தொழிலாளி வர்க்கப் போராட்டம் என்றால் தமது பொருளாதார முன்னேற்றத்துக்காக மட்டும் போராடுவதல்ல; மாறாக சுயராஜ்ஜியப் போராட்டத்தில் தொழிலாளர்கள் பங்கு வகிக்க வேண்டுமென்பது சிங்காரவேலரின் கருத்து.
மார்க்சிய அடிப்படையில் தொழிலாளர் போராட்டங்களை ஆராய்ந்து விளக்குவதில் கைதேர்ந்தவராக அவர் இருந்தார். வாழ்நாள் முழுவதும் தொழிலாளர் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு முன்னின்றார். ‘ஊழியரின் உணர்ச்சிகள் மிக விரைவில் தீப்பிடித்து விடும். எங்களது உணர்ச்சிகளோடு விளையாடாதீர்கள்’ என்பது அவர் மண்ணெண்ணெய் தொழிலாளர் வேலைநிறுத்தத்தின் போது அரசுக்கும் முதலாளிகளுக்கும் விடுத்த செய்தி.
1927-28இல் டிராம்வே தொழிலாளர், ரயில்வே தொழிலாளர்களின் மிகப்பெரும் வேலை நிறுத்தம் நாடெங்கும் நடந்தது. வேலைநிறுத்தக் குழுவில் இருந்த சிங்காரவேலர் சூறாவளிச் சுற்றுப்பிரயாணம் செய்து முனைப்போடு தொழிலாளர்களைத் திரட்டினார். அதன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
வேலைநிறுத்தம் கடும் அடக்குமுறையால் தோல்வியடைந்தாலும், அது ஒரு வீரம்செறிந்த காவியமாகவே இன்றும் நினைகூரப்படுகிறது. 1930இல் விடுதலையடைந்த போது சிங்காவேலருக்கு 70 வயதாகிவிட்டது. முன்புபோல் தொழிற்சங்கப் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடியாவிட்டாலும் தொடர்ந்து ஆர்வத்துடன் இருந்தார்.
1933ஆம் ஆண்டு மே தின விழாக் கூட்டங்களுக்கு சற்றுமுன் அவரது வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டது. சிங்காரவேலர் அஞ்சிவிடுவார் என்று அரசு நினைத்திருந்தது போலும். அவரோ கம்யூனிஸ்டுகளைக் கண்டு அரசு அஞ்சுகிறது, எனவேதான் என்னை மிரட்டிப் பார்க்கிறது என்று தனது உரையில் திருப்பியடித்தார்.
1933வரை சிங்காரவேலர் மேற்கொண்டு வந்த தொழிற்சங்கப் பணிகளை 1935க்குப் பிறகு வளர்ந்து வந்த உறுதிமிக்க கம்யூனிஸ்டுகளான ஏ.எஸ்.கே., ப.ஜீவானந்தம், பி.ஸ்ரீநிவாசராவ், பி.ராமமூர்த்தி, கே.முருகேசன் போன்றோர் தம் தோள்களில் ஏற்றனர்.
சில சமயம் தொழிற்சங்கக் கூட்டங்களில் கலந்துகொண்டு சிங்காரலேவர் உரையாற்றினார். கடைசியாக 1945 ஜூன் மாதம் நடந்த சென்னை அச்சுத் தொழிலாளர் மாநாட்டில் அவர் உரையாற்றினார். அப்பொழுது அவர் வயது 84. தொழிலாளர்களுள் ஒருவராகக் கடைசிவரை இருப்பதைக் காட்டிலும் வேறு எதையும் அவர் விரும்பியதாகத் தெரியவில்லை.
0
சிங்காரவேலர் ஏழை மக்களின் அன்றாட வாழ்வில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தார். அவர்களது பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக நகரசபை நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தலானார். 1913-16 ஆண்டுகளில் மகாஜனசபை உறுப்பினராக இருந்துள்ளார். அதன் பொதுச் சுகாதாரக் குழுவின் செயலாளராகவும் செயல்பட்டார். 1918இல் இன்ஃபுளுயன்சா கொள்ளை நோய் பரவியபோது தீவீரமாக நிவாரண நடவடிக்கைகள் மேற்கொண்டார். அவர் வசித்த திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி குப்பத்தில் பிளேக் நோய் ஏற்பட்டபோதும் பல நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
காலரா தொற்று உருவாகியுள்ளதோ என்ற ஐயமேற்பட்டபோது உடனடியாக சுகாதார அதிகாரிகளை அனுப்பிச் சோதனை செய்ய வேண்டும், மருத்துவ நிவாரணக்குழு அமைக்க வேண்டும், கஞ்சி வழங்கப்பட வேண்டுமென்று பேசி ஏற்பாடு செய்தவர் சிங்காரவேலர்தான்.
ஒரு கம்யூனிஸ்டாக, அவர் ட்ராம் போக்குவரத்தை நகரசபையே மேற்கொள்ள வேண்டுமென்றார். சுகாதார நடவடிக்கைகளில் அது கவனம் செலுத்த வேண்டுமென்று வலியுறுத்தினார். அது குறித்துப் பல கட்டுரைகளையும் எழுதினார்.
1925இல் சுயராஜ்யக் கட்சி சார்பில் யானை கவுனியிலிருந்து நகராண்மைக் கழக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கும் அவர் தேசியக் கொள்கைகளுக்காகப் போராடினார். நகராண்மைக் கழகத்தின் முன்னால் வைக்கப்பட்டிருந்த பீரங்கிகள் போர்ச் சின்னங்களாதலால் அவற்றை அகற்ற வேண்டுமென்று வாதிட்டார்.
முதல் இந்தியச் சுதந்தரப் போரின்போது இந்திய மக்கள்மீது பெரும் கொடூரங்களை ஏவிவிட்ட காப்டன் நீலின் சிலையை அகற்ற வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வாதிட்டார். அதற்காக அவர் கொண்டு வந்த தீர்மானத்தைத் தமக்கு அதிகாரமில்லை என்று கூறி நிராகரித்தார் நகரவைத் தலைவர். அச்சிலையை அகற்றும் போராட்டத்தில் அங்கிச்சி உள்ளிட்ட பெண்கள் கைதானபோது அவர்களுக்காகத் தாமே வாதாடினார் சிங்காரவேலர்.
3 நவம்பர் 1925 அன்று நிரந்தரக் கல்விக் குழுவில் சிங்காரவேலர் நியமிக்கப்பட்டார். அப்போது ஏழைக் குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்குதல், சுகாதார மேலாண்மை, 1921இல் நிறுத்தப்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தைத் தொடர்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்பிப் பேசினார். அந்தக் காலத்தில் மாநகராட்சிப் பள்ளிகளின் எண்ணிக்கை 74இல் இருந்து 94 ஆக உயர்ந்தது. மாநகராட்சிப் பள்ளிகளில் காந்தி மகானின் படத்தை வைக்க வேண்டுமென்று குறிப்புக் கொடுத்ததுடன், அதற்கான நிதியையும் மாநகராட்சியே ஏற்க வேண்டுமென்றார்.
மாநகராட்சி ஆசிரியர் சங்கம் மாணவர்களுக்குப் பிரம்படி தண்டனை கொடுக்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. அதை வலுவாகக் கண்டித்தார் சிங்காரவேலர்.
மேலும் பல குழுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறந்த முறையில் சேவையாற்றினார் சிங்காரவேலர். சென்னை மேம்பாட்டிற்கும், மக்களின் மேம்பாட்டுக்கும் அவர் ஆற்றிய சேவைகள் மறக்கமுடியாதவை.
0
இந்தியக் கம்யூனிஸ்டுகள் தங்கள் முதல் கிளையை வெளிநாட்டில்தான் தொடங்கினர். எனினும் முதல் மாநாட்டை சத்யபக்தா என்பவர் கான்பூரில் டிசம்பர் 1925இல் கூட்டினார்.
இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்க சக்லத்வாலா அழைக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் இந்தியாவுக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், இந்த மாநாட்டின் தலைவராக சிங்காரவேலர் பொறுப்பேற்றதோடு, நீண்ட தலைமையுரையும் ஆற்றினார். இந்த மாநாட்டில்தான் முதல் பொதுச்செயலாளராக எஸ்.வி.காட்டே தேர்ந்தெடுக்கப்பட்டார். தென்னிந்தியாவில் கட்சியை அமைக்கும் பொறுப்பை சிங்காரவேலர் ஏற்றார்.
இந்த மாநாட்டைக் கூட்டிய சத்யபக்தா கட்சியின் பெயரை ஒட்டிய முரண்பாட்டில் பின்னர் வெளியேறி விட்டார். ‘கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா’ என்று அழைப்பதா அல்லது ‘இந்தியன் கம்யூனிஸ்ட் பார்ட்டி’ என்றா என்பதுதான் சர்ச்சை. விவாதங்களின் இறுதியில் ‘கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா’ என்பதே சரியான பெயராக இருக்கும் என்று முடிவெடுக்கப்பட்டது.
சிங்காரவேலர் தனது தலைமை உரையில், இந்தியக் கம்யூனிசம் ரஷ்யாவின் போல்ஷ்விசம் அல்ல என்பதை விளக்கினார். போல்ஷ்விக் என்றால் பெரும்பான்மை. பெரும்பான்மையினர் தேர்ந்தெடுத்த பாதையே இப்பெயரால் அழைக்கப்படுகிறது. உலகக் கம்யூனிஸ்டுகளும் நாமும் ஒன்றுதான். ஆனால் நாமும் போல்ஷ்விக்குகளும் ஒன்றல்ல என்றார்.
மேலும் இந்திய விடுதலைக்காகப் போராடுமாறு தொழிலாளருக்கும் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்தியக் கம்யூனிஸ்டுகளின் குறிக்கோளென்று கீழ்க்கண்டவற்றைப் பரிந்துரைத்தார்:
‘எல்லோருக்கும் எளிய வாழ்க்கை, அன்றாட உணவு பற்றிய கவலையற்ற வாழ்வு, அகால மரணத்திலிருந்தும், உடல்நலக் கேட்டிலிருந்தும் விடுதலை பெற்ற வாழ்வு, அறியாமை நீங்கிய வாழ்வு ஆகியவைகளே. கம்யூனிசக் கொள்கைகளைப் படிப்படியாகக் கடைப்பிடிப்பதால், இந்தியாவில் மக்களுக்குச் சிறந்த வாழ்க்கையைக் கொண்டு வர முடியுமென கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் நம்புகிறோம். இந்தியாவின் எதிர்காலம் நம் கையிலுள்ளது. மிக உயர்ந்த இந்தியாவைக் காண நாம் கனவு காண்கிறோம். ஆகையால் எளியோரை வலியோர் சுரண்டல், நம் வாழ்க்கையில் கடும் உழைப்பினால் ஏற்படும் சுவையின்மை, பட்டினி, நோய், சாவு ஆகியவைகளிலிருந்து விடுதலை பெற நம் எண்ணங்களை எத்தடையும் இன்றி வெளிப்படுத்த கலையுருவாக்கும் மிக உயர்ந்த பொருள்கள், விஞ்ஞானம், கலாசாரம் ஆகியவைகளை அனுபவிக்கும் உரிமையுள்ள தொழிலாளர் தம் புரட்சி கீதத்தை இசைக்கும் சுதந்திர இந்தியா பற்றிய கனவை நிறைவேற்ற முயல்வோம்.’
0
சிங்காரவேலரோடு பழகியவர்கள் அவரை ஒரு மாமனிதர் என்றே நினைவுகூர்கின்றனர். ஏராளமான நூல்களை அவர் சேகரித்து வைத்திருந்ததை அவருடன் பழகிய கே. முருகேசன் என்பவர் நினைவுகூர்கிறார். அவ்வப்போது புத்தகக் கடைக்குச் செல்லும் வழக்கம் கொண்ட சிங்காரவேலர் அறிவியல், தத்துவம், சோஷலிசம் என்று புதிதாக வெளியான புத்தகங்களைக் கேட்டறிந்து வாங்கிப் படிப்பாராம். வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான அனைத்து முக்கியமான முற்போக்குப் புத்தகங்களையும் வாங்கிப் படிப்பார். தன்னுடைய நூலகத்திலிருந்து நூல்களை அவர் கடனாகக் கொடுப்பதில்லை. கொடுத்தால் திரும்பி வராது என்பதை அவர் அறிந்திருந்தார். பிற்காலத்தில் சுமார் 10,000 புத்தகங்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அவர் வழங்கியதாக இந்து பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
சிங்காரவேலர் நடுத்தர உயரமும் ஒல்லியான உடல் வாகும் கொண்டவர். ஆனால் வலிமைமிக்கவர். அடர்த்தியான புருவங்கள். கருத்தாழமிக்க முகம். தோழர்களைக் காணும்போது அவர் முகம் நன்றாக மலர்ந்து விரிந்துவிடும்.
செங்கொடி அவருக்கு உத்வேமூட்டும் ஓர் அடையாளமாக இருந்தது. அச்சுத் தொழிலாளர்களோ டிராம்வே தொழிலாளர்களோ செங்கொடி ஏந்தி அணிவகுத்துச் செல்வதைப் பார்ககும் ஒவ்வொரு முறையும் அவர் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிவிடுவார்.
சிங்காரவேலு எந்த லட்சியத்துக்காக நின்று பாடுபட்டாரோ அதனைச் சிறுமைப்படுத்துவதற்காக ஒரு சிலர் மோசமான வழிகளைக் கையாண்டனர். ஆனால் பின்னர் அவரைப் புரிந்துகொண்டு ஆதரித்தனர். அதுதான் அவரது ஆளுமை.
மகாகவி பாரதியின் உற்ற தோழராக சிங்காரவேலர் இருந்தார். பாரதி இறக்கும் தருவாயில் சிங்காரவேலரும் உடனிருந்தார் என்பது புதிய செய்தி. தமிழ் இலக்கியத்திலும் அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது.
1946 பிப்ரவரியில் பம்பாயில் நடைபெற்ற கடற்படைப் புரட்சி இந்தியா கடந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியச் சிப்பாய்களை வைத்து இனியும் இந்தியாவை ஆளமுடியாது என்ற உண்மையை முகத்தில் அடித்தாற்போல் உணர்த்தியது இந்நிகழ்வு. பிரிட்டிஷ் அரசு வேறு வழியின்றி ஆட்சி மாற்றத்துக்கான வழிமுறைகளை உருவாக்க அமைச்சர் குழு ஒன்றை மே மாதம் இந்தியாவுக்கு அனுப்பியது.
இந்தப் பின்னணியில் 11 பிப்ரவரி 1946 அன்று தோழர் சிங்காரவேலர் இந்த உலகிலிருந்து விடைபெற்றுக்கொண்டார். மறைவதற்குச் சில நாட்களுக்கு முன் அவர் ஆற்றிய இறுதி உரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
‘எனது இறுதிக் காலத்தில் உங்களிடையில் நான் இருப்பதையும், இருந்து உங்களில் ஒருவனாக நிற்பதையும் தவிர வேறு எனக்கு என்ன வேண்டும்?’
(தொடரும்)