1957ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி. இந்திய வரலாறு மறக்கமுடியாத ஒரு தினம். அன்றுதான் முதன்முறையாக கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஓர் அரசு ஜனநாயக முறையில் பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர்ந்தது.
நிலவுடைமை, கல்வி, அதிகாரப்பரவல் என்று பல முற்போக்கான முயற்சிகளை கட்சி உடனடியாக எடுக்க பிற்போக்குச் சக்திகள் அதிர்ந்து போயின. காங்கிரஸ் கட்சியின் பின்னணி ஆதரவுடன் இந்தச் சக்திகள் ஒன்றிணைந்து விமோசன சமரம் என்ற போராட்டத்தில் இறங்கின.
இதற்காகவே காத்திருந்ததுபோல் மத்திய அரசு 1959 ஜூலை 31 அன்று ஆட்சியைக் கலைத்தது. அதில் அமெரிக்க சதியும் இருப்பதைப் பின்னர் அங்கிருந்து வெளிவந்த ஆவணங்கள் காட்டுகின்றன. அந்தப் புரட்சிகர அமைச்சரவையில் முதல்வராகச் செயல்பட்டு பிற்போக்கு சக்திகளின் வயிற்றில் புளியைக் கரைத்தவர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்.
0
ஒரு நிலப்பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்தவர். பைத்தியக்காரர்களின் நாடு என்று சுவாமி விவேகாநந்தரால் இகழப்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். சாதிகளிலேயே உச்சத்தில் இருந்த, மிகவும் பிற்போக்கான நம்பிக்கைகள், நடைமுறைகள் கொண்ட நம்பூதிரிக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பின்னால் அனைத்தையும் துறந்து முழுப் புரட்சியாளராக மாறியவர்.
குஞ்சு என்று அன்புடன் குடும்பத்தாரால் அழைக்கப்பட்ட சங்கரன் சிறப்பானவராகக் கருதப்பட்டதால் அவரது சகோதரர்கள் இருவர் பள்ளிக்கு அனுப்பப்பட்டாலும் இவர் வீட்டிலேயே இருத்தப்பட்டு வேதக்கல்வியைப் பயில வைக்கப்பட்டார். வேதங்களைத் தலைகீழாக ஒப்பிக்கக் கூடிய திறன் படைத்தவர்.
பின்னர் அவரும் அவரது சகோதரரும் மூன்றாம் படிவத்தில் பள்ளியில் சேர்ந்தனர். அவர் மிகவும் புத்திசாலியான மாணவராக இருந்தார். அவரது சாதி, வசதி காரணமாகப் பல மாணவர்கள் அவர்களை வெறுத்தாலும், அவரது அன்பான அணுகுமுறையால் அனைவரும் நண்பர்களாயினர். இவர்கள் இருவர் உட்பட நான்கே மாணவர்கள்தான் நம்பூதிரிகள். பள்ளிக்கல்வி பெறும் முதல் நம்பூதிரி மாணவர்களாக இவர்கள் இருந்தனர்.
ஐந்தாம் படிவத்தில் ஒரு சிறப்புப் பாடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. பிரகாசமான மாணவர்கள் பொதுவாகக் கணிதத்தைத் தேர்வு செய்ய, சங்கரன் வரலாற்றைத் தேர்வு செய்தார். சமூகச் சீர்திருத்த இயக்கம், காங்கிரஸ் தொடர்பாக அவர் அறிந்திருந்தவை அவரை ஒரு சமூக ஊழியராக வேண்டும் என்ற உந்துதலை அளித்திருந்தன. அதற்கு வரலாறு தேவை என்று நினைத்தார் அவர். ஆனால் அச்சமயத்தில் அவர் தீவீர இந்து கருத்தியலில்தான் இருந்தார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
நம்பூதிரி சமூகத்தில் இருந்த பிற்போக்கான நடைமுறைகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற சீர்திருத்தக் கருத்துகள் இளைஞர்களிடம் தோன்றின. சங்கரனின் குடும்பம் மாப்ளா கலகத்தால் சிறிது காலம் பாலக்காட்டுக்கு மாறியது. அங்கு நம்பூதிரி நல உரிமைச் சங்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அப்போதிலிருந்து தொடர்ந்து அச்சங்கம் நடத்திய பத்திரிகையில் எழுதத் தொடங்கினார். பின்னர் நம்பூதிரி இளைஞர் அமைப்பில் தீவீரமானார். 14 வயதில் அதன் ஸ்தலக் கிளையின் பொறுப்பையும் ஏற்றார்.
அவருக்கு முதலில் அரசியல் கற்றுக் கொடுத்தவை கோகலே, திலகர், காந்தி மூன்று தலைவர்கள் பற்றிய பிரசுரங்கள். சங்கரன் முதலில் காந்திமீதும், பின்னர் ஜவாஹர்லால் மீதும் ஈர்ப்புக் கொண்டார். கதர் அணியவும் இந்தியைக் கற்கவும் தொடங்கினார். மாத்ருபூமியைத் தொடர்ந்து படித்து, அரசியலைக் கூர்ந்து கவனித்தார்.
அவர் ஐந்தாம் படிவத்தில் படித்துக் கொண்டிருந்த போது சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். சைமன் கமிஷனைப் புறக்கணிக்கும் தீர்மானம் அங்கு நிறைவேறியது. அதை மலையாளத்தில் மொழிபெயர்த்ததுதான் அவரது முதல் அரசியல் செயல்பாடு. ஆனால் வகுப்புப் புறக்கணிப்பு என்று வந்தபோது அவர் கலந்து கொள்ளவில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் பின்னர் பதிவு செய்துள்ளார்.
பின்னர் உயர்நிலைப்பள்ளிப் படிப்புக்காக அவர்கள் பாலக்காடு சென்றனர். அங்கிருந்த மூன்று மூத்த மாணவர்களிடமிருந்து விவாதத்தின் மூலம் அதிகப் பரந்த கண்ணோட்டத்தைப் பெற்றார்.
முதலில் இந்துமகாசபா மீது பற்றுக் கொண்டிருந்தார் இ.எம்.எஸ். பின்னர் நாம் பெருமை கொள்ளும் வகையில் பெரியாரின் போதனைகளாலும், கேரளப் பகுத்தறிவுப் பிரச்சாரங்களாலும் ஈர்க்கப்பட்டுத் தன்னை மாற்றிக் கொண்டார். விடுதலைப் போரில் நேரடியாகக் குதிப்பதற்கு முன்பே தமது மத, சாதி அடையாளங்களைத் துறந்து விட்டார். அதனால் சாதியத் தலைவர்கள் அவருக்கு மிகவும் நெருக்கமான அவரது தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக்கூடத் தடை விதித்து விட்டனர் என்பது இறுதி வரை அவருக்கு ரணமாக இருந்தது.
திருச்சூர் கல்லூரியில்தான் சோஷலிசம், கம்யூனிசம் புத்தகங்களைப் படித்து அறிமுகம் பெற்றார் இ.எம்.எஸ். தனது தினசரிக் கடமையை சரியாகத் திட்டமிட்டுச் செய்ததால் எல்லாவற்றிலும் முன்நின்றார். அப்போது நம்பூதிரி இளைஞர் சங்கத்தின் உன்னி நம்பூதிரி வாரப்பத்திரிகை நடத்த உதவி புரிந்த அவர் ஜவாஹர்லால் நேருவின் சரிதையை மலையாளத்தில் எழுதினார். அதுதான் அவரது முதல் பிரசுரம்.
நேரடியாகக் களத்தில் குதிக்கும் எண்ணம் அவரை வாட்டிக் கொண்டே இருந்தது. இறுதியில் 1932 ஜனவரி 4 அன்று குருவாயூர் கோவில் திறப்பு சத்தியாகிரகத்தில் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திவிட்டுக் கல்லூரியில் இருந்து வெளியேறினார். நேரடியாக உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்கக் கள்ளிக்கோட்டை சென்றார். இதை எப்படியோ அறிந்த அவரது வீட்டினர் அவரைத் தடுக்க அவர் மதித்த இருவரை அனுப்பினர். ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. இ.எம்.எஸ். சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுக் கைதானார். மூன்று வருடத் தண்டனையும் நூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
கள்ளிக்கோட்டை சப்ஜெயிலுக்குச் சென்றவுடன் அவரது எதிர்காலத் தோழரும் கேரளத்தின் கம்யூனிஸ்ட் இயக்க ஸ்தாபகருமான கிருஷ்ணபிள்ளையை சந்தித்தார். அங்கு பகத்சிங்கின் தோழர் கே.என்.திவாரி, வங்கப்புலி ஜதீன் தாவின் சகோதரர் கிரண்தா ஆகியோர் அவரது அறையிலேயே அடைக்கப்பட்டிருந்தனர். அங்கு புரட்சிகர அரசியலால் அவர் ஈர்க்கப்பட்டார்.
அவர் தண்டனைக் காலம் முடியுமுன்பே 1933, ஆகஸ்ட் 1 அன்றே விடுதலையானார். நம்பூதிரிகள் அப்படி மற்ற சாதியினருடன் இருந்து விட்டு வரும்போது சிலர் பிராயச்சித்தம் செய்தனர். இ.எம்.எஸ். உறுதியாக மறுத்ததால் சாதிவிலக்கம் செய்யப்பட்டார்.
சிறையில் கிடைத்த பரந்த அரசியல் அறிவால் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். அனைவரையும் போல் ரஷ்யப் புரட்சி அவரையும் ஆகர்ஷித்தது. மீண்டும் மீண்டும் காந்தி தனது முக்கியப் போராட்டங்களை வாபஸ் பெற்றது பலருக்கும் அதிருப்தி அளித்தது.
விடுதலையான இ.எம்.எஸ். தீவீரமாக விவசாயப் போராட்டங்களில் பங்கெடுக்கத் தொடங்கினார். அச்சமயத்தில் பாட்னா காங்கிரஸ் மாநாட்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி 1934இல் தொடங்கப்பட்டபோது மலபார் பகுதியில் கூட்டப்பட்ட கூட்டத்தில் இ.எம்.எஸ். அதன் பாட்னா மாநாட்டில் கேரளக் கிளை சார்பில் கலந்து கொள்வதென முடிவெடுக்கப்பட்டது. அதன் பிரதிநிதியாக அவர் கலந்து கொண்டார்.
இதற்கிடையில் 1935இல் சுந்தரய்யாவுடன் அவரும், கிருஷ்ணபிள்ளையும் கம்யூனிசம் குறித்து நீண்ட உரையாடல் நடத்தினர். அவர்களது அழைப்பை ஏற்று சுந்தரய்யா கேரளம் வந்து சுற்றுப்பிரயாணம் மேற்கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் முயற்சியை எடுத்தார். மீண்டும் இரண்டு மாதங்களுக்குப் பின் எஸ்.வி.காட்டேவுடன் மீண்டும் வந்து நீண்ட விவாதம் நடத்தினார். அதன்பின் முறைப்படி அவர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இணைந்தார்.
ஏராளமான கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் செயல்படத் தொடங்கினர். அவர்களது முயற்சியால் அதில் பலரும் கம்யூனிஸ்டுகளாயினர். கேரளத்தில் பெரும்பாலானோர் கம்யூனிஸ்டுகளாகி விட்டனர். அவர்கள் தொடர்ந்து காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சிக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் முரண்பாடு முற்றிக் கொண்டே வந்தது. இவர்களது செயல்பாடுகளால் விவசாய இயக்கமும் தொழிலாளர் இயக்கமும் வலுவடைந்து கொண்டிருந்தன.
அவர் செயல்பட்ட மலபார் மிகவும் வலுவான தளமானது. அக்கட்சியின் சார்பில் தொடங்கப்பட்ட பிரபாதம் பத்திரிகையின் ஆசிரியராக இ.எம்.எஸ். செயல்பட்டார். இச்சமயத்தில் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட அவர் அளித்த மனு இருமுறை நிராகரிக்கப்பட்ட பின் மூன்றாவது முறை ஏற்கப்பட்டு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் விரைவில் அமைச்சரவை ராஜினாமா செய்தது. அப்போது அமைக்கப்பட்டிருந்த ஒரு குழுவில் இடம் பெற்ற அவர் நிலப்பிரபுத்துவம் நஷ்ட ஈடின்றி ஒழிக்கப்பட வேண்டுமென்ற அறிக்கையைத் தயாரித்தார்.
இக்காலத்தில் கேரளத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உருவாக்கத்திலும் பங்கேற்றார் இ.எம்.எஸ். அவர்கள் நடத்திய இரண்டு நாடகங்கள் தொழிலாளர் மத்தியில் பிரபலமாயின. பின்னர் கேரள மாநிலம் உருவாக வேண்டுமென்ற எண்ணத்துக்கு இது அடித்தளமிட்டது.
(தொடரும்)
ஆதாரம்:
1.ஒரு இந்திய கம்யூனிஸ்டின் நினைவலைகள் – இ.எம்.எஸ்.
2. இ.எம்.எஸ். நூற்றாண்டு நினைவு மலர் – தீக்கதிர்
3. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்கள் – என்.ராமகிருஷ்ணன்
சாதிகளிலேயே உச்சத்தில் இருந்த, மிகவும் பிற்போக்கான நம்பிக்கைகள், நடைமுறைகள் கொண்ட நம்பூதிரிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்- நல்ல சொல்லாடல்.