Skip to content
Home » தோழர்கள் #10 – கைது, விடுதலை, தலைமறைவு

தோழர்கள் #10 – கைது, விடுதலை, தலைமறைவு

சங்கரய்யா

1942ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தென் பிராந்திய மாணவர் சம்மேளனத்தின் சிறப்பு மாநாடு சேலத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாணவர் சங்கம் மாநில வாரியாகப் பிரிக்கப்பட்டது. அதில் சங்கரய்யா தமிழ்நாட்டின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பி. ராமமூர்த்தியை சங்கரய்யா இங்குதான் முதன்முறையாகச் சந்தித்தார்.

அவர் முதன்முதலாகக் கலந்து கொண்ட கூட்டம் கையூர் தியாகிகளின் தூக்குத் தண்டனையை மாற்றக் கோரிய கூட்டம். அதில் அவர் ஆவேசமான உரை நிகழ்த்தினார். அடுத்தடுத்து தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

1942 ஆகஸ்ட் மாதம் 8 அன்று பம்பாயில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காந்தியடிகள் ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற இயக்கத்தைத் தொடங்கி, ‘செய் அல்லது செத்து மடி’ என்ற முழக்கத்தைக் கொடுத்தார். உடனடியாக அனைத்துத் தலைவர்களும் கைது செய்யப்பட, நாடே கொந்தளித்தது.

மதுரையில் சங்கரய்யா கல்லூரி முதல்வரின் எச்சரிக்கையையும் மீறி ஊர்வலம் சென்றார். திருநெல்வேலிக்குச் சென்ற சங்கரய்யா அங்கு போராடிக் கொண்டிருந்த மாணவர்களை ஒருமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். சங்கரய்யா கேட்டுக் கொண்டும் செயிண்ட் ஜான், செயிண்ட் சேவியர் கல்லூரி முதல்வர் மாணவர்களை மிரட்ட, அவர்கள் கண்டனப் பேரணியாகக் கல்லூரிக் கதவை உடைத்துக் கொண்டு சென்றனர். அங்கு போலீஸ் கடும் தாக்குதல் தொடுக்க, சங்கரய்யா உட்பட அனைவரும் படுகாயம் அடைந்தனர். அவருக்கு வயிற்றிலும் விலா எலும்பிலும் பலத்த அடி. தோழர்கள் சித்த மருத்துவம் செய்து அனுப்பி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து சங்கரய்யா அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அங்கிருந்த காங்கிரஸ்காரர்களை கம்யூனிஸ்டுகள் மாற்றி விடுவார்கள் என்று அஞ்சி அரசு அவர்களை கண்ணனூர் சிறைக்கு அனுப்பியது. செல்லும் வழியிலெல்லாம் தோழர்கள் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

கண்ணூர் சிறையிலோ அவருக்கு மனதை உருக்கும் அனுபவம் காத்திருந்தது. அங்கு கையூர் தியாகிகள் நால்வரும் அரசின் இரக்கமற்ற தூக்குத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர் அங்கிருந்தார். அங்கு அவர்களை சந்தித்த அகில இந்தியச் செயலாளர் ஜோஷி துக்கம் தாங்காமல் அழுதுவிட்டார். அவர்களோ வீரத்துடன் அவரை வழியனுப்பினர். அவர்களது தியாக வரலாறுதான் கன்னட மொழியில் நிரஞ்சனா எழுதிய நாவல். அதை பி.ஆர். பரமேஸ்வரன் தமிழாக்கம் செய்தார்.

பின்னர் அவர்கள் தஞ்சாவூர் விசேஷ சிறைக்கு மாற்றப்பட்டனர். இங்கு கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.ஆர்.வெங்கட்ராமனைச் சந்தித்த ஆர்.வெங்கட்ராமன் தானும் முழுநேரக் கம்யூனிஸ்டாக மாறப் போவதாகக் கூறினார். ஆனால் அது நடக்கவில்லை. அவர்தான் பின்னர் குடியரசுத் தலைவராகவும் உயர்ந்தார். நீதியுடன் இருந்தார்.

1944இல் மகாத்மா காந்தி விடுதலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சங்கரய்யா உட்பட அனைவரும் விடுதலையாயினர். சில வாரங்களில் கூட்டப்பட்ட மாவட்டக்குழு சங்கரய்யாவை மாவட்டக் குழுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தது. 1943 முதல் 1947 வரை மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றில் மிக முக்கியமான காலம். அடிப்படை துணி உட்பட ரேஷன் பொருட்களுக்குக் கட்சி பெரும் போராட்டம் நடத்திய காலம். தொழிற்சங்கங்களைக் கட்டிப் பெரும் போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்ட காலம். கலை, இலக்கியம் கொண்டு மக்களைக் கொந்தளிக்கச் செய்த காலம். அதில் சங்கரய்யாவின் பங்கு மிகத் தீவீரமான ஒன்று.

அப்போதுதான் சங்கரய்யா ஒரு புதிய உத்தியை உட்புகுத்தினார். தெரு முனைகளில் முதலில் கலை நிகழ்வு நடைபெற, கூட்டம் கூடியதும் சங்கரய்யா உரை நிகழ்த்துவார். இது பெரும் வரவேற்பைப் பெற்றது. அதிலெல்லாம் குருசாமி, ஐ.வி.சுப்பையா, எஸ்.குருசாமி, கே.பி.ஜானகியம்மாள் போன்றோரின் பங்கு மிகப்பெரிது. அங்கு ஒருமுறை வந்த மணவாளனிடம் சங்கரய்யா சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்துப் பாட்டெழுதுமாறு கேட்க, அவர் எழுதிய பாடல்தான் ‘விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே’. அந்த மணவாளன் பின்னர் கொல்லப்பட்டார். சங்கரய்யா அந்தப் பாடலைக் கேட்கும்போது ஏன் உணர்ச்சி வசப்பட்டார் என்பது இப்போது புரியும்.

1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கம்யூனிஸ்டுகள் களம் கண்டனர். எனினும் 1944இல் காங்கிரஸ்காரர்கள் விடுதலை அடைந்ததும் கம்யூனிஸ்டுகளை அவர்கள் தாக்கத் தொடங்கினர். கம்யூனிஸ்டுகள் பொறுமை காத்தும் நாளுக்கு நாள் தாக்குதல் அதிகரித்தது. இதைக் கண்ட பொதுச்செயலாளர் பி.சி.ஜோஷி, திருப்பி அடிக்குமாறு அறைகூவல் விடுத்தார். ‘ஓங்கிப் பிடித்தால் செங்கொடி, திருப்பி அடித்தால் தடியடி’ என்று கம்யூனிஸ்டுகள் திருப்பித் தாக்க, இந்தத் தாக்குதல் நின்றது.

1945இல் மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் நடந்த தமிழ்நாடு தொழிற்சங்க காங்கிரசின் பணியில் சங்கரய்யா ஈடுபட்டிருந்தபோது அவரது தந்தை திடீரென மறைந்தார். ஊரே திரண்டு அஞ்சலி செலுத்தியது.

1946இல் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச்செயலாளர் பி.சி.ஜோஷி மார்ச் மாதத்தில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்தார். குறிப்பாக மதுரையில் நடந்த கூட்டத்தில் சுமார் 1 லட்சம் பேர் கூடினர். வைகை ஆற்றில்தான் கூட்டம் நடத்த இடம் இருந்தது. அவர் பேசியதைத் தமிழாக்கம் செய்தவர் சங்கரய்யா.

அடுத்து மதுரையில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வன்முறையை மீறி கம்யூனிஸ்ட் வேட்பாளர் 6 ஆயிரம் வாக்குகள் பெற்றார். இது வளர்ச்சியைக் காட்டியது.

அதே 1946 மார்ச் மாதத்தில் பம்பாயில் நடந்த கடற்படைப் புரட்சி இந்தியாவையே உலுக்கியது. அது கல்கத்தா, சென்னை என எங்கும் பரவியது. காங்கிரசும், முஸ்லிம் லீகும் ஆதரவளிக்க மறுக்க, கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ஆதரித்தது. இந்திய முழுதும் மக்கள் போராட்டம் நடந்தது. பம்பாயில் சாலைகளில் அரண் அமைத்து பொதுமக்கள் ஆயுதபாணி ராணுவத்தை எதிர்த்துப் போராடினர். இந்தப் போராட்டம் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு மறைக்கப்பட்ட வரலாறாகவே இருக்கிறது.

அந்தப் போராட்டத்தை ஆதரித்து சங்கரய்யா தலைமையில் மதுரையில் பெரும் பேரணி நடைபெற்றது. ஓர் ஆங்கில அதிகாரி அதைத் தடுக்க துப்பாக்கியைக் காட்டி மிரட்ட, சங்கரய்யா முடிந்தால் சுடு என்று சவால் விடுத்தார். தன் பாச்சா பலிக்காது என்பதைக் கண்ட அதிகாரி ஓடி விட்டார்.

மதுரை ஹார்வி மில் தொழிலாளர்களின் சங்கம் அங்கீகாரம் பெற்றதையும், உணவு தானியப் பதுக்கலில் தலையிட்டு பதுக்கலைக் கைப்பற்றி கம்யூனிஸ்டுகள் மக்களுக்கு விநியோகித்ததையும் கண்டு கொதித்த சென்னை மாகாண அரசு அவர்களைப் பழி வாங்க மதுரை சதி வழக்கு என்ற ஒன்றை இட்டுக் கட்டிப் போட்டது.

பி.ராமூர்த்தியை முதல் குற்றவாளியாகவும், சங்கரய்யாவை இரண்டாவது குற்றவாளியாகவும் சுட்டி சதி வழக்கு புனையப்பட்டது. ஒரு நாள் கட்சி அலுவலகத்தில் வைத்து பிஆரும் வேறு சிலரும் மற்ற தொழிற்சங்கத் தலைவர்களைக் கொல்ல திட்டம் தீட்டினார்கள் என்பதுதான் இந்தப் பொய் வழக்குக்குக் கற்பிக்கப்பட்ட காரணம். அந்தச் சமயத்தில் அவர்கள் ஒரு காவல்துறை அதிகாரியை சந்தித்துப் பேசியதை அதே அதிகாரி கூண்டில் ஏறி சாட்சி சொல்லவும், சாட்சியாகப் போடப்பட்ட ஜட்கா வண்டிக்காரர் பொய் சாட்சியை ஏற்று கூண்டிலேயே அழவும் அரசு அம்பலப்பட்டது.

அன்று நள்ளிரவில் இந்தியச் சுதந்திரம். நேராக நீதிபதி ஹசீம் சிறைக்கே வந்து அவர்களை விடுவித்தார். அங்கிருந்து பேரணியாகக் கிளம்பியவர்கள் நள்ளிரவில் சுதந்திரத்தைக் கொண்டாடினர். வழியெல்லாம் நடந்த கூட்டங்களில் மக்கள் கோரிக்கையை ஏற்று உரையாற்றினர்.

அடுத்த சில நாட்களில் சங்கரய்யா செப்டம்பர் 18 அன்று புரட்சித் திருமணம் செய்தார். அவர் திருமணம் செய்த நவமணி புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர். அவரது சகோதரரும் கம்யூனிஸ்ட். உறுதியாக நின்று சாதி, மத வேற்றுமையை முறியடித்துத் திருமணம் செய்தார் சங்கரய்யா.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது மாநாடு கல்கத்தாவில் நடந்தது. அங்கு ஒரு அதிதீவீரப் பாதையைக் கட்சி தேர்ந்தெடுத்தது. சுதந்திரம் போலியானதென்றும், நேரு அரசைத் தூக்கியெறிய வேண்டுமென்றும் கட்சி தீர்மானம் போட்டது. பி.டி.ரணதிவே பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாநாடு நடக்கும்போதே தமிழகத் தலைவர்களைக் கைது செய்ய சிறப்புக் காவல்படை தமிழகத்திலிருந்து கல்கத்தா வந்தது. சங்கரய்யா உள்ளிட்ட தமிழகத் தலைவர்களைத் தலைமறைவாக அழைத்துச் சென்று வெவ்வேறு ரயில்களில் தமிழகம் அனுப்பி வைத்தது கட்சி.

கட்சி எடுத்த நிலைபாட்டால் அரசு ஒடுக்குமுறையை ஏவியது. கட்சி தடை செய்யப்பட்டது. நாடு முழுதும் கட்சி, தொழிற்சங்க அலுவலகங்கள் சோதனையிடப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். மதுரையில் கே.டி.கே.தங்கமணி, சாமிநாதன் போன்றோர் கைது செய்யப்பட்டனர். சங்கரய்யா தலைமறைவானார்.

(தொடரும்)

பகிர:
கி. ரமேஷ்

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.View Author posts

1 thought on “தோழர்கள் #10 – கைது, விடுதலை, தலைமறைவு”

  1. மிகவும் அருமை தோழரே!
    வாழ்த்துக்கள்!
    பணி சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *