திருமலை நாயக்கருக்கு அடுத்து அவர் மகனான (இரண்டாம்) முத்து வீரப்பர் மதுரை நாயக்கராகப் பொறுப்பேற்றார். ஆனால் சில மாதங்களே ஆட்சி செய்துவிட்டு அவர் மறைந்தார். அவருக்குப் பின் அவரது மகனான சொக்கநாத நாயக்கர் இளம் வயதிலேயே அரசரானார்.
‘இளம் கன்று பயமறியாது’ என்பதற்கு எடுத்துக்காட்டாக துணிச்சலும், அதே சமயம் அவசர புத்தி கொண்டவராகவும் இருந்தார் சொக்கநாதர். அவருக்குத் துணையாக திருமலை நாயக்கரின் இன்னொரு மகனான லிங்கம நாயக்கர் தளபதியாகப் பொறுப்பேற்றார். மன்னர் இளையவராக இருந்ததால் அதிகாரத்தைப் பெரும்பாலும் ராயசமும் பிரதானியும் கவனித்துக்-கொண்டனர்.
இந்நிலையில் பீஜப்பூர் சுல்தானின் பிரதிநிதியாக செஞ்சியில் ஆட்சி செய்துகொண்டிருந்த சகோயி என்பவரோடு மோத லிங்கமன் தீர்மானித்தார். அதன்படி சொக்கநாத நாயக்கருக்குக் கூடத் தெரிவிக்காமல், ஒரு படையைத் தானே நடத்திச் சென்று செஞ்சியை முற்றுகையிட்டார். அப்போது தஞ்சையை ஆட்சி செய்துகொண்டிருந்தவரும் விஜயநகர அரசுக்கு ஆதரவளித்தவரும் ஆன விஜயராகவ நாயக்கர் இப்போது தன் நிலைமையை மாற்றிக்கொண்டு பீஜப்பூர் சுல்தான் தரப்பில் சேர்ந்துகொண்டார்.
லிங்கமனின் மனதை மாற்றி இந்த முற்றுகையைக் கைவிடச் செய்தார். அது போதாதென்று, அவருக்குப் பதவி ஆசையைத் தூண்டி சொக்கநாத நாயக்கரை ஆட்சியிலிருந்து அகற்றுமாறு சொன்னார். லிங்கமன் ராயசத்தையும் பிரதானியையும் தன் கைக்குள் போட்டுக்கொண்டு சொக்கநாதரை வீட்டுக் காவலில் வைத்தார்.
இந்தச் சதியை அறிந்துகொண்ட சொக்கநாதர், காவலில் இருந்து தப்பி தனக்கு ஆதரவானவர்களை ஒன்று திரட்டி ராயசத்தையும் பிரதானியையும் சிறையில் அடைத்தார். லிங்கமனைச் சிறைப்-பிடிக்க வரும்போது அவன் தப்பிச் சென்று, சகோயியை மதுரையை நோக்கிப் படையெடுக்கும்படி தூண்டினான். அவர்களோடு தஞ்சை விஜயராகவ நாயக்கரும் சேர்ந்து கொண்டார்.
இரண்டு தரப்புப் படைகளும் திருச்சிக்கு அருகில் சண்டையிட்டன. மதுரையின் படைபலம் அதிகமாக இருந்தாலும், அந்தப் படையில் துரோகிகளும் அதிகமாக இருந்தனர். அதனால் போரில் வெற்றிமுகமாக இருந்த மதுரைப் படை பின்வாங்க நேரிட்டது. இதைப் பயன்படுத்திக்கொண்ட லிங்கமன் சொக்கநாத நாயக்கரைச் சிறைப்பிடிக்க வந்தான்.
ஆனால் விழித்துக்கொண்ட சொக்கநாதர், தன் படைகளுக்கு உற்சாகம் ஊட்டி வீரப்போர் செய்தார். அதன்காரணமாக பீஜப்பூர் படைகளும் தஞ்சைப் படைகளும் பின்வாங்கின. தஞ்சைக்குப் பின்வாங்கிச் சென்ற விஜயராகவ நாயக்கரின் படைகளை சொக்கநாதரின் படைகள் துரத்திச் சென்று தோற்கடித்தன. வேறு வழியில்லாமல் விஜயராகவ நாயக்கர் மதுரைப் படைகளிடம் சரணடைந்தார். இந்தப் போர் 1661-62ல் நடந்திருக்கவேண்டும்.
அதன்பின் தன் தலைநகரை திருச்சிக்கு மாற்றிக்கொண்ட சொக்கநாத நாயக்கர் அங்கிருந்து ஆட்சி செய்ய ஆரம்பித்தார். பொயு 1663ம் ஆண்டு பீஜப்பூர் படைகள் வானமியான் என்பவனின் தலைமையில் மீண்டும் திருச்சி நோக்கி வந்தன. ஏற்கனவே சொக்கநாத நாயக்கரின் மீது வெறுப்பில் இருந்த விஜயராகவ நாயக்கர், மீண்டும் தன் படைகளை பீஜப்பூர் படைகளோடு இணைத்து சொக்கநாதரை எதிர்த்தார்.
இந்தப் பெரும்படை திருச்சிக் கோட்டையை முற்றுகை இட்டது. கோட்டைக்குள் இருந்து நாயக்கரின் படைகள் குண்டுகளை வீசி கோட்டையைப் பாதுகாத்தன. முற்றுகை நீடித்துக்கொண்டே போவதைக் கண்ட வானமியான், சுற்றிலுமுள்ள கிராமங்களைச் சூறையாடத் தொடங்கினான். ஊர்கள் கொள்ளையடிக்கப்பட்டன. வீடுகள் கொளுத்தப்பட்டன. பெண்கள் மானபங்கப்படுத்தப்-பட்டனர். குடிமக்களுக்கு நேர்ந்த இந்தத் துன்பங்களைக் கண்ட சொக்கநாத நாயக்கர், பெரும் பொருளைக் கொடுத்து வானமியானைத் திரும்பிப் போகச் செய்தார்.
ஆனால் இந்தப் போரில் எதிரிகளுக்குத் துணை செய்த விஜயராகவ நாயக்கரை சொக்கநாதர் மன்னிக்கவில்லை. ஒரு படையுடன் தஞ்சை நோக்கிச் சென்று வல்லம் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டார். இம்முறை முதலில் தோல்வியைத் தழுவிய தஞ்சைப் படைகள், கடுமையாகச் சண்டையிட்டு தங்களின் பகுதிகளைப் பாதுகாத்தன. ஒரு கட்டத்தில் வல்லம் கோட்டையும் மீட்கப்பட்டது. சொக்கநாதர் போரைக் கைவிட்டுவிட்டு திருச்சி திரும்பினார்.
தொடர்ந்து தஞ்சை நாயக்கரால் தனக்குத் தொல்லை வருவதைக் கண்ட சொக்கநாத நாயக்கர், விஜயராகவருக்கு மண வயதில் பெண் ஒருவர் இருப்பதாகக் கேள்விப்பட்டார். இவரும் இளைஞர் தானே, ஆகவே அவளைத் திருமணம் செய்துகொள்வதன் மூலம் தஞ்சை நாயக்கரின் நட்பைப் பெறத் தீர்மானித்தார். அந்தப் பெண்ணுக்கும் சொக்கநாதருக்கும் காதல் ஏற்பட்டதாக இன்னொரு செய்தி கூறுகிறது.
எப்படியோ, பெண் கேட்டு விஜயராகவ நாயக்கருக்குத் தூது அனுப்பினார் மதுரையின் நாயக்கரான சொக்கநாதர். ஆனால் விஜயராகவருக்கோ ஏற்கனவே சொக்கநாதர் மேல் வெறுப்பு. தவிர, தஞ்சை நாயக்கர்கள் அச்சுதராயரின் உறவினரான செவ்வப்ப நாயக்கரின் வம்சத்தில் வந்தவர்கள் அரச பரம்பரையைச் சேர்ந்தவர்கள். மதுரை நாயக்கர்களோ கிருஷ்ணதேவராயரிடம் ஊழியம் செய்து அடைப்பமாக இருந்த விஸ்வநாத நாயக்கரின் வம்சம். ஆகவே சொக்கநாதருக்கு தன் மகளைக் கொடுப்பது கௌரவக் குறைவு என்று நினைத்த விஜயராகவ நாயக்கர் அவருக்குப் பெண் கொடுக்க மறுத்துவிட்டார்.
இந்தச் செய்தியைக் கேட்டு ஆத்திரமடைந்த சொக்கநாத நாயக்கர், 1673ம் ஆண்டு தஞ்சையை நோக்கிப் படை ஒன்றை அனுப்பினார். தளவாய் வேங்கட கிருஷ்ணப்ப நாயக்கர், பேஷ்கார் சின்னத் தம்பி முதலியார் ஆகியோர் இந்தப் படைக்குத் தலைமை தாங்கிச் சென்றனர்.
முதலில் வல்லம் கோட்டையைப் பிடித்துக்கொண்டனர் சொக்கநாதரின் படை வீரர்கள். பூஜை செய்துகொண்டிருந்த விஜயராகவருக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. உடனே பெரும்படை ஒன்றை அவசரமாகத் திரட்டிக்கொண்டு வல்லம் நோக்கி வந்தார் விஜயராகவர்.
சொக்கநாதரின் படைகளும் விஜயராகவரின் படைகளும் கடுமையாக மோதிக்கொண்டன. போரில் மதுரைப் படைகளே வெற்றி அடைந்தன. அப்போது வேங்கட கிருஷ்ணப்பர், விஜயராகவரிடம் ‘பெண்ணைக் கொடுத்துவிடுங்கள், போரை நிறுத்திவிடுகிறோம்’ என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை ஏற்க மறுத்து தஞ்சைக்குப் பின்வாங்கினார் விஜயராகவர்.
ஆகவே மதுரைப் படை தஞ்சைக்குள் நுழைந்து கோட்டையை முற்றுகையிட்டது. மீண்டும் ஒருமுறை விஜயராகவருக்குத் தூது அனுப்பப் பட்டது. மகளை சொக்கநாதருக்குத் திருமணம் செய்து கொடுக்கும்படியும், அப்படிச் செய்வதாக ஒப்புக்கொண்டால் முற்றுகையைக் கைவிட்டுத் திரும்புவதாகவும் வேங்கட கிருஷ்ணப்பர் தெரிவித்தார். ஆனால் விஜயராகவர் அசைய மறுத்தார்.
ஒரு பிரச்சனையில் சிறையில் அடைக்கப்பட்ட தன் மகனான மன்னார் தாசனை விடுதலை செய்தார். அரண்மனை முழுவதும் வெடி பொருட்களை நிரப்பிவிட்டு, தன் படைகளோடு போர்க்களம் புகுந்தார் விஜயராகவ நாயக்கர். தன் முயற்சியில் மனம் தளராத வேங்கட கிருஷ்ணப்பர், விஜயராகவரிடம் பெண்ணைக் கொடுக்குமாறு போர்க்களத்திலேயே கோரினார். ஆனால் அதற்கு இசையாத விஜயராகவர், கடுமையாகப் போர் செய்தார்.
ஆனால் வலிமையான மதுரைப் படைகளை அவரால் நீண்ட நேரம் எதிர்த்து நிற்க முடியவில்லை. வீரன் ஒருவனின் வாளால் அவர் வெட்டப்பட்டு உயிரிழக்கும் தருவாயில், தஞ்சை அரண்மனையில் பொருத்தியிருந்த வெடிகளைக் கொளுத்துமாறு கட்டளையிட்டார். அதன்படி அரண்மனை முழுவதும் வெடி வைத்து கொளுத்தப்பட்டு அதில் அவரது மகள் உட்பட குடும்பத்தினர் எல்லோரும் எரிந்துபோனார்கள்.
இந்தச் செய்திகளைப் பற்றி விரிவாக தஞ்சாவூரி ஆந்திர ராஜுல சரித்திரமு என்ற நூலும் மெக்கின்ஸி சுவடிகளும் எடுத்துரைக்-கின்றன.
கௌரவத்திற்காக குடும்பத்தையே அழிக்கத் துணிந்த விஜயராகவ நாயக்கரோடு தஞ்சை நாயக்க வம்சம் அழிந்தது. தன்னுடைய சிற்றன்னையின் மகனான அழகிரி நாயக்கனை தஞ்சையின் பிரதிநிதியாக சொக்கநாத நாயக்கர் நியமித்தார். தஞ்சை மதுரையோடு இதன்மூலம் இணைக்கப்பட்டது. அது தொடர்ந்ததா?
(தொடரும்)