Skip to content
Home » தோழர்கள் #17 – போராட்ட வாழ்க்கை

தோழர்கள் #17 – போராட்ட வாழ்க்கை

பி.ராமமூர்த்தி

1940இல் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சிக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இருந்த உறவு முறிந்தது. கம்யூனிஸ்ட் கட்சி தனியாக செயல்படத் தொடங்கியது. அவர்களது யுத்த எதிர்ப்பைக் கண்காணித்த அரசு கம்யூனிஸ்டுகளைக் கைது செய்யத் தொடங்கியது. பி. ராமமூர்த்தி கைது செய்யப்பட்டு வேப்பத்தூருக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கேயே போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளைத் தொடர வேண்டுமென்பதற்காக நாடு முழுதும் தலைமறைவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. பிஆரை அதற்காகக் கடத்தி வரும் வேலை சி.எஸ்.சுப்ரமணியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நள்ளிரவில் ஒரு தோழர் ராமமூர்த்தியை ஒரு சைக்கிளில் உட்கார வைத்துக் கும்பகோணத்துக்கு அழைத்து வந்தார். அங்கிருந்து ஒரு காரில் சென்னைக்குச் சென்று விட்டார் பி.ஆர்.

பெரம்பூரில் ஒரு தலைமறைவு மையமும், தி.நகரில் ஒன்றும் செயல்பட்டன. தி.நகரில் பி.ஆர். பிரசுரம் தயாரிக்கும் மையத்தில் செயல்பட்டார். ரகசியமாக அவற்றைக் கொண்டு செல்வதற்காக அப்போது அண்ணாமலை கல்லூரியில் படித்து வந்த உமாநாத்தைப் படிப்பை நிறுத்தச் சொல்லி சென்னைக்குக் கொண்டு வந்தது கட்சி. அன்று முதல் இறக்கும் வரை முன்னணித் தலைவராக இருந்தார் உமாநாத். நெல்லூரில் இருந்த சுந்தரய்யா இரவோடு இரவாக சென்னைக்கு சைக்கிளில் வந்து அவர்களைப் பார்த்துப் பேசி விட்டு அதிகாலையில் திரும்பி விடுவார்.

பி.ஆரைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.100 இனாம் என அரசு அறிவித்தது. ஆனால் விரைவில் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டனர். ஒரு வியாபாரியை மடக்கி ரகசியத்தைத் தெரிந்து கொண்டு விட்டது போலீஸ். பி.ஆர்., உமாநாத், சி.எஸ்.எஸ். ஆகியோரை தி.நகர் மையத்திலிருந்து கைது செய்தது போலீஸ். மொத்தம் ஏழு பேர் கைதாயினர்.

தூக்குத் தண்டனை உள்ளிட்ட தண்டனைகள் கிடைக்கக்கூடிய வகையில் சென்னை சதி வழக்கு அவர்கள் மீது தொடுக்கப்பட்டது. உள்ளே இருந்த பல காங்கிரஸ் தொண்டர்கள் இவர்களின் முயற்சியால் கம்யூனிஸ்டுகளாக மாறினர். அவர்கள் நீதிமன்றத்தில் பேசியபோது அதை பிரசார மேடையாக மாற்றி விட்டனர். பி.ஆர். தமது குற்றச்சாட்டை மறுப்பதற்கே பல வாரங்கள் எடுத்துக் கொண்டார். அனைவரும் தண்டிக்கப்பட்டனர். பி.ஆருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.

சிறையில் கடுமையான சூழலில் பி.ஆர். அனைவருக்கும் உற்சாகம் ஊட்டினார். கட்சியின் மீதான தடை நீக்கப்பட்டதால் 1942 ஜூன் மாதம் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

1942 ஆகஸ்ட் 9 அன்று காங்கிரஸ் மாநாட்டில் ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானம் நிறைவேற, உடனடியாகத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். நாடு பற்றியெறிந்தது. கம்யூனிஸ்டுகள் அவர்களது விடுதலைக்காகப் பிரசாரத்தில் இறங்கினர். கைது செய்யப்பட்டவர்களுக்காக வாதாட ஏற்பாடுகள் செய்தனர்.

இந்தப் போரில் சோவியத் இறங்கியதைத் தொடர்ந்து இது மக்கள் போராட்டமாக மாறிவிட்டதாக கம்யூனிஸ்ட் கட்சி மதிப்பிட்டது. காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளை துரோகிகள் என்று பிரசாரம் செய்தது. அப்போது விடுதலையான பி.ஆர். இப்பிரசாரத்துக்கு எதிராகக் களமிறங்கினார். காங்கிரஸ்காரர்கள் பலரும் மக்களும் தெளிவு பெற்றனர்.

அப்போது திருமணமாகாத கட்சித் தலைவர் பி.ஆர். முதல் தொண்டர் வரை சம்பளம் ரூ.25 மட்டுமே. இதில் லெவி போக அவர்களுக்கு 23.50 தான் கிடைக்கும்.

இதற்கிடையில் மதுரை சதிவழக்கில் கைதான பி.ஆர். அதில் முக்கிய சாட்சியான ஜட்காக்காரர் பொய் சொல்கிறார் என்பதை நிரூபித்தார். அந்த சமயத்தில் ஒரு அதிகாரியின் வீட்டில் இருந்ததையும் நிரூபிக்க, அனைவரும் விடுதலையாயினர்.

சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய நாள் மாலை 7 மணிக்கு விடுவிக்கப்பட்டவர்கள் வெளியே செங்கொடியுடன் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுடன் சேர்ந்து திலகர் திடலுக்கு வந்து விடுதலையைக் கொண்டாடினர்.

1948இல் கல்கத்தாவில் கூடிய கட்சி மாநாடு நேரு அரசாங்கத்தை தெலுங்கானா வழியில் தூக்கியெறிவது என்ற முடிவை எடுத்தது. உடனே கட்சி தடை செய்யப்பட்டது. பி.ஆர். அங்கேயே தலைமறைவானார். கட்சி மீது அதிரடித் தாக்குதல் தொடங்கியது.

அப்போது கட்சி முடிவுப்படி திருச்சி பொன்மலையில் இருந்த அன்னை லட்சுமியும் அவரது மகள் பாப்பாவும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். மற்றவர்களும் அவர்களும் ஒரு குடும்பம்போல் வெளியே காட்டிக் கொண்டு தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டனர். பாப்பா உமாநாத்துக்கு பி.ஆர். மார்க்சிய ஆசானாக இருந்தார்.

1948இல் ரயில்வே வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. கள நிலைமையை ஆராய்ந்த பி.ஆர். அது நடக்காது என்று கட்சித் தலைமைக்கு எழுதினார். ஆனால் நிலைமையைப் புரிந்து கொள்ளாத கட்சித் தலைமை அவரை பம்பாய்க்கு வரவழைத்து அங்கு பணியாற்றுமாறு கூறிவிட்டது.

ஆனால் பிஆர் கூறியது போலவே வேலைநிறுத்தம் பிசுபிசுத்தது. அதையும் கட்சி புரிந்து கொள்ளவில்லை. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்படனர், நூற்றுக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

அப்போது உட்கட்சிப் போராட்டம் தொடங்கி விட்டது. பி.ஆர். ஓர் ஆவணத்தைத் தயாரித்து சுற்றுக்கு விட்டார். அவரைப் பாராட்டிய மத்தியக்குழு அவரை மீண்டும் தமிழகக் கட்சியை சீரமைக்க சென்னைக்கு அனுப்பியது. அவர் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தலைவரை அனுப்பி கட்சியைப் புனரமைக்க முயன்றார். அவர் சென்னை முதலமைச்சர் குமாரசாமி ராஜாவுக்கு எழுதிய கடிதம் கட்சித் தோழர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் உற்சாகமும் நம்பிக்கையும் ஊட்டியது. கட்சி வளரத் தொடங்கியது.

தலைமறைவாகச் செயல்படுவது மிகவும் கடினமாக இருந்தது. அப்போது பம்பாய் செல்ல வேண்டியிருந்ததால் ரேணிகுண்டாவில் மாறுவேஷத்தில் ஏறினார் பி.ஆர். ஆனால் அவருக்கு எதிரில் சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் அய்யாச்சாமி ராமமூர்த்தியின் ஊனத்தை வைத்துக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்து விட்டார்.

1951இல் பிஆர் சிறையில் இருந்தபோது தேர்தல் வந்தது. கட்சி முடிவின்படி அவர் சிறையிலிருந்தே போட்டியிட்டார். மாபெரும் வெற்றி பெற்றார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரானார். ராஜாஜி குதிரைப்பேரத்தில் இறங்கினார். இரண்டு கட்சிகளுக்கு அமைச்சர் பதவி அளித்து முதலமைச்சரானார். அந்தப் பெருமையும் காங்கிரசுக்கே!

அதுவரை ஆங்கிலத்திலேயே சட்டமன்ற அலுவல்கள் நடைபெற, முதன்முதலில் வரவு செலவு குறித்து தமிழில் பேசி சாதனை படைத்தார் பி.ஆர். மற்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் தமது தாய்மொழியிலேயே பேசும் வாய்ப்பையும் உருவாக்கினார்.

மொழிவழியில் தமிழ்நாடு உருவாக வேண்டும் என்று பி.ஆர். அங்கு குரல் கொடுத்தார். முதல்வர் ராஜாஜிக்கும், பி.ஆருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் மிகவும் பிரசித்தி பெற்றது. மு.க.வின் கல்லக்குடி போராட்டத்தில் ஏவப்பட்ட அடக்குமுறையைக் கடுமையாக எதிர்த்து சட்டமன்றத்தில் பேசியவரும் பி.ஆர்.தான்.

1953இல் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்தது. இதற்கிடையில் காஷ்மிர் பெரும் பிரச்சனையில் சிக்கியது. அங்கு ஒரு கட்சிக் குழுவின் உறுப்பினராகச் சென்ற பி.ஆர். ஓர் அறிக்கையை அளித்தார். அதில் அவரது யோசனைகளைத் தெரிவித்தார்.

அப்போதுதான் குலக்கல்வி பற்றிய வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் நடந்தது. அங்கு பி.ஆர். இல்லாததால் ஒரு வாக்கில் கல்யாணசுந்தரம் வைத்த திருத்தம் தோற்றது. பி.ஆர். பார்ப்பனர் என்பதாலேயே அங்கு இல்லாதிருந்ததாக திமுகவும் திகவும் அவதூறு செய்தன. அவர் முக்கியமான விஷயமாக காஷ்மீர் சென்றிருந்ததைக் கூட அவர்கள் பார்க்க மறுத்தனர்.

1956, டிசம்பர் 27 அன்று தமிழக சட்டமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக முன்மொழிந்து மசோதாவை நிதியமைச்சர் சுப்ரமணியம் வைக்க, அதை ஆதரித்துப் பேசினார் எதிர்க்கட்சித் தலைவர் பி.ஆர்.

1956ஆம் ஆண்டு ஜுலையில் தமிழ்நாடு என்று சென்னை மாநிலத்துக்குப் பெயரிடக் கோரி சங்கரலிங்கனார் விருதுநகரில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். பி.ஆர்.உடனே அங்கு விரைந்து அவரை உண்ணாவிரதத்தைக் கைவிடக் கோரினார். அவர் மறுத்தார். காங்கிரஸ்காரர்கள் அவரைத் தாக்காமல் கம்யூனிஸ்டுகள் பாதுகாத்தனர். எனினும் அவர் 77 நாட்களுக்குப் பின் உயிர் துறந்தார். உயிலின்படி அவரது உடலைக் கம்யூனிஸ்டுகள் பெற்று தகனம் செய்தனர். 1967இல் தி.மு.க. வெற்றி பெற்ற பிறகு தமிழ்நாடு எனும் பெயர் சூட்டப்பட்டது.

பி.ஆர். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அவருக்கு ஏற்கெனவே அறிமுகமாகி இருந்த அம்பாளைத் தனக்கு உதவியாளராக இருக்குமாறு கோரினார். அவரோ தன்னைப் பி.ஆர். திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று நிபந்தனை விதிக்க, அதை ஏற்றார் பி.ஆர். மற்றவர்களின் வற்புறுத்தலால் சிறிய அளவில் வரவேற்பு நடத்தப்பட்டது. பெரியார் தான் கொடுத்த வாக்குறுதியின்படி திருமணத்துக்குத் தலைமை தாங்கினார்.

பி.ஆர், அம்பாள் இருவருக்கும் பொன்னி என்ற மகளும் வைகை என்ற மகளும் உண்டு. இன்றும் தொழிலாளர் நலன் காக்கும் வழக்கறிஞராக வைகை புகழ் பெற்று விளங்குகிறார்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *