Skip to content
Home » தோழர்கள் #23 – முழுமையான கம்யூனிஸ்ட்

தோழர்கள் #23 – முழுமையான கம்யூனிஸ்ட்

ஜீவா

சுயமரியாதை இயக்கத்திலும் கம்யூனிசத்திலும் ஈடுபட்ட ஜீவாவுக்கு காந்தி மேல் இருந்த பற்று விரைவாக விலகிக்கொண்டது. முன்பு அவரை எந்த அளவுக்கு ஆதரித்தாரோ, அதே அளவுக்கு அவரைக் கடுமையாக எதிர்க்கத் தொடங்கினார் ஜீவா. அவரது அனைத்துக் கொள்கைகளையும் எதிர்த்து அவை எந்த வகையிலும் தீர்வாகாது என்று தீர்மானமாக நின்றார் ஜீவா.

1934ஆம் ஆண்டில் மத்திய சட்டசபைகளுக்குத் தேர்தல் வர, பெரியாருக்கும் ஜீவாவுக்கும் இடையிலான விரிசல் பெரிதானது. பெரியார் சமூகச் சீர்திருத்தத்தைத் தாண்டி வரத் தயங்கி, சமதர்மக் கொள்கையைக் கைவிடவும் செய்தார். ஜீவாவோ சமூகப் புரட்சியை நோக்கி முன்னேற வேண்டுமென்ற நிலையெடுத்தார்.

சமதர்மம் என்ற பத்திரிகையைத் தொடங்கி அதை ஜோலார்பேட்டையிலிருந்து பிரசுரித்தார். புரட்சிவீரர் பகத்சிங்கின் ‘நான் ஏன் நாத்திகனானேன்?’ என்ற புத்தகத்தை மொழிபெயர்த்துத் தமிழில் வெளியிட, அவரைச் சிறையில் தள்ளியது பிரிட்டிஷ் அரசு. பெரியார் அதற்காக ஜீவா மன்னிப்புக் கேட்டு வெளியே வர வேண்டுமெனக் கட்டளையிட, வேறு வழியின்றி அவ்வாறே மனமில்லாமல் செய்தார் ஜீவா.

1935இல் திருத்துரைப்பூண்டியில் நடந்த மாநாட்டில் விரிசல் பகிரங்கமாக வெடித்தது. ஜீவா கடும் கேள்விகளை எழுப்பிவிட்டுப் பல வாலிபர்களுடன் வெளியேறி சுயமரியாதை சோஷலிஸ்ட் கட்சியை அமைத்தார்.

அப்போதுதான் அமீர் ஹைதர்கான் சென்னைக்கு வந்து கம்யூனிஸ்ட் கட்சியை அதிகாரபூர்வமாகத் தொடங்கும் முயற்சியில் இறங்கினார். அவர் தொடங்கிய இளம் கம்யூனிஸ்டுகள் கழகத்தின் மீது அரசு தாக்குதல் தொடுக்க அவர்களைத் திரட்டி ஏ.எஸ்.கே.அய்யங்காரும், சுந்தரய்யாவும் தொழிலாளர் பாதுகாப்புச் சங்கத்தை ஏற்படுத்த, அதனுடன் தொடர்பு கொண்டார் ஜீவா.

அதன் மாநாடு 1935இல் சென்னையில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட எஸ்.வி.காட்டே அவரைக் கம்யூனிஸ்ட் கட்சியின்பால் இழுத்தார். தனது கொள்கைகளுடன் அக்கொள்கைகள் முழுவதும் பொருந்துவதைக் கண்ட ஜீவா, முழுமையான கம்யூனிஸ்டாக மாறினார். எனினும் வெளியே சோஷலிஸ்டாகத்தான் அறியப்பட்டிருந்தார்.

1935இல் காங்கிரசில் இருந்த இடதுசாரிகளைத் திரட்டி காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியாகப் பணிபுரிவது என்று கம்யூனிஸ்டுகள் முடிவெடுத்தனர். அதற்கான தமிழக அமைப்புக்குழுவின் செயலாளராக பி.ஸ்ரீநிவாசராவ் தேர்வாக, கட்சியைத் தமிழகமெங்கும் அமைக்கும் பொறுப்பு ஜீவாவிடம் விடப்பட்டது. முன்னர் 1936இல் தொடங்கிய சுயமரியாதை சோஷலிஸ்ட் கட்சியின் மாநாட்டைத் திருச்சியில் கூட்டிய ஜீவா, அதை அப்படியே கலைத்துவிட்டு காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் இணைத்தார்.

1936இல் சென்னையில் சென்னை மாகாண தொழிற்சங்க காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டபோது ஜீவா அதன் பொதுச்செயலாளரானார். தமிழகக் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும் தேர்வானார். 1937இல் வேலூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் அவர் அதன் கமிட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே 1936இல் தமிழகத்தில் முதல் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளை உருவானது. அதன் முதல் கிளையில் இருந்த எட்டுப் பேரில் ஜீவாவும் ஒருவர்.

அக்காலகட்டத்தில் ஜீவா உள்ளிட்ட இளம் கம்யூனிஸ்டுகள் தீவீரமான தொழிற்சங்கப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் டிராம்வே தொழிலாளர் சங்கம், கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கம், அச்சகத் தொழிலாளர் சங்கம் போன்ற பல சங்கங்களை வழிநடத்திப் பெரும் வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்தினர். அவர்கள் பணி செய்து வந்த அலுவலகம் ஸ்ட்ரைக் ஆபீஸ் என்றே அழைக்கப்பட்டது.

ஜீவா ஒலிபெருக்கி இல்லாத அக்காலத்தில் தனது உரத்த குரலில் உணர்ச்சியூட்டும் உரைகளை நிகழ்த்தி தொழிலாளர்களை வீறு கொண்டெழச் செய்வார். அவரது பேச்சைக் கேட்பதற்கே ஆயிர்க்கணக்கான தொழிலாளர்கள் திரளுவார்கள். அப்படியே பல தொழிற்சங்கங்களை அவர்கள் உருவாக்கினார்கள்.

கோவையில் லட்சுமி மில் போராட்டத்தில் ஜீவாவின் சங்கநாதம் புகழ்பெற்றது. அவர் இயற்றி கோவை ராம்தாஸ் பாடிய பாடல் வரலாற்றுப் புகழ் மிக்கது:

“காலுக்குச் செருப்புமில்லை
கால் வயிற்றுக் கூழுமில்லை
பாழுக் குழைத்தோமடா தோழனே”

என்று தொடங்கும் இப்பாடல் தமிழகத்தில் சுதந்திரப் போராட்டத்துக்கே உத்வேகமூட்டியது.

1939இல் இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. போரை எதிர்த்த கம்யூனிஸ்டுகளை வேட்டையாடியது பிரிட்டிஷ் அரசு. கைதான ஜீவா இரண்டரை மாதங்கள் சிறைப்பட்டார். வெளியே வந்தவர் சுற்றுப்பிரயாணத்தில் ஈடுபட்டார்.

மோப்பம் பிடித்த அரசு அவரைச் சென்னை மாகாணத்தை விட்டே வெளியேற்றியது. புதுச்சேரிக்குச் சென்ற அவரை அங்கிருந்து அந்த அரசு விரட்டியது. பம்பாய்க்குச் செல்ல உத்தரவு வந்தது. அங்கும் ஆறு மாதத்தில் கைது செய்து வேலூர் சிறைக்குக் கொண்டு வந்தது. 1942இல் விடுதலை பெற்று வெளியே வந்தவரை அங்கேயே கைது செய்து திருவாங்கூர் கொண்டு சென்றது அரசு. அப்படியே பத்து நாளில் பூதப்பாண்டிக்குக் கொண்டு சென்று வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டு அவரது வீட்டிலேயே அடைத்தது அரசு.

அப்போது அங்கு காந்தி ஜெயந்தி வர, தாம் அறிந்த காந்தி பற்றி உரையாற்றினார். அவர்மீது மானநஷ்ட வழக்குத் தொடரப்பட்டு ஒரு வருடக் கடுங்காவல் தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. எனினும் மேல்நீதிமன்றம் அதை ரத்து செய்தது.

கடைசியில் 1944இல்தான் கிராமத்தை விட்டுப் போகக்கூடாது என்ற உத்தரவு ரத்தானது. எனினும் சென்னைக்குள் நுழையத் தடை நீடித்தது. அதை எதிர்த்துத் தொழிற்சங்கங்களும் விவசாயச் சங்கங்களும் போராட இறுதியில் அதுவும் 1945, அக்டோபர் 5 அன்று ரத்தானது.

சென்னை திரும்பிய ஜீவா தொழிலாளர்களின் உணர்ச்சிமிகு வரவேற்பில் தள்ளாடினார். மாலைகளைச் சுமக்க முடியாமல் சுமந்தார்.

1946இல் நடந்த தமிழகத் தேர்தலில் ஜீவா போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியவில்லை. தூக்கிப் போட்டுவிட்டு செயலில் இறங்கினார் அவர்.

1946 பிப்ரவரி 18. பம்பாயில் மாபெரும் கப்பற்படை எழுச்சி வெடித்தது. ராயல் இந்தியன் நேவியின் ‘தல்வார்’ என்ற கப்பலில் இருந்த வீரர்கள் பிரிட்டிஷ் அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற நடத்தையைக் கண்டித்து வேலைநிறுத்தத்தில் இறங்கினர். விரைவில் அது அனைத்துத் துறைமுகங்களுக்கும் பரவியது. அவர்களுக்கு ஆதரவாக மக்கள் தெருவில் இறங்கி ராணுவத்துடன் மோதினர். ஏராளமானோர் உயிர்த்தியாகம் செய்தனர். கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே அந்த எழுச்சியை ஆதரித்தது.

நாடெங்கும் கம்யூனிஸ்டுகள் தலைமையில் மக்கள் பேரணி நடத்தினர். சென்னையில் நடந்த பேரணியில் உணர்ச்சிமிகு உரையாற்றியவர் ஜீவா. அந்தப் படத்தைப் பார்த்தால் நமக்கே நெருப்புப் பற்றிக் கொள்ளும். முக்கியக் கட்சிகள் ஆதரிக்காததால் அந்த வீரர்கள் சரணடைய வேண்டி வந்தது.

1947இல் இந்தியா விடுதலை பெற்றது. 1948-50 காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டு, கடுமையான தாக்குதல் தொடுக்கப்பட்டது. ஏராளமான தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஜீவா ரகசியமாகப் புதுவைக்குக் கப்பலில் தப்பினாலும், விரைவிலேயே கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில் 1948இல் அவருக்கும் பத்மாவதி அம்மாவுக்கும் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. கலந்துகொண்ட முப்பது பேருக்கு ஆளுக்கு அரை (!) லட்டும், தேநீரும் வழங்கப்பட்டது. ஒரு குடிசையில் குடியேறினார் ஜீவா. விரைவில் கைதாகிவிட்டார்.

வேலூர் சிறையிலும், நாடு முழுதும் அவர்கள்மீது கடும் தாக்குதல் தொடுக்கப்பட்டது. தாக்குவதற்குப் புதிய புதிய முறைகளையெல்லாம் கையாண்டது போலீஸ். ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகளைப் பலிவாங்கிய தாக்குதல். சேலத்தில் சிறையைப் பூட்டிவிட்டு சுட்டுக் கொன்ற நிகழ்வும் நடந்தது.

அப்போது நேரு தலைமையிலான புதிய ஆட்சியை வீழ்த்துவது என்று கட்சி எடுத்த நிலைப்பாடு தவறு என்ற எண்ணம் ஜீவா தலைமையிலான பெரும் பகுதியினருக்கு இருந்தது. அவர்கள் சிறையின் வேறு பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

1951இல் கட்சி எடுத்த நிலைபாடு தவறென்று ஒப்புக்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் சிதறிக் கிடந்த கட்சியை ஒருங்கிணைக்க பி.ஆர். வந்து சேர்ந்தார். அப்போது நடக்கவிருந்த அகில இந்திய மாநாட்டின் பிரதிநிதிகளாகப் பி.ஆர்., ஜீவா, வி.பி.சிந்தன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1951இல் தமிழகம் முழுவதும் ஜீவாவின் துணைவியார் பத்மாவது அம்மையாரும், சர்க்கரைச் செட்டியாரும் பயணம் செய்து தொழிற்சங்கங்களுக்குப் புத்துயிர் ஊட்டினர்.

1951 இறுதியில் சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல். புதிய தேர்தல் அறிக்கையுடன் களம் இறங்கிய கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற 13 பேரில் சென்னை வண்ணாரப்பேட்டையிலிருந்து ஜீவா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சட்டசபையில் அவர் ஏராளமான மக்கள் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்தார். சென்னை ராஜதானியிலிருந்து மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்று முதல் குரல் கொடுத்தது கம்யூனிஸ்ட் கட்சி. ஜீவா அந்தக் குரலை எதிரொலித்தார்.

(தொடரும்)

ஆதாரம்
1. தோழர் ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு – எம்.இஸ்மத் பாட்சா
2. ஜீவா : வெளிச்சத்தின் விலாசம், புதுவை ரா ரஜனி
3. பி.ராமமூர்த்தி : ஒரு போராட்டச் செம்மலின் வாழ்க்கைப் பயணம், என்.ராமகிருஷ்ணன்
4. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும், என்.ராமகிருஷ்ணன்

பகிர:
nv-author-image

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *