Skip to content
Home » தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #30 – வீர சிவாஜியின் தமிழகப் படையெழுச்சி

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #30 – வீர சிவாஜியின் தமிழகப் படையெழுச்சி

வேலூர்க் கோட்டை

சொக்கநாத நாயக்கரின் தஞ்சை வெற்றிக்குப் பிறகு அவரது ஒன்றுவிட்ட தம்பியான அழகிரி நாயக்கர், தஞ்சையை மதுரை நாயக்கர்களின் பிரதிநிதியாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார். ஆரம்பத்தில் நிர்வாகத்தைச் செம்மைப்படுத்தியும் தொடர்ந்த போர்களால் நேர்ந்த அழிவுகளைச் சரிசெய்தும் திறமையாக ஆண்ட அழகிரிக்கு நாளடைவில் சுதந்தரமாக தஞ்சையை ஆளவேண்டும் என்ற ஆசை அதிகரித்தது.

அதற்கு விஜயராகவ நாயக்கரின் ஆட்சியின் போது அதிகாரியாக இருந்தவரும், அழகிரியின் நிர்வாகத்தின் போது அவருக்குத் தளவாயாகச் செயல்பட்டவருமான வெங்கண்ணா என்பவர் தூபம் போட்டார். அழகிரி சுய ஆட்சி செய்ய ஆரம்பித்தால் அதன் காரணமாகத் தன்னுடைய அதிகாரமும் செல்வாக்கும் உயர்வு அடையும் என்ற எண்ணம்தான் அதற்குக் காரணம்.

ஆனால் அழகிரிக்கு வெளிப்படையாகத் தன் அண்ணனை எதிர்க்க பயம். ஆகவே செலுத்த வேண்டிய கப்பத் தொகைகளை ஒழுங்காகச் செலுத்தாமலும் கணக்குக் கேட்டதற்குத் தகுந்த மறுமொழி அளிக்காமலும் காலம் கடத்தி வந்தார் அழகிரி. இதனால் சொக்கநாத நாயக்கர் எரிச்சலடைந்தாலும், தம்பியுடன் போர் செய்ய வேண்டாம் என்று அவருடைய அதிகாரிகள் சொன்ன ஆலோசனையைக் கேட்டுப் பொறுமையாக இருந்தார்.

இப்படிக் கிடைக்கவேண்டிய அதிகாரம் கைவிட்டுப் போய்க்கொண்டிருப்பதால் வெறுப்படைந்த வெங்கண்ணாவிற்கு ஒரு வலுவான பிடி கிடைத்தது. விஜயராகவ நாயக்கரின் பேரனும், மன்னார் தாசனின் மகனுமான ஒரு சிறுவன் நாகப்பட்டினத்தில் ஒரு வணிகரிடம் வளர்ந்து வருகிறான் என்ற செய்தி அவரிடம் சொல்லப்பட்டது. அதனால் மகிழ்ந்த அவர் நாகப்பட்டனம் சென்று அங்கேயே சில ஆண்டுகள் தங்கியிருந்தார். அந்தச் சிறுவனுக்கு செங்கமல தாஸ் என்று பெயர்.

செங்கமல தாஸுக்கு தகுந்த வயது வந்ததும், அவனை பீஜப்பூரின் சுல்தானிடம் கூட்டிச்சென்றார் வெங்கண்ணா. தஞ்சையின் உண்மையான வாரிசு அவனே என்றும், மதுரை நாயக்கர்கள் அநியாயமாக தஞ்சாவூரைக் கைப்பற்றிக்கொண்டு ஆட்சி செய்து வருகிறார்கள் என்றும் பீஜப்பூர் சுல்தானான அடில்ஷாவிடம் தெரிவித்தார் அவர்.

இதைக் கேட்ட பீஜப்பூர் சுல்தான், தஞ்சையை செங்கமலதாஸுக்கு அளிப்பதாக உறுதியளித்தான். செஞ்சியில் பீஜப்பூரின் பிரதிநிதியாக இருந்த மராட்டியரான ஏகோயியிடம் அதற்குத் தகுந்த ஏற்பாடு செய்யுமாறு ஆணையிட்டான் அடில்ஷா. இந்த ஏகோயி வேறு யாருமல்ல, பீஜப்பூர் சுல்தானிடம் பணி செய்துகொண்டிருந்த ஷாஜி என்பவரின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர். ஷாஜியின் முதல் மனைவியின் மகன்தான் புகழ்பெற்ற சிவாஜி.

ஏகோயியின் தலைமையில் பீஜப்பூர் படைகள் தஞ்சை நோக்கிப் புறப்பட்டன. அதைக் கண்டு அஞ்சிய அழகிரி தன் அண்ணனான சொக்கநாதரிடம் முறையிட்டார். தன்னைக் காப்பாற்றி தஞ்சையை மீட்டுத்தருமாறு அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் தம்பி செய்த அடாத செயல்களால் வருத்தமடைந்திருந்த சொக்கநாத நாயக்கர், அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். பொயு 1676ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி தஞ்சையில் நடைபெற்ற போரில் பீஜப்பூர் படைகள் வெற்றி பெற்று தஞ்சை நகருக்குள் நுழைந்தன. போரில் தோற்ற அழகிரி அரியலூர்க் காட்டுக்குள் ஓடி மறைந்தார்.

தஞ்சை அரசராக செங்கமலதாஸுக்கு முடிசூட்டினார் ஏகோயி. அதற்கு ஈடாக அவருக்கு கும்பகோணம், மன்னார் குடி, பாபநாசம் ஆகிய ஊர்களிலிருந்து வரி வசூலித்துக்கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது. ஆகவே முடிசூட்டு விழாவிற்குப் பிறகு கும்பகோணம் சென்ற ஏகோயி அங்கே தங்கியிருந்தார்.

ஆனால் செங்கமலதாஸின் ஆட்சியின் ஆரம்பத்திலேயே பிரச்சனை ஏற்பட்டது. தன்னைப் பட்டத்திற்குக் கொண்டுவந்த வெங்கண்ணாவைப் புறக்கணித்துவிட்டு தன்னை வளர்த்த வணிகருக்கு அதிக அதிகாரத்தைத் தந்தான் செங்கமலதாஸ். இதனால் ஆத்திரமடைந்த வெங்கண்ணா கும்பகோணத்திற்குச் சென்று ஏகோயியை தஞ்சை அரசுப் பொறுப்பை ஏற்குமாறு தூண்டிவிட்டான்.

முதலில் தயங்கிய ஏகோயி, தன்னுடைய அரசனான அடில்ஷா இறந்துபட்டான் என்ற செய்தி வந்தவுடன், தயக்கமெல்லாம் நீங்கி தஞ்சை நோக்கிப் படையெடுத்தார். ஏகோயியின் வலிமையை ஏற்கெனவே உணர்ந்திருந்த செங்கமலதாஸ், தஞ்சையை விட்டு ஓடிவிட்டான். துளி ரத்தம் சிந்தாமல், தஞ்சையை அலுங்காமல் கைப்பற்றிய ஏகோயி, தஞ்சை மராத்திய வம்சத்தைத் தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து குழப்பத்தில் ஆழ்ந்திருந்த அப்பகுதிக்கு நல்லாட்சியைத் தர ஆரம்பித்தார். ஆனால் இரண்டு அரசர்களுக்குத் துரோகம் செய்த வெங்கண்ணாவை ஏகோயி நம்பவில்லை. வெங்கண்ணாவைச் சிறைப்படுத்த முயன்றார். இதைத் தெரிந்துகொண்ட வெங்கண்ணா அங்கிருந்து ஓடி மறைந்தே போனான்.

இந்த சமயத்தில் சிவாஜி மன்னர் தன்னை ஒரு பெரும் சக்தியாக தக்காணத்தில் அடையாளப்படுத்தியிருந்தார். பெரு வீரரும் அன்னை பவானியின் பக்தருமான சிவாஜி அச்சமயம் மராட்டியத்தை ஆட்சி செய்து வந்தார். பீஜப்பூரின் பகுதிகளாக தென்னாட்டில் வளமுடன் இருந்த தஞ்சை, செஞ்சி, வேலூர் ஆகிய இடங்களை தன்னுடைய ஆட்சியின் கீழ் சேர்த்துக்கொள்ள அவர் முடிவெடுத்தார்.

பீஜப்பூரில் சுல்தானான அடில்ஷா இறந்தவுடன், ஏகோயி செய்ததைப் போலவே பீஜப்பூரின் மற்ற ஆளுநர்களும் தன்னிச்சையாகச் செயல்பட ஆரம்பித்தனர். செஞ்சிக்குத் தெற்கே இருந்த பகுதிகளில் ஆப்கானியனான ஷெர்கான் லோடி ஆட்சி செய்துகொண்டிருந்தான். வாலிகொண்டபுரம் அவனுடைய தலைநகராக இருந்தது. புதுச்சேரியில் வியாபாரத்திற்காகக் கால்பதித்திருந்த பிரஞ்சுக்காரருடன் சேர்ந்து கொண்டு பறங்கிப்பேட்டை முதலிய ஊர்களைக் கைப்பற்றிய ஷெர்கான் செஞ்சியை நோக்கி முன்னேறினான்.

1676ம் ஆண்டு செப்டம்பரில் செஞ்சிக்கோட்டை வீழ்ந்தது. அங்கிருந்த பீஜப்பூர் ஆளுநரான நாசிர் முகமது முதலில் தப்பி ஓடினான். அதன்பின் பறங்கிப்பேட்டை முதலிய பகுதிகளை ஷெர்கானுக்குக் கொடுத்துவிட்டு அவனுடன் சமாதானம் செய்து-கொண்டு, செஞ்சியின் ஆளுநராக மீண்டும் பொறுப்பேற்றான்.

தமிழகத்தின் வடபகுதிகளில் ஏற்பட்ட இந்தக் குழப்பமான நிலையிலும் ஏகோயி ஏதும் செய்யாமல் சும்மா இருப்பதைக் கண்ட அவரது அமைச்சரான ரகுநாத நாராயண ஹனுமந்த் பந்த் வெறுப்படைந்தார். அவர் ஷாஜியின் காலத்திலிருந்தே பணியாற்றி வருபவர். ஷாஜியின் நெருங்கிய நண்பர். சுல்தான்களை வளரவிடுவது ஆபத்து என்பதையும் உணர்ந்தவர். ஏகோயியை நம்பிப் பயன் இல்லை என்பதை உணர்ந்த அவர், காசி யாத்திரை செல்வதாகக் கூறி பதவியைத் துறந்து, குடும்பத்துடன் நேராக சிவாஜியிடம் போய்ச்சேர்ந்தார். நடந்ததைக் கூறி சிவாஜியை தமிழகத்திற்குப் படையெடுத்துவரக் கோரினார் பந்த்.

அதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்திற்குக் காத்துக்கொண்டிருந்த சிவாஜி, 1677ம் ஆண்டு தன்னுடைய படையுடன் புறப்பட்டார். ஸ்ரீசைலம் முதலிய இடங்களில் சுவாமி தரிசனம் செய்து கொண்டு நந்தியால், திருப்பதி, காளஹஸ்தி வழியாகச் சென்னை வந்தார். அங்கே சில நாட்கள் தங்கியிருந்த அவர், தன்னுடைய படையின் 5000 குதிரை வீரர்கள் அடங்கிய ஒரு பகுதியை செஞ்சிக்கு அனுப்பி வைத்தார்.

அந்தப் படையின் தலைவன், செஞ்சிக் கோட்டை ஆளுநராக இருந்த நாசிர் முகமதுவைக் கண்டு பணத்தைப் பெற்றுக்கொண்டு செஞ்சிக்கோட்டையை விட்டுவிடுமாறு சொன்னான். கிடைத்தவரைக்கும் லாபம் என்று கருதிய நாசிர் முகமது பணத்தைப் பெற்றுக்கொண்டு செஞ்சிக்கோட்டையைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினான். அதன்பின் அங்கே ஆட்சிப் பொறுப்பேற்றுக்கொண்ட சிவாஜி, செஞ்சியில் இருந்த பழைய கட்டடங்களை இடித்துவிட்டு புதிதாகப் பல கட்டடங்களைக் கட்டினார்.

அதன்பின் வேலூரை நோக்கித் தன் படையைச் செலுத்திய சிவாஜி அவ்வூர்க் கோட்டையை முற்றுகை இட்டார். அங்கே பீஜப்பூரின் ஆளுநராக இருந்தவன் அப்துல்லா கான் என்பவன். அபிசீனியாவைச் சேர்ந்தவன். மிகவும் வலிமையான அரண்களையும் அகழிகளையும் கொண்டது வேலூர்க்கோட்டை. அதற்குள் தன்னை அடைத்துக்கொண்டு சிவாஜியின் மராட்டியப் படைகளை எதிர்த்து நின்றான் அப்துல்லா கான்.

சிவாஜியின் பீரங்கிகள் கோட்டையை நோக்கி பலமுறை முழங்கின. ஆனாலும் வேலூர்க் கோட்டைத் தலைவன் அசைந்து கொடுக்கவில்லை. சில நாட்கள் கழித்து தன் படைத்தலைவன் ஒருவனிடம் முற்றுகைப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சிவாஜி தெற்கு நோக்கிச் சென்றார். (அதற்குப் பல மாதங்கள் கழித்து, சிவாஜி திரும்பச் சென்ற பிறகே வேலூர்க் கோட்டை விழுந்தது).

கெடிலக்கரையில் திருவதிகை என்ற இடத்தை அடைந்த சிவாஜி, அங்கே வாலிகொண்டபுரத்தின் ஆளுநரான ஷெர்கானை எதிர்கொண்டார். வீரமிக்க மராட்டியப் படையைச் சமாளிக்க முடியாமல் ஷெர்கான் சரணடைந்தான். அவருக்குக் கொடுக்கப் பணம் இல்லாததால் தன்னுடைய மகனைப் பிணையாக வைத்துப் பிறகு பணத்தைக் கொடுத்துவிட்டு மகனை மீட்டுக்கொண்டான் ஷெர்கான்.

இப்படியாகக் காவிரி ஆறு வரைக்கும் தன்னுடைய ஆட்சியை நிலைநிறுத்திய சிவாஜி, அடுத்து தஞ்சை நோக்கித் திரும்பினார். தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனான ஏகோயிக்குத் தூதுவிட்டு தன்னைச் சந்திக்க வருமாறு செய்தி அனுப்பினார். அதோடு மதுரை நாயக்கருக்கும் தூது அனுப்பிய சிவாஜி, சமாதானமாகப் போக பிணைத்தொகை ஒன்றை அறிவித்தார். அவரோடு போரிட விரும்பாத சொக்கநாத நாயக்கர் பிணைத்தொகையைக் கொடுத்து அனுப்பினார்.

திருமழபாடியில் ஏகோயியும் சிவாஜியும் சந்தித்தனர். ஆனால் என்ன காரணத்தாலோ சிவாஜியிடம் அச்சம் கொண்ட ஏகோயி இரவோடு இரவாக அங்கிருந்து ஓடிவிட்டார். இதைக் கண்டு ஆச்சரியம் அடைந்த சிவாஜி குழந்தைத்தனமாக நடந்துகொண்ட ஏகோயியைக் கண்டித்தாலும் தஞ்சை மீது படையெடுக்க விரும்பவில்லை. அதன்பின் ஔரங்கசீப்பின் படைகள் மராட்டியத்தில் தொல்லை தருவதாகச் செய்திவரவே தன் திக்விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு தலைநகர் திரும்பினார் சிவாஜி.

அவர் அந்தப் பக்கம் சென்றதும் தைரியமடைந்த ஏகோயி, சிவாஜி இங்கே நிறுத்தியிருந்த படைகளின் மீது தாக்குதல் தொடுத்தார். முதலில் பின்வாங்கினாலும் அதன்பின் முன்னேறித்தாக்கிய சிவாஜியின் படைத்தலைவனான அவருடைய மகனான சாம்பாஜி, ஏகோயியின் படையினரைக் கொன்று குவித்தார்.

இந்தச் சகோதரச் சண்டை மராட்டிய அரசுக்குப் பின்னடைவைத் தரும் என்று கருதிய இருதரப்பிலும் இருந்த அதிகாரிகள் சமாதானம் பேசினர். அதன்படி தமிழகத்தின் வடபகுதி சிவாஜியின் ஆட்சிக்கு உட்பட்டு இருக்கவேண்டும் என்றும் தஞ்சையின் சுற்றுப்பகுதிகளை ஏகோயி ஆட்சி செய்யலாம் என்றும் உடன்படிக்கை ஏற்பட்டது. இந்து சமயத்திற்குப் புறம்பான எவரையும் ஆட்சிப்பகுதிக்குள் வைத்துக்கொள்ளக்கூடாது என்பது அந்த உடன்படிக்கையின் முக்கிய ஷரத்துகளில் ஒன்று.

இப்படியாக மராட்டிய அரசு தமிழகத்தின் பல பகுதிகளில் நிலைகொண்டது. விஜயநகரப் பேரரசின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தின் நிலைமையை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைத்திருந்ததில் நாயக்க மன்னர்களுக்கும் மராட்டிய அரசர்களுக்கும் பெரும்பங்கு உண்டு. அதன்பின் ஐரோப்பிய அரசுகள் இங்கே கால்பதித்தன.

(முற்றும்)

பகிர:
nv-author-image

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *