Skip to content
Home » தோழர்கள் #5 – அமெரிக்காவிலிருந்து ரஷ்யாவுக்கு

தோழர்கள் #5 – அமெரிக்காவிலிருந்து ரஷ்யாவுக்கு

வேலையில்லாத் திண்டாட்டம்

அமெரிக்கக் குடியுரிமையை ஹைதர் பெற்ற நேரத்தில் அமெரிக்கா உலகப் போருக்குப் பிந்தைய சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக இருந்தது.

போரில் நாட்டுக்ககப் போரிட்டுக் கதாநாயகர்களாக நாடு திரும்பிய சிப்பாய்களை அமெரிக்கா அம்போவென்று விட்டுவிட்டது. அவர்கள் திரும்பிய பக்கமெல்லாம் வேலை தேடிக் கொண்டிருந்தனர். ஒண்ட இடமின்றி பூங்காக்களில் கடுங்குளிரில் படுத்துறங்கிக் கொண்டிருந்தனர். போருக்கு முன் அவர்கள் எதோ வேலையில் இருந்தவர்கள்தான். அதன் விளைவாகக் குற்றங்கள் அதிகரித்தன.

ஒருநாள் ஜேம்சையும் ஹட்சனையும் சந்தித்த ஹைதர் போராட்டத்தில் குதிப்பதென்று முடிவெடுத்தார். வேலையற்றுப் போன போர்க் கதாநாயகர்களை ஏலம் விடுவதாக அறிவித்தார். மிரண்டு போனது அரசு. அரசின் மிரட்டலை மீறி ஏலத்தை நடத்தினார் ஹைதர். அதைத் தடுக்க அவர்கள் மீது தடியடியைக் கூட ஏவிக் கூட்டத்தைக் கலைத்தது அரசு. ஆனால் ஹைதர் சளைக்காமல் ஊர் ஊராக ஏலம் நடத்தினார். அரசு அவமானப்பட்டது. பிறகு வேறு வழியில்லாமல் அவர்கள் தங்க பூங்காக்களைத் திறந்து விட்டதுடன் இரண்டு வேளை உணவும் கொடுக்க ஆரம்பித்தது.

முன்பு கப்பலில் வேலை செய்த ஹைதர் அங்கு வேலை கிடைக்காததால் ரயில்வே பட்டறை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால் அங்கு வேலைநிறுத்தம் நடந்து கொண்டிருந்தது தெரிந்தது. ஹைதருக்கோ வேறு வழியில்லாமல் அங்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஒரு ரவுடியிடம் சண்டையிட்டுத் தமது இடத்தை நிலை நாட்டிக்கொண்டார்.

அங்கு வேலைநிறுத்தம் நடப்பது குறித்து அவரும் பிராங்கும் விவாதித்தனர். தொழிலாளர்கள் குறித்து அவரது அறிவு விரிவடையத் தொடங்கியது. ரஷ்யாவின் பெரும் புரட்சி குறித்தும் அங்கு லெனின் தலைமையில் தொழிலாளர் ஆட்சி அமைந்துள்ளது குறித்தும் பிராங்க் அவரிடம் விளக்கினார். ‘இது உண்மையானால் உலகத் தொழிலாளருக்கும் உழைப்பாளிகளுக்கும் இது ஒரு அற்புதமான செய்தி. இந்த உலகில் ஒரு புதிய உலகம் உருவாக்கப்பட்டுள்ளது’ என்றார் ஹைதர்.

ஒருநாள் வேலையிழந்த ஒரு விமானி தானே ஒரு விமானப் பயிற்சி நிலையம் அமைத்துள்ளதையும், அவர் விமானம் ஓட்டக் கற்றுக் கொடுப்பதாகவும் செய்தி அறிந்து அவரிடம் சென்றார். விரைவில் விமானியாகவும் மாறினார் ஹைதர். தன்னிடம் இருந்த பணத்தைக் கொண்டு ஒரு சிறிய விமானத்தை வாங்கினார்.

இக்காலத்தில் டெட்ராய்ட் ‘காஸ் தொழில்நுட்ப உயர்நிலைப்பள்ளியில் பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மார்கன் ஜான் உரையாற்றப்போவதை அறிந்து அங்கு சென்றார் ஹைதர். அங்கு ஒருவர் மார்கனிடம் இந்தியாவுக்கு பிரிட்டிஷ் என்ன செய்யும் என்று கேட்டபோது, அது இந்தியர்களுக்கே தெரியாது என்று ஏளனமாகப் பதிலளித்தார். கொதித்துப் போன ஹைதர் உங்களுக்கு மட்டும் என்ன தெரியும் என்று கேட்டார். அதைத் திசை திருப்ப முயன்ற மார்கன் ஹைதரை பிரவுன் நிற மனிதர் என்று அழைக்க, மீண்டும் கொந்தளித்தார் ஹைதர். அவர் கடுமையாகத் தாக்கிப் பேச, பதிலளிக்க முடியாத மார்கன் பின்பக்கம் வழியாக ஓடிவிட்டார். இந்தியர்கள் மகிழ்ந்து பாங்ரா நடனமாடிவிட்ட பிறகே கலைந்து சென்றனர்.

சில நாட்களுக்குப் பின் டெட்ராயிட்டிலிருந்த தொழிலாளர் கட்சி அலுவலகத்துக்குச் சென்று செயலாளர் ஓவனிடம் அறிமுகம் செய்துகொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் பெயர்தான் அப்படி மாற்றப்பட்டிருந்தது. அங்கு செல்வதை வழக்கமாக்கிக்கொண்டார் ஹைதர். ரஷ்யாவில் கீழைத் தொழிலாளர்களின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவில் அவருக்கும் இடம் கிடைத்தது. அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்த கப்பலின் மூலமும், பின்பு ரயில் மூலமும் மகிழ்ச்சியுடன் ஹைதர் ரஷ்யா சென்றடைந்தார்.

அங்கு அவர் ஏன் அமெரிக்காவை விட்டுவந்தார் என்று கேட்கப்பட்டபோது, தாம் தமது நாட்டின் விடுதலைக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் போராட விரும்பியதால் தனது அனைத்து வசதிகளையும், மகிழ்ச்சிகளையும் விட்டு விட்டு வந்ததாகத் தெரிவித்தார். சகாரோவ் என்ற புனைப்பெயருடன் அங்கே அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மார்க்சியம் கற்பிக்கப்பட்டது. காலனிய நாடுகளை ஏகாதிபத்தியங்கள் எப்படிச் சுரண்டுகின்றன என்பது எடுத்துக் கூறப்பட்டது. அனைத்துக்கும் சோஷலிசமே தீர்வு என்பது புரிய வைக்கப்பட்டது.

இதற்கிடையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை 1920இல் தாஷ்கண்டில் உருவாகியிருந்தது. இந்தச் செய்தியும் ஹைதருக்குக் கூறப்பட்டது. பின்னர் ஆயுதப் பயிற்சியும் கொடுக்கப்பட்டது. உற்சாகம் பொங்க ஹைதர் இந்திய விடுதலைக்காக ஆயுதப் போராட்டத்தில் இணைய விரும்பினார். அப்போது இந்தியாவில் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான லீக் அமைக்கப்பட்டது. அதில் சரோஜினி நாயுடுவின் சகோதரர் பீரேந்திரநாத், ஜவாஹர்லால் நேரு போன்றவர்கள் உறுப்பினர்களாக இருந்தனர்.

சோவியத்தில் இரண்டரை ஆண்டுகள் கல்வி பெற்ற ஹைதர் இந்தியாவுக்குத் திரும்பியதும் விடுதலைப் போராட்டத்தில் இணைய விரும்பினார். மகிழ்ச்சியடைந்த சோவியத் அகிலத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரான பெட்ரோவ்ஸ்கி, அவரிடம், ‘இந்தியாவில் முறையான கம்யூனிஸ்ட் கட்சி இல்லை. நீங்கள் அங்கு கடினமாக உழைக்க வேண்டும்‘ என்றும் கவனமாக இருக்குமாறும் கூறினார்.

ஹைதரும் ஷாம்சுல் ஹூதாவும் அங்கிருந்து செல்ல ஏற்பாடாகியிருந்தது. ஜெர்மனியை அடைந்தபின் ஷாம்சுல் ஹூதா ஒரு கப்பலில் கல்கத்தா சென்றார். பின்னர் குப்தா ஒரு பிரெஞ்சுக் கப்பலில் ஒரு சாரங்கியைச் சரிக்கட்டி, ஹைதரை அதிலேயே பம்பாய்க்கு அனுப்பிவிட்டார்.

பம்பாயில் எஸ்.ஏ. டாங்கே, பி.எஃப். பிராட்லி, எஸ்.வி. காட்டே ஆகிய கம்யூனிஸ்ட் தலைவர்களைச் சந்தித்துத் தம்மை அறிமுகம் செய்து கொண்டார் ஹைதர். பம்பாயில் தான் வேலை செய்ய விரும்புவதாகக் கூறினார். இந்தியாவுக்கும், உலகக் கம்யூனிஸ்ட் அகிலமான கோமிண்டர்னுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாததைச் சுட்டிக் காட்டிய அவர், அந்த இணைப்பை உடனே உருவாக்க வேண்டுமென்றார். தொழில் திறனைக் கொண்டு தானே தனது செலவுகளைப் பார்த்துக் கொள்வதாகவும் வாக்களித்தார். இரண்டாவதாக, ஒரு மையப்படுத்தப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியை அமைக்க வேண்டும் என்பதையும் அது நிறைவேறும் எனவும் கூறினார். பிறகு சில நாட்கள் தமது கிராமத்துக்குச் சென்று தமது தாயையும் சகோதரியையும் பார்க்கச் சென்றார்.

பிறகு பம்பாய் திரும்பியவர் காட்டேவைச் சந்தித்தார். சிதறிக் கிடந்த சில கம்யூனிஸ்ட் குழுக்களுக்குப் பெயரளவுக்குச் செயலாளராக இருந்தார் காட்டே. நிதியே இல்லாத நிலையில் மிகவும் கஷ்டத்தில் இருந்ததை ஹைதர் புரிந்து கொண்டார். பிரிட்டிஷ் குற்றம் சாட்டியது போல் எந்தப் பணமும் ரஷ்யா கொடுக்கவில்லை. குறைந்த சம்பளத்துடன் ஒரு வேலையில் அமர்ந்த ஹைதர், கோமிண்டர்னுடன் தொடர்பை ஏற்படுத்தத் தொடங்கினார். அலி மர்தான் என்பவர் திறமையாக இந்தத் தொடர்பை ஏற்படுத்தினார்.

இதற்கிடையில் ஹைதர் இருந்த மதன்புரா தொழிலாளர் பகுதியில் அவர்களைப் பிரிக்க மதவாதத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது பிரிட்டிஷ். கடும் சிரமத்துக்கிடையில் அதை உடைக்க முயற்சி எடுத்தார் ஹைதர். மதவாதம் எப்போதுமே தொழிலாளர்களைப் பிளக்கும் ஒரு உத்தியாக இருந்திருக்கிறது. எனவே கம்யூனிஸ்ட் கட்சி சற்றுப் பின்னடைவைச் சந்தித்தது.

அந்தச் சமயத்தில் இங்குள்ள கட்சித் தோழர்களைச் சந்திக்க அகிலத்திலிருந்து திசை மாறிச் சென்ற எம்.என். ராய் வாரிஸ் என்பவரை அனுப்பியிருந்தார். வந்தவரை ஹைதருக்குத் தெரியும் என்பதால் அவரைச் சந்தித்தார். அவரோ கட்சியைத் திசைதிருப்ப முயல, கடுமையாகச் சாடி திருப்பி அனுப்பி விட்டார் ஹைதர்.

பம்பாயில் ஜெனரல் மோட்டார்சில் வேலைக்குச் சேர்ந்து அங்கு நற்பெயர் பெற்ற ஹைதர் அங்கொரு தொழிற்சங்கத்தை உருவாக்கினார். தொழிற்சங்கப் பயிற்சி பெற்றிருந்ததால் தலைவராகத் தன்னை அவரால் நிலைநிறுத்திக் கொள்ளமுடிந்தது. ஆனால் முறையான கட்சியில்லாதது அவர்கள் அனைவரையும் வாட்டியது.

கோமிண்டர்னில் கலந்து கொண்டு திரும்பிய ஹஸ்ரத் மொகானியும் அங்கு கட்சி அமைக்கும் பணியை ஏற்றிருப்பதாகச் சொன்னார். அவர்கள் அனைவரும் இணைந்து அதற்கான முடிவை எடுத்தனர். எப்படியோ மோப்பம் பிடித்த பிரிட்டிஷ் போலீஸ் ஹைதரின் வீட்டைச் சோதனையிட்டு அகிலத்தின் கடிதம் உட்பட அனைத்தையும் கைப்பற்றிவிட்டது. எனவே அங்கிருந்து வெளியேறுவது என்று ஹைதர் முடிவெடுத்தார். பல இடங்களில் கம்யூனிஸ்டுகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஒரு நண்பரின் வீட்டில் கூடிய அனைவரும் ஹைதர் உடனடியாக மாறு வேஷம் பூண்டு தப்பிக்க வேண்டுமென்று முடிவெடுத்தனர். ஹைதர் ஆங்கிலேயரின் உடை அணிந்துகொண்டு தப்பினார். கோவா தப்பிச் செல்வதுதான் அவர் திட்டம். அத்திட்டம் நிறைவேறியது. அங்கு ஃபெர்னாண்டஸ் என்ற பெயரில் பாஸ்போர்ட் பெற்று ஹாம்பர்குக்குச் சென்றுவிட்டார். அங்கிருந்து ஒரு கப்பலில் மாஸ்கோ சென்றார்.

மாஸ்கோவில் அவரைச் சந்தித்த கோமிண்டர்ன் தோழர்களிடம் இந்தியப் புரட்சியாளர்கள் மீரட் சதி வழக்கில் சிக்கவைக்கப்பட்டதையும் அவர்கள் அனைவரும் சிறையில் வாடிக் கொண்டிருப்பதையும், கட்சிக்கு அகிலத்திலிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி, சாடினார். திகைத்துப் போன அவர்கள் தாம் எம்.என்.ராய் மூலம் அனுப்பிய உதவிகள் அங்கு சென்று சேரவில்லை என்பதைப் புரிந்து கொண்டனர்.

Meerut Case
மீரட் சதி வழக்கில் சிக்கியவர்கள்

மீரட் சதி வழக்கில் சிக்கிய தோழர்களுக்கு உதவ உறுப்பு கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும் உதவ வேண்டுமென்றும், நிதியும் அளிக்க வேண்டுமென்றும் ஹைதர் கேட்டுக்கொண்டார். சைக்ளோஸ்டைல் இயந்திரத்தை இயக்குவதற்கம் தொலைத்தொடர்புக் கருவிகள் இயக்குவதற்கும் பயிற்சி கிடைத்தது. அதுவரை பிரிட்டிஷ் கட்சி செய்த பணிகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

(தொடரும்)

 

பகிர:
கி. ரமேஷ்

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *