Skip to content
Home » தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #26 – தோப்பூர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #26 – தோப்பூர்

பெனுகொண்டா

தமிழகத்தின் பல பகுதிகளில் தோன்றிய கலகங்களைத் தனது திக்விஜயத்தின் மூலம் அடக்கி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்த அச்சுதராயரின் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதி சிக்கல்கள் நிறைந்ததாக இருந்தது. அவரது மைத்துனர்களின் தலையீடு காரணமாக நிர்வாகம் பாதிக்கப்பட்டு அவரது ஆட்சியின் பிற்பகுதி கொடுங்கோல் ஆட்சி என்று ஆய்வாளர்களால் வர்ணிக்கப்பட்டது. அவரது ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தி அடைந்தனர். பல பிரச்சனைகளுக்கு நடுவே விஜயநகரைக் கொண்டு சென்றுவிட்டு அச்சுதராயர் மறைந்ததால், அங்கே பெரும் குழப்பம் நிலவியது.

அதைப் பயன்படுத்திக்கொண்டு பல தகிடுதத்தங்கள் செய்த கிருஷ்ணதேவராயரின் மாப்பிள்ளையான அலிய ராமராயர், முன்னர் திட்டமிட்டபடி சிறு வயதினரான சதாசிவராயரை அரியணையில் அமர்த்தி பெயரளவுக்கு அரசராக்கிவிட்டு தானே ஆட்சிப் பொறுப்பைக் கவனிக்க ஆரம்பித்தார். பல சூழ்ச்சிகள் செய்து பாமினி சுல்தான்களுக்கு இடையில் பகையைத் தூண்டிவிட்டார். அதன்மூலம் விஜயநகருக்கு அவர்களால் பிரச்சனை ஏதும் இல்லாமல் பார்த்துக்கொண்டார்.

இந்தக் குழப்பங்களையெல்லாம் பயன்படுத்திக்கொண்ட தமிழகத்தின் முக்கியமான நாயக்கர்களான மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய நாயக்கர்கள் மெல்ல மெல்ல விஜயநகர அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலக ஆரம்பித்தனர். அவர்களுக்கு ஏற்றார்போல தலைக்கோட்டைப் போர் வந்தது. ராமராயரின் சூழ்ச்சிகளால் பாதிக்கப்பட்ட பாமினி சுல்தான்கள் ஒன்று கூடி விஜயநகரத்திற்கு எதிராகப் படை திரட்டினர்.

அவர்களை எதிர்க்க எல்லா நாயக்கர்களிடமும் உதவி கோரினார் ராமராயர். அதை ஏற்று தமிழக நாயக்கர்களும் தங்களுடைய படையை அனுப்பி வைத்தனர். ஆனாலும் தலைக்கோட்டைப் போரில் விஜயநகரப் படை சூழ்ச்சியினாலும் துரோகத்தினாலும் படுதோல்வி அடைந்தது. போரில் ராமராயர் கொல்லப்பட்டார். விஜயநகரம் பாமினி சுல்தான்களால் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டது.

அங்கிருந்து தப்பியோடிய ராமராயரின் சகோதரரான திருமலை ராயர், பெனுகொண்டாவை விஜயநகர அரசின் தலைநகராக்கி ஆரவீடு வம்ச ஆட்சியைத் தொடங்கி வைத்தார். விஜயநகரத்தின் பிடியிலிருந்து விடுபட நினைத்த தமிழகத்தின் நாயக்கர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. விஜயநகரத்திற்குக் கப்பம் கட்டி வந்த போதிலும் தங்களுடைய அதிகார வரம்பை அவர்கள் உயர்த்திக்கொண்டனர். அவர்களை திருமலை ராயரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அவருக்குப் பிறகு முதலாம் ஸ்ரீரங்கர், வேங்கடபதி தேவராயர் என்று அடுத்தடுத்து அரசர்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றனர். இதில் வேங்கடபதி ராயர் சுல்தான்களை வென்று ஓரளவுக்கு அரசின் நிலைமையைச் சீர்திருத்தினார். ஆனால் அவருக்கு உள்நாட்டில் இருந்து எதிர்ப்பு எழுந்தது. செஞ்சி நாயக்கருக்குக் கீழ் இருந்த வேலூரின் நாயக்கரான லிங்கம நாயக்கர் அரசை எதிர்த்துக் கலகம் செய்தார். எப்படியாவது தன்னாட்சி பெற்றுவிடவேண்டும் என்ற ஆவலில் இருந்த மதுரை, செஞ்சி, தஞ்சை நாயக்கர்கள் அவரோடு இணைந்து போர்க்கொடி உயர்த்தினர்.

இந்தக் கூட்டுப்படையை எதிர்க்க தனக்கு விசுவாசமான தளபதியும் பெரும் வீரனுமான யச்சம நாயக்கரை, வேங்கடபதி ராயர் ஒரு படையோடு அனுப்பினார். இரு தரப்பும் உத்தரமேரூரில் மோதிக்கொண்டன.

பாமினி சுல்தான்களை எதிர்த்துப் போரிட்டு வென்ற யச்சமனின் திறமைக்கும் வீரத்திற்கும் ஈடுகொடுக்க மற்ற நாயக்கர்களால் முடியவில்லை. போரில் தோல்வியடைந்த லிங்கம நாயக்கர் தப்பி ஓடிவிட்டார். மற்ற நாயக்கர்கள் தலைதப்பினால் போதும் என்று தங்களது இருப்பிடம் திரும்பினர். இந்த வெற்றியினால் மகிழ்ச்சியடைந்த வேங்கடர், தமிழக நாயக்கர்களை நன்கு கண்காணிக்கவேண்டும் என்ற காரணத்தால் தனது தலைநகரை வேலூருக்கு மாற்றி அங்கிருந்து ஆட்சி செய்ய ஆரம்பித்தார்.

வேங்கடருக்கு நேரடி வாரிசு இல்லை. ஆனால் அவரது மனைவியான பாயம்மா என்பவர், தான் கருவுற்றதுபோல நடித்து அரண்மனைப் பெண்மணிக்குப் பிறந்த ஒரு குழந்தையை தன் குழந்தை என்று அனைவரையும் நம்பச் செய்தார். இது வேங்கடருக்குத் தெரிந்தாலும், தன் மனைவி மீது இருந்த மோகத்தால் அதை வெளியில் சொல்லவில்லை. ஆனால் அவர் நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் இருந்தபோது அவருக்கு ஞானம் உதித்தது. தனது அண்ணன் மகனான ஸ்ரீரங்கருக்கு அடுத்தபடியாகப் பட்டம் சூட்டி, அவரையே தனது வாரிசாக அறிவித்துவிட்டு மறைந்தார். இரண்டாம் ஸ்ரீரங்கர் இப்படி ஆட்சிக்கு வந்தார்.

அரசு கைவிட்டுப் போனதை பாயம்மாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆத்திரமடைந்த அவர், தனது சகோதரனான ஜக்கராயன் என்பவனை உதவிக்கு அழைத்தார். ஒரு படையோடு வேலூருக்கு வந்த ஜக்கராயன் ஸ்ரீரங்கரையும் அவர் மனைவியையும் மூன்று மகன்களையும் சிறையில் அடைத்து பாயம்மாவின் ‘மகனை’ அரசின் வாரிசாக அறிவித்தான். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட யச்சமன், வேலூர் அரண்மனையில் இருந்த தனது விசுவாசியான சலவைத் தொழிலாளி ஒருவரின் மூலம் ஸ்ரீரங்கரின் குடும்பத்தைத் தப்புவிக்க முயன்றார்.

ஆனால், ஸ்ரீரங்கரின் மூன்றாவது மகனான ராமனை மட்டுமே அந்தச் சலவைத் தொழிலாளியால் தப்புவிக்க முடிந்தது. செய்தியறிந்த ஜக்கராயன், ஸ்ரீரங்கரின் வாரிசு ஒருவன் தப்பிவிட்டதைக் கண்டு ஆத்திரமடைந்தான். சிறைக்குள் சென்று ஸ்ரீரங்கரையும் அவர் குடும்பத்தினரையும் அங்கேயே கொன்றுவிட்டான் அவன்.

யச்சமன், ஸ்ரீரங்கரின் மகனான ராமனையே முறையான வாரிசு என்று அறிவித்து ஒரு படையோடு வேலூர் நோக்கி வந்தார். யச்சமரின் வீரத்தைப் பற்றி தெரிந்து வைத்திருந்த ஜக்கராயன் வேலூரை விட்டு ஓட்டமெடுத்தான். முன்புபோல தமிழக நாயக்கர்களின் கூட்டணி ஒன்றையும் அமைக்க முயன்றான்.

மதுரை நாயக்கரான முத்துவீரப்ப நாயக்கரும் செஞ்சி நாயக்கரான கிருஷ்ணப்ப நாயக்கரும் அவனோடு சேரச் சம்மதித்தனர். ஆனால் தஞ்சை நாயக்கரான ரகுநாத நாயக்கர் அதற்கு மறுத்து யச்சமருக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.

கல்லணைக்கு அருகில் இருந்த தோப்பூர் (தற்போது தொகூர்) என்ற இடத்தில் இரு தரப்புப் படைகளும் மோதின. யானைகளும் குதிரைகளும் கொண்ட இரு படைகளும் சமபலத்தோடு இருந்தன. பெருவீரரான ரகுநாத நாயக்கர் யச்சமனின் பக்கம் இருந்தது அவருக்குப் பெரும் உதவியாக இருந்தது. ரகுநாத நாயக்கர் ஜக்கராயனோடு வாட்போர் செய்து அவன் தலையை வெட்டி வீழ்த்தினார்.

யச்சமன் மதுரை நாயக்கரை போர்க்களத்திலிருந்து துரத்தினார். முத்துவீரப்பர் திருச்சிக் கோட்டைக்குள் சென்று மறைந்து கொண்டார். செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கர் புவனகிரிக்குத் தப்பிச் சென்றார். அவரை அங்கே சென்று தோற்கடித்தார் ரகுநாத நாயக்கர். இப்படியாகத் தோப்பூர்ப் போரில் உண்மையான விஜயநகர வாரிசான ராமன் வெற்றியடைந்தார்.

மழைவிட்டும் தூவானம் விடாத கதையாக ஜக்கராயனின் தம்பி யதிராஜன், மீண்டும் அரியணையைக் கைப்பற்ற விரும்பி அவ்வப்போது விஜயநகரப் படைகளோடு மோதிக்கொண்டிருந்தான். 1619ஆம் ஆண்டு போலி வாரிசு இறந்ததும், இந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது. ராமதேவன் என்ற பெயரில் ஆட்சி செய்த ராமனோடு யதிராஜன் சமாதானம் செய்துகொண்டு அவனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தான்.

(தொடரும்)

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *