பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே விஜயநகர அரசனாக அமர்ந்த ராமதேவனுக்குப் பிறகு மூன்றாம் வேங்கடர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். அவரது காலத்தில் மதுரையில் திருமலை நாயக்கர் பதவிக்கு வந்தார்.
வீரமும் திறமையும் ராஜதந்திரமும் ஒருங்கே பெற்றவர் திருமலை நாயக்கர். ஆகவே ஆட்சிக்கு வந்தது முதல் அவருக்கும் விஜயநகர அரசுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்தது. விஜயநகர அரசுக்குக் கப்பம் கட்டுவதை முதலில் நிறுத்தினார் திருமலை மன்னர். அதைக் கண்ட தஞ்சை நாயக்கரும் திறை செலுத்த மறுக்கவே, வேங்கடர் இருவருக்கும் எதிராகப் போர் தொடுத்தார்.
1637ம் ஆண்டு நடந்த இந்தப் போரில் இரு தரப்புக்கும் வெற்றி கிடைக்கவில்லை. முடிவில் நாயக்க மன்னர்களோடு சமாதானம் செய்துகொண்ட வேங்கடர், கப்பம் கட்டும் உரிமையையும் விட்டுக்கொடுத்துவிட்டு வேலூர் திரும்பினார்.
இதற்கிடையில் வேங்கடரின் சகோதரரின் மகனும் அவரது ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்தில் கிளம்பிய பல பிரச்சனைகளின் போது அவருக்குத் துணைபுரிந்தவனும் ஆன ஸ்ரீரங்கன் என்பவன், வேங்கடருக்கு எதிராகத் திரும்பினான். பீஜப்பூரின் சுல்தானை வேங்கடருக்கு எதிராகப் படையெடுக்குமாறு அவன் தூண்டிவிட்டான்.
பீஜப்பூர் படைகள் 1638ம் ஆண்டு விஜயநகர அரசின் மீது படையெடுத்தன. அவர்களுக்குப் பணம் கொடுத்து அந்தப் படையெடுப்பைச் சமாளித்தார் வேங்கடர். ஆனால் 1641ம் ஆண்டு ஸ்ரீரங்கனின் தூண்டுதலால் மீண்டும் பீஜப்பூர் படைகள் தமிழகம் நோக்கி வந்தன. அவர்களோடு ஸ்ரீரங்கன் சேர்ந்துகொண்டான்.
இந்த எதிர்ப்பைச் சமாளிக்க நாயக்கர்களின் உதவியை வேண்டினார் வேங்கடர். அதை ஏற்று தன்னுடைய தளபதியான ராமப்பையரின் தலைமையில் ஒரு படையை திருமலை நாயக்கர் அனுப்பி வைத்தார். அவரோடு இக்கேரி வேங்கட கிருஷ்ணய்யர் என்பவரும் சேர்ந்துகொண்டார். விஜயநகரப் படைகளோடு இணைந்து இந்தப் படை பீஜப்பூர் சேனைகளை எதிர்த்துப் பெங்களூர் அருகே போரிட்டது. போரில் விஜயநகரப் படைகளுக்கே வெற்றி கிடைத்தது.
இருப்பினும் விதி விடவில்லை. இம்முறை கோல்கொண்டாவின் சுல்தான் வேலூரை நோக்கிப் படையுடன் வந்தான். தொடர்ந்து தொல்லைகள் வந்துகொண்டே இருப்பதால் மனம் உடைந்த வேங்கடர், திருப்பதி அருகே உள்ள நாராயணபுரக் காட்டில் சென்று புகுந்துகொண்டார். அங்கேயே தன்னுடைய உயிரையும் விட்டார்.
அடுத்த வாரிசான ஸ்ரீரங்கன், மூன்றாம் ஸ்ரீரங்கர் என்ற பெயரோடு விஜயநகர அரியணையில் ஏறினார். பீஜப்பூர் சுல்தானின் உதவியைப் பெற்று கோல்கொண்டா சுல்தானின் படையெடுப்பைத் தடுத்து நிறுத்தினார் ஸ்ரீரங்கர். ஆனால் ஒரு கட்டத்தில் இரு சுல்தான்களும் ஒன்று சேர்ந்து கொண்டதால் அவர்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் பெரும் பணத்தைக் கொடுத்துதான் அவரால் தப்பிக்க முடிந்தது.
இம்முறை நாயக்கர்கள் அவர் உதவிக்கு வரவில்லை. வேங்கடருக்கு ஸ்ரீரங்கர் செய்த துரோகச்செயலால் திருமலை நாயக்கரும் மற்றவர்களும் அவரை வெறுத்தனர். மதுரை அரசு தனக்குக் கீழ்ப்படியாமல் இருந்ததைக் கண்ட ஸ்ரீரங்கர் திருமலை நாயக்கர் மீது படையெடுத்தார். இதைத் தடுக்க தஞ்சை, செஞ்சி நாயக்கர்களுடன் ஓர் ஒப்பந்தத்தை திருமலை நாயக்கர் செய்துகொண்டார். மூவர் கூட்டுப் படையோடு ஸ்ரீரங்கரை எதிர்க்க அவர் திட்டமிட்டார். ஆனால் அந்த ஒப்பந்தத்தை தஞ்சை நாயக்கர், ஸ்ரீரங்கரிடம் வெளியிட்டுத் துரோகம் செய்துவிட்டார்.
நிலைமை எல்லை மீறிப்போனதைக் கண்ட திருமலை நாயக்கர், பீஜப்பூர் சுல்தானுக்குப் பணம் கொடுத்து அவனை வேலூரை நோக்கிப் படையுடன் வருமாறு கேட்டுக்கொண்டார். அதை ஏற்றுக்கொண்ட பீஜப்பூர் சுல்தான், படை ஒன்றை வேலூர் நோக்கி அனுப்பினான். இதைக் கேள்விப்பட்ட ஸ்ரீரங்கர், மதுரைப் படையெடுப்பைக் கைவிட்டு வேலூர் திரும்பவேண்டியதாயிற்று. பீஜப்பூர் படைகளுக்கு எதிராகப் போர் செய்து அவர்களைத் துரத்தினார் ஸ்ரீரங்கர்.
ஆனால் சில காலம் கழித்து கோல்கொண்டாவின் சுல்தான் படையெடுத்து வந்து வேலூரைக் கைப்பற்றிக்கொண்டான். இதனால், ஆட்சியை இழந்த ஸ்ரீரங்கர், மீண்டும் நாயக்கர்களிடம் உதவி கேட்டார். இதோ, அதோ என்று நாட்களைக் கடத்திய திருமலை நாயக்கர் போன்ற நாயக்கர்கள் முடிவில் கை விரித்துவிட்டனர். அதனால் மைசூரில் தஞ்சம் புகுந்தார் ஸ்ரீரங்கர்.
அதன்பின் கோல்கொண்டாவின் சுல்தான் செஞ்சியின் மீது படையெடுத்தான. தனது நண்பருக்கே ஆபத்து வருவதைக் கண்ட திருமலை நாயக்கர் பீஜப்பூரின் சுல்தானுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்து அவனிடமிருந்து 17,000 குதிரை வீரர்களைப் பெற்றுக்கொண்டு தன்னுடைய படையோடு செஞ்சியை நோக்கிச் சென்றார். திருமலை நாயக்கரின் படை வருவதற்குள் செஞ்சிக் கோட்டையை கோல்கொண்டாவின் படை முற்றுகை இட்டது. செஞ்சி நாயக்கரின் படையுடன் தன்னுடைய படையை இணைத்தார் திருமலை நாயக்கர்.
இதற்கிடையே பீஜப்பூர் சுல்தானும் கோல்கொண்டாவின் சுல்தானும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டனர். அதனால் பீஜப்பூரின் சுல்தான் தானும் ஒரு படையோடு வந்து ஏற்கெனவே திருமலை மன்னரின் படையில் இருந்த தன்னுடைய வீரர்களையும் சேர்த்துக்கொண்டான். அவனிடம் செஞ்சிப் படையெடுப்பை ஒப்படைத்துவிட்டு கோல்கொண்டா சுல்தான் நாடு திரும்பினான். திருமலை மன்னர் பீஜப்பூரின் படைகளைத் தடுத்து நிறுத்தச் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை. செஞ்சிக்கோட்டையைப் பீஜப்பூர் படைகள் சூறையாடின. திருமலை நாயக்கர் வேறு வழியில்லாமல் மதுரை திரும்பினார்.
அடுத்ததாக மதுரையைநோக்கி பீஜப்பூர் படைகள் திரும்பின. கடுமையான போருக்குப் பின் பீஜப்பூர் படைகளைச் சமாளித்து அனுப்பினார் திருமலை நாயக்கர். இதற்காக அவர் பெரும் பணத்தையும் செலவிட வேண்டியிருந்தது. பீஜப்பூரின் படைகள் செஞ்சிக்குத் திரும்பிச் சென்றன.
இந்த நேரத்தில், நாட்டை மீட்பதற்காக செல்வத்தைத் திரட்ட ஆரம்பித்திருந்தார் ஸ்ரீரங்கர். இக்கேரி நாயக்கரான சிவப்ப நாயக்கரும், மைசூரின் அரசரும் அவருக்கு உதவி செய்தார்கள். மக்களும் தங்களிடமிருந்த பொன், பொருள் அனைத்தையும் அவரிடம் கொடுத்தனர். திருப்பதி கோயில் பணமும் இந்தச் செயலுக்காக பயன்படுத்தப்பட்டது. இப்படிக் கிடைத்த செல்வத்தைக் கொண்டு பெரும் படை ஒன்றைத் திரட்டிக்கொண்டு வேலூரை நோக்கி வந்தார் ஸ்ரீரங்கர்.
பொயு 1646ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி, விஜயநகரப் படைகளுக்கும் பீஜப்பூர் படைகளுக்கும் இடையே வேலூர் அருகே உள்ள விரிஞ்சிபுரத்தில் பெரும் போர் ஒன்று நடந்தது. ஆட்சியை எப்படியாவது மீட்டுவிடவேண்டும், விஜயநகரத்தின் மாட்சியை முன்புபோல் கொண்டுவரவேண்டும் என்ற முனைப்பில் போர் புரிந்தார் ஸ்ரீரங்கர்.
போரில் ஆரம்பத்தில் அவருக்கு உதவி செய்ய மறுத்த திருமலை நாயக்கர், ஒரு கட்டத்தில் அவருக்கு உதவியாக தன்னுடைய படையை அனுப்பி வைத்தார். ஆனால் அதற்குள் விஜயநகரப் படைகளின் தரப்பில் சேதம் அதிகரித்தது. திருமலை மன்னரின் உதவியும் பயனளிக்க முடியாமல், ஸ்ரீரங்கர் தோல்வியைத் தழுவினார். வேலூரையும் விஜயநகர அரசையும் மீட்க முடியாமல் மைசூரில் தஞ்சம் புகுந்தார். அத்தோடு தென்னாட்டில் மிகுந்த செல்வாக்கோடு அரசு செலுத்திய விஜயநகரப் பேரரசின் காலம் முடிவுக்கு வந்தது.
(தொடரும்)