கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இ.எம்.எஸ். இருமுறை பணியாற்றினார். மூன்றாவது முறை அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 50 பேர் இணைந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளையை அங்கு அமைத்தனர். 1939இல் போர் வெடித்த நிலையில் அவர் தலைமறைவாக வேண்டுமென கட்சி முடிவெடுத்தது. அதில் பயிற்சி பெற்றிருந்த கிருஷ்ணபிள்ளை வெளியே பணி செய்ய, அலுவலகப் பணிகளை இ.எம்.எஸ். கவனித்தார்.
பல புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பும் அடித்தட்டு மக்களுடன் தங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. தற்செயலாக கிருஷ்ணபிள்ளை கைது செய்யப்பட்டு விட, அவர் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அங்கு சுந்தரய்யா வந்து அவருடன் இரண்டு நாள் தங்கி தலைமறைவு வாழ்க்கைக்குப் பயிற்சியளித்தார். 1942வரை இப்படிப் பணிபுரிந்தார்.
இரண்டாம் உலகப்போரில் சோவியத் தாக்கப்பட்டவுடன் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு மக்கள் யுத்தமாக மாறியது. ஜப்பானிய ராணுவம் இந்தியாவின் கிழக்குப் பகுதிக்கே வந்துவிட்டது. இந்நிலையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அகங்காரத்தையும் பாசிச யுத்தத்தையும் சேர்த்து எதிர்க்கும் மக்கள் போராட்டமாக மாற்ற வேண்டிய நிலை கட்சிக்கு ஏற்பட்டது. காங்கிரஸ் தலைவர்கள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் காரணமாகக் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இங்கு ஒரு முக்கியமான விஷயத்தைப் பதிவு செய்கிறார் இ.எம்.எஸ். இந்த இடத்தில்தான் முதன் முறையாக காந்தி தனது அகிம்சையைக் கைவிட்டார் என்கிறார். ‘ஒவ்வொரு இந்தியனும் அவன் அல்லது அவளது சொந்தத் தலைவர்’ என்று அவர் கூறியதால் அவர்கள் இஷ்டப்பட்டதைச் செய்யலாம் என்றாக்கியது என்கிறார். (ஒரு இந்திய கம்யூனிஸ்டின் நினைவலைகள் – இ.எம்.எஸ். பக்கம் 124, 125).
தலைமறைவு காலத்தில் விட்டுவிட்டுச் சென்ற மனைவியையும் 3 வயது மகளையும் 27 மாதங்களுக்குப் பிறகே அவரால் பார்க்க முடிந்தது. விடுதலை பெற்றதும் கிடைத்த குடும்பச் சொத்தை விற்றுத் தன் மனைவியின் சம்மதத்துடன் கட்சிக்குக் கொடுத்து விட்டார் இ.எம்.எஸ். கடைசிவரை விட்டுக் கொடுக்காமல் அவரது பொது வாழ்வில் இணைந்து நின்றார் அவரது மனைவி.
அப்போது நடைபெற்ற மாகாண சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட இ.எம்.எஸ். தோல்வியடைந்தார். எனினும் கட்சிக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் இருந்தது.
1946ஆம் ஆண்டு மாப்ளா கலவரத்தின் 25ஆவது நினைவு ஆண்டு. அப்போது கட்சி வெளியிட்ட ‘அறைகூவலும் எச்சரிக்கையும்’ என்ற பிரசுரம் பிரச்சனையைக் கிளப்பியது. இ.எம்.எஸ்சும், ஏ.கே.கோபாலனும் கைது செய்யப்பட்டனர். அப்போது ஜாமீன் கொடுக்கப்பட்டு வெளிவந்தாலும், 1947 ஜனவரியில் அம்மை நோய் பாதிக்கப்பட்டிருந்த இ.எம்.எஸ், அவரது மனைவி இரண்டாவது பிரசவத்துக்காகக் காத்திருக்கையில் கைது செய்யப்பட்டார். சிறைக்குச் சென்ற சில மணி நேரத்துக்குள் அவருக்கு இரண்டாவதாக மகன் பிறந்தான். அவர்கள் சிறையில் இருக்கும்போது தேசாபிமானி நடத்த ஏராளமான பிணையை அரசு கேட்க மக்கள் ஒன்றிணைந்து அதைக் கட்டிப் பத்திரிகையைக் காப்பாற்றினர்.
சுதந்திரம் அடைவதற்கு முன் சில வருடங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஏராளமான விவசாயிகள் போராட்டங்கள் நாடு முழுவதும் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
நாடு சுதந்திரம் பெற்று பிரிவினையால் வகுப்புவாத வன்முறை வெடித்த போதும் மக்கள் ஒற்றுமைக்காக கம்யூனிஸ்டுகள் உயிரைப் பணயம் வைத்துப் போராடினர். 1948 கல்கத்தா மாநாட்டில் நேரு அரசைத் தூக்கியெறிவது என்ற முடிவால் கடும் தாக்குதல் தொடுக்கப்பட, இ.எம்.எஸ். மீண்டும் தலைமறைவானார்.
இந்த முடிவு குறித்துப் பெரும் உட்கட்சிப் போராட்டம் நடைபெற்றபோது, அதைச் சரி செய்ய ஒரு குழு சோவியத் சென்று ஸ்டாலினைச் சந்தித்தது. அப்போது மத்தியக்குழு அலுவலகத்தின் பொறுப்பை இ.எம்.எஸ். ஏற்றார். இக்காலத்தை கேரளக் கட்சியின் கடந்த காலத்தைப் பரிசீலிப்பதற்கு அவர் பயன்படுத்திக் கொண்டார். அவர் எழுதிய பழைய பிரசுரங்களைத் திருத்தி எழுதினார். பின்னர் நடந்த விசேஷ மாநாடு பழைய முடிவைக் கைவிட்டது. கட்சி மீதான தடை விலகியது. கட்சி முதல் தேர்தலுக்குத் தயாரானது.
இ.எம்.எஸ்.சின் இரண்டாவது தலைமறைவு வாழ்க்கை நான்கு ஆண்டுகளுக்குப் பின் முடிவுக்கு வந்தது. எனினும் இச்சமயத்தில் அவருடன் சில சமயங்களில் மனைவியும் பிள்ளையும் சேர்ந்திருந்தனர்.
சென்னை சட்டமன்றத் தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட மனு செய்தபோது அவர் தலைமறைவாக இருந்ததால் மனைவி அவர் சார்பில் மனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் பெருமளவில் தோற்றாலும், இ.எம்.எஸ். தோல்வியடைந்தது அவர்களுக்கு வெற்றியாக இருந்தது.
அதன் காரணமாக அவர் தன் குடும்பத்துடன் சென்னைக்கும் பின் தில்லிக்கும் சென்று கட்சிப் பணியில் ஈடுபட்டார். பிறகு கேரளத்தில் கட்சி 1957இல் வெற்றி பெற்றபோது மீண்டும் குடும்பத்துடன் கேரளம் திரும்பினார்.
மத்தியக்குழு அலுவலகத்தில் பணியாற்றியபோதே பல சமயங்கள் அவர் திருவாங்கூர் கொச்சி சென்று கட்சிப் பணிக்கு வழிகாட்டினார். கட்சிப் பத்திரிகை நடத்துவது, கிளர்ச்சிகளுக்கு வழிகாட்டுவது, பிரசுரங்கள் வெளியிடுவது, மற்ற கட்சிகளுடன் தொடர்பு எனப் பல வேலைகளை அவர் செய்தார். அஜய் கோஷ் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்காக சோவியத் சென்றபோது தாற்காலிகப் பொதுச்செயலாளராகவும் செயல்பட்டார்.
அங்கு பல நாடுகளின் தலைவர்களையும் சந்தித்தது மார்க்சிய லெனினியம் பற்றிய அவரது அறிவைப் பரந்ததாக்கியது. அதன் அனுபவங்களைக் கொண்டு பல பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதினார். அதில் மகாத்மாவும் அவரது இசமும் என்ற தொடர் கட்டுரைகள் முக்கியமானவை. பின்னர் அது புத்தகமாகவும் வெளியானது. (தமிழில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது). அது மகாத்மாவைப் பற்றிய நேர்மறை-எதிர்மறைப் பார்வைகளை முன்வைத்தது. பல நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களுக்கு அந்நூல் உதவியாக இருந்தது. காந்தி தன் இறுதி விருப்பங்கள் நிறைவேறாத நிலையில் மனச்சோர்வுடன் ஒரு வகுப்புவாத வெறியனால் சுடப்பட்டுத் தன் மரணத்தைத் தழுவினார்.
இதற்கிடையில் நடந்த மூன்றாவது மாநாட்டிலும், நான்காவது மாநாட்டிலும் தொடர்ந்து உட்கட்சிப் போராட்டம் கொதித்துக் கொண்டே இருந்தது.
1956 செப்டெம்பரில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் எட்டாவது மாநாட்டுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்ற பிரதிநிதிக் குழுவின் தலைவராக இ.எம்.எஸ். நியமிக்கப்பட்டார். அயல்நாட்டுத் தலைவர்களை முதன்முறையாக நேரடியாகச் சந்தித்தார் இ.எம்.எஸ். பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடனும் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடந்தது. அந்தக் காங்கிரசில்தான் கலாசாரப் புரட்சிக்கான விதை ஊன்றப்பட்டது. அது இந்தியக் கட்சியையும் பாதித்தது.
அப்போது சூ என் லாய் இந்தியா வருவதாக இருந்தது. இந்த வருகையை காங்கிரஸ் தன் தேர்தலுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் என்று அஞ்சிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அவரை இப்போது வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளுமாறு இ.எம்.எஸ்.சைப் பணித்திருந்தது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்தார். இது கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைபாட்டில் இருந்த வேறுபாடுகளை வெளிப்படுத்துகிறது என்கிறார் இ.எம்.எஸ்.
‘சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி’ என்ற நூலையும், ‘உட்கட்சிப் போராட்டம் நடத்துவது எப்படி’ என்ற நூலையும் எழுதிய லியூசோஷியைச் சந்தித்து அவரிடம் விவாதித்தார். அப்புத்தகங்கள் அவரை மிகவும் கவர்ந்திருந்தன. வலதுசாரித் திரிபும் இடதுசாரித் திரிபும் தம் கட்சியையும் தாக்கும் என்று அஞ்சினார் இ.எம்.எஸ். அதைப் பற்றிக் கூட்டாக விவாதிக்க கமிஷன் ஏற்பாடு செய்யவும் தயார் என்றார்.
மாநாடு முடிந்ததும் அக்டோபர் 1 அன்று நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டம் அவரை மிகவும் ஆகர்ஷித்தது. அந்தப் பயணத்தில் சோசலிச அரசுக்கான முதல் ஜன்னல் திறந்திருக்கும் மகிழ்ச்சியை அடைந்தார் இ.எம்.எஸ்.
திரும்பியதும் கேரளத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அச்சமயத்தில் பொதுச்செயலாளர் அஜய்கோஷ் தவறான தகவல்களால் விடுத்த தவறான அறிக்கைகள் ஊழியர்களிடம் சோர்வை உண்டாக்கியதால் இ.எம்.எஸ். நேரில் சென்று அதை மறுக்க வேண்டியிருந்தது. அத்தேர்தலில் சிறு பெரும்பான்மை பெற்று முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் இ.எம்.எஸ்.
கவர்னர் மூலம் முதல் தடங்கலை உண்டாக்கிய காங்கிரஸ் பின்னர் ஊடகங்களையும் அரசுக்கு எதிராகக் களமிறக்கியது. பிரதமர் நேரு ஒருபுறம் சகவாழ்வு வாழ்வதாகக் கூறிக் கொண்டே கம்யூனிஸ்ட் அரசைக் கண்டித்தார். அதை காங்கிரஸ் தலைவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.
எனினும் அரசு ஏழைகளுக்கு ஆதரவாக இருந்து ஜனநாயகப் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்றது. தேர்தல் அறிக்கையில் கூறியது போல், காங்கிரஸ் ஏட்டளவில் வைத்திருந்த நலத்திட்டங்களை அமல்படுத்தும் வேலையில் இறங்கியது இ.எம்.எஸ். அரசு. அதுதான் அவர் செய்த மிகப்பெரிய ‘பாவம்’.
(தொடரும்)
ஆதாரம்:
1.ஒரு இந்திய கம்யூனிஸ்டின் நினைவலைகள் – இ.எம்.எஸ்.
2. இ.எம்.எஸ். நூற்றாண்டு நினைவு மலர் – தீக்கதிர்
3. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்கள் – என்.ராமகிருஷ்ணன்