Skip to content
Home » தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #25 – ஆரல்வாய்மொழி

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #25 – ஆரல்வாய்மொழி

கிருஷ்ணதேவராயர்

குமார கம்பண்ணரின் மதுரை வெற்றியை அடுத்து விஜயநகரப் பேரரசின் கீழ் தமிழகத்தின் பல பகுதிகள் வந்தன. அவற்றிற்கு மகாமண்டலேஸ்வரராக (ஆளுநராக) கம்பண்ணர் நியமிக்கப்பட்டார். அவரை அடுத்து பல ஆளுநர்கள் தமிழகத்தின் நிர்வாகத்தைக் கவனித்து செம்மைப் படுத்தினர். அவர்களில் ஒருவரான விருப்பண்ண உடையாரின் ஆட்சியில் அவர் இலங்கை வரை படையெடுத்துச் சென்று இடையில் உள்ள பகுதிகளை எல்லாம் விஜயநகரத்தோடு சேர்த்துக்கொண்டார்.

ஒருவழியாக சுல்தான்களின் ஆட்சி அளித்த சீரழிவிலிருந்து தமிழகம் மீளத் தொடங்கியபோது, விஜயநகரத்தை ஆட்சி செய்த சங்கம வம்சம் பலவீனமடையத் தொடங்கியது. அதனால் வெளியிலிருந்து படையெடுப்புகள், உள்நாட்டில் கலகங்கள் ஆகிய பிரச்சனைகள் தமிழகத்தில் தலை தூக்கின. கலிங்க நாட்டிலிருந்தும் பாமினி சுல்தான்களிடமிருந்தும் படைகள் புகுந்து வட தமிழகத்தைச் சூறையாடின. மதுரையை ஆண்ட வாணாதிரையர்கள் கலகம் செய்தனர்.

சந்திரகிரியின் மகாமண்டலேஸ்வரராக இருந்த சாளுவ நரசிம்மர் இந்தக் கலகங்கங்களை எல்லாம் திறம்பட அடக்கினார். ஒரு கட்டத்தில் அவரே விஜயநகரத்தின் அரசராக முடிசூட்டிக்கொண்டார். ஆனால் அவரால் நீண்ட காலம் ஆட்சி செய்ய முடியவில்லை. அவருக்குத் துணை செய்த துளுவ நரச நாயக்கரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அவர் இறைவனடி சேர்ந்தார்.

நரச நாயக்கர் தன்னுடைய ஆட்சிப் பொறுப்பின் முதல் ஆண்டுகளில் தமிழகத்தை நோக்கி ஒரு திக்விஜயம் நடத்தினார். திருச்சியில் தன்னாட்சிப் பிரகடனம் செய்த கோனேரி ராஜனையும், மதுரையில் புரட்சி செய்த வாணாதிரையர்களின் அரசன் புவனேகவீரனையும் தென்காசிப் பாண்டியனான மானாபூஷணனையும் வென்று விஜயநகரத்தின் ஆட்சியை மீண்டும் இங்கே நிலைநிறுத்தினார் நரசநாயக்கர்.

அவருடைய மகனான கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக்காலத்தில் தமிழகம் மீண்டும் உன்னத நிலையை எட்டியது. அமைதியான ஆட்சி தமிழகமெங்கும் நிலவியது. அக்காலகட்டத்தில் காஞ்சிபுரத்தின் தேவகன்மியாக (சிவாச்சாரியராக) தழுவக் குழைந்தான் பட்டர் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவருக்கு செல்லப்பா என்ற மகன் இருந்தார். அவர் வீரமும் திறனும் மிக்கவர். நாளடைவில் அவருக்கும் கிருஷ்ணதேவராயரின் ஒன்றுவிட்ட சகோதரனான அச்சுதராயருக்கும் நட்பு மலர்ந்தது. வீரமிக்கவராக இருந்த செல்லப்பா, விரைவில் விஜயநகரத்தின் அரசுப் பதவிகளை ஏற்று முன்னேறினார்.

‘அகஸ்திய கோத்திரத்து போதாயன சூத்ரத்து யஜுஸாகாத்யாபகரான தழுவக்குழைந்தான் பட்டர் புத்திரன் உபைய பிரதானியான வீரநரசிம்ஹராய நாயக்கர்’

என்று செங்கற்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் சிவாலயக் கோபுரக் கல்வெட்டு இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. சாளுவ செல்லப்ப நாயக்கர் என்று இவர் அழைக்கப்பட்டார். சோழ மண்டலத்தின் ஆளுநராக, நாயக்கராக இவர் நியமிக்கப்பட்டார். நாயக்கத்தானத்தின் படி இவருக்கு ஒரு சிறு படை வைத்துக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கிருஷ்ணதேவராயரின் மகன் சிறுவயதிலேயே விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டதால், தன் தம்பியான அச்சுதராயருக்குப் பட்டம் கட்டிவிட்டு மறைந்தார் கிருஷ்ணதேவராயர். ஆனால் கிருஷ்ணதேவராயரின் மாப்பிள்ளையான ‘அலிய’ ராமராயர் இதை ஆதரிக்கவில்லை. கிருஷ்ணதேவராயரின் இன்னொரு சகோதரரான ரங்கதேவராயரின் மகனும் சிறுவனுமான சதாசிவராயருக்கு முடிசூட்ட அவர் முயன்றார்.

அப்போது தன் படையோடு விரைந்து விஜயநகரம் சென்ற செல்லப்பச் சாளுவ நாயக்கர், அச்சுதராயரின் மைத்துனர்களான சல்லக ராஜு சகோதரர்களுடன் சேர்ந்து ராமராயரின் கலகத்தை அடக்கி அச்சுதராயருக்கு முடிசூட்டு விழா நடைபெற உறுதுணையாக நின்றார்.

அச்சுதராயர் ஆட்சிப்பொறுப்பேற்றதும் சில நாள் தலைநகரிலேயே அவருக்குப் பாதுகாப்பாகத் தங்கியிருந்தார் செல்லப்பா. ஆனால் அச்சுதராயர் தனது மைத்துனர்களுக்கே எல்லாவற்றிலும் முன்னுரிமை கொடுத்தது அவருக்கு பிடிக்கவில்லை. ஆகவே இருவர் நட்பிலும் விரிசல் ஏற்பட்டது. மனம் கொதித்த செல்லப்பா, சோழ நாடு திரும்பினார். அங்கே தனக்கே ஆட்சி என்று உரிமைப் பிரகடனத்தையும் செய்தார் அவர்.

அதே காலகட்டத்தில், பரமக்குடியின் நாயக்கராக இருந்த தும்பிச்சி நாயக்கரும் விஜயநகரப் பேரரசை எதிர்த்துக் கலகம் செய்தார். அப்போது திருவாங்கூரை உதயமார்த்தாண்டவர்மன் என்ற அரசன் ஆட்சி செய்துகொண்டிருந்தான். இரண்டாம் தேவராயரின் காலத்திலேயே திருவாங்கூர் விஜயநகரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டது. ஆனால் விஜயநகர அரசுக்குக் கப்பம் கட்டமாட்டேன் என்று கூறிப் போர்க்கொடி உயர்த்திய உதயமார்த்தாண்டவர்மன், தென்காசிப் பாண்டியநாடு மீது படையெடுத்து அந்த அரசுக்கு உட்பட்ட அம்பாசமுத்திரம், மன்னார் கோயில், களக்காடு ஆகிய பகுதிகளைக் கைப்பற்றினான். அப்போது தென்காசியை ஆண்டுகொண்டிருந்த ஜடில திரிபுவன ஸ்ரீவல்லபதேவப் பாண்டியர், இதை எதிர்த்து விஜயநகரத்தின் அரசரான அச்சுதராயரிடம் முறையிட்டார்.

தமிழகத்தின் பல பகுதிகளில் இவ்வாறு தோன்றிய பிரச்சனைகளைக் கண்ட அச்சுதராயர், தனது மைத்துனனான சின்னத் திருமலையின் தலைமையில் ஒரு படையைத் திரட்டினார். அந்தப் படையோடு தானும் புறப்பட்டு தமிழகம் நோக்கி வந்தார். வரும் வழியில் திருப்பதி, காளஹஸ்தி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய தலங்களை தரிசித்துக்கொண்டு செல்லப்பச் சாளுவ நாயக்கர் ஆட்சி செய்த சோழநாடு நோக்கிச் சென்றார்.

விஜயநகரத்திலிருந்து பெரும்படை ஒன்று வருவதைக் கண்ட செல்லப்பா, தன்னுடைய படையால் அதை எதிர்த்து நிற்க இயலாது என்ற காரணத்தால் அங்கிருந்து தப்பி பரமக்குடிக்குச் சென்றார். அங்கே தும்பிச்சி நாயக்கரின் படையோடு அவர் சேர்ந்துகொண்டார்.

எந்த எதிர்ப்பும் இல்லாமல் திருவரங்கம் வரை வந்த அச்சுதராயர் அங்கே சில நாட்கள் தங்கினார். அக்காலத்தில் பல திருப்பணிகளைத் திருவரங்கம் கோயிலுக்கு அவர் செய்திருக்கிறார். அதன்பின், தென் தமிழகம் நோக்கி அவரது படை புறப்பட்டது. இந்தப் படையெடுப்பில் விஜயநகரப் படைக்கே வெற்றி கிட்ட வேண்டும் என்று அரங்கனை வேண்டிக்கொண்டு அனந்தாழ்வான் பிள்ளை என்பவர் பெருமாளுக்குப் பல காணிக்கைகளை வழங்கினார். அது விவரங்களைப் பின்வரும் கல்வெட்டு தெரிவிக்கிறது.

அச்சுதராயரைத் திருவரங்கத்திலேயே தங்குமாறு சின்னத் திருமலை வேண்டிக்கொண்டதன் காரணமாக, அவர் அங்கேயே தங்கியிருந்தார். மதுரையில் இந்தப் படைகளோடு அப்போது மதுரை நாயக்கராக இருந்த விஸ்வநாத நாயக்கர் சேர்ந்துகொண்டார். திருமலையின் தலைமையில் படை வருவதைக் கண்ட இரு நாயக்கர்களும் திருவாங்கூர் மன்னன் உதயமார்த்தாண்டனிடம் படை உதவி கேட்கவே, இந்த மூவரின் படைகளும் 1532ம் ஆண்டுஇல் ஆரால்வாய் மொழிக் கணவாய்ப் பகுதியில் விஜயநகரப் படைகளை எதிர்த்துப் போர் செய்தன.

வரலாற்றில் தாமிரபரணிப் போர் என்று இது குறிக்கப்பட்டாலும் இந்தப் போர் நிகழ்ந்தது ஆரல்வாய்மொழிக் கணவாயில்தான். மூன்று அரசர்களின் படைகளும் சின்னத் திருமலையின் தலைமையில் வந்த விஜயநகரப் படைகளை எதிர்த்துக் கடுமையாகப் போர் செய்தபோதிலும், வெற்றி விஜயநகரப் படைகளுக்கே கிடைத்தது.

போரில் தோற்ற உதயமார்த்தாண்ட வர்மன், முன்புபோல் விஜயநகர அரசுக்குத் திறை செலுத்துவதாக ஒப்புக்கொண்டான். செல்லப்ப நாயக்கரும், தும்பிச்சி நாயக்கரும் விஜயநகரப் படைகளிடம் சரணடைந்து பேரரசுக்குக் கீழ்ப்படிய ஒப்புக்கொண்டனர். அவர்களை அச்சுதராயர் மன்னித்து அவர்கள் ஆண்ட பகுதியைத் திருப்பி அளித்தார்.

தன்னுடைய ஆட்சிப் பகுதிகளை மீட்டு தனக்கு அளித்ததற்கு ஈடாக, ஸ்ரீவல்லபப் பாண்டியன் தன் மகளை அச்சுதராயருக்குத் திருமணம் செய்து கொடுத்தான். அதன்பின் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள கோயில்களில் வழிபாடு நடத்திவிட்டு அச்சுதராயர் மீண்டும் திருவரங்கம் திரும்பினார். இந்தத் தகவல்களை அச்சுதராய அப்யுதயம் என்ற நூல் விரிவாகக் கூறுகிறது.

செல்லப்ப நாயக்கரை மன்னித்தாலும், சோழநாட்டுப் பகுதியில் தனக்கு நம்பிக்கையான ஒரு ஆள் வேண்டும் என்ற காரணத்தால் சில நாட்கள் கழித்து தன்னுடைய சகலையான செவ்வப்ப நாயக்கரை தஞ்சை நாயக்கராக அச்சுதராயர் நியமித்தார். அவரோடு தஞ்சை நாயக்கர்களின் ஆட்சி தொடங்கியது.

(தொடரும்)

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *