கட்சி தடை செய்யப்பட்ட நிலையில் சங்கரய்யா தலைமறைவாக இருந்து இரண்டு ஆண்டுகாலம் செயல்பட்டார். மாரி, மணவாளன், இரணியன், ஜாம்பவான் ஓடை சிவராமன் போன்ற பல தோழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சேலம் சிறையில் தலைவர்களைக் கொல்லும் பொருட்டு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் அவர்களைக் காப்பாற்றுவதற்காகக் குறுக்கே புகுந்து தியாகிகளானார்கள். உள்ளேயும் வெளியேயும் கம்யூனிஸ்டுகள் கடும் அடக்குமுறையை எதிர்கொண்டனர்.
தலைமறைவாக இருந்தபோதும் சங்கரய்யா தன் பணிகளைச் செவ்வனே செய்துவந்தார். கட்சியின் தொண்டர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் கவனித்துக்கொண்டார். ஸ்தாபன வேலைகளில் ஈடுபட்டார். நோயுற்றோரை நெருக்கடிக்கு மத்தியில் அழைத்துச்சென்று சிகிச்சை பெற வைத்தார். சில சமயம் வெளுப்பதற்காக வைத்திருந்த துணி மூட்டைகளுக்கு நடுவில் கூட மறைந்திருக்கும் நிலை ஏற்பட்டதால், சொறி, சிரங்கால் அவதிப்படவேண்டியிருந்தது. அதையும் மீறி அவர் செயல்பட்டார். மூன்று ஆண்டுகளுக்குப்பின் 1951இல் கைதானார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செல்லும் பாதை தவறானதென்று சர்வதேச கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஏட்டில் கட்டுரை ஒன்று வெளியானது. இது விவாதத்தைக் கிளப்பியது. இதைத் தொடர்ந்து மத்தியக்குழு கூட்டப்பட்டு விவாதங்கள் நடைபெற்றன. கட்சி தனது நிலைபாட்டை மாற்றிக் கொண்டது. ஆட்சியை ஆயுதம் மூலம் மாற்றுவது என்ற நிலைபாடு கைவிடப்பட்டது.
பின்னர் ஏ.கே. கோபாலன் தொடுத்த வழக்கில் ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டனர். சங்கரய்யாவும் 6 மாதத்துக்குப் பின் விடுதலையானார். கட்சியைப் புனரமைக்கும் பணியை ஏற்ற பி.ராமமூர்த்தி மதுரைக்கு கே.டி.கே.தங்கமணியை அனுப்பி வைத்தார். பின்னர் தேர்தல் வரவும், பி.ஆர். மதுரையில் களம் கண்டார். பி.ஆர். சிறையில் இருந்த நிலையில் சங்கரய்யா மதுரை, திண்டுக்கல், வேடசந்தூர் தொகுதிகளில் சூறாவளியாகச் சுழன்றார். பி.ஆர். மகத்தான வெற்றி பெற்றார்.
அடுத்து தஞ்சை மாவட்டம் வள்ளுவக்குடியில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் சங்கரய்யா மாநிலக்குழுவுக்கும் செயற்குழுவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1953ஆம் ஆண்டில் மாநாட்டை மதுரையில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. இங்கும் சங்கரய்யா மாநிலக்குழுவுக்கும் செயற்குழுவுக்கும் தேர்வானார்.
1956இல் கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்தது. அதன் வெற்றிக் கொண்டாட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு நாள் நடத்தியது. அதில் உரையாற்றியவர் சங்கரய்யா.
மூன்றாவது அகில இந்திய மாநாடு 1957இல் மதுரையில் நடைபெற்றது. பெரும் உற்சாகத்துடன் நடைபெற்ற இந்த மாநாட்டை சங்கரய்யாவை செயலாளராகக் கொண்ட மதுரை மாவட்டக்குழு சிறப்பாக நடத்தி முடித்தது.
பின்னர் அவர் மாநிலப் பொறுப்புக்காக மாவட்டக்குழுவிலிருந்து விடுவிக்கப்பட்டார். தமிழகத்தில் ‘ஜனசக்தி’ மாத இதழ் தொடங்கப்பட்டபோது அதன் பொறுப்பாசிரியராகச் செயல்பட்டார்.
முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் ஆட்சி கேரளத்தில் 1957இல் மலர்ந்தது. அதன் முதல்வரானார் தோழர் இ.எம்.எஸ். நம்பூதரிபாட். அவர் தமிழகம் வந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவருடன் சென்று அவரது உரைகளைத் தமிழாக்கம் செய்தார் சங்கரய்யா.
1962இல் இந்தியா சீனா போர் வெடித்தது. அதன் காரணமாக இந்தியா முழுவதும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான மனப்போக்கு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான தலைவர்கள் கைதாயினர். சங்கரய்யா வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆறு மாதம் சிறையில் அவர்கள் இருந்தனர்.
இதற்கிடையில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்த முரண்பாடு பெரிதாக வெடித்தது. முதலாளித்துவ காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்து சோசலிசம் கொண்டு வர வேண்டும் என்று ஒரு தரப்பும், முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகப் போராடி சோசலிசம் கொண்டு வர வேண்டும் என்று இன்னொரு தரப்பும் முரண்பட்டன. தமிழகத்திலும் இந்த மோதல் வெடித்தது.
இந்த மோதல் முற்றி 32 தலைவர்கள் வெளியேறி சிபிஐ(எம்) ஐத் தோற்றுவித்தனர். சங்கரய்யாவும் அதில் இணைந்தார். உடனே மத்திய அரசு புதிய கட்சியின் மீது ஒடுக்குமுறையை ஏவியது. கேரளத்தில் அடுத்த ஆண்டு நடக்கவிருந்த தேர்தலில் கட்சி வெற்றி பெற்று விடக்கூடாது என்ற நோக்கமும் அதில் இருந்தது. சங்கரய்யாவுக்கு மீண்டும் 16 மாத காலம் சிறை.
அனைவரும் விடுதலையான பின் 1963இல் தொடங்கப்பட்ட தீக்கதிர் வார ஏடு கட்சியின் அதிகாரபூர்வ ஏடாக அறிவிக்கப்பட்டு அதன் ஆசிரியராக சங்கரய்யா நியமிக்கப்பட்டார்.
1967இல் நடந்த தேர்தலில் சங்கரய்யா மதுரை மேற்கிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சிக்குழுவின் துணைத் தலைவராக சங்கரய்யா இருந்தார். அவரது பேச்சு அனைவரையும் ஈர்த்தது. அவர் பேசினால் சிங்கம் கர்ஜிப்பது போல் இருக்கும். அவர் முழுமையாகத் தயார்படுத்திக் கொண்டு பேசுவதால் யாராலும் அவர் எடுத்து வைக்கும் வாதங்களை மறுக்க முடியாது. 11 ஆண்டுகாலம் உறுப்பினராக இருந்தபோது அவரது உரைகள் புயலைக் கிளப்பின. மதுரை மக்களுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் சட்டசபையில் குரல் கொடுத்தார்.
சட்டசபையில் அவரது கன்னிப்பேச்சே தமிழுக்கு உயிர் கொடுத்தோருக்கான அஞ்சலியாக இருந்தது. அந்த வகையிலும் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுப் பலர் கொல்லப்பட்டதற்கு நீதி விசாரணை நடத்தக் குரல் கொடுத்தார் சங்கரய்யா.
நகரங்களில் மட்டும் இருந்த நியாய விலைக்கடைகளைக் கிராமங்களை நோக்கித் திருப்பிய பெருமை சங்கரய்யாவையே சாரும். 1977ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது சங்கரய்யாவின் இந்தக் கோரிக்கையை ஏற்று நிறைவேற்றினார்.
ஆளுநர் உரை ஏற்கனவே அச்சாகி இருந்தது. சங்கரய்யாவோ அதன் கீழேயே இந்தக் கோரிக்கையை தனியாக அச்சடிக்கச் செய்து ஒட்ட வைத்து அந்த ஆண்டே அதை நிறைவேற்றவும் வைத்தார்.
1995இல் அவர் கடலூர் மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 2002 வரை செயல்பட்டார். தீண்டாமை உட்பட ஏராளமான பிரச்சனைகளில் அவர் நிலையெடுத்துப் பேச வேண்டியிருந்தது. 1997இல் மதுரையில் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டையும் நடத்தியது கட்சி.
அவரது பங்கு விவசாய இயக்கத்திலும் மிகவும் பேசப்பட வேண்டியதாகும். விவசாய சங்கத் தலைவர் பி.சீனிவாசராவுடன் அவரும் பல பகுதிகளுக்குச் சென்று இயக்கத்தை வளர்க்கப் பாடுபட்டார். அதன் மாநிலக்குழு உறுப்பினராகப் பல ஆண்டுகள் செயல்பட்டார். பின்னர் மாநிலத் தலைவராகவும் ஆனார். மத்தியக்குழுவுக்கும் தேர்வு செய்யப்பட்டார்.
இலக்கியப்பணியில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது. சங்க இலக்கியங்களைக் கற்றவர் சங்கரய்யா. சங்க இலக்கியத்தையும், சமகால இலக்கியத்தையும் ஆழ்ந்து கற்பதை அவர் வலியுறுத்துவார்.
தமிழகத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நெருக்கடி நிலையின் போது உருவாக்கப்பட்டது. அதன் உருவாக்கத்தில் ஒரு முக்கியமான பங்கை வகித்தவர் சங்கரய்யா. அது இன்று வேர் விட்டு ஆலமரமாக விரிந்து படர்ந்துள்ளது.
நாடகமோ, கவிதையோ, எந்த வடிவமாக இருந்தாலும், அதில் மக்களின் பிரச்சனைகள் பேசப்பட வேண்டும் என்பது அவரது கருத்து. ஆக, இலக்கியவாதிகளின் பொறுப்பு படைப்பதில் மட்டுமல்ல, அவர்களது போராட்டங்களில் நேரடியாக ஈடுபடவும் வேண்டும் என்பார்.
இன்று 101 வயதைக் கடந்த நிலையிலும், நேரடியாகக் கலந்து கொள்ள முடியா விட்டாலும், இளைஞர்களும், கட்சியினரும் அவரது வாழ்த்தைப் பெறுவதைத் தமது கடமையாகக் கொண்டுள்ளனர். 1932இல் சிபிஐ (எம்) கட்சியை உருவாக்கிய 32 தலைவர்களில் தோழர் சங்கரய்யாவும், அச்சுதானந்தனும் மட்டுமே தற்போது இருக்கின்றனர். கட்சியின் கொள்கை விழுமியங்களை இன்னும் உயர்த்திப் பிடித்தவாறு இருக்கிறார் சங்கரய்யா.
சமீபத்திய உதாரணம் ஒன்று. கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டுக்கு முன் அதன் அறிக்கைகள் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை படிக்கப்பட்டு, அவர்களது திருத்தங்கள் கோரப்படும். அவை விவாதிக்கப்பட்டு அறிக்கை செழுமைப்படுத்தப்படும். அந்த வகையில் 2022இல் நடந்த அகில இந்திய மாநாட்டின் அறிக்கையைத் தமது மகனைக் கொண்டு படிக்கச் செய்து தமது கருத்துகளை வழங்கினார் சங்கரய்யா. இன்றைய அரசியல் நிலவரம்வரை அவருக்கு அத்துப்படியாக இருக்கிறது.
லட்சியப்பற்று, எளிய வாழ்க்கை, தோழமைக்குப் பணிவு, பரிவு என ஒட்டுமொத்தப் பண்புகளுக்கு உதாரணம் சங்கரய்யா. இளைஞர்களுக்கு அவர் என்றென்றும் வழிகாட்டி. தற்போது மத்திய சென்னை செயலாளராக இருக்கும் தோழர் செல்வாவுடன் அவர் தமிழகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டதையும், அதில் அவர் பெற்ற அனுபவங்களையும் செல்வா எழுதியிருக்கிறார். சங்கரய்யாவின் பண்பு அதில் வெளிப்படும்.
கடந்த வருடம் முதல் தகைசால் தமிழர் விருதை முதல்வர் நேரடியாக அவரது வீட்டுக்கே சென்று வழங்கினார். விருதை ஏற்றாலும், பணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு அளித்து விட்டார் சங்கரய்யா. இந்த ஆண்டு தோழர் நல்லகண்ணுவும் அதே வழியில் 501 ரூபாய் சேர்த்து திரும்பவும் வழங்கிவிட்டார். கம்யூனிஸ்டுகளின் பண்பை இருவரும் வெளிப்படுத்தியுள்ளனர்.
சிம்மக்குரலோனின் குரல் அரசியல் களத்தில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. செவ்வணக்கம் தோழர் சங்கரய்யா!
(தொடரும்)
ஆதாரம்
1. என்.சங்கரய்யா – என்.ராமகிருஷ்ணன்
2. சங்கராயணம் – வே.பெருமாள்