Skip to content
Home » தோழர்கள் #15 – கம்யூனிசப் பாதையில்…

தோழர்கள் #15 – கம்யூனிசப் பாதையில்…

பி.ராமமூர்த்தி

கல்லூரியில் சிறந்த மாணவராகவும் சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார் பி.ஆர். அங்கு நடந்து வந்த பொம்மை நாடாளுமன்றத்தில் அவரது பேச்சுக்கள் அவருக்குப் புகழ் சேர்த்தன. அந்த நாடாளுமன்றத்தில் நேரு உட்படப் பல தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

1927இல் ஆங்கிலேய அரசு சைமன் கமிஷனை அனுப்பியது. இந்தியர்களுக்கு மேலும் சீர்திருத்தங்களை ஏற்கவும், சட்டமன்றத்தை விரிவாக்கவும் பக்குவம் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய ஒரு குழுவை அனுப்புவதாகக் கூறியது அரசு. அதிலிருந்த ஏழு பேரில் ஒருவர்கூட இந்தியரே கிடையாது. காங்கிரஸ் அதைப் புறக்கணிக்க முடிவெடுத்தது.

1928ஆம் ஆண்டு பிப்ரவரி 3 அன்று பம்பாயில் இறங்கிய கமிஷனை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் திரும்பிப் போ என்று முழக்கமிட்டனர். இந்தியாவில் கடும் எதிர்ப்பைச் சந்தித்தது கமிஷன். இந்த நிலையில் காசிக்குச் சென்ற கமிஷனை மறைவாக ஆற்றின் மூலம் அழைத்துச் செல்ல முடிவெடுத்தது அரசு. பத்திரமாக அவர்களைப் படகுகளில் ஏற்றி ராம்நகர் கோட்டைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு ஆகியிருந்தது.

ஆற்றில் படகு சென்று கொண்டிருந்தபோது திடீரென ராமமூர்த்தியின் தலைமையில் 30 படகுகள் மாணவர்களை ஏற்றிக்கொண்டு அங்கு தோன்றின. சைமன் திரும்பிப் போ என்ற முழக்கத்துடன் ராம்நகர் கோட்டை வரை விரட்டிச் சென்றனர் மாணவர்கள். எதுவும் செய்ய முடியாமல் மிரண்டு போயினர் அதிகாரிகள். இது பி.ஆருக்கு மேலும் புகழைச் சேர்த்தது.

1925ஆம் ஆண்டு மாவீரன் பகத்சிங் லாகூரில் உருவாக்கிய ‘நவ்ஜவான் பாரத் சபா’வின் பெனாரஸ் கிளையில் இணைந்து அதில் தீவீரப் பங்காற்றினார் பி.ஆர். மேலும் ‘சாதியை நொறுக்கும் சபையிலும்’ இணைந்து செயல்பட்டார்.

இந்நேரத்தில் உண்ணாவிரதம் இருந்து, கொடும் சித்திரவதையையும் எதிர்கொண்டு உயிர் நீத்தார் தியாகி ஜதீன்தாஸ். நாடெங்கிலும் மக்கள் கொந்தளித்தனர். அவரது உடல் லாகூரிலிருந்து கல்கத்தா கொண்டு செல்லப்பட்டபோது ஆயிரக்கணக்கான மக்கள் அதைத் தரிசிக்க மொகல்சாராய் ரயில் நிலையத்தில் கூடினர். அதில் ராமமூர்த்தி உள்ளிட்ட பெனாரஸ் மாணவர்களும் இருந்தனர்.

காகோரி சதி வழக்கில் தூக்கிலிடப்பட்டவர்களின் உயிர்த்தியாகம், தியாகி ஜதீந்தாசின் மரணம், சந்திரசேகர ஆசாத்தின் வீரமரணம் ஆகியவை ராமமூர்த்தியை உலுக்கின. சுதந்திரப் போராட்டம் ரத்தத்தில் கலந்தது.

கல்லூரியில் இருந்தபோது பல நூல்களைப் படித்தார் பி.ஆர். இங்கிலாந்தின் மிதவாதச் சிந்தனையின் தாக்கத்துக்கு ஆளானார். 1929ஆம் ஆண்டில்தான் கம்யூனிசத்தின் அறிமுகம் அவருக்கு ஏற்பட்டது. மீரட் சதி வழக்கில் அரசைத் தூக்கியெறிய முயன்றதாகக் குற்றம்சாட்டி கைது செய்யப்பட்ட தலைவர்கள் நீதிமன்றத்தைத் தமது மேடையாக மாற்றினர். இந்த மகத்தான தேச பக்தர்கள் மாணவர்களை அவர்கள்பால் ஈர்த்தது. முழுதாகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் புரிந்து கொள்ளாவிட்டாலும், எதோ ஒன்று இருப்பது அவருக்குத் தெரிந்தது.

1929 லாகூர் காங்கிரசில் பூரண சுதந்திரம் வேண்டித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த மாநாட்டில் பி.ஆரும் பங்கேற்றார். வைஸ்ராய் சுடப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் வைத்த போது, அதை எதிர்த்து ராமமூர்த்தியும் பல பிரதிநிதிகளும் பேசினர்.

1929 டிசம்பர் 31ஆம் தேதி நேரு நள்ளிரவில் ரவி ஆற்றங்கரையில் புத்தாண்டு பிறந்த சமயத்தில் தேசியக்கொடியைப் பறக்க விட்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கு ‘இனிமேலும் பணிந்து செல்வது மனிதனுக்கும், இறைவனுக்கும் செய்யும் துரோகமாகும்’ என்று முழக்கமிட்டார்.

அங்கிருந்து கிளம்பிய ராமமூர்த்தி படிப்பு முடித்ததும் முழுநேர சுதந்திரப் போராட்ட வீரராகக் களமிறங்கும் முடிவுடன் ரயிலேறினார்.

ராமமூர்த்தி எதிர்பார்த்த நாள் வந்தது. தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தபோது முழுவீச்சில் அன்னியத் துணி புறக்கணிப்பும் எரிப்பும் நடந்து கொண்டிருந்தது. நேராக அங்கு சென்று சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட ராமமூர்த்தி கைதானார். ஆறு மாதம் சிறைத்தண்டனையும் அபராதம் கட்ட மறுத்ததால் மேலும் 15 நாள் தண்டனையும் பெற்று பதேகர் என்ற ஊரில் சிறையில் ‘சி’ வகுப்பில் அடைக்கப்பட்டார்.

1930இல் அவர் சென்னை திரும்பியபோது நிலைமை சரியாக இல்லை. இயக்கம் சற்றுத் தொய்வடைந்திருந்தது. அதை முனைப்போடு முழுமையாகப் பணியாற்றி உடைத்தார் ராமமூர்த்தி. அரசு மேலும் ஆயுத ரிசர்வ் படையை இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

காந்தியின் கட்டளையை ஏற்று இந்திப் பிரசாரகராகவும் செயல்பட்டுப் பலரைத் தேர்வுக்கும் அனுப்பினார். வேலையின்றி இருந்தபோது அவரைப் பிரபல விஞ்ஞானி சி.வி. ராமனின் சகோதரர் சி.எஸ். அய்யர் ரயில்வேக்கு வேலைக்கு அனுப்பி வைத்தார். சில காலம் அங்கு கணக்குத் தணிக்கைப் பிரிவில் வேலைபார்த்தார் அவர்.

இந்நிலையில் இரண்டாவது வட்டமேசை மாநாட்டிலிருந்து தோல்வியுடன் மகாத்மா காந்தி திரும்பவும், சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கியது காங்கிரஸ். சென்னையில் அந்தப் பொறுப்பு ஜகன்னாததாசிடமும், ராமமூர்த்தியிடமும் ஒப்படைக்கப்பட்டது.

அவர் கொடுத்த ராஜினாமாவை மறைத்துவிட்டனர் உயர் அதிகாரிகள். கைதானால் மட்டுமே அதை செயல்படுத்துவது என்பது அவர்கள் திட்டம். தாஸ் வீட்டில் தங்கிய பி.ஆர். அங்கு தெலுங்கைக் கற்றுக் கொண்டார். இச்சமயத்தில்தான் பி.சீனிவாசராவுடன் பழக்கமும் ஏற்பட்டது.

துணிக்கடை மறியல், சாராயக்கடை மறியலின்போது போலீஸ் கடும் தாக்குதல் தொடுக்கும். உயிர் போகுமளவு மண்டை உடையும். கதர்த் துணி வியாபாரம் அதிகம் நடந்தால் அன்று மறியல் ஆவேசமாக நிகழ்ந்தது என்று பொருள்.

அந்தச் சமயத்தில்தான் தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்க்க வந்து சேர்ந்த அமீர் ஹைதர்கானை அவர் சந்தித்தார். ஹைதர் முதலில் அவரை ஆழம் பார்த்தார். அவருக்கு ரயில்வே வேலைநிறுத்தம் நடத்த வேண்டுமென்று ஆலோசனை கூறினார். அதை ஜெயப்பிரகாஷ் நாராயணனும் ஏற்றார். ஆனால் வி.வி.கிரியால் அதைச் செய்து முடிக்க முடியவில்லை.

அவர்தான் சத்தியாகிரகத்தை ஏற்பாடு செய்து நடத்துகிறார் என்று சந்தேகப்பட்ட போலீஸ் அவரைப் பின்தொடர ஆரம்பித்தது. அவர்களால் எதுவும் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், சில மீனவர்கள் அவரைக் காட்டிக் கொடுத்துப் பிடித்துக் கட்டி வைத்து போலீசிடம் ஒப்படைத்துவிட்டனர். அந்தச் செய்தி கிடைத்ததும் அவரது ராஜினாமாவை முன் தேதியிட்டு அதிகாரிகள் சமர்ப்பித்து விட்டனர். அவருக்கு ஆறு மாதம் கடுங்காவல் தண்டனையும், அபராதம் கட்ட மறுத்ததற்காக மேலும் மூன்று மாதமும் வழங்கப்பட்டது. சென்னை மத்திய சிறையில் ‘பி’ பிரிவில் அடைக்கப்பட்டார்.

பின்னர் அவரை மதுரை சிறைக்கு அரசு மாற்றியது. அங்கு பான்சிகா என்ற அதிகாரி அவர்களைக் கடுமையான சூழலில் வைத்தார். இடவசதி, உணவு, சுகாதார நிலை படுமோசமாக இருந்தது. இதை முறியடிக்க ஒரு தந்திரம் செய்து பான்சிகாவை வேறு சிறைக்கு மாற்றப் போவதாக பி.ஆர். கிளப்பி விட, பான்சிகா பணிந்தார். அவர்கள் கேட்ட வசதிகளைச் செய்தார்.

அங்கிருக்கும்போது அவருக்கு ஃபேபியன் சோஷலிசம் பற்றிய நூலும், ராஜாஜி கம்யூனிசம் பற்றி எளிமையாக எழுதிய அபேதவாதம் நூலும் படிக்கக் கிடைத்தன. பல பிரசுரங்களையும் படித்தார். விடுதலை பெற்றதும் மீண்டும் இயக்கம் சூடு பிடிக்கவில்லை.

பின்னர் அவர் அரிஜன சேவா சங்கத்தில் ஊழியரானார். அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழைய முடியாது. மார்கழி மாதம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திவ்யப்பிரபந்தம் சொல்லிக் கொடுத்து பார்த்தசாரதி கோவிலுக்கு அழைத்து வருவார். வாசலுக்கு வந்து கலைந்து சென்று விடுவார்கள்.

இங்கு பாஷ்யம் ஐய்யங்கார் துணைக்கு வந்தார். கோவிலுக்குள் சென்று அவர்களுக்கு பிரசாதம் வாங்கி வந்து கொடுத்தார். ராமமூர்த்தியின் இன்னொரு காலையும் உடைக்க வேண்டுமென சில சனாதனிகள் கருவினர். அப்போது தர்மகர்த்தா தேர்தல் நடக்கவிருந்தது. அதில் விதி, ‘தென்கலை வைஷ்ணவர், 18 வயதுக்கு மேற்பட்டவர், வருடத்துக்கு 4 அணா சந்தா செலுத்துபவர், கோவிலைச் சுற்றிக் குறிப்பிட்ட தூரம் வரை வசிப்பவர் போட்டியிடலாம்’ என்றது.

ராமமூர்த்தி உடனே அங்கு சுற்றியிருக்கும் செருப்புத் தைக்கும் தொழிலாளிகளிடம் போனார். அவர்களில் 200 ஆண்களுக்குத் தோளில் சங்கு சக்கர அடையாளம் சூடு போடப்பட்டது. சில சாதாரண மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்து அவர்களை வாக்காளர்களாகப் பதியச் செய்தார்.

இதை எதிர்த்து சிலர் நீதிமன்றம் சென்றனர். நீதிபதி உங்கள் குரு யார் என்று கேட்டபோது, அவர்கள் ‘சாத்தாணி அய்யாங்கார்’ என்று சொல்லிக் கொடுத்தபடி சொன்னார்கள். நீதிபதி திருப்தியடைந்து அவர்களைப் பதிய உத்தரவிட்டு விட்டார். உயர்நீதிமன்றத்திலும் வழக்கு வென்றது. தேர்தலில் அனைவரும் வாக்களித்தனர்.

அவர்களுக்குச் சொத்து மட்டும் இருந்திருந்தால் தர்மகர்த்தாக்களாகக் கூடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். தாழ்த்தப்பட்டவர்களுக்கு வாக்குரிமை, சொத்து இருந்தால் தர்மகர்த்தாவாகவும் தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்ற நிலையை இந்த வழக்கு இந்தியா முழுவதும் ஏற்படுத்தியது. மகாத்மா காந்தி தனது ‘ஹரிஜன்’ பத்திரிகையில் இதைப் பாராட்டி எழுதினார்.

(தொடரும்)

பகிர:
கி. ரமேஷ்

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *