நிலம், குடியிருப்பு என்று அனைத்து வகை இடங்களிலிருந்தும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையைத் தடை செய்து ஓர் அவசரச் சட்டத்தை அரசு பிரகடனம் செய்தது. இதனால் நிலப்பிரபுக்களின் முதுகெலும்பு முறியத் தொடங்கியது. வேலைநிறுத்தம் செய்வோருக்கு எதிராகப் போலீசைப் பயன்படுத்தும் முறை நிறுத்தப்பட்டது.
மத்திய அரசின் உதவி இல்லாத நிலையில் தனியார் முதலீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. தனியார் பள்ளிகள் ஆசிரியர்களையும், பிற ஊழியர்களையும் சுரண்டுவதைத் தடுக்க புதிய கல்விக்கொள்கை அமலானது.
பாதிக்கப்பட்ட சுரண்டல்காரர்கள் மத்திய அரசின் ஆசியுடன் ‘விமோசன சமரத்தில்’ இறங்கினர். இதைப் பயன்படுத்திக் கொண்டு 28 மாதங்களில் அரசைக் கலைத்தது மத்தியிலிருந்த நேரு தலைமையிலான காங்கிரஸ்.
இந்நிலையில் நாடு முழுவதும் இ.எம்.எஸ் பயணம் மேற்கொண்டு ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து உரையாற்றவேண்டும் என்று கட்சி முடிவெடுத்தது. அவர் அதனைச் செயல்படுத்தினார். அப்போது இந்திய – சீன முரண்பாடு வெடித்ததால் அதைக் கட்சிமீது திருப்பிவிட்டது காங்கிரஸ். அதற்கும் இ.எம்.எஸ். பதில் சொல்ல வேண்டியிருந்தது. இந்நிலையில் கேரளத்தில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளில் 40% பெற்றது கட்சி.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியை நவீனத் திரிபுவாதம் என்று குற்றம் சாட்ட, இதை உள்நாட்டில் பயன்படுத்தியது காங்கிரஸ். உலக நிலைமை குறித்து சோவியத் கட்சியின் நிர்ணயிப்போடு முழுவதும் ஒத்துப்போகாத இ.எம்.எஸ். போன்றோர் சீன ஆதரவு என்று முத்திரை குத்தப்பட்டனர்.
இந்நிலையில் பொதுச்செயலாளர் அஜய் கோஷ் மரணமடைய அப்பொறுப்பை ஏற்குமாறு இ.எம்.எஸ்.சிடம் கோரினர். எதிர்த்தரப்பில் இருந்த டாங்கேவுக்காக சேர்மேன் என்ற பதவி உருவாக்கப்பட்டு, இ.எம்.எஸ். பொதுச்செயலாளரானார். இந்த ஒட்டு வேலை நீடிக்கவில்லை என்றாலும் மற்ற இடதுசாரிகள் ராஜினாமா செய்தாலும், இ.எம்.எஸ். தொடர்ந்தார்.
எனினும் அவர் சீன ஏஜெண்ட் என்று முத்திரை குத்தப்பட்டு மற்ற இடதுசாரிகளுடன் கைது செய்யப்பட்டார். ஒரு வாரம் கழித்து விடுதலை செய்யப்பட்டார். வலதுசாரிகள் போரை ஆதரிக்க, இடதுசாரிகள் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்றனர். சீன ஆக்கிரமிப்பு குறித்து மற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எடுத்துக் கூற டாங்கே சென்றபோது அதில் ஒப்புதலின்றி அவர் கையெழுத்திட வேண்டியிருந்தது. மற்ற தோழர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அறிக்கை விடுவதிலிருந்து அவர் தடுக்கப்பட்டார். சுருக்கமாகச் சொல்வதானால் ஒரு பொம்மையாக அவர் செயல்பட வேண்டியிருந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற ஒரு வேலையைத் தவிர வேறு வேலை இல்லாததால் உட்கட்சிப் போராட்டத்தில் தனது பங்கைச் செய்ய முடிவெடுத்து ஒரு நூலை எழுதினார் இ.எம்.எஸ். இந்நிலையில் அவரை இரண்டு மாதம் ஓய்வெடுக்க வருமாறு சோவியத் அழைக்க, இ.எம்.எஸ் தனது மனைவியோடு அங்கு சென்றார். அங்கு கல்வியாளர்கள், இந்திய ஆராய்ச்சியாளர்களைச் சந்தித்து விவாதித்தார். கட்சி அமைப்பிலும் விவாதித்தார்.
இந்தியாவிலோ வலதுசாரிகள் இடதுசாரிகள் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துக் கொண்டிருந்தனர். இ.எம்.எஸ். அதை ஏற்கவில்லை. அப்போது 1920இல் டாங்கே ஆங்கிலேய அரசுக்கு எழுதிய கடிதம் ஒன்று வெளிவந்தது. அதை விவாதிக்க வேண்டுமென்று இ.எம்.எஸ். உள்ளிட்ட இடதுசாரிகள் கோரினர். டாங்கே அக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கக் கூடாது என்றும் கோரினர். அவை ஏற்கப்படாததால் 32 தோழர்கள் வெளிநடப்புச் செய்தனர். மற்றவர்கள் இவர்களைத் தாற்காலிக நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றினர். சி.பி.ஐ.யிலிருந்து சி.பி.ஐ.(எம்.) உருவானது.
இப்போது இ.எம்.எஸ்.சும்., ஏ.கே.கோபாலனும் கேரளம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிலைமையை விளக்கினர். சோவியத் கட்சியும் இந்திய அரசும் வலதுசாரிகளை ஆதரிக்க, இவர்கள் எந்தச் சொத்தும், ஆதரவும் இல்லாத நிலையில் இருந்தனர். ஏழாவது காங்கிரசில் தோன்றிய புதிய கட்சி தனது நிலைபாட்டில் நிற்பதைக் கண்ட இ.எம்.எஸ். திருப்தி அடைந்தார்.
கட்சி பிளவுபட்ட நிலையில் கேரளத் தேர்தல் வந்தது. அப்போது மீண்டும் மத்திய அரசு சீன ஏஜெண்டுகள் என்ற பழைய பல்லவியைப் பாடி தலைவர்களைக் கைது செய்தது. அதில் அதிர்ஷ்டவசமாகக் கைது செய்யப்படாத இ.எம்.எஸ்.சின் மீது முழுப்பொறுப்பும் விழுந்தது.
சி.பி.ஐ(மார்க்சிஸ்ட்) என்ற பெயரைத் தேர்தல் கமிஷன் தான் கொடுத்தது என்ற சுவையான செய்தியைப் பதிவு செய்துள்ளார் இ.எம்.எஸ். ஏனென்றால் பழைய கட்சியிலிருந்து புதியதைப் பிரித்துக் காட்ட வேண்டியிருந்தது. அதில் சாதனையாக நிறைய தொகுதிகளை வென்றது கட்சி. இ.எம்.எஸ். ஆளுநரைச் சந்தித்துச் சிறையில் இருப்பவர்களை விடுவித்துத் தமக்கு ஆட்சி அமைக்க அனுமதி அளிக்குமாறு கோரினார்.
ஆனால் ஆளுநரோ சட்டமன்றத்தையே கலைத்து விட்டார். எனவே சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டிய நிலை உள்ளதைப் புரிந்து கொண்ட இ.எம்.எஸ். நாடு முழுவதும் இதற்காகப் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் இந்தியா போர் மூளவும், மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானது கட்சி. பின்னர் பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி நம்பூதிரிபாட் ஏன் பாகிஸ்தானுக்குப் போகக் கூடாது என்று கேட்டார்! சில மாதங்கள் வெளியில் இருந்த இ.எம்.எஸ். கடும் பிரசாரத்தை மேற்கொண்டார். பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு என்றும் வலியுறுத்தினார்.
1967இல் நடைபெற்ற கேரளத் தேர்தலில் மார்க்சிஸ்ட் தலைமையிலான ஐக்கிய முன்னணி வெற்றி பெற, இ.எம்.எஸ். மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970இல் இந்த ஆட்சியும் வீழ்த்தப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அச்சுதமேனன் தலைமையில் புதிய அரசு அமைந்தது.
இ.எம்.எஸ். 1978ஆம் ஆண்டு ஜலந்தரில் நடைபெற்ற மாநாட்டில் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்காலத்தில் அவரது முயற்சியால் கட்சியின் செல்வாக்குப் பெரிதளவு உலக அரங்கில் அதிகரித்தது. முதலில் சிபிஐ(எம்)மைத் தள்ளி வைத்த பல உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதனுடன் உறவு பூண்டன. பல நாடுகளுக்கும் சிபிஎம் குழு பயணம் மேற்கொண்டபோது அதில் இ.எம்.எஸ். சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இக்காலத்தில் பஞ்சாப் பிரச்சினை, மொழிப் பிரச்சினை, பாபர் மசூதி இடிப்பு, மத்திய மாநில உறவுகள், அந்நிய மூலதன ஊடுருவல் எனப் பல பிரச்சனைகளில் இந்தியா கொந்தளித்துக்கொண்டிருந்தது. ஒவ்வொருமுறையும் கட்சி சரியான நிலையெடுப்பதில் இ.எம்.எஸ். முக்கியப் பங்காற்றினார். எப்போதும் கட்சியில் அவர் உட்கட்சி ஜனநாயகத்தையும் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டையும் உயர்த்திப் பிடித்தார்.
1992இல் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் அவர் வயது மூப்பு காரணமாகத் தனது பொறுப்பைத் துறந்தார். அப்போது புதிய பொதுச் செயலாளராக ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் பின் இ.எம்.எஸ். தனக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர் பணியில் ஈடுபட்டார். முன்பும், சரி, இப்போதும் சரி, அவர் மிகவும் முக்கியமான விஷயங்கள் குறித்துப் பல கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார். தேசாபிமானியில் தினமும் கட்டுரை எழுதினார். சிந்தா வார இதழ், ஃப்ரண்ட்லைன் மாத இதழ் ஆகியவற்றுக்குத் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். (தமிழிலும் நூலாக வெளிவந்துள்ளது). தனது நெடிய பயணத்தில் ஆயிரம் கட்டுரைகளுக்கு மேல் எழுதியுள்ளார் இ.எம்.எஸ்.
கேரள விவசாய இயக்கம், மகாத்மா, நேரு, வேதங்களின் நாடு, தேசிய ஒருமைப்பாட்டுப் பிரச்சினைகள், இந்தியாவில் சோசலிச மாதிரிப் பொருளாதாரமும் அரசியலும், மார்க்சியமும் இலக்கியமும், ஒரு இந்தியக் கம்யூனிஸ்டின் நினைவலைகள், நான் எவ்வாறு கம்யூனிஸ்ட் ஆனேன் எனப் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒரு முன்னோடித் தத்துவவியலாளராகத் திகழ்ந்தார் இ.எம்.எஸ்.
தம் குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிக்க கிடைத்த வாய்ப்பை முழுவதும் பயன்படுத்திக்கொண்டார். அவர்களது அன்பான அணைப்பில் அவர் இருந்தார்.
1997இலிலிருந்து அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டே வந்தது. 1998 மார்ச் 19 அன்று ஒரு கட்டுரையைச் சொல்லிக் கொண்டே வர தோழர் வேணு எழுதிக் கொண்டிருந்தார். உடல்நிலை மோசடைந்தபோதும் சமாளித்தபடி அந்தக் கட்டுரையை முடித்துவிட்டு அடுத்ததைச் சொல்லத் தொடங்கிய போது நிலைமை மோசமடைந்தது. விரைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தனக்கு விருப்பமான எழுத்துப் பணியைச் செய்து கொண்டிருந்த போதே தன் உயிரைத் துறந்துவிட்டார் இ.எம்.எஸ்.
சி.பி.ஐ.எம்.மின் பரம எதிரியான பாஜகவின் தலைவரும் அப்போதைய பிரதமருமான ஏ.பி.வாஜ்பாய் தன் இரங்கல் செய்தியில் தெரிவித்தார்: ‘இ.எம்.எஸ். முனிவர் பரம்பரையின் ஒரு தொடர்ச்சியாவார். சிந்தனையின், செயலின் சங்கமம். அவர் ஓர் இடைவிடாத போராளி.’
(தொடரும்)
ஆதாரம்:
1. ஒரு இந்திய கம்யூனிஸ்டின் நினைவலைகள் – இ.எம்.எஸ்.
2. இ.எம்.எஸ். நூற்றாண்டு நினைவு மலர் – தீக்கதிர்
3. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்கள் – என்.ராமகிருஷ்ணன்