Skip to content
Home » தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #28 – மூக்கறு போர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #28 – மூக்கறு போர்

திருமலை நாயக்கர்

மதுரை மன்னர் திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்திலிருந்தே அவர் ஒருபுறம் விஜயநகர அரசர்களின் எதிர்ப்பைச் சமாளித்துக்கொண்டிருந்தாலும், மறுபுறம் மைசூர் அரசர்களின் பகைமையையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. திருமலை நாயக்கருடன் ஏதாவது ஒரு சச்சரவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேலூர் விஜயநகர அரசர்களுக்கு மைசூரின் அரசர்கள் ஆதரவளித்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

தலைக்கோட்டைப் போருக்குப் பிறகு தனியரசாகிவிட்ட மைசூர், தன்னுடைய ஆட்சிப் பரப்பை விரிவடையச் செய்ய நினைத்தது கூட இந்தப் பகைக்கான காரணமாக இருக்கக்கூடும். எப்படியிருந்தாலும் மதுரை அரசோடு போரை ஆரம்பித்து வைத்தது மைசூர்தான். பொயு 1633ம் ஆண்டு மைசூரின் அரசரான சாமராஜ உடையார், ஹரிசூரநந்தி ராஜா என்ற தளபதியின் கீழ் ஒரு படையை மதுரையை நோக்கி அனுப்பி வைத்தார். தமிழகத்தில் புகுந்த மைசூர்ப் படை, வடமேற்கிலுள்ள நகரங்களைக் கைப்பற்றிக்கொண்டு திண்டுக்கல் வரை முன்னேறியது.

திருமலை நாயக்கரின் தளபதியாக இருந்தவர் தளவாய் ராமப்பையர். அந்தணர் குலத்தைச் சேர்ந்த இவர் பெரு வீரரும், ராஜதந்திரியும் ஆவார். பெரும் சிவபக்தரும்கூட. அவருடைய தலைமையில் மதுரையின் படை திண்டுக்கல்லை நோக்கிச் சென்றது. அங்கே முகாமிட்டிருந்த மைசூர்ப் படைகள் சுற்றி வளைக்கப்பட்டன. திண்டுக்கல் பாளையக்காரரான அரங்கண்ண நாயக்கர், ராமப்பையருக்கு தனது வீரர்களைக் கொடுத்து உதவினார்.

மதுரையின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் மைசூர்ப்படை திணறிச் சிதறி ஓடியது. ஓடிய படைகளை மதுரை வீரர்கள் துரத்திச் சென்றனர். மைசூர் வரை சென்ற ஹரிசூரநந்தியின் படை, அந்தக் கோட்டைக்குள் புகுந்து கதவுகளைச் சாத்திக்கொண்டது. ராமப்பையர் மைசூர்க்கோட்டையை முற்றுகை இட்டார். உள்ளே இருந்து வெளிவந்து போர் செய்ய மைசூர்ப் படைகளும் துணியவில்லை. இதனால் இந்த முற்றுகை சிறிது காலம் நீடித்தது.

எப்போதும், எந்த அரசிலும் ‘போட்டுக்கொடுப்பதற்கு’ என்றே சிலர் இருப்பார்கள். அதே போல சிலர் திருமலை நாயக்கரிடமும் சிலர் இருந்தனர். அவர்கள் திருமலை நாயக்கரிடம் சென்று ராமப்பையரைப் பற்றிக் கோள் மூட்டத் தொடங்கினர். மைசூர்ப் போருக்குப் பிறகு ராமப்பையர், திருமலை நாயக்கரைக் கொன்று தானே அரசராகப் போவதாகவும் அதனால்தான் பல பகுதிகளைப் பிடிப்பதில் அவர் முனைப்புக் காட்டுவதாகவும் அவர்கள் திருமலை மன்னரிடம் சொன்னார்கள்.

இதை நம்பாவிட்டால், உடனே தகுந்த ஆட்களை அனுப்பி ராமப்பையரை உடனே அழைத்து வரும்படியும் அப்படி அவர் வராவிட்டால் தாங்கள் சொன்னதுதான் சரி என்றும் அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். இதைக் கேட்ட திருமலைநாயக்கர் குழப்பமடைந்தார். எதற்கும் இதைச் சோதித்துப் பார்ப்போம் என்ற நினைப்பில், இருவரை மைசூருக்கு அனுப்பி ராமப்பையரை அழைத்துவரச் சொன்னார்.

ஆனால் வெற்றி அடையும் தருணத்தில் இருந்த ராமப்பையர் மதுரை வர மறுத்துவிட்டார். ஆனால் சென்றவர்கள் சும்மா இல்லாமல், ராமப்பையரின் கைகளைக் கட்டி இழுக்க முயன்றனர். அதனால் ஆத்திரமடைந்த ராமப்பையர், அவர்களுடைய கைகளை வெட்டி விட்டார். கைகளை இழந்த இருவரும் திருமலை நாயக்கரிடம் சென்று முறையிட்டனர்.

அதற்கு மேல் தாமதிப்பது ஆகாது என்ற காரணத்தால், மதுரைப் படைகளுக்கு மைசூர்க் கோட்டையைத் தாக்க ஆணையிட்டார் ராமப்பையர். கோட்டைக் கதவுகள் உடைக்கப்பட்டு மதுரைப் படைகள் மைசூருக்குள் புகுந்தன. அங்கே இரு தரப்பிற்கும் மூண்ட போரில் மதுரைப் படைகள் பெருவெற்றி அடைந்தன. வெற்றியுடன் மதுரை திரும்பிய ராமப்பையர், திருமலை நாயக்கரிடம் அரச கட்டளையை மீறிய தன்னை மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டார். உண்மையை உணர்ந்துகொண்ட திருமலை நாயக்கர் மகிழ்ந்து அவரை அன்புடன் வரவேற்றார். இந்தப் போரில் மதுரைக்கு உதவி செய்த அரங்கண்ண நாயக்கரின் கப்பப் பணத்தையும் அவர் தள்ளுபடி செய்தார்.

அதன்பின் பல ஆண்டுகள் உருண்டோடின. திருமலை நாயக்கருக்கும் வயது ஏறியது. ராமப்பையரும் இறந்துபட்டார். இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த மைசூர் அரசரான நரச ராஜா, மதுரை மீது படையெடுத்து முன்பு ஏற்பட்ட தோல்விக்குப் பழி வாங்க விரும்பினார். ஆகவே மைசூரின் படைகள் இரண்டாவது முறையாக 1656ம் ஆண்டு தமிழகத்தை நோக்கி வந்தன.

இம்முறை கொடூரமான ஒரு போர் முறையை மைசூர்ப் படைகள் கையாண்டன. போர் வீரர்களோடு மட்டும் சண்டையிடாமல், வழியில் உள்ள ஊர்களை எல்லாம் சூறையாடியும் எரியூட்டியும் பல துன்பங்களை அப்பாவிப் பொதுமக்களுக்கு விளைவித்தன. போதாக்குறைக்கு ஆண், பெண், சிறுவர்கள் என்று எல்லாரையும் பிடித்து அவர்களின் மூக்கை அறுத்து எறிந்தனர் மைசூரின் படை வீரர்கள். அதோடு மட்டுமல்லாமல், அப்படி வெட்டபட்ட மூக்குகளை ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு மூட்டையில் கட்டி அனுப்பி வைத்தனர்.

இப்படி எதிரிகளின் மூக்கை அறுக்கும் வழக்கம் மைசூரின் வீரர்களுக்கு இருந்திருக்கிறது என்பது 1679ம் ஆண்டு செயிண்ட் ஜார்ஜ் கோட்டைத் தீர்மானம் ஒன்றிலிருந்து உறுதியாகிறது. ‘எதிரிகளைக் கொல்லாமல் அவர்களுடைய மூக்கையும் உதட்டையும் அறுப்பது மைசூர் வீரர்களின் வழக்கம். அதற்காக அவர்கள் ஓர் இரும்புக் கருவியை வைத்திருக்கிறார்கள். அதைக் கொண்டு திறமையாக மூக்கையும் உதட்டையும் அவர்கள் அரிந்துவிடுகிறார்கள். மூக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மைசூரின் அரசர் அவர்களுக்குப் பரிசளிக்கிறார். இப்படிச் செய்தவதால் பகைவர்கள் உடனடியாக இறக்காவிட்டாலும் நொந்து நொந்து சில நாட்களின் இறப்பார்கள்’ என்று அந்தத் தீர்மானம் கூறுகிறது.

தமிழகம் அதற்கு முன்பு கண்டிராத வகையில் இப்படிக் கோரமான போர் செய்து மைசூரின் படை முன்னேறியபோது, 75 வயதான திருமலை நாயக்கர் நோய்வாய்ப்பட்டு பலவீனமான நிலையில் படுக்கையில் கிடந்தார். இந்தச் செய்திகளைக் கேட்டு ஆத்திரம் அடைந்தார். ஆனால், நேரில் சென்று போர் செய்யக்கூடிய வலிமை அவருக்கு இல்லை.

மைசூர்ப் படைகளை எதிர்க்க வலிமையான படையும் படைத்தலைவனும் கூட அவரிடம் இல்லை. ஆகவே, ஒரு காலத்தில் தனக்கு எதிரியாக இருந்த ராமநாதபுரம் அரசருக்குத் தூது அனுப்பினார்.

அப்போது ராமநாதபுரம் சமஸ்தானத்தில் ரகுநாத சேதுபதி ஆட்சி செய்துகொண்டிருந்தார். திருமலை நாயக்கர் அனுப்பிய செய்தியைக் கேட்ட சேதுபதி, சிறிதும் தயக்கமில்லாமல் 25,000 வீரர்களைத் திரட்டிக்கொண்டு மதுரை வந்து சேர்ந்தார்.

அதோடு திருமலை நாயக்கரிடம் இருந்த படையும் சேர்ந்துகொண்டது. இதற்கிடையில் திண்டுக்கல்லை அடைந்த மைசூர்ப்படை, தங்களுக்கு உதவிப்படை ஒன்றை எதிர்பார்த்து அங்கேயே காத்திருந்தார்கள். தன்னுடைய தம்பியான குமாரமுத்து நாயக்கரை சேதுபதியுடன் சேர்ந்து திண்டுக்கல்லுக்குச் சென்று எதிரிப் படைகளை அழிக்குமாறு திருமலை நாயக்கர் கேட்டுக்கொண்டார்.

அதற்கு இணங்க மதுரைப் படை திண்டுக்கல்லை நோக்கி முன்னேறியது. அவர்களோடு மீண்டும் அரங்கண்ண நாயக்கர் சேர்ந்து கொண்டார். திண்டுக்கல்லில் தங்கியிருந்த மைசூர்ப் படைகளோடு மதுரைப் படையினர் மோதினர். கடுமையாக நடந்த இந்தப் போரில் மதுரையின் படையில் இருந்த வீரர்களின் திறமையால், நாயக்கரின் படைகளுக்கே வெற்றி கிடைத்தது.

போரில் தோல்வியடைந்து மைசூர்ப் படை பின்வாங்கத் தொடங்கியபோது, அவர்களுக்குத் தேவையான உதவிப்படை ஒன்று மைசூரிலிருந்து அங்கே வந்து சேர்ந்தது. இதனால் ஊக்கமடைந்த மைசூரின் வீரர்கள் மதுரையின் படைவீரர்களைத் திரும்பத் தாக்கத் தொடங்கினார். ஆனால் தீரத்துடன் போரிட்ட மதுரையின் படையினர் மைசூர்ப் படை வீரர்களைக் கொன்றுக் குவித்தனர். இருப்பினும் மதுரையின் பக்கமும் நேர்ந்த சேதம் கொஞ்ச நஞ்சமல்ல. கடைசியில் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று மைசூரை நோக்கி நரசராஜாவின் படை தப்பியோடியது.

வெற்றியுடன் ரகுநாத சேதுபதி மதுரை திரும்பினாலும், குமாரமுத்துவும் அரங்கண்ண நாயக்கரும் மைசூர்ப் படைகளைத் துரத்திச் சென்றனர். வழியிலுள்ள கோட்டைகளைக் கைப்பற்றிக் கொண்டு நஞ்சன்கூடு வரை சென்றனர். பழிக்குப் பழியாக வழியில் அகப்பட்டவர்களின் மூக்குகளை எல்லாம் வெட்டி எறிந்தனர். மைசூர் மன்னனையும் சிறைப்பிடித்து அவனுடைய மூக்கையும் அரிந்ததாகச் சொல்வதுண்டு.

ரகுநாத சேதுபதிக்குப் பல பரிசுகளை அளித்துக் கௌரவித்தார் திருமலை நாயக்கர். அவருக்கு ‘திருமலை சேதுபதி’, ‘ராணி சொல் காத்தார்’ போன்ற பட்டங்களையும் அளித்தார். தங்களுக்கு மட்டுமே உரிமையாக இருந்த சிங்கமுகப் பல்லக்கையும் திருப்புவனம், திருச்சுழி, பள்ளி மடம் ஆகிய ஊர்களையும் சேதுபதிக்கு அளித்தார்.

ஆனால் மைசூரிலிருந்து வெற்றியுடன் திரும்பி வந்த குமாரமுத்துவையும் அரங்கண்ண நாயக்கரையும் வரவேற்க அவர் உயிருடன் இல்லை. திருமலை மன்னரின் ஆட்சியில் நடந்த மிக முக்கியமான போராகக் கருதப்படுவது இந்த மூக்கறு போர்.

(தொடரும்)

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *