Skip to content
Home » தோழர்கள் #18 – கொந்தளிப்பான காலகட்டம்

தோழர்கள் #18 – கொந்தளிப்பான காலகட்டம்

பி.ராமமூர்த்தி

சென்னையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே பி.ஆர்., தில்லியில் கட்சிப் பத்திரிகையான ‘நியூ ஏஜ்’ல் ஆசிரியராகக் கட்சியால் நியமிக்கப்பட்டார். எனவே இங்கும் அங்குமாக மாறி மாறிப் பணியாற்றினார். கட்சி எடுத்த முடிவுகளை அவர் உடனடியாக எளிமையாக எழுதும் திறன் கொண்டிருந்தார். அச்சமயத்தில் அவர் ஏராளமான கட்டுரைகள், சிறு பிரசுரங்களை எழுதி வெளியிட்டார். சாதாரண மக்கள், தொழிலாளர்கள் ஆகியோரை எளிதில் அவரது எழுத்து சென்றடைந்தது.

கட்சியில் கருத்து மோதல் 1951இலேயே தொடங்கிவிட்டது. கல்கத்தா காங்கிரஸ் தெலுங்கானா வழியில் நேரு அரசை எதிர்த்துப் போராட வேண்டும் என்று முடிவெடுத்ததால் கட்சி தடை செய்யப்பட்டு கடும் தாக்குதலைச் சந்தித்தது. பிறகு அது தவறு என்ற நிர்ணயிப்பு ஏற்பட்டு, பி.டி.ரணதிவே பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டார். பின்னர் கட்சிக் குழு ஒன்று சோவியத் சென்று ஸ்டாலினின் வழிகாட்டுதலைப் பெற்று வந்தது. அதன் வழியில் ஒரு கொள்கை அறிக்கை கல்கத்தாவில் கூடிய விசேஷ மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. அதிலும் பி.ஆர். கலந்து கொண்டார். ஆனால் அது சரிவராது என்று மூன்றே ஆண்டுகளில் தெரிந்து போனது.

1956இல் மீண்டும் பலத்த வேறுபாடுகள் தோன்றின. ஒரு தரப்பினர் காங்கிரசை ஆதரிக்க வேண்டுமென்றும், இன்னொரு தரப்பினர் காங்கிரஸ் முதலாளிகளுக்காகவே பொதுத்துறைகளை உருவாக்குகிறது, எனவே அதனுடன் ஒத்துப் போக முடியாது எனவும் வாதிட்டன. 1958இல் அமிர்தசரசில் கூடிய கட்சி மாநாட்டிலும் மீண்டும் திருத்தல்வாதம் தலைதூக்கியது.

1960இல் உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடு நடைபெற்றது. அதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பி.ஆரும் சென்றார். அது வெளியிட்ட ஆவணத்திலும் கருத்து வேறுபாடு தோன்றியது.

1961இல் நடைபெற்ற கட்சி காங்கிரசில் அஜய்கோஷ் பொதுச்செயலாளரானார். அவர் திடீரென இறந்துவிட, புதிதாகத் தலைவர் பதவி தோற்றுவிக்கப்பட்டு டாங்கே தலைவராகவும், இ.எம்.எஸ். பொதுச்செயலாளராகவும் ஆனார்கள். உட்கட்சிப் போராட்டம் தீவீரமானது. தமிழகத்திலும் அது எதிரொலித்தது. திராவிடக் கட்சிகளுடன் கூட்டணியை பி.ஆர். வலியுறுத்தினார். அவரைத்தான் அவர்கள் பார்ப்பனர் என்று அவதூறு செய்து வந்தனர். 1962இல் தமிழகக் கட்சியின் தலைமையில் பெரும்பகுதி சீர்திருத்தவாதிகளாக இருந்ததால், ஜனசக்தி, என்.சி.பி.எச். உள்ளிட்ட அனைத்தும் அவர்கள் கைகளுக்குப் போய்விட்டன.

1962 இந்தியா சீனா போரில் ஒரு தரப்பினர் போரை வலியுறுத்த, மறுதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டுமென்றது. அவர்கள் தேசத்துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டனர். அது குறித்து பி.ஆர். விளக்கமாக ஒரு பிரசுரம் எழுதினார். அவருக்கும் தேசத்துரோகப் பட்டம் சூட்டப்பட்டது. கட்சி தேசிய கவுன்சிலில் இவர்களது தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. அடுத்த மூன்று வாரங்களில் அனைவரும் கைதாயினர். வெளியிலிருந்த டாங்கே போன்றோர் இது குறித்துப் பேசவேயில்லை. பி.ஆர். தலைமறைவானதாகக் கூறப்பட்டது. ஜீவா ஒரு அறிக்கையை வெளியிட்டு அதில் தமிழகக் கட்சிக்குத் தொடர்பு இல்லையென்றார். தமிழகக் கட்சி அணிகள் அவருக்கு எதிராகக் கொந்தளித்தன. பின்னர் தன் தவறைப் புரிந்து கொண்ட ஜீவா வருந்தினார். விரைவில் இறந்தும் போனார்.

1963இல் கட்சித் தலைவர்கள் சிறையில் இருந்தபோது தீக்கதிர் உருவானது. பி.ஆரும், அப்துல் வகாபும் பெருமுயற்சி எடுத்து மதுரையில் அதற்கான இடத்தை ஏ.எஸ்.கே.அய்யங்காரிடம் வாங்கினர். அங்குதான் இன்றுவரை தீக்கதிர் செயல்படுகிறது.

1964 ஏப்ரலில் தேசியக் கவுன்சில் கூடியபோது 32 பேர் வெளிநடப்புச் செய்தனர். கட்சி பிளவுபட்டது. அவர்களில் பி.ஆரும் ஒருவர். ஏஐடியூசியின் துணைத்தலைவராக இருந்த பி.ஆர். நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்து தொழிலாளர்களைத் திரட்டினார்.

கட்சியின் ஏழாவது காங்கிரஸ் கல்கத்தாவில் அக்டோபர் 31இல் கூடியது. பி.ஆர். பொலிட்பீரோ உறுப்பினரானார். சீன ஏஜெண்டுகள் என்று பொழியப்பட்ட அவதூறை எதிர்த்து விளக்கும் பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதை சிறப்பாக நிறைவேற்றினார் பி.ஆர்.

தொழிற்சங்கத்திலும் இதே போராட்டம் ஏற்பட, வேறு வழியின்றி ஏஐடியூசியிலிருந்து பிரிந்து சிஐடியூ உதயமானது. பி.ஆர். அதன் முதல் பொதுச்செயலாளரானார். தொழிற்சங்கங்களின் தேசிய பிரச்சாரக் குழுவை உருவாக்குவதிலும் சிஐடியூ எடுத்த முன்முயற்சியில் பி.ஆர். பெரும் பங்காற்றினார்.

பல நாடுகளுக்குத் தொழிற்சங்க மாநாடுகளுக்குச் செல்லும்போது அந்த நாட்டின் தொழில் வளர்ச்சியையும், புதிய கண்டுபிடிப்புகளையும் இந்தியாவுக்குப் பயன்படுத்த முடியுமா என்று முயல்வது பி.ஆர். வழக்கம். பழுப்பு நிலக்கரியின் பயன்பாட்டை ஜெர்மெனியில் கண்ட பி.ஆர். நெய்வேலியில் அதைச் செய்ய முடியும் என்று அறிக்கை வெளியிட்டார். கட்சியின் பெரும் முயற்சியால் நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் அமைக்க அரசு சம்மதித்தது. இன்றும் நமக்குப் பயன்பட்டு வருகிறது.

தனது வாழ்நாளின் கடைசிப் பத்தாண்டுகளில் அன்னிய மூலதனம் மற்றும் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள் இந்தியாவில் நுழைந்து கொள்ளையடிப்பதற்கு எதிராகச் செயல்பட்டார் பி.ஆர். அதில் மிகப்பெரிய போராட்டம் சீமென்ஸ் நிறுவனத்துடன் இந்திய அரசாங்கம் செய்யவிருந்த கூட்டை எதிர்த்த போராட்டமாகும். பெல்-சீமென்ஸ் ஒப்பந்தத்தின் மீது பி.ஆருக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டது. அது சுயேச்சையான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு சாவுமணி அடித்து எப்போதும் பெருநிறுவனங்களைச் சார்ந்து நிற்கும் நிலையை ஏற்படுத்திவிடும் என்று உணர்ந்தார். இந்தியா முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்த, வேறு வழியின்றி இந்திராகாந்தி அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

ரிசர்வ் வங்கி ஊழியர்கள் பிரச்சனைகளில் பி.ஆர். உ.ரா.வரதராசனுடன் சேர்ந்து தீர்வு கண்டார். அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலிருந்து பாதுகாத்தார். 1979இல் ரிசர்வ் வங்கிப் போராட்டத்தின் போது உ.ரா. வரதராசன் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட அதிலும் பி.ஆர். தலையிட்டு தீர்வுகாண முயன்றார். உடன்பாடு ஏற்பட்டது. அதில் முக்கிய அம்சம் என்னவென்றால் சிறையில் இருந்த நாட்களையும் வேலை நாட்களாகக் கருதுவது என்பதாகும். இந்தியாவிலேயே இது முதன்முறையாக நடந்தது.

1970இல் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகத்தில் (ஏ.ஜி.) ஒத்துழையாமைப் போராட்டத்தை சங்கம் தொடங்கியது. நிர்வாகம் அடக்குமுறையை ஏவியது. மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் மாநிலச்செயலாளரான எஸ்.சந்திரசேகர் பி.ஆரைச் சந்தித்து இதில் தலையிடுமாறு கேட்டுக் கொண்டார். பி.ஆர். அலுவலகத்துக்குள் வந்து நான்கு மாடிகளிலும் ஏறி இறங்கி போராட்டம் பெருவெற்றி என்பதைக் கண்டு கொண்டார். வெளியே வந்து சங்கத்தைப் பாராட்டிப் பேசினார். நேரடியாக தில்லிக்குச் சென்று சிஏஜியை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்துப் பேசித் தீர்வு கண்டார்.

எப்பொழுது யாரைச் சந்திக்க வேண்டும், யார் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பதெல்லாம் பி.ஆருக்கு அத்துப்படி.

இந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனப் பிரச்சனையால் அது மூடப்பட்டபோது அதை தேசியமயமாக்குவதில் பி.ஆர். ஆற்றிய பங்கு பெரிது. அதைத்தான் அடிமாட்டு விலைக்கு இப்போது விற்று விட்டார்கள்.

தொழிலாளர்கள் தாக்கப்பட்டால் நேரடியாகக் களத்தில் நிற்பார் பி.ஆர். வெறும் பேச்சு பேசமாட்டார். சிம்சன் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டபோது அவர் இரவு முழுதும் ஆலையின் வாசலிலேயே இருந்து காலையில் ஷிஃப்ட் முடிந்து வந்த தொழிலாளர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்றார். தொழிலாளர்கள் உத்வேகம் பெற்றனர்.

கட்சி முடிவு என்றால் நட்பு கூட அடுத்தபடிதான். சஞ்சீவரெட்டி குடியரசுத் தலைவரானால் இடதுசாரிகள் மீது கடும் தாக்குதலைத் தொடுப்பார் என்றும் வி.வி.கிரியை ஆதரிப்பது என்றும் கட்சி முடிவெடுத்த போது தனது நெருங்கிய நட்பையும் மீறி அதற்காக உழைத்தார் பி.ஆர். அவர் வெற்றி பெற்றார்.

ஆனால் அடுத்த தேர்தலில் தனக்குப் பிடித்த அரசியல் தெரியாத ருக்மணி அருண்டேலை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென பிரதமர் மொரார்ஜி தேசாய் அடம் பிடிக்க, இடதுசாரிகள் சஞ்சீவரெட்டியே மேல் என முடிவெடுத்தனர். அதிலும் பி.ஆர். ஈடுபட்டார். மொரார்ஜி தேசாய் அப்படிச் செய்தால் அரசே கவிழும் ஆபத்து விழுமென்று நள்ளிரவில் அவசர அவசரமாக மொரார்ஜிக்குக் கடிதம் கொடுத்தனுப்பினார் பி.ஆர். அவர் நினைத்தது நடந்தது. சஞ்சீவரெட்டி குடியரசுத்தலைவரானார்.

1980களிலிலிருந்தே பி.ஆரின் உடல்நலம் குன்றத் தொடங்கியது. 1983இல் சிஐடியூ மாநாட்டில் அவர் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விடுபட்டு துணைத்தலைவரானார். 1984இல் மாநிலங்களவையில் அவரது பதவிக்காலம் முடிந்ததும் சென்னை திரும்ப முடிவெடுத்தார். தொடர்ந்து பணி செய்தார். தீக்கதிருக்கு குறிப்புகள் எழுதினார். மாநிலக்குழு, செயற்குழு கூட்டங்களில் பங்கேற்றார்.

1987இல் மேலும் அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. அவரது நெருங்கிய தோழர் வி.பி.சிந்தன் மாஸ்கோ சென்றிருந்தபோது அங்கு காலமானார். பி.ஆர். மிகவும் துயரமடைந்தார். அஞ்சலிக் கூட்டத்தில் பேசும்போதே அழுதுவிட்ட அவரைத் தேற்றி அமர வைக்க வேண்டியிருந்தது.

செப்டம்பர் 25ஆம் தேதி கோவையில் ஸ்டேன்ஸ் மில் தியாகிகள் அரங்க மாநாட்டில் அவர் ஆற்றிய உரைதான் அவரது கடைசி உரையானது. டிசம்பர் 15இல் அவர் நிரந்தரமாக ஓய்வு பெற்றார்.

(தொடரும்)

பகிர:
கி. ரமேஷ்

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *