Skip to content
Home » தோழர்கள் #22 – ஜீவா எனும் மானுடர்

தோழர்கள் #22 – ஜீவா எனும் மானுடர்

ஜீவா எனும் மானுடர்

வடசென்னையில் இருக்கும் ஒரு முக்கியமான ரயில் நிறுத்தம் வியாசர்பாடி ஜீவா. லட்சக்கணக்கான மக்கள் தினசரி அதைக் கடந்து சென்றாலும், எத்தனை பேர் அந்த மாமனிதன் ஜீவாவைப் பற்றி நினைத்திருப்பார்கள்? அந்த மாமனிதனின் சமாதி கூட சரியாகப் பராமரிக்காமல் இருந்ததை ஒரு பத்திரிகை சில ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்தது. மூடியிருந்த அந்தக் கதவுக்கு இடையில்தான் நானும் பார்த்தேன்.

ஒருமுறை பேருந்து நிலையத்தில் ஒரு மனிதர் மயங்கி விழுந்துவிட, அருகில் இருந்த சில தோழர்கள் அவருக்கு தேநீர் கொடுத்து ஆசுவாசப்படுத்துகிறார்கள். அவர் கையில் ஒரு பையையும் ஜாக்கிரதையாக வைத்திருக்கிறார். ஏன் மயங்கி விழுந்தார் என மற்றவர்கள் கேட்க, நான் சாப்பிடவில்லை என்கிறார் அவர். கையில் இருக்கும் பையில்தான் நிறையப் பணம் இருக்கிறதே, சாப்பிட்டால் என்ன என்று கேட்க, அவர் சொல்கிறார். ‘இது கட்சிப் பணம். இதை எடுக்க முடியாது’. அந்த நேர்மைக்குச் சொந்தக்காரர்தான் ஜீவா.

நாஞ்சில் நாட்டில் பூதப்பாண்டி எனும் ஊரில் 21 ஆகஸ்ட் 1907 அன்று ஒரு ஆத்திகரும் நல்மனம் படைத்தவருமான விவசாயி பட்டன் பிள்ளை என்பவருக்கும் உமையம்மைக்கும் பிறந்தார் ஜீவா. அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சொரிமுத்து. மூன்று பிள்ளைகள் முதலில் இறந்து விட, நான்காவதாகப் பிறந்த இவருக்கு மூக்குக் குத்தி மூக்காண்டி என்ற பெயரையும் இட்டனர்.

படிப்பிலும் விளையாட்டிலும் சுட்டியாகத் திகழ்ந்தார் ஜீவா. துணிச்சல்காரராகவும் இருந்தார். மிகவும் பக்தியோடு இருந்த அவருக்குக் காலையில் எழுந்து குளித்துக் கோவிலுக்குப் போவது மிகவும் பிடித்தமானது. அவர் உருவாக்கிய கால்பந்து அணியின் பெயர் விவேகானந்தா புட்பால் டீம்.

இந்தியாவையே குலுக்கிக் கொண்டிருந்த சுதந்திரப் போராட்டம் இந்த மாணவனையும் ஈர்த்தது. காந்தியை மிகவும் விரும்பினார் ஜீவா. அவர் பெயரில் ஒரு வாசகசாலை ஏற்படுத்தினார், நாடகங்கள் நடத்தினார், சமூக சேவையிலும் ஈடுபட்டார்.

அப்போதே பாடல் இயற்றுவதில் திறமையை வெளிப்படுத்தித் தனது கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சென்றார். ஐந்தாம் பாரத்தில் படிக்கும்போதே அவர் எழுதியவை எண்பது வெண்பாக்கள். இராட்டிண வெண்பா நாற்பது, கதர் வெண்பா நாற்பது. வாயடைத்துப் போன தமிழாசிரியர் மனமகிழ்ந்து வாழ்த்தினார். இக்காலத்தில் புத்தகங்களில் ஆழ்ந்த ஜீவா தமிழ் இலக்கியம் முதல் தலைவர்கள் வாழ்க்கை வரலாறுகள், வேதாந்தம் வரை தேடித்தேடிப் படித்தார்.

காந்திஜி தொடங்கிய தீண்டாமை ஒழிப்பிலும் அவர் தீவீரமாகக் கலந்து கொண்டார். பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டு அடி உதை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார். தனது புட்பால் டீமில் தன்னோடு ஜோசப் பூதலிங்கம் என்ற தாழ்த்தப்பட்ட மாணவனையும் சேர்த்துக் கொண்டு ஊருக்குள் செல்ல, கொதித்துப் போனார்கள் வைதீகர்கள். அப்பா அதைக் கண்டிக்க முழுமூச்சாகத் தன் தகப்பனை எதிர்த்தார் ஜீவா. அப்பா அவர் கொள்கையை விடச்சொல்ல, வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் ஜீவா.

அதற்கு முன் இறுதி வகுப்பில் இருந்தபோது அவரது தாயார் இறந்து விட, அவருக்குக் கொள்ளி வைக்க வேண்டுமென்றால் கதர்த்துணியில் வேட்டி கட்டினால்தான் ஈமச்சடங்கு செய்வேன் என்று பிடிவாதமாகக் கூற, எங்கும் கதர் கிடைக்காத நிலையில், வேறு வழியின்றி அவரது இளைய சகோதரர்தான் சடங்குகளைச் செய்தார். அந்த அளவுக்குக் கொள்கைப் பிடிப்புள்ளவர் ஜீவா.

முழு நேரமாகத் தீண்டாமை ஒழிப்பில் ஈடுபட்ட ஜீவா சுசீந்திரம் கோவிலுக்குள் தீண்டப்படாதவர்களை அழைத்துச் செல்ல, வைதீகர்கள் அவர்மீது காரி உமிழ்ந்தனர், தடியால் அடித்தனர். ஆனால் ஜீவா இதையெல்லாம் சகித்துக் கொண்டு, ‘வழி விடுவீர்’ என்று தான் எழுதிய பாடலைப் பாடிக் கொண்டு தடைகளை மீறிச் சென்றார். அப்பாடல் வீதியெல்லாம் எதிரொலித்தது.

அச்சமயத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான வ.வே.சு.ஐயர் சேரன்மாதேவியில் ஓர் ஆசிரமம் நடத்தி வந்தார். ஆனால் அங்கும்கூட சாதி அடிப்படையில் தனித்தனி சாப்பாடு போடப்பட்டது. இந்தக் கொடுமையை எதிர்த்து பெரியார் உள்ளிட்டோர் போராடி வந்தனர். தீண்டாமை வழக்கத்தால் மனம் நொந்த ஜீவா காரைக்குடிக்கு அருகில் சிராவயல் என்ற கிராமத்திற்குச் சென்று ‘காந்தி ஆசிரமம்’ என்ற ஒன்றைப் புதிதாகத் தொடங்கி அதன் பொதுச்செயலாளரானார். கும்பலிங்கம் என்பவர் தலைவர்.

சாதி வேற்றுமையின்றி, பாலின வேற்றுமையின்றி அனைவரும் சரிசமமாக அங்கு நடத்தப்பட்டனர். இரவுப் பள்ளிக்கூடங்களும், நூல் நூற்கும் நிலையங்களும் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளில் ஏற்படுத்தப்பட்டன.

அங்கு ஒருமுறை வந்த வ.உ.சி., ஆண்களும், பெண்களுடன் நூல் நூற்பதைக் கண்டு முட்டாள்தனம் என்று பொங்கினார். அதை எதிர்கொண்ட ஜீவா பெண்களும் வீரத்துக்குக் குறைந்தவர்களல்ல, வாளேந்த வேண்டுமெனில் அவர்களும் ஏந்துவர். எனவே இருவரையும் பிரித்து பெண்கள்தான் நூல் நூற்க வேண்டும் என்பது தவறு என்று வாதிட்டார். வ.உ.சி. கண்ணியத்துடன் தமது கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டு அன்று மாலை நடைபெற்ற கூட்டத்துக்குத் தலைமையேற்றார். ஜீவா பெண் விடுதலை என்ற தலைப்பில் நீண்ட நேரம் உரையாற்ற, பாரதி கண்ட கனவை நனவாக்கியதாக அவரை மிகவும் பாராட்டினார் வ.உ.சி.

1927இல் இந்த ஆசிரமம் குறித்து அறிந்த காந்தி அங்கு வருகை புரிந்தார். முழுதும் சுற்றிப் பார்த்து மகிழ்ந்த காந்தி ‘ஜீவா உங்களுக்கு என்ன சொத்து இருக்கிறது?’ என்று கேட்டார். ஜீவாவோ, ‘இந்தியாதான் என் சொத்து’ என்றார். காந்தி, ‘இல்லை, இல்லை, நீங்கள்தான் இந்தியாவின் சொத்து’ என்று சொல்லி ஆரத்தழுவினார்.

அப்போது காந்தியிடம் ஜீவா வர்ணாசிரம தர்மத்தைப் பற்றிக் கேள்வி கேட்க, அவர் அதை ஏற்பது போல் பதிலளிக்கவும், ஜீவா அந்தப் பேச்சை நிறுத்திக் கொண்டார்.

ஆசிரமத்தில் ஏராளமான தமிழ் நூல்களைக் கற்ற ஜீவா, தீவிரத் தனித்தமிழ் ஆர்வலராகி, ‘உயிர் இன்பன்’ என்று பெயரை மாற்றிக் கொண்டார். வ.ரா உட்படப் பலரும் அவரது தமிழ் உரையைப் பாராட்டினர். தனித்தமிழ் இயக்கத்தின் முகமாக இருந்த மறைமலை அடிகளை ஒருமுறை பார்க்கச் சென்றபோது, எதிர்பார்ப்புக்கு விரோதமாக அவர் பல பிற மொழிச் சொற்களைக் கலப்பதைக் கண்டார். அளவு கடந்த தனித்தமிழ்ப் பற்று தவறானது என்று புரிந்து கொண்டு மீண்டும் ஜீவாவாக மாறினார்.

அக்காலத்தில் மூடப்பழக்கங்கள், பெண்ணடிமைத்தனம், சாதிக்கொடுமை ஆகியவற்றை எதிர்த்து பெரியார் சுயமரியாதை இயக்கம் கண்டு தீவீரமாக ஈடுபட்டிருந்தார். அதில் இணைந்தார் ஜீவா. ஆசிரமத் தலைவருடன் முரண்பட்டதால் அங்கிருந்து வெளியேறிவிட்டார். பின்னர் நாச்சியாபுரம் என்ற ஊரில் இன்னொரு ஆசிரமம் தொடங்கினார்.

அச்சமயத்தில் காங்கிரஸ் சமூகச் சீர்திருத்தத்தில் அக்கறை காட்டாதையும், சுயமரியாதை இயக்கம் சுதந்திரத்தில் அக்கறை காட்டாததையும் கண்டு சிந்தனை வயப்பட்டார் ஜீவா. அப்போதுதான் கம்யூனிஸ்டுகள் மீதான மீரட் சதிவழக்குகள் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருந்தன.

அந்தக் காலகட்டத்தில் சத்தியாகிரகம் வர, ஜீவா பங்கேற்க வேண்டாம் என அவருடன் இருந்தவர்கள் கூறினர். எனவே ஆசிரமத்தைக் கவனித்துக் கொள்ள அவர் அங்கு தங்கினார். எனினும் அடக்குமுறை அதிகமாகவும் அவரும் குதித்தார்.

அதைக் கண்டித்து நடந்த ஓர் ஆலோசனைக் கூட்டத்தில் சாதி, மதத்தை எதிர்த்து உணர்ச்சி ததும்பப் பேசினார். ஊர்க்கட்டுப்பாட்டை மீறி ஊர்வலமும் சென்றார். அதைக் கண்டு அவரது நண்பர் அவரைச் சராமாரியாக வெட்டி விட்டார். எனினும், வெட்டிய நண்பரைக் காப்பாற்றி விட்டுப் பல வாரங்கள் மருத்துவமனையில் கிடந்தார் ஜீவா. கடைசிவரை அந்தத் தழும்பு மறையவில்லை.

1932இல் காரைக்குடியில் போராட்டக்குழு தலைவராகி சத்தியாகிரகத்தில் கைது செய்யப்பட்டு ஒருவருடம் கடுங்காவல் தண்டனை பெற்றார். சிறையில் வங்கப் புரட்சியாளர்களையும் லாகூர் சதிவழக்குக் கைதிகளையும் சந்தித்து கம்யூனிசம் பற்றித் தீவீர விவாதம் செய்து அதை அறிந்து கொண்டார். ஏற்கெனவே அவரிடம் இருந்த கம்யூனிசக் கருத்துகள் வேர் பிடித்தன.

1933இல் தன்னை கம்யூனிஸ்ட் என்று காங்கிரஸ் மாநாட்டிலேயே பிரகடனப்படுத்திக் கொண்ட தோழர் சிங்காரவேலு சுயமரியாதை இயக்கத்திலும் ஈடுபட்டார். அவருடன் தொடர்பு கொண்ட ஜீவா அவரது விரிந்த நூலகத்தைப் பயன்படுத்தி நிறையப் படித்தார்.

பெரியாரும் சோவியத்தை நேரில் பார்த்துத் திரும்பினார். சுயமரியாதைக் கூட்டங்களில் கம்யூனிசமும் சோசலிசமும் பேசப்பட்டன. ஜீவா குடியரசு, பகுத்தறிவு, புரட்சி ஆகிய பத்திரிகைகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். தமிழகத்தின் தரமான இலக்கியங்களை முன்னெடுத்து வந்த தாமரை இதழைக் கொண்டு வந்தவர் ஜீவா.

தொடரும்

ஆதாரம்:
1. தோழர் ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு – எம்.இஸ்மத்பாட்சா
2. ஜீவா- வெளிச்சத்தின் விலாசம் – புதுவை ரா ரஜனி

பகிர:
கி. ரமேஷ்

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.View Author posts

1 thought on “தோழர்கள் #22 – ஜீவா எனும் மானுடர்”

  1. Super Comrade, Congratulations , send Com. EMS book on நான் எவ்வாறு கம்யூணிஸ்ட ஆனேன். Book com. We need a copy for Library.

    Rajendiran R 9444006906.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *