ஜடாவர்மன் சுந்தரபாண்டியனுக்கு அடுத்து அவனுடைய மகனான மாறவர்மன் குலசேகரன் பொயு 1268ஆம் ஆண்டு பாண்டிய அரசனாகப் பொறுப்பேற்றான். தந்தையைப் போலவே பெருவீரனாகவும் திறமைசாலியாகவும் இருந்த அவன், சுந்தரபாண்டியன் வென்ற இடங்களையெல்லாம் கட்டிக்காத்தும் ஆங்காங்கே கலகங்கள் எழும்போது அவற்றை எல்லாம் அடக்கியும் மதுரை அரசை திறமையுடன் ஆண்டான். தமிழகம் அவனுடைய ஆட்சியில் உச்சத்தைத் தொட்டு செல்வச்செழிப்பு மிக்கதாக இருந்தது.
அவனுடைய அரசவைக்கு வந்த பயணியான மார்க்கோ போலோ, அவனுடைய ஆட்சிச் சிறப்பை வர்ணித்திருக்கிறார். பாண்டியர்கள் அரபு நாட்டிலிருந்து குதிரைகளை அதிக அளவில் இறக்குமதி செய்ததைப் பற்றியும் முத்துக்குளிக்கும் தொழில் சிறப்பாக நடந்ததைப் பற்றியும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இஸ்லாமிய வரலாற்றாசிரியரான வஸாப் என்பவர், 1200 கோடி தங்கம் பாண்டியர்களிடம் இருந்தது என்றும் முத்து, பவழம், மாணிக்கம் போன்ற நவரத்தினங்கள் கணக்கிலடங்காத அளவில் இருந்தன என்றும் எழுதியிருக்கிறார். கண்ணுக்கெட்டிய வரை எதிரிகளே இல்லாமல் சுமார் 40 ஆண்டு காலம் செல்வம் மிகுந்த நாடான மதுரையை ஆட்சி செய்தான் குலசேகரன்.
குலசேகரபாண்டியனுக்கு இரண்டு மகன்கள். பட்டமகிஷியின் மூலம் சுந்தரபாண்டியனும் ஆசைநாயகியின் மூலம் வீரபாண்டியனும் அவனுக்குப் பிறந்தனர். மூத்தது மோழை இளையது காளை என்ற பழமொழிக்கேற்ப, வீரபாண்டியன் வீரம் மிகுந்தவனாக இருந்தான். அடுத்த அரசனாகும் தகுதி அவனுக்கே இருக்கிறது என்று கருதிய குலசேகரன், வீரபாண்டியனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டிவைத்தான். பாண்டியர்களின் மரபின் படி வீரபாண்டியன் கொற்கையிலிருந்து ஆட்சிப்பொறுப்பைக் கவனித்துக்கொண்டிருந்தான்.
முறைப்படி பிறந்த தனக்கு ஆட்சியில்லை என்பதை அறிந்த சுந்தரபாண்டியன் ஆத்திரம் அடைந்தான். ஒரு கட்டத்தில் அது அளவுக்கு மீறிச் செல்லவே தகப்பன் என்றும் பார்க்காமல் குலசேகரனைக் கொன்றுவிட்டான் சுந்தரபாண்டியன்.
அதுமட்டுமல்லாமல் அடுத்த அரசன் தானே என்று அறிவித்து மதுரையில் முடிசூட்டிக்கொண்டான். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வீரபாண்டியன், ஒரு படையைத் திரட்டிக்கொண்டு அண்ணனோடு போர் செய்ய வந்தான். சுந்தர பாண்டியனும் தனக்கு வேண்டியவர்களைக் கொண்ட ஒரு படையைத் திரட்டினான்.
இருதரப்பும் தலைச்சி குளங்கரை என்ற இடத்தில் மோதிக்கொண்டன. போரின் ஒரு கட்டத்தில் வீரபாண்டியன் படுகாயமடைந்து வீழ்ந்தான். அவன் இறந்துவிட்டான் என்று நினைத்த சுந்தரபாண்டியன் வெற்றி முரசு கொட்டி மதுரை திரும்பினான். ஆனால் படுகாயமடைந்த வீரபாண்டியன், சீக்கிரமே குணமடைந்து மீண்டும் ஒரு முறை படைகளைத் திரட்டி சுந்தரபாண்டியனுடன் மோத வந்தான்.
தகப்பனையே கொன்றுவிட்டு, தம்பியையும் கொல்லத்துணிந்த சுந்தரபாண்டியனின் மீது மக்கள் வெறுப்படைந்தனர். ஆகவே அவனுடைய ஆதரவாளர்கள் பலர் அவனை விட்டு விலகி வீரபாண்டியன் பக்கம் சேர்ந்தனர். தன்னால் வெற்றி பெற முடியாது என்று தெரிந்துகொண்ட சுந்தரபாண்டியன், மதுரையை விட்டு ஓடிவிட்டான். வீரபாண்டியன் மதுரையைக் கைப்பற்றிக் கொண்டு முறைப்படி அரசனாக முடிசூட்டிக்கொண்டான்.
பாண்டிய நாட்டில் இப்படி உள்நாட்டுப் போர் நடப்பது ஹொய்சாள நாட்டு மன்னனான வீர வல்லாளனுக்கு எட்டியது. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில், ஹொய்சாளர்கள் கண்ணனூர்க் கொப்பத்திலிருந்து விரட்டப்பட்டு பெருமளவு ஆட்சிப் பகுதியையும் பறிகொடுத்ததை அவன் மறக்கவில்லை.
அதுவே தகுந்த தருணம் என்று கருதி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க மதுரை நோக்கி ஒரு படையுடன் வந்தான் வீரவல்லாளன். ஆனால் விதி அவனை விடவில்லை, கில்ஜியின் படைத்தலைவனான மாலிக்கபூர் ஒரு பெரும்படையுடன் ஹொய்சாளர்களின் தலைநகரான துவார சமுத்திரத்தை நோக்கி வரும் தகவல் அவனை எட்டியது. அதைக்கேட்ட வீரவல்லாளன் அவசர அவசரமாக தலைநகர் திரும்பினான். ஆனால் மாலிக்கபூரின் படைகளை ஹொய்சாளர்களால் எதிர்க்கமுடியவில்லை. கடைசியில் பெரும் செல்வத்தைக் கொடுத்து மாலிக்கபூரோடு சமாதானம் செய்துகொண்டான் வீரவல்லாளன்.
டெல்லி சுல்தானியத்தில் அலாவுதீன் கில்ஜியின் அந்தரங்க நண்பனாகவும் அவனுடைய தளபதியாகவும் இருந்தவன் மாலிக்கபூர். அதற்கு முன்பே அவன் தக்காணத்தின் மீது படையெடுத்து பெரும் செல்வத்தைக் கொள்ளையடித்து கில்ஜியிடம் சேர்ப்பித்திருந்தான்.
ஹொய்சாள அரசிலும் பாண்டிய நாட்டிலும் செல்வம் கொட்டிக்கிடப்பதை அறிந்த அலாவுதீன், ஒரு பெரும் படையுடன் மாலிக்கபூரைத் தென்னகம் நோக்கி அனுப்பினான். அதிகம் எதிர்ப்பில்லாமல், துவார சமுத்திரம் வரை வந்த மாலிக்கபூர் வீர வல்லாளனின் மகனிடம் கொள்ளையடித்த செல்வத்தை ஒப்படைத்து டெல்லிக்கு அனுப்பிவிட்டு அங்கேயே தங்கியிருந்தான்.
அந்த நிலையில் சுந்தரபாண்டியன் துவாரசமுத்திரம் போய் சேர்ந்தான். மாலிக்கபூரின் வீரத்தையும் படைபலத்தையும் பற்றிக் கேள்விப்பட்டிருந்த அவன், வீர வல்லாளன் மூலமாக மாலிக்கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தினான். மதுரைக்கு வந்து வீரபாண்டியனைத் தோற்கடித்து ஆட்சியைத் தனக்கு அளித்தால் வேண்டிய செல்வத்தைத் தருவதாக சுந்தர பாண்டியன் கூறினான்.
எந்தச் செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காக டெல்லியிலிருந்து வந்திருக்கிறோமோ அதையே தாம்பாளத்தில் வைத்துத் தருவதாக ஒருவன் அழைப்பதைக் கேட்ட மாலிக்கபூர் கரும்பு தின்னக் கூலியா என்ற நினைப்புடன் அந்த நிபந்தனையை ஏற்றான். தன்னுடைய படையுடன் வீரவல்லாளன் வழிகாட்ட தமிழகத்திற்குள் நுழைந்தான் மாலிக்கபூர்.
தோப்பூர் கணவாய் வழியாக வந்த அவனது படை கரூருக்கு அருகே காவிரியாற்றங்கரையில் சற்று ஓய்வெடுத்தது. இந்தச் செய்திகளைக் கேட்ட வீரபாண்டியன், தன்னுடைய படைகளைத் திரட்டிக்கொண்டு வீரதவளப்பட்டணம் என்ற இடத்தில் வந்து தங்கியிருந்தான். இந்த இடம் எது என்பதைப் பற்றி பல்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.
ஆனால் சில ஆராய்ச்சியாளர்கள் சொல்வது போல் ஜெயங்கொண்ட சோழபுரம் (ஜெயங்கொண்டான்) அக்காலத்தில் வீரதவளப் பட்டணம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திலிருந்து விரிவடைந்த பாண்டியப் பேரரசுக்கு தமிழகத்தின் மத்தியில் ஒரு தளம் தேவை என்பதால், இந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. வீரபாண்டியன் அதைத் தன்னுடைய இன்னொரு தலைநகராகவும் உருவாக்கினான். அந்த இடத்தில் வந்து மாலிக்கபூரின் படையை எதிர்நோக்கியிருந்தான்.
மாலிக்கபூரிடம் தம்பி வீரபாண்டியன் வீரதவளப் பட்டணத்தில் தங்கியிருக்கும் செய்தியைச் சொல்லிவிட்டு சுந்தரபாண்டியன் மதுரை சென்றுவிட்டான். காவிரி ஆற்றுப் படுகை வழியாக நேராக வீரதவளப்பட்டணம் சென்ற மாலிக்கபூரின் படைகளுக்கும் வீரபாண்டியனின் படைகளுக்கும் அங்கே கடுமையான போர் மூண்டது.
பாண்டியப் படைகளிடம் வீரம் அதிகம். ஆனால் மாலிக்கபூரின் படைகள் நவீன ஆயுதங்களை வைத்துக்கொண்டு குரூரமான போர் முறையில் ஈடுபட்டன. ஆகவே நீண்ட நேரம் வீரபாண்டியனின் படைகளால் அவர்களை எதிர்க்கமுடியவில்லை. எனவே வலுவான அரண்கள் உள்ள கண்ணனூர்க் கொப்பம் கோட்டைக்குப் பின்வாங்கின பாண்டியப் படைகள். ஆனால் மாலிக்கபூர் விடாமல் அங்கேயும் அவர்களைத் துரத்திவந்தான்.
கண்ணனூர்க் கொப்பத்தில் பாண்டியர்கள் வீரப்போர் புரிந்து மாலிக்கபூரின் படைகளைத் தடுத்து நிறுத்தினர். ஆனால், பாண்டியர் தரப்பில் போரிட்டுக்கொண்டிருந்த இஸ்லாமியப் படைப்பிரிவு கட்சி மாறி மாலிக்கபூரின் பக்கம் சென்றுவிட்டது. போரின் முக்கியமான கட்டத்தில் நடந்த இந்தத் திருப்பத்தை வீரபாண்டியன் எதிர்பார்க்கவில்லை. மாலிக்கபூரின் படைகளுக்கே வெற்றி கிடைத்தது. வீரபாண்டியன் கொல்லி மலைகளுக்குத் தப்பி ஓடினன். பாண்டியப் படைகளில் இருந்த யானைகளையும் குதிரைகளையும் மாலிக்கபூர் கைப்பற்றிக்கொண்டான்.
அதன்பின் ஶ்ரீரங்கம், சிதம்பரம் போன்ற கோவில்களில் மாலிக்கபூரின் படைகள் பேரழிவு நடத்திக் கொள்ளையடித்ததும் தன்னை தமிழகத்திற்கு அழைத்த சுந்தரபாண்டியனின் மீதே போர் தொடுத்து அவனை மதுரையை விட்டுத் துரத்திவிட்டு அங்குள்ள செல்வங்களையும் கொள்ளையடித்துக்கொண்டு டெல்லி திரும்பியதும் வரலாறு.
சங்ககாலத்திலிருந்து தமிழகத்தில் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்துகொண்டிருந்த மூவேந்தர்களின் பேரரசை முடிவுக்குக் கொண்டுவந்தது இந்த வீரதவளப்பட்டணப் போர்.
(தொடரும்)