Skip to content
Home » தோழர்கள் #1 – யார் தோழர்கள்?

தோழர்கள் #1 – யார் தோழர்கள்?

தோழர்கள்

கார்ல் மார்க்ஸ், ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் இருவரும் இணைந்து வெளியிட்ட முதல் அரசியல் பிரகடனமான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதல் வாக்கியம் இதுதான்.  ‘இப்போது ஐரோப்பாவை ஒரு பூதம் பிடித்து ஆட்டி வருகிறது.  அதுதான் கம்யூனிச பூதம்’.

அன்றும் சரி, இன்றும் சரி, கம்யூனிசத்தையும் அதை முன்னெடுத்து உரையாடும் தலைவர்களையும் ஏதோ பூதம் போல் பார்த்து அஞ்சுபவர்களும் வெறுப்பவர்களும் மிகுதியாகவே இருக்கிறார்கள். நான் ஒரு தொழிற்சங்கவாதி என்பதால் எனக்கே அந்த அனுபவம் உண்டு. ‘நான் உங்களை ஒரு பேய், பூதம் போல் அல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்.  அப்படித்தான் என்னிடமும் பலர் சித்தரித்திருந்தார்கள்.  ஆனால் நீங்கள் முற்றிலும் வேறானவராக இருக்கிறீர்களே!’ என்று என்னிடமே பலர் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். என் நிலைமையே இப்படி என்றால், கம்யூனிஸ்ட் தலைவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

கம்யூனிச அச்சம் நீங்குவதற்கு ஒரே வழி, கம்யூனிசம் என்றால் உண்மையில் என்னவென்றும் யாருக்கானது என்றும் நிதானமாக எடுத்துச் சொல்வதுதான். அப்பணியின் ஒரு பகுதியாகவே இந்தத் தொடரைத் திட்டமிட்டிருக்கிறேன்.

கோட்பாடுகள்மூலமாக கம்யூனிசத்தை அறிமுகப்படுத்துவது ஒரு வகை என்றால் அந்தக் கோட்பாடுகளை மக்களிடம் கொண்டு சென்றவர்களை அறிமுகப்படுத்துவதன்மூலம் கம்யூனிசத்தின் சாரத்தை அறிமுகப்படுத்துவது இன்னொரு வகை. நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்வையும் பணிகளையும் எளிமையாகவும் சுருக்கமாகவும் இங்கே அறிமுகப்படுத்தப்போகிறேன்.

கம்யூனிசம் நம் நாட்டுக்கு அந்நியமானது. அது வேற்று நாட்டுத் தத்துவம். எனவே அது நமக்குத் தேவையற்றது என்று சொல்பவர்கள் உள்ளனர். அப்படிப் பார்த்தால் ஜனநாயகம் என்பதே பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து எழுந்ததுதான். நம் மண்ணில் இல்லாதது என்பதால் ஜனநாயகத்தை நமக்கானது அல்ல என்று சொல்லிவிடமுடியுமா என்ன?

‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்; வல்லான் பொருள் குவிக்கும் தனிவுடைமை நீங்கி வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை…’ என்று பாடுகிறார் பாரதிதாசன்.  ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியை அறிந்து முதலில் நமக்கு அறிமுகம் செய்தவர் பாரதியார்.  கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதலில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் பெரியார்.  மாபெரும் லக்னோ காங்கிரஸ் சபையில் இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டவர் சென்னையின் சிங்காரவேலர்.

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை அமைக்க முதலில் வித்திட்டவர் இன்றைய பாகிஸ்தான் பகுதியில் பிறந்த அமீர் ஹைதர்கான். தெலுங்கானா புரட்சியின் தலைவராக இருந்து புரட்சி செய்த பி. சுந்தரய்யா; தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபையில் சிங்கநாதம் செய்து முதலில் தமிழில் பட்ஜெட்டை விமர்சித்துப் பேசி பிரமிக்க வைத்த பி. ராமமூர்த்தி; விவசாயிகளின் எழுச்சிக்குத் தலைமை தாங்கி அவர்களைப் போராளிகளாக்கிய பி. சீனிவாசராவ்; சென்னையில் தொழிற்சங்கத் தலைவராகப் பரிணமித்து தொழிற்சங்கத் தலைவர்கள் பலரை உருவாக்கிய வி.பி. சிந்தன்; மதுரையில் 1946இல் பம்பாயில் நடந்த மாபெரும் கப்பற்படைப் புரட்சிக்கு ஆதரவாகத் தெருவில் இறங்கி மாணவர்களை வழிநடத்திப் பெரும் கம்யூனிஸ்ட் தலைவராக உருவாகி இன்று நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் சங்கரய்யா; திருச்சியில் கட்சியைக் கட்டிய பி. உமாநாத்; மதுரையில் குழந்தையாகக் கட்சியில் நுழைந்து விடுதலைப் போராட்டத்தில் மிளிர்ந்த கே.பி.ஜானகியம்மா; பொன்மலையில் குழந்தையாக வந்து பின்னர் பெரும் போராளியான பாப்பா உமாநாத் . . .  இப்படிப் பெருகிக்கொண்டே போகிறது தோழர்களின் பட்டியல்.

தங்கள் வாழ்வைப் பின்னுக்குத் தள்ளி வைத்துவிட்டுப் பொது வாழ்வே பிரதானம் என்று முன்னகர்ந்து வந்தவர்கள் இவர்கள். நான், என் குடும்பம், என் வீடு என்று சுருங்காமல் நாம், நம் சமூகம், நம் உலகம் என்று விரிந்தவர்கள். சொந்தப் பிரச்சினைகளுக்காக அல்ல, சமூகத்தின் பிரச்சினைகளுக்காகப் போராட வந்தவர்கள் இவர்கள். சாதி, மதம், மொழி போன்ற பாகுபாடுகளைக் களந்து மக்களை மக்களாகக் கருதி அணுகியவர்கள். அவர்களுக்காகச் சிந்தித்தவர்கள். அவர்களுக்காகச் செயல்பட்டவர்கள். அவர்களோடு தங்களைக் கரைத்துக்கொண்டவர்கள்.

அனைவரின் நலனுக்காகவும் பணிபுரியும் ஓர் அரசு வேண்டும். அந்த அரசு சோஷலிச அரசா இருக்கவேண்டும் என்ற குறிக்கோளோடு தம்மை ஒப்புக் கொடுத்தவர்கள் இவர்கள். ஒரு சில ஆண்டுகளில் நிறைவேறி முடிந்துவிடுகிற கனவு அல்ல இது என்பது அவர்களுக்குத் தெரியும். வரித்துக்கொண்ட கனவை நனவாக்கவேண்டுமானால் ஒரு முழு வாழ்நாளுமேகூடப் போதாது என்பதையும் உணர்ந்தவர்கள்தாம். ஆனால் இந்த உணர்வு அவர்களைச் சோர்வடையச் செய்வதற்குப் பதில் மேலதிகம் உத்வேகம் கொள்ளவே செய்திருக்கிறது. அதனால்தான் அவர்கள் போராளிகள். அதனால்தான் அவர்கள் மக்களின் தோழர்கள்.

அதனாலேயே அவர்கள் கடும் எதிர்ப்புகளையும் சந்தித்திருக்கிறார்கள். இன்றளவும் சந்தித்துவருகிறார்கள். சோஷலிசத்துக்கு எதிராக மாபெரும் அவதூறு பிரசாரம் உலகெங்கும் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இன்னமும அது ஓயவில்லை.

கியூபப் புரட்சித் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ ஒருமுறை மக்களிடம் உரையாற்றும்போது, உற்பத்தி சாதனங்கள் அரசிடம் இருக்க வேண்டுமா என்று கேட்க, மக்கள் ஆமாம் என்றனர்.  விவசாய நிலங்கள், வங்கிகள் போன்றவை மக்களிடம் இருக்க வேண்டுமா என்று கேட்க ஆம் என்று ஆமோதித்தனர்.  ஆனால் சோஷலிசம் வேண்டுமா என்று கேட்டபோது வேண்டாம் என்றனர்.

இப்படித்தான் பெரும்பாலானோர் சோஷலிசம் என்றால் என்னவென்று தெரியாமல், வரலாற்றில் இதுவரை நடைபெற்ற போராட்டங்களை அறிந்துகொள்ளாமல், மலை போல் குவிந்திருக்கும் புத்தகங்களிலிருந்து ஒன்றையும் படிக்காமல் அதைத் தீவிரமாக வெறுக்கின்றனர்.

தோழமை என்பது வெற்று வார்த்தையல்ல.  அது ஓர் உணர்வு.  இன்பத்திலும் துன்பத்திலும் தோள் கொடுப்பவன் தோழன்.  அந்தப் பொருளில்தான் கம்யூனிஸ்டுகள் தோழர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். வேறு அடையாளங்களைவிட தோழர் என்னும் அடையாளம்தான் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. உலகில் வேறு எந்தப் பதவியும் கொடுக்காத பெருமிதத்தைத் தோழர் என்னும் பதம் அவர்களுக்குக் கொடுக்கிறது.

நமது நாட்டின் முதல் தலைமுறை கம்யூனிஸ்ட் தலைவர்கள் பெரும்பாலும் காங்கிரசிலிருந்து வெளியேறியவர்கள்.  விடுதலைப் போரில் வீரத்துடன் போராடியவர்கள்.  பதினான்கு வயதிலேயே மூவர்ணக் கொடியை ஏற்று, துப்பாக்கிக் குண்டுகளுக்கிடையே ஆட்சியர் அலுவலகத்தில் ஏறிய சுர்ஜித் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்?

எம்.என்.ராய், முசாஃபர் அகமது, இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ஜோதிபாசு, நல்லகண்ணு என்று ஒவ்வொருவருக்கும் விடுதலைப் போரில் பெரும்பங்கு உண்டு. அதற்காகக் கொடுக்கப்பட்ட செப்புப் பட்டயத்தையும் ஓய்வூதியத்தையும் இவர்கள் மறுத்துவிட்டார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் ஏ.பி.ஜே. அப்துல் கலாமை எதிர்த்து விடுதலைப் போராட்ட வீரரும், நேதாஜி சுபாஷ் சந்திர போசின் ஜான்சி ராணி ரெஜிமெண்டின் தலைவருமான கேப்டன் லட்சுமி செகால் போட்டியிட்டார். அவரை இடதுசாரிக் கட்சிகளைத் தவிர அனைவரும் சேர்ந்து தோற்கடித்துவிட்டனர். கலாமுக்குப் பிறகு பிரதீபா பாட்டீல் போட்டியிட்டபோது, அவர் ஒரு பெண் என்று கூறிக்கொண்டு அனைவரும் ஆதரித்துத் தேர்வு செய்தனர். இருவரும் பெண்கள். பிரதிபா ஏற்கப்பட்டதற்கும் லட்சுமி செகால் தோற்கடிக்கப்பட்டதற்குமான காரணம் ஒன்றுதான். ஒருவர் கம்யூனிஸ்ட் அல்ல, இன்னொருவர் தோழர்.

பம்பாயில் பழங்குடி மக்களுக்காகப் போராடிய விடுதலைப் போராட்ட வீரர்களான ஷாம்ராவ் பருலேகர், கோதாவரி பருலேகரை எத்தனை பேருக்குத் தெரியும்? 1946இல் கப்பல்படைப் புரட்சியின் போது துப்பாக்கிக் குண்டுகளை எதிர்கொண்ட அகல்யா ரங்னேகரை எவ்வளவு பேர் இன்று நினைவுகூர்கிறார்கள்?

தமிழகத்தில் ஒருநாள் கதர்துணி அதிகமாக விற்றதென்றால் இன்று பி.எஸ்.ஆர். மறியலா என்று கேட்பார்களாம். அந்தத் தன்னிகரற்ற தலைவரைப் பற்றி யாருக்குத் தெரியும் இன்று?  இன்னும் சொல்லப்போனால், துப்பாக்கிக் குண்டுகளை நெஞ்சில் தாங்கி மரணித்த வட்டாக்குடி இரணியனும், சாம்பவான் ஓடை சிவராமனும்கூட ஒரு வகையில் கம்யூனிஸ்டுகளே.

இவர்கள் ஏன் ஒரு சாராரால் நிராகரிக்கப்படுகிறார்கள் என்பதையும் ஏன் இன்னொரு சாராரால் கொண்டாடப்படுகிறார்கள் என்பதையும் இத்தொடரை வாசிக்கும் ஒருவர் புரிந்துகொள்ளமுடியும்.

இது தோழர்களின் கதை. தமிழகத்தின் கதை. இந்தியாவின் கதை. உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்களின் வரலாற்றில் ஒரு பகுதியாகத் திரண்டு நிற்கும் கதையும்கூட.

(தொடரும்)

பகிர:
கி. ரமேஷ்

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.View Author posts

4 thoughts on “தோழர்கள் #1 – யார் தோழர்கள்?”

  1. ஏன் ஜி.அதிகாரி, எஸ்.ஜி.சர்தேசாய், அஜய்கோஸ், கே. டி. கே.தங்கமணி பொன்ற முக்கிய தோழர்கள் பெயரைக் குறிப்பிட மறுப்பது ஏன்? இது சி.பி.எம் அறிக்கையாக இருக்கிறது

  2. பழனி.சுப்ரமணியன்

    வரலாற்று சுவடுகளின் பதிவு அவசியம்..எளிய நடை. வாழ்த்துகள் தோழர்.கி.இரமேஷ்.

  3. பாண்டியன்

    மிகவும் அற்புதமான கட்டுரை ஐயா. தன்னலமற்ற தோழர்களின் வரலாற்றை படிக்கும் வாய்ப்பு இத்தொடரின் மூலமாக எனக்கு கிட்டியுள்ளது வாழ்த்துகள் ஐயா!

  4. கட்டுரையின் முதல் தொடக்கம் தான் யதார்த்த உலகத்தின் வெளிப்பாடு. தற்போதைய மிகவும் தேவையான கட்டுரை தோழர். வாழ்த்துகள். வாசிப்பும்! தொடர்ந்து மாற்றத்தை நோக்கி பயணிப்போம்..

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *