Skip to content
Home » தோழர்கள் #9 – எதிர்ப்பே வாழ்க்கை

தோழர்கள் #9 – எதிர்ப்பே வாழ்க்கை

சங்கரய்யா

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில மாநாடு தொடக்க விழா. விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக பின்வரும் பாடல் ஒலிக்கிறது:

விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே
தோழா தோழா
வீரர் உமக்கே வணக்கம் வணக்கம்
தோழா தோழா . . .

இப்பாடலுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திக் கொண்டிருந்தவர்களில் ஒரு மூத்த தலைவரும் இருந்தார். மிகந்த உணர்ச்சிக் கொந்தளிப்போடு இருந்த அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது. அதைப் பார்த்த அனைவரும் உணர்ச்சி வசப்பட்டனர். அவர் விடுதலைப் போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்ற தோழர் சங்கரய்யா.

சங்கரய்யா 1922 ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி கோவில்பட்டியில் பிறந்தார். வீட்டின் இரண்டாவது ஆண் குழந்தையான அவருக்கு முதலில் பிரதாப சந்திரன் என்று பெற்றோர் பெயர் வைத்திருந்தனர். இதை எதிர்த்து அவரது தாய் வழிப் பாட்டனார் தனது பெயரான சங்கரய்யா என்றுதான் வைக்க வேண்டுமென்று இரண்டு நாள் உண்ணாவிரதம் இருக்க, குழந்தையின் பெயர் அவர் விரும்பியவாறு மாற்றப்பட்டது. ஆக, தனது பெயரையே எதிர்ப்பால்தான் பெற்றார் சங்கரய்யா.

அவர் தூத்துக்குடியில் நகராட்சிப் பள்ளியில் படித்தபோது அங்கு கப்பலில் வந்திறங்கிய மோதிலால் நேருவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பைக் கண்டு அதிசயித்தார். 1931ஆம் ஆண்டு பகத்சிங் தூக்கிலிடப்பட்டதை எதிர்த்து தூத்துக்குடி கொந்தளித்தது. அதையும் நேரில் கண்டார் சங்கரய்யா. இந்நிகழ்ச்சிகள் அவர்மீது பெரும் தாக்கம் செலுத்தின.

1928ஆம் ஆண்டில் ரயில்வே தொழிலாளர்கள் ஆட்குறைப்பை எதிர்த்து சிங்காரவேலர், முகுந்தலால் சர்க்காரின் தலைமையில் பெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தபோது அதையும் நேரில் கண்டு தாக்கம் பெற்றார் சங்கரய்யா.

1930இல் குடும்பம் மதுரைக்குக் குடிபெயர்ந்தது. அங்கு மூன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். சங்கரய்யாவின் பாட்டனார் ஈ.வெ.ராவால் ஈர்க்கப்பட்டவர். அவர் வீட்டுக்கு குடியரசு பத்திரிகை வந்தது. அதில் வந்த தோழர் சிங்காரவேலரின் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வந்தார் சங்கரய்யா. அதனால் அவருக்கு முற்போக்குச் சிந்தனைகள் ஏற்பட்டன.

1937இல் அவர் பள்ளியை முடித்து அமெரிக்கன் கல்லூரியில் இணைந்தார். அங்கு நடந்த ஒரு பேச்சுப்போட்டியில் ‘நாடு வளர நாட்டின் வளர்ச்சிப்பாதை’ என்ற தலைப்பில் சங்கரய்யா பேசியது பெரும் வரவேற்பைப் பெற்றது. அங்கு திருவனந்தபுரம் உட்படப் பல இடங்களிலிருந்து வந்து மாணவர்கள் தங்கிப் படித்தனர். அவர்கள் பலரும் தேசபக்தர்களாகவும், நாட்டையும், மக்களையும் நேசிப்பவர்களாக இருந்தனர். கல்லூரியில் அவர் கால்பந்து வீரராகவும் திகழ்ந்தார்.

மதுரையில் அரசியல் நிகழ்ச்சிப் போக்குகள் அனைத்தும் அமெரிக்கன் கல்லூரி மாணவர்களிடையே பிரதிபலிக்கும். காரசார விவாதம் நடக்கும். இதனால் தேசிய உணர்வு, தேசபக்த உணர்வு போன்றவை அவர்களிடையே மேலோங்கின. மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் தலித் ஆலய நுழைவு நடைபெற்றபோது சங்கரய்யா வாயிலில் நின்று நேரடியாகக் கண்டு மகிழ்ந்தார்.

அதன் பிறகு ராஜாஜி இந்தியைக் கட்டாயமாக்கியபோது மதுரைக்கு வந்த ராஜாஜிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் சங்கரய்யா கலந்து கொண்டு கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பைத் தெரிவித்தார்.

1936இல் தமிழ்நாட்டில் பி. ராமமூர்த்தி, ஜீவா உள்ளிட்ட 9 பேரைக் கொண்ட முதல் கம்யூனிஸ்ட் கிளை உருவானது. மதுரையில் கே.பி.ஜானகியம்மாள், எஸ்.குருசாமி, ஏ.செல்லையா ஆகியோர் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களாக இருந்தனர். அப்போது கேரளத்திலிருந்து ஏ.கே.கோபாலன், சுப்ரமணிய சர்மா போன்ற தலைவர்கள் கட்சியை வளர்க்க தமிழகத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் சங்கரய்யாவுடன் தொடர்பு கொண்டனர். சங்கரய்யா அவர்களை அழைத்துக் கொண்டு போய்த் தங்க வைத்துக் கூட்டங்கள் ஏற்பாடு செய்வார். தடை செய்யப்பட்ட Proletarian Path என்ற கம்யூனிஸ்ட் கட்சி ஏட்டை சங்கரய்யா படித்து மொழிபெயர்த்து மற்றவர்களுக்குக் கூறுவார்.

1938இல் மதுரையில் மாணவர் சங்கம் உருவானது. அதில் மோகன் குமாரமங்கலமும் சங்கரய்யாவும் உரையாற்றினர். சங்கரய்யா அதன் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கம் பல பேரணிகளை நடத்தத் தொடங்கியது. உத்தமபாளையத்திலும் திண்டுக்கல்லிலும் அடுத்தடுத்து சங்கரய்யா மாணவர் சங்கத்தை உருவாக்கினார். அமெரிக்கன் கல்லூரி விழித்துக் கொண்டது. அவரை வெளியேற்ற முடிவெடுத்து சங்கரய்யாவை அழைத்து மாற்றுச் சான்றிதழ் பெறுமாறு நிர்ப்பந்தித்தது. அதைத் திரும்பப் பெறா விட்டால் வேலைநிறுத்தம் நடைபெறும் என சங்கரய்யா எச்சரிக்க, பின்வாங்கியது நிர்வாகம்.

இரண்டாவது உலகப்போரை எதிர்த்து சங்கரய்யா தலைமையில் இரண்டு நாட்கள் அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். கல்லூரி முதல்வர் சங்கரய்யாவைக் கடுமையாக எச்சரித்தார். செப்டெம்பர் 4 அன்று மதுரைக்கு சுபாஷ் சந்திர போஸ் வந்தபோது சங்கரய்யா உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் வரவேற்பிலும், கூட்டத்திலும் பங்கேற்றனர்.

1940இல் மதுரையில் முதல் கட்சிக் கிளை உருவானபோது அதில் சங்கரய்யா உள்ளிட்ட 9 பேர் கட்சி உறுப்பினராயினர். கட்சி ரகசியமாகச் செயல்படத் தொடங்கியது.

மதுரையில் கட்சி உறுப்பினர்களுக்குப் பயிற்சியளிக்க திருப்பரங்குன்றம் பகுதியில் வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பேசிய ஏ.கே.கோபாலனின் உரையைத் தமிழாக்கம் செய்யும் பணி சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால் ஏ.கே.ஜி.யைக் கைது செய்ய போலீஸ் வரும் தகவல் கிடைத்ததும் அவரைப் பாதுகாப்பாக வெளியே அனுப்பி விட்டனர். முகாம் தொடர்ந்தது.

1941ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆங்கில ஆதிக்கத்துக்கெதிராகக் கொதித்தெழுந்தனர். அரசு தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி எஸ்.ராமகிருஷ்ணன், மீனாட்சி உள்ளிட்ட ஆறு மாணவ, மாணவியரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. அதற்கெதிராக மதுரையில் நடந்த பெரும் கூட்டத்தில் சங்கரய்யாவும் உரை நிகழ்த்தினார்.

சங்கரய்யா பின்வரும் துண்டுப் பிரசுரத்தை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்:

”மண்டைகள் உடைகின்றன. எலும்புகள் நொறுங்குகின்றன. அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் ரத்தம் ஆறாக ஓடுகிறது.”

பிரசுரம் வெளியானது. ஆங்கிலேய அரசு அமெரிக்கன் கல்லூரி மாணவர் விடுதியைச் சோதனையிட, அங்கு முக்கியத் தலைவர்களில் ஒருவரான நாராயணசாமியின் அறையில் பிரசுரப் பிரதி கைப்பற்றப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். விரைவில் தாமும் கைதாவோம் என்பது சங்கரய்யாவுக்குத் தெரிந்தது. அவர் தந்தை அவரை வழக்கறிஞராக ஆக்க விரும்பினார் என்பது தெரிந்தும், சங்கரய்யா தேச விடுதலை என்ற லட்சியம்தான் முக்கியம் என்று கைதை எதிர்நோக்கித் தயாராகிவிட்டார்.

பிப்ரவரி 28ஆம் நாள் காலையில் காவல் ஆய்வாளர் தீச்சட்டி கோவிந்தன் சங்கரய்யாவைக் கைது செய்தார். மதுரை மத்திய சிறையில் ரிமாண்ட் கைதியாக வைக்கப்பட்டார். மறுநாள் அவரை விடுவிக்கக் கோரி மதுரையில் மாணவர்கள் பெரும் ஆர்ப்பாட்டம் பேரணி நடத்தினர். மதுரை மாவட்டம் முழுதும் மாணவர்கள் வேலைநிறுத்த்தம் செய்தனர். 15 நாட்களுக்குப் பின் அவர் வேலூருக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆயிரக்கணக்கான மாணவர்கள் மதுரை ரயில்நிலையத்தில் கூடி முழக்கங்கள் எழுப்பி அவரை வழியனுப்பினர். பி.ஏ. தேர்வு எழுத 15 நாள் மட்டுமே இருந்த நிலையில் அவர் கைது செய்யப்படதால், அவரது படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.

வேலூரில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கைதிகள் ஏ, பி வகுப்புகளில் அடைக்கப்பட்டிருந்தனர். ஏ வகுப்பில் கட்டில், நல்ல உணவு வழங்கப்பட்டது என்றால் பி வகுப்பில் மறுக்கப்பட்டது. அனைவரும் உண்ணாவிரதத்தில் இறங்கினர். பத்தாம் நாள் கழித்து அங்கு வந்த அதிகாரி, சங்கரய்யா சற்றும் சோர்வடையாமல் தாய் நாவலைப் படித்திருந்ததைக் கண்டு வியந்து போனார். பிறகு அவர்களது கோரிக்கை ஏற்கப்பட்டு உணவை அவர்களே சமைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.

உள்ளே கம்யூனிஸ்டுகள் பல கிளைகளை அமைத்து வேலைகளைப் பிரித்துக் கொண்டனர். செய்திகளைக் கூட அவர்கள் வாரவாரம் பகிர்ந்து கொண்டனர். காலையில் உடற்பயிற்சி. பிறகு தலைவர்கள் தொடர்ந்து மார்க்சிய வகுப்புகள் எடுத்தனர். இந்தச் சிறைவாசம் சங்கரய்யாவுக்கு அரசியல் பள்ளியாகவே விளங்கியது. அவர் அனைத்து வகுப்புகளிலும் கலந்து கொண்டு குறிப்புகள் எடுத்துக் கொண்டார்.

இதில் எச்சரிக்கையடைந்த ஆங்கிலேய அரசு மாணவர்களைப் பிரித்து ராஜமுந்திரி சிறையில் அடைக்க முடிவெடுத்தது. அங்கும் பல கம்யூனிஸ்டுகளுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.

பல மாதங்களுக்குப் பிறகு சங்கரய்யாவைத் தவிர மற்றவர்களை விடுவித்தது அரசு. அவர் தனியாகச் சிறையில் இருப்பதை அறிந்த காமராஜர் தலையிட்டு கடிதம் எழுதி அவரை வேலூர் சிறைக்கு மீண்டும் மாற்றச் செய்தார். அங்கு இருந்த பி.சீனிவாசராவ், எம்.ஆர்.வெங்கட்ராமன் போன்ற பல கம்யூனிஸ்டுகளுடன் நேரடியாகப் பழகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

1942இல் நடந்த இரண்டாம் உலகப்போரில் சோவியத் தாக்கப்பட்டதும் கம்யூனிஸ்டுகள் இந்தப் போரில் பாசிச சக்தியை முறியடிக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து அதை ஆதரிக்கும் முடிவை எடுத்தனர். இதைத் தொடர்ந்து ஆங்கில அரசு கம்யூனிஸ்டுகளை விடுவிக்கத் தொடங்கியது. அப்போது சங்கரய்யாவும் விடுதலை செய்யப்பட்டார். மதுரைக்கு வந்த அவருக்குப் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வீடுவரை விட்டு விட்டுப் பேரணி கலைந்தது. ஜூலை மாதம் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடையை அரசு விலக்கிக் கொண்டது.

தொடரும்

______
ஆதாரம்:
சங்கரய்யா வாழ்க்கையும் இயக்கமும், என்.ராமகிருஷ்ணன், பாரதி புத்தகாலயம்

பகிர:
கி. ரமேஷ்

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *