண்டியர்கள் பக்கம் சாய்ந்து சோழர்களை வெற்றி கொள்வது என்று ஹொய்சாள மன்னர்கள் சாதுரியமாகச் செயல்பட்டு தங்களது எல்லைகளை விரிவாக்கினர். ஒரு கட்டத்தில் சோழநாட்டின் பல பகுதிகளை ஆக்கிரமித்து தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்துவிட்டனர்.
அதைத் தவிர பாண்டிய நாட்டு உள்விவகாரங்களிலும் ஹொய்சாள மன்னர்களின் தலையீடு இருந்தது. திருமயத்தில் இருந்த ஒரு கல்வெட்டு அங்கே சைவ வைணவப் பூசல் ஏற்பட்டபோது இரு தரப்பாருக்கும் இடையே ஹொய்சாள ஆட்சியாளன் சமாதானம் செய்துவைத்ததைக் குறிப்பிடுகிறது. ‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்று சொல்வது போல ஹொய்சாளர்கள் மேற்கொண்ட இது போன்ற செயல்கள் நாட்டில் உள்ள அரசியல் குழப்பத்தை அதிகரித்தன.
இந்தச் சூழ்நிலையில் பொயு 1251ஆம் ஆண்டு பாண்டிய நாட்டு அரசனாகப் பொறுப்பேற்றான் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன். பெரு வீரனும் ராஜதந்திரியுமான அவன் தமிழகத்தின் நிலைமையை ஊன்றிக் கவனித்தான். பரப்பளவில் குறைந்தாலும் சோழர்களின் அரசு இன்னும் வலிமையாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது. தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்துகொண்டிருந்த காடவர்களின் அரசனான கோப்பெருஞ்சிங்கனும் ஒரு முக்கியமான சக்தியாக இருந்தான்.
தமிழக அரசியலில் புகுந்த ஹொய்சாளர்கள் தங்களது ஆதிக்கத்தை மெல்ல மெல்ல அதிகரித்து, தற்போது சமயபுரம் என்று அழைக்கப்படும் கண்ணனூர்க் கொப்பம் வரை வந்து அங்கே ஒரு தளத்தை அமைத்துக்கொண்டிருந்தனர். இந்தக் காரணங்களால் பாண்டியர்களின் பேரரசுக் கனவு செயல்பட முடியாத நிலையில் இருப்பதை உணர்ந்துகொண்ட ஜடாவர்மன், ஒரு பெரும் படையைத் திரட்டத்தொடங்கினான்.
இதற்கிடையில் வேணாட்டை ஆட்சி செய்த அரசனான சேரமான் வீரரவி உதயமார்த்தாண்டவர்மன் பாண்டியநாட்டின் தென்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். அதனால் அவனோடு போர் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானான் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன். ஆரல்வாய் மொழிக் கணவாய் வழியாக வேணாட்டில் புகுந்த பாண்டியப் படைகள், வீரரவியைத் தோற்கடித்தன. அதன்பின் மலைநாடு பாண்டியநாட்டின் கீழ் வந்தது.
நடுவில் வந்த இந்தச் சிக்கலைத் தீர்த்துவிட்டு சோழநாட்டின் மீது தன் பார்வையைத் திருப்பினான் ஜடாவர்மன். மூன்றாம் ராஜேந்திர சோழனுக்கும் பாண்டியப் படைகளுக்கும் நடந்த போரில் சோழ நாட்டுப் படைகள் பாண்டியர்களைச் சமாளிக்க முடியாமல் திணறின. தஞ்சை, பழையாறை போன்ற இடங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பாண்டியர்களிடம் வீழ்ந்தன.
சிதம்பரம் வரை சென்ற ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் மூன்றாம் ராஜேந்திரனைத் தோற்கடித்துத் துரத்தினான். இந்நிலையில் சோழர்களுக்கு உதவியாக வழக்கம்போல ஹொய்சாள வீர சோமேஸ்வரன் படையெடுத்து வந்தான். அவனையும் அந்தப் போரில் வென்றான் சுந்தரபாண்டியன். அதன்பின் தமிழக வரலாற்றிலிருந்து சோழநாடு மறைந்தது. சோழநாடு முழுவதையும் பாண்டிய நாட்டின் மீது இணைத்துக்கொண்ட ஜடாவர்மன், ஹொய்சாளர்களை நோக்கித் திரும்பினான்.
சோழநாட்டின் மேற்குப்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டு கண்ணனூர்க் கொப்பத்தை அவர்கள் தலைநகராக வைத்துக்கொண்டிருந்ததால், பாண்டியர் படை அங்கே சென்றது. சிங்கணன் என்ற தண்டநாயகனின் தலைமையில் அங்கே ஒரு படை ஹொய்சாளர்களால் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
கண்ணனூர்க் கொப்பத்தில் இரு படைகளுக்கும் கடுமையான போர் நடைபெற்றது. இதைக் கேள்விப்பட்ட வீரசோமேஸ்வரன் தானும் ஒரு படையுடன் வந்து அந்தப் போரில் கலந்து கொண்டான். இரு திறமையான வீரர்களால் நடத்தப்பட்ட ஹொய்சாளப் படையை பாண்டியப் படைகள் தங்களுடைய வீரத்தினால் வென்றன. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் வீரப்போர் செய்து ஹொய்சாளர்களின் தண்டநாயகனான சிங்கணனைப் போர்க்களத்தில் கொன்றான். ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்தி இந்தப் போரைப் பற்றி பல வரிகளில் வர்ணிக்கிறது.
‘சென்னியைத் திறைகொண்டு திண்டோள் வலியில்
பொன்னிநாட்டு போசலத் தரைசர்களைப்
புரிசையில் அடைத்து பொங்கு வீரப் புரவியும்
செருவிறல் ஆண்மைச் சிங்கணன் முதலாய
தண்டத் தலைவரும் தானையும் அழிபடத்
துண்டித் தளவில் சோரி வெங்கலூழிப்
பெரும்பிணக் குன்ற மிருகங்கள ளிறைத்துப்
பருந்தும் காகமும் பாறும் தசையும்
அருந்தி மகிழ்ந்தாங்கு அமர்க்களம் எடுப்ப’
அந்தப் போர்க்களத்தில் வீரர்களின் உடல்கள் மலை போல வீழ்ந்து கிடந்தனவாம். அந்த உடல்களில் இருந்த தசைகளை பருந்துகளும் காகங்களும் கொத்தித் தின்று மகிழ்ந்தனவாம்.
‘முதுகிடு போசளன் றன்னோடு முனையும்
அதுதவறென்றவன் றன்னைவெற் போற்றி
நட்பது போலும் பகையாய் நின்ற
சேமனைக் கொன்று சினந்தணிந்தருளி
நண்ணுதல் பிறரா வெண்ணுதற் கரிய
கண்ணனூர்க் கொப்பத்தைக் கைக்கொண் டருளி’
இங்கே ‘நட்பது போலும் பகையாய் நின்ற’ என்ற வரிகள், அடிக்கடி நண்பனைப் போல நடித்து தன்னுடைய ஆதிக்கத்தை அதிகரித்து உண்மையில் பகையாய் நின்ற ஹொய்சாளர்களின் செயலைக் குறிப்பிடுகிறது. ஹொய்சாளரின் தலையீடு பொறுக்காமல் தான் கண்ணனூர்க் கொப்பம் தாக்கப்பட்டது என்பதும் தெளிவு. சேமன் என்று இங்கு குறிப்பிடப்படுவது ஹொய்சாள அரசன் சோமேஸ்வரனாக இருக்க வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். திருவரங்கத்தில் உள்ள ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் சமஸ்கிருதக் கல்வெட்டு அவன் ‘கர்நாடக தேயத்து சோமனை விண்ணுலகிற்கு அனுப்பினான்’ என்று குறிப்பிடுகிறது.
அதை வைத்தும் மெய்க்கீர்த்திகளின் மேற்கூறிய வரிகளை வைத்தும் வீர சோமேஸ்வரனும் இந்தப் போரில் பாண்டியப் படைகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். வீர சோமேஸ்வரனுக்கு அடுத்து அரசாண்ட ஹொய்சாள அரசன் வீர ராமநாதன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனுக்குக் கப்பம் கட்டியதாகத் தெரிகிறது. இந்தப் போரை அடுத்து கண்ணனூர்க் கொப்பத்திலிருந்து ஹொய்சாளர்களைத் துரத்திவிட்டு அதையும் பாண்டிய நாட்டோடு சேர்த்துக்கொண்டான் சுந்தரபாண்டியன்.
அதன்பிறகும் அவன் திக்விஜயம் தொடர்ந்தது. சேந்தமங்கலத்திற்குச் சென்று அங்கிருந்த காடவர் கோன் கோப்பெருஞ்சிங்கனைத் தோற்கடித்ததும், வடக்கே சென்று தெலுங்குச் சோழ அரசன் விஜயகண்ட கோபாலனையும் அதற்கு அப்பால் வாரங்கல் வரை சென்று காகதீய கணபதியையும் வெற்றி கொண்டு நெல்லூரில் வீராபிஷேகம் செய்துகொண்டான் ஜடாவர்மன். அதன்பின் தமிழகம் திரும்பி, இலங்கை மீது படையெடுத்து அந்நாட்டையும் வென்று ‘எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள்’ என்ற சிறப்புப் பெயர் பூண்டு சிதம்பரத்தில் தில்லைவாழ் அந்தணர்களால் முடிசூட்டப்பட்டான். சிதம்பரத்திற்கும் திருவரங்கத்திற்கும் பல திருப்பணிகள் செய்து பொன்வேய்ந்தான்.
இப்படிப் பாண்டிய நாட்டை மிக உன்னதமான நிலைக்குக் கொண்டு சென்றவன் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன்.
(தொடரும்)