Skip to content
Home » தோழர்கள் #14 – சுதந்திர தாகம்

தோழர்கள் #14 – சுதந்திர தாகம்

பி.ராமமூர்த்தி

6 டிசம்பர் 1952. தமிழக சட்டசபைக்கு எப்போதும் குறித்த நேரத்துக்கு வரும் எதிர்க்கட்சித் தலைவரைக் காணவில்லை. சற்று தாமதமாக வந்த எதிர்க்கட்சித் தலைவரை, அரசாங்கக் கட்சித் தலைவரான சி.சுப்ரமணியம் எழுந்து, ‘புதிய அந்தஸ்துக்காக எதிர்க்கட்சித் தலைவரை வாழ்த்துகிறேன்’ என்று கூறி வரவேற்க, அனைவரும் திகைத்தனர். பின்னர் சி.எஸ். விளக்கினார்: இன்று எதிர்க்கட்சித் தலைவர் தமது திருமணத்தை முடித்துக் கொண்டு சட்டசபைக்கு வந்துள்ளார்! சட்டமன்றத்தில் பெரும் ஆரவாரம் எழுந்தது. அனைவரும் கரகோஷம் செய்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

அப்படி யாருக்குமே தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொண்டு சட்டமன்றத்துக்குக் கடமையாற்ற வந்து சேர்ந்தவர் வேறு யாருமல்ல, அனைவரும் பி.ஆர். என்று அன்புடன் அழைக்கும் பி.ராமமூர்த்தி. இந்த எளிமையின் அருமை என்னவென்று இன்று அரசியல் கட்சித் தலைவர்கள் நடத்தும் ஆடம்பரத் திருமணங்களைப் பார்ப்பவர்களுக்குத் தெரியும்.

இந்திய விடுதலைப் போராட்டத்திலும் கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றிலும் நீங்கா இடம் பெற்ற தலைவர் பி.ராமமூர்த்தி. அவரது தந்தை பஞ்சாபகேச சாஸ்திரி கும்பகோணத்தின் அருகே வேப்பத்தூரைச் சேர்ந்தவர். 1908ஆம் ஆண்டு செப்டெம்பர் 20 அன்று சென்னையில் தமது பாட்டனார் வீட்டில் பிறந்தார் ராமமூர்த்தி. அது பாட்டனார் அவருக்குச் சூட்டிய பெயர்.

பி.ஆருக்கு மூன்று வயதாக இருக்கும்போதே திடீரெனத் தந்தையார் மறைந்துவிட்டார். கிராமமே அந்த இழப்பை உணர்ந்தது. சென்னை இந்து உயர்நிலைப்பள்ளியில் பணி செய்து வந்த பஞ்சாபகேச சாஸ்திரியின் தந்தை குடும்பத்தைக் காப்பாற்ற வேப்பத்தூர் வந்துவிட்டார்.

ஐந்து வயதில் பள்ளியில் சேர்ந்த பி.ஆர். சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். தமது பாட்டனாரிடம் வடமொழியும் பிழையின்றிக் கற்றார். படிப்பில் மட்டுமல்ல, விளையாட்டிலும், நீச்சலிலும் சிறந்து விளங்கினார் பி.ஆர்.

1918இல் ராமமூர்த்தியின் தமையனார் மகாலிங்கத்துகுத் திருமணம் நிகழ்ந்து சென்னையில் வேலை கிடைத்தபோது அவர்கள் சென்னையில் குடியேறினர். பி.ஆர். இந்து உயர்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். இங்கும் படிப்பில் சிறந்து விளங்கினார் பி.ஆர்.

திருவல்லிக்கேணி கடற்கரைக்கு அருகில் இருந்ததால் பல அரசியல் நிகழ்வுகளைப் பார்க்கும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. இப்போது திலகர் கட்டம் என்று அழைக்கப்படும் இடத்தில் திலகர் பேசியபோது அருகிலிருந்து கவனித்தார் பி.ஆர். அவருக்குப் பெரிதாக எதுவும் புரியாவிட்டாலும், நம் நாடு அடிமையாக உள்ளது, விடுதலைக்குப் போராட வேண்டும் என்ற அம்சங்கள் அவரது மனதில் ஆழப் பதிந்துவிட்டன.

அச்சமயத்தில் ஒரு புது அனுபவம் அவருக்கு ஏற்பட்டது. அன்னி பெசண்ட் அம்மையாரின் உதவியாளரான ஜார்ஜ் அருண்டேல் என்ற ஆங்கிலேயரைப் பிரபல நடனக் கலைஞர் ருக்மணி மணக்க விரும்பினார். ஓர் ஆங்கிலேயன் இந்தியப் பெண்ணை மணப்பதை வ.உ.சி., பாரதி உட்படப் பலரும் எதிர்த்தனர். ஆனால் அந்தத் திருமணம் எதிர்ப்புகள் மீறி நடைபெற்றது. அதை நேராகச் சென்று பார்த்த பி.ஆர். மனதில் குறுகிய எண்ணங்களுக்கு எதிரான சிந்தனை உருவானது.

கோடை விடுமுறையில் தன் தாத்தாவின் கிராமமான நல்லெழுந்தூருக்குச் சென்று வடமொழி இலக்கியங்களைத் தீவீரமாகப் படித்தார். ஆக இளம் வயதிலேயே ஆங்கிலம், தமிழ், வடமொழி ஆகிய மூன்று மொழிகளிலும் புலமை பெற்றார் பி.ஆர்.

அச்சமயத்தில்தான் ஆள்தூக்கிச் சட்டமான ரவுலட் சட்டத்தை ஆங்கிலேய அரசாங்கம் பிறப்பித்தது. அதற்கெதிராக ஏப்ரல் 6 அன்று பந்த் அழைப்பு விடுத்தார் காந்தி. வீட்டில் அன்று உண்ணாவிரதம் இருக்குமாறும் கூறினார். பி.ஆர் அதை ஏற்று வீட்டில் உண்ணாவிரதம் இருந்தார். இனி கதர் மட்டுமே உடுத்துவது என்றும் முடிவெடுத்தார். ஆனால் தன் வேலை போய்விடும் என்று பயந்த அண்ணன் அதை ஏற்க மறுத்தார். பி.ஆர் கோவணத்தை மட்டும் கட்டிக்கொண்டு வீட்டிலேயே இரண்டு நாள் உட்கார்ந்து விட்டார். வேறு வழியின்றி அண்ணன் ஒப்புக்கொண்டார்.

பி.ஆருக்கு கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம். ஒரு மரத்தின் கிளையில் உட்கார்ந்து கொண்டு கிரிக்கெட் போட்டியை ரசிப்பார். அப்போது ஒருநாள் கிளை முறிந்து கீழே விழுந்து காலில் முறிவு ஏற்பட்டுவிட்டது. வீட்டில் சொல்லாவிட்டாலும் கால் வீங்கிக் காட்டிக் கொடுத்துவிட்டது. அவசரமாகப் பொது மருத்துவமனைக்குச் சென்றபோது காலைச் சரி செய்து கட்டுப் போட்டார் மருத்துவர். ஆனால் தவறாகச் சேர்த்துவிட்டதால் கால் மூன்று அங்குலம் நீளம் குறைந்து வாழ்நாள் முழுதும் அப்படியே நீடித்தது.

திருவல்லிக்கேணியிலேயே தங்கியிருந்த பாரதியாரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு பி.ஆருக்குக் கிடைத்தது. அது அவரது சுதந்திர தாகத்தைத் தீவீரப்படுத்தியது. மார்கழி மாதத்தில் அதிகாலையில் பாரதியார் நடத்திய பஜனையிலும் பி.ஆர் கலந்து கொண்டிருக்கிறார்.

1920ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் கல்கத்தா நகரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சிறப்பு மாநாடு ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்க முடிவெடுத்தது. அதன்படி அரசுப் பள்ளிகளில் படிக்கும் சிறுவர்களைத் தேசியப் பள்ளிக்கூடங்களை நிறுவிப் படிக்க வைப்பது என்று முடிவெடுத்தது. இந்தியா முழுவதும் இப்படிப்பட்ட பள்ளிகள் தொடங்கப்பட்டன. இதை அறிந்த பி.ஆர் இந்து உயர்நிலைப்பள்ளியை விட்டுவிட்டு அலகாபாத்தில் நேரு நடத்திய தேசியப் பள்ளியில் சேர்வது என்று முடிவெடுத்தார். பள்ளிக்குச் செல்வது போல் ரகசியமாகக் கிளம்பிவிட்டார். டிக்கெட் இல்லாமலேயே சில ரூபாய்களை மட்டும் வைத்துக்கொண்டு பத்து நாள் பயணம் செய்து அலகாபாத் போய்ச் சேர்ந்துவிட்டார்.

அங்கு தேசியப் பள்ளிக்குப் போனபோது புருஷோத்தம் தாஸ் தாண்டன் அவரது துணிவைப் பார்த்து வியந்தார். அலகாபாத்தைச் சேர்ந்த தாண்டன் சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களுள் ஒருவர். விடுதலைக்குப் பிறகு உருவான முதல் நாடாளுமன்றத்தில் பங்கு வகித்தவர். பி.ஆரிடம் கேள்வி கேட்டுத் திருப்தியடைந்து தேசியப் பள்ளியில் அவரைச் சேர்த்துக் கொண்டார் தாண்டன். மொத்தம் இருபது மாணவர்கள் அங்கு படித்தனர். அது ஒரு தேசிய குருகுலமாக இருந்தது.

இரண்டாண்டுகள் ஓடின. படிப்பு குறைந்து நூல் நூற்பதே அதிகமாக இருந்தது. சௌரி சௌரா நிகழ்வை ஒட்டி காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப் பெற்று விட்டார். இது லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு மட்டுமல்ல, தேசியப் பள்ளி மாணவர்களுக்கும் சோர்வை ஏற்படுத்திவிட்டது.

நேருவின் சம்மதத்துடன் ராமமூர்த்தி அவரிடம் பணம் பெற்றுக்கொண்டு காந்தி நடத்திய சபர்மதி ஆசிரமம் நோக்கிப் புறப்பட்டார். அங்கு நிர்வாகம் செய்து வந்த ராஜாஜியிடம் வந்து அங்கு சேர அனுமதி கேட்டார். ராஜாஜியோ அவரிடம் பழைய பள்ளியிலேயே சென்று சேருமாறும், படிப்பை முடித்துவிட்டு அரசியலுக்கு வருமாறும் கூறி விட்டார். வேறு வழியின்றி ராமமூர்த்தி வீடு திரும்பினார். மீண்டும் ஐந்தாவது ஃபாரத்தில் சேர்க்கப்பட்டார்.

1923இல் சென்னைக்குத் திரும்பிய ராமமூர்த்தி சுயராஜ்யக் கட்சியில் சேர்ந்து அதற்குத் தேர்தல் பணியும் செய்தார். அவர் பணியாற்றிய சத்தியமூர்த்தி திருவல்லிக்கேணி தொகுதியில் வென்றார்.

ராமமூர்த்தியும் அவரது நண்பர்களும் 1925இல் சென்னை நகரில் வாலிபர் கழகத்தைத் தொடங்கினர். இளைஞர்களுக்கிடையே ஆங்கிலேய எதிர்ப்பு உணர்ச்சியை உருவாக்குவதும் தேசிய எண்ணம் கொண்டவர்களாக மாற்றுவதும் அதன் நோக்கம்.

1926இல் பள்ளி இறுதித் தேர்வில் சிறந்த மதிப்பெண்களுடன் சென்னை ராஜதானிக் கல்லூரியில் இண்டர்மீடியட் சேர்ந்தார் பி.ஆர். அந்தச் சமயத்தில் நடந்த தேர்தலில் சுயராஜ்யக் கட்சிக்காக உழைத்தார். கல்லூரி முதல்வருக்குச் செய்தி தெரிந்து அவரை அழைத்துக் கடுமையாக எச்சரித்தார் அவர். கடும் ஆத்திரம் கொண்ட பி.ஆர் அங்கிருந்து விலகி காசியில் உள்ள இந்து பல்கலைக்கழகத்தில் சேருவதென்று முடிவெடுத்துவிட்டார். தன் நண்பர்களிடம் கூட அதைச் சொல்லவில்லை. தன் புத்தகங்களை விற்றுப் பணம் திரட்டிக் கொண்டு காசிக்கு ரயிலேறி விட்டார்.

காசியில் தேசிய மனோபாவம் கொண்ட மாணவர்களின் புகலிடமாக மதன்மோகன் மாளவியா தொடங்கிய இந்து பல்கலைக்கழகம் இருந்தது. அங்கு சென்று மாளவியாவைப் பார்த்து தனது நிலையை விளக்கினார். அவரும் பி.ஆரை இண்டர்மீடியேட் விஞ்ஞானப் பிரிவில் சேர்த்துக்கொண்டார்.

விடுதியில் தங்கிப் படிக்கும் வசதியும் 12 ரூபாய் உபகாரச் சம்பளமும் கொடுத்தார். ஓராண்டுக்குப் பிறகு தனது எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழை வாங்கி அனுப்புமாறு ராமமூர்த்தி தன் குடும்பத்துக்குக் கடிதம் எழுதியபோதுதான் தவித்துப் போயிருந்த அவரது குடும்பத்துக்கு அவர் இருக்கும் இடம் தெரிந்தது. அவர்களும் அனுப்பி வைத்தனர்.

ராமமூர்த்தி காசியில் இருந்த நான்காண்டுகள் அவரது அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமிட்ட ஆண்டுகளாக இருந்தன. சுதந்திரப் போராட்டம் குறித்த அவரது பார்வை விரிவடைந்தது. தேசிய இயக்கத்துடன் உறுதியாக அவரைப் பிணைத்தது.

(தொடரும்)

பகிர:
கி. ரமேஷ்

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *