Skip to content
Home » தோழர்கள் #8 – சிறந்த கம்யூனிஸ்ட், சிறந்த மனிதர்

தோழர்கள் #8 – சிறந்த கம்யூனிஸ்ட், சிறந்த மனிதர்

ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்

1939இல் வெடித்த இரண்டாம் உலகப் போரில் ஒரு சிக்கலான நிலை உண்டானது. இந்தியாவை பிரிட்டிஷ் அரசு போரில் இழுத்துவிட்டதை எதிர்த்து காங்கிரஸ் அனைத்து அரசுகளிலிருந்தும் ராஜினாமா செய்தது. பிரிட்டிஷ் அரசு இடதுசாரிகளுக்கு எதிராகத் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டது. அவர்கள் இந்தப் போரை உள்நாட்டுப் போராக மாற்றி அதன் மூலம் விடுதலை பெறத் திட்டமிட்டிருந்தனர்.

1941இல் காட்சி மாறியது. சோவியத் மீது ஜெர்மனி படையெடுத்தது மனிதகுலத்தின்மீதான பாசிசத்தின் தீவிரமான தாக்குதலாகக் கருதப்பட்டது. அந்தத் தாக்குதலை நிறுத்தவேண்டிய அவசியத்தை கம்யூனிஸ்ட் கட்சி உணர்ந்தது. பாசிசத்துக்கு எதிரான மக்களின் போரை ஆதரிக்க கட்சி தீர்மானித்தது.

இதற்கிடையில் காந்தியின் அகிம்சையை கம்யூனிஸ்டுகள் ஆதரிக்காததற்காக அவர்களை வெளியேற்றத் தொடங்கியது காங்கிரஸ். அது மட்டுமின்றி, கடுமையான அவதூறுகளையும் தாக்குதல்களையும் கட்டவிழ்த்துவிட்டது.

1942 ஆகஸ்ட் 8 அன்று காங்கிரஸ் மாநாடு ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற முழக்கத்தை எழுப்பியது. நாடெங்கும் தலைவர்கள் கைதாயினர். கம்யூனிஸ்ட் கட்சி போரை ஆதரித்ததால் ஆறு மாதங்களுக்குப் பின் அனைவரும் விடுவிக்கப்பட்டாலும், சுர்ஜீத் 1944 வரை சிறையிலேயே இருந்தார். சர்வதேச முரண்பாடுகளை உள்நாட்டு நிலையுடன் இணைத்துப் பார்க்காததைப் பின்னர் கட்சி சுய விமர்சனம் செய்துகொண்டது.

1947இல் ஏற்பட்ட பிரிவினையால் கடும் வகுப்புவாத வன்முறை எழுந்தது. பஞ்சாப் பற்றி எரிந்தது. இந்தப் பிரிவினையால் விளைந்த வன்முறை சுர்ஜீத்துக்கும் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியது. அவர் இறுதிவரை வகுப்புவாதத்துக்கு எதிராகப் போராடியதற்கு இது ஒரு காரணம்.

1919இல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையை அனைவரும் அறிவோம். அந்தக் கூட்டம் பிரபல காங்கிரஸ் தலைவர் டாக்டர் சைஃபுதின் கிச்லூவின் கைதை எதிர்த்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தின்போது நடந்தது. ஆனால் தேசப் பிரிவினையின் போதோ, அதே டாக்டர் கிச்லூவின் உயிருக்கு அச்சுறுத்தல் நேர்ந்தது. அவரை சுர்ஜீத்தும் பிற கம்யூனிஸ்ட் தலைவர்களும் காப்பாற்றி தில்லிக்கு அழைத்துச் சென்றனர். சுர்ஜீத் பின்னர் இவ்வாறு கூறினார்:

‘இந்தப் பிரிவினைக்கு முன்பு நடைபெற்ற வகுப்புவாத மோதல்தான் நேருவை இந்தப் பிரிவினைக்கும், மக்களை இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் மாற்றிக் கொள்ளும் திட்டத்துக்கும் சம்மதிக்கச் செய்தது. ஆனால் இந்தப் பிரிவினை மிகக்கொடூரமாக இருந்தது. மனிதாபிமானம் என்பது எங்கும் இல்லை. வகுப்புவாத வெறியாட்டம் காங்கிரஸ் கட்சியையும், அகாலிகளையும் பாதித்தது. ஆர்.எஸ்.எஸ். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அதன் ஸ்தாபனத்தை விரிவாக்கம் செய்தது.

‘கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர நாட்டில் எவர் ஒருவரும் இந்தப் பைத்தியக்காரத்தனத்தைத் தடுத்து நிறுத்தத் தயாராக இல்லை. இந்த ஆழமான நெருக்கடியின் போது அனைத்து வெகுஜன இயக்கத் தலைவர்களும், பிரஜா மண்டல இயக்கத் தலைவர்களும் எங்களுடன் இருந்தனர்.

‘காங்கிரஸ் தலைவர் முன்ஷி ஹமீதின் சகோதரரைக் காப்பாற்ற வேண்டியிருந்தது. நாங்கள் அன்றைய இடைக்கால பஞ்சாப் முதல்வர் கோபிசந்தைச் சந்தித்துப் பேசினோம். அவர் எங்களுக்கு வாக்குறுதி தருவதற்குப் பதில் அங்கிருந்து வரும் இந்துக்கள் நிலை குறித்துப் பேசினார். அதே போன்றுதான் சைஃபுதின் கிச்லூவின் உயிரைப் பாதுகாப்பதற்காக அவர் தில்லிக்குக் கொண்டு செல்லப்பட்டுப் பாதுகாக்கப்பட்டார் . . . பிரிவினைக்கு முன்பும் பின்பும் நடைபெற்ற வன்முறையானது இந்திய வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகும். அதனுடைய விளைவுகள் இன்றும் தொடர்கின்றன. சிறுபான்மை மக்களைத் தேசிய நீரோட்டத்துடன் நாம் இணைக்க முடியவில்லை. 1947ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொலைவெறி வகுப்புவாத வன்முறையின் விளைவுகள் இன்றும் நீடிக்கிறது.’

இந்தப் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் மக்களைக் கொண்டுச் செல்ல ரயில் ஓட்டுநர்கள் முன்வரவில்லை. ஆனால் அரசின் கோரிக்கையை ஏற்று தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கத் தோழர்கள் (DREU) துணிவுடன் இந்தப் பணியை நிறைவேற்றினர் என்பது தென்னிந்தியர்களான நமக்குப் பெருமையாகும்.

விடுதலைக்குப் பின் கட்சி தடை செய்யப்பட்டதால் நான்கு ஆண்டுகள் சுர்ஜீத் தலைமறைவாகி கிராமம், கிராமமாகச் சென்று கட்சிப் பணி செய்தார். தொண்டர்களுக்குத் தைரியம் கொடுத்தார்.

1959இல் பஞ்சாப் காங்கிரஸ் அரசு பக்ரா நங்கல் அணைத்திட்டத்தால் பயனடைந்த விவசாயிகள்மீது கடும் வரியை விதித்தது. அதற்கெதிரான விவசாயிகள் போராட்டத்தை சுர்ஜீத் கன்வீனராக முன்னின்று நடத்தினார். நூற்றுக்கணக்கானோர் காவல் நிலையங்களில் தாக்கப்பட்டனர்; எட்டுப் பேர் துப்பாக்கிச் சூட்டில் பலி; இருவர் காவல்நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்டனர். இதைத் தாங்கி நின்று சுர்ஜீத் போராட்டத்தை வழிநடத்தினார். இறுதியில் அரசு பணிந்தாலும், ஆட்சியை இழந்தது.

1951இலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியில் கட்சித் திட்டம் பற்றிய விவாதம் எழுந்து, இறுதியில் 1962இல் பிளவை நோக்கிச் சென்றது. இந்தியா சீனா போரின் போது பேச்சுவார்த்தை மூலமே பிரச்னையைத் தீர்க்க வேண்டுமென்று கோரிய 32 தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் கட்சியில் இருந்து வெளியேறினார்கள். அவர்களில் சுர்ஜீத் ஒருவர். 1964 நவம்பர் 7 அன்று சிபிஐ (எம்) உதயமானது. அதன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவராக சுர்ஜீத் தேர்வானார். உடனடியாகக் கைது செய்யப்பட்ட அவர் 1966இல்தான் விடுதலையானார்.

1978 முதல் 1984 வரை சுர்ஜீத் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். 1974இல் கிசான் சபா பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட அவர் 1989 வரை அப்பதவியில் இருந்தார். 1992இல் சிபிஐ எம்மின் பொதுச்செயலாளராகத் தேர்வானார். கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களைத் திரட்டுவதில் தனிக் கவனம் செலுத்தினார். அவரது வழிகாட்டலில் 1983 ஜுலை 15 அன்று அகில இந்திய வேலை நிறுத்தத்தை விவசாயத் தொழிலாளர்கள் வெற்றிகரமாக நடத்தினர். 1980இல் விவசாயத் தொழிலாளர்களுக்கான விரிவான சட்ட மசோதாவை அவர் தயார் செய்தார். ஆனால் அது நிறைவேற்றப்படவேயில்லை.

‘இந்தியாவில் நிலச்சீர்திருத்தங்கள்’ உட்பட எண்ணற்ற பிரசுரங்களை எழுதியவர் சுர்ஜீத். இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும், ஒற்றுமைக்காகவும் உயிரைப் பணயம் வைத்துப் போராடியவர். 1980களில் பஞ்சாபில் காலிஸ்தான் இயக்கம் பயங்கரவாதத்தில் இறங்கியது. இக்காலத்தில் சுமார் 20,000 பேர் கொலை செய்யப்பட்டனர். பிரதமர் இந்திரா காந்தி 1984இல் சுட்டுக் கொல்லப்பட்டபோது ஏராளமான அப்பாவி சீக்கியர்களை வெறியர்கள் கொன்று தீர்த்தனர். தமது உயிருக்கு அஞ்சாது இக்காலத்தில் சுர்ஜீத் பஞ்சாப் முழுதும் பயணம் செய்து தீவீரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் எதிர்த்து நின்றார். சுமார் 300 சிபிஎம் தொண்டர்கள் இந்நிலைபாட்டுக்காகப் படுகொலை செய்யப்பட்டனர்.

சுர்ஜீத் வகுப்புவாதத்துக்கு எதிராக இருந்ததால், அப்படிப்பட்ட அரசு மத்தியில் வந்து விடக்கூடாது என்பதற்காக உயிருள்ளவரை கடும் முயற்சி எடுத்தார். அதற்காக தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலையும் கூட்டினார். காஷ்மீர் மக்களுக்காகவும் காஷ்மீரிகள் தனிமைப்பட்டு விடாமலிருக்க அவர்களுக்கு தன்னாட்சி உரிமை அளிக்க வேண்டுமெனவும் கடுமையாகப் போராடினார்.

உலக அரங்கிலும், உலகக் கம்யூனிஸ்ட் கட்சி அரங்கிலும், சிபிஎம் மதிப்புப் பெற அவரது பங்கு அளப்பரியது. 1987ஆம் ஆண்டில் அக்டோபர் புரட்சியின் 70வது ஆண்டு விழாவிற்கு யெச்சூரி, சுர்ஜீத், இ.எம்.எஸ். ஆகியோர் சென்றனர். அப்போது சுர்ஜீத் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கோர்பசேவைச் சந்தித்தபோது, சோவியத் எடுத்திருக்கும் புதிய பாதை தவறானது என்று நேருக்கு நேராக விமர்சித்தார். அவர் அஞ்சியது போல் 1989இல் சோவியத் நொறுங்கியது. சுர்ஜீத் மிகவும் வருந்தினார்.

கியூபா கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது சுர்ஜீத் உடனடியாகக் களத்தில் இறங்கி தானே முயன்று 5 கோடி ரூபாய் பெருமானமுள்ள 10,000 டன் கோதுமையை ஒரு கப்பலில் அனுப்பி வைத்தார். அந்தக் கப்பல் ஹவானா வந்து சேர்ந்தபோது சுர்ஜீத்தும் பிடல் காஸ்ட்ரோவும் அங்கு அந்தக் கப்பலை வரவேற்றனர்.

விவசாயம், வனம், தோட்டத் தொழிலாளர் சர்வதேசத் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்த சுர்ஜீத் அதற்காகப் பல முயற்சிகள் எடுத்தார். சுர்ஜீத்தின் இன்னொரு முக்கியப் பங்களிப்பு இங்கிலாந்திலிருந்த இந்தியத் தொழிலாளர்கள் கழகத்தை பலப்படுத்தி அதற்கு வழிகாட்டியதாகும். அந்த அமைப்பில் ஏராளமான இந்தியர்கள் இருந்தனர். குறிப்பாகப் பஞ்சாபைச் சேர்ந்த தொழிலாளர்கள் இருந்தனர். அவரது உடல்நிலை அனுமதித்த காலம்வரை அந்த அமைப்புக்குத் தொடர்ந்து உதவினார் சுர்ஜீத்.

கடைசி வரை சோர்வின்றி உழைத்தார். 85 வயதிலும்கூட சுறுசுறுப்பாக இருந்தார். அவரது மனைவி அவரைவிட்டு அகலாது துணை நின்றார். இறுதிவரை விவசாயிகளுக்காகவும் விவசாயத் தொழிலாளர்களுக்காகவும் குரல் கொடுத்தார். ஒரு சிறந்த கம்யூனிஸ்டாகவும் சிறந்த மனிதராகவும் அறியப்பட்டவர் 2008 ஆகஸ்ட் 1 அன்று மரணமடைந்தார்.

(தொடரும்)

________
ஆதாரம்:
1. தோழர்.ஹர்கிஷன் சிங் சுர்ஜீத், சிபிஐ.எம். வெளீயீடு.
2. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்கள் – என்.ராமகிருஷ்ணன்

பகிர:
nv-author-image

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *