Skip to content
Home » தோழர்கள் #24 – ஜீவ காவியம்

தோழர்கள் #24 – ஜீவ காவியம்

ஜீவ காவியம்

ராஜாஜி ஆட்சியில் பசியும் பட்டினியும் தலைவிரித்தாட, சட்டசபை உறுப்பினர்கள் தமது தொகுதி மக்களுக்காகக் குரல் கொடுத்தனர். ராஜாஜியோ அவர்கள் தொகுதிக் கண்ணோட்டத்தை விட வேண்டுமென்று காயப்படுத்திப் பேசிவிட்டார்.

மறுநாள் எழுந்த ஜீவா, ‘ராஜாஜி தொகுதியிலிருந்து தேர்வாகாமல் பின்வழி வாசலில் வந்தவர். அவருக்குத் தொகுதிக் கண்ணோட்டம் இருக்க முடியாது’ என்று இடித்துரைக்க ராஜாஜியே கைதட்டிவிட்டார். யார் மக்கள் நலனுக்கு முட்டுக்கட்டை போட்டாலும் ஜீவா எதிரியாகிவிடுவார்.

’தமிழ்நாடு’ என்று பெயரிடக் கோரியும், ‘தட்சிணப் பிரதேச’த் திட்டத்தை எதிர்த்தும் 1956, பிப்ரவரி 20ஆம் தேதி தமிழகமெங்கும் சர்வகட்சி சார்பில் கடையடைப்பு நடத்துவதென்றும், சென்னையில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்துவதென்றும் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, தமிழரசுக் கழகம் ஆகியவை முடிவெடுத்தன.

கடையடைப்பால் தலைநகரே வெறிச்சோடியிருந்தது. பேரணியைத் தொடங்க எம்.ஆர். வெங்கட்ராமன், ஜீவா, ம.பொ.சி. ஆகியோர் தயாராக இருந்தனர். எனினும் அப்போது எந்தக் காரணத்தாலோ அண்ணா வரவில்லை. எனவே இவர்கள் தலைமையில் ஊர்வலம் புறப்பட்டது.

அவ்வளவுதான்! தீவுத்திடலைச் சுற்றி நின்றிருந்த காமராஜரின் போலீஸ் படை ஜீவாவையும், எம்.ஆர்.வி.ஐயும் குறிவைத்துத் தாக்கியது. இருவர் தலையிலிருந்தும் ரத்தம் பெருக்கெடுத்தோடியது. எம்.ஆர்.வி. தன்மீது விழுந்த தடியடிகளையும் தாங்கிக் கொண்டு ஜீவாவின் தலையிலும், முகத்திலும் விழுந்த சில அடிகளையும் தாங்கிக் கொண்டார். பல நிமிடங்களுக்குப் பின் தடியடி நிறுத்தப்பட்டது. தமிழுக்காக கம்யூனிஸ்டுகள் சிந்திய ரத்த சாட்சி இந்தச் சம்பவம்.

பின்னர் நடந்த கூட்டத்தில் மக்கள் கொதித்தெழுந்து ஜீவாவை எங்கே என்று கேட்டு முழக்கம் எழுப்பினர். அப்போதுதான் ஜீவா கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது. விடுதலை செய்ய முயற்சிக்கப்படும் என்றார் அண்ணா. எனினும் ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்காமல் கூட்டம் முடிந்தது.

அதே சமயம் இந்தி எப்போதும் வேண்டாம், ஆங்கிலம் எப்போதும் வேண்டும் என்று இந்தி எதிர்ப்பாளர்கள் முழக்கமிட்டபோது அது தவறு என்று வாதாடியவர் ஜீவா. எப்போதும் தமிழ் என்பதே சரியானது என்றார் அவர்.

0

இதற்கிடையே கட்சியில் உட்கட்சிப் போராட்டம் வலுத்து வந்தது. 1962இல் மாநிலச் சிறப்பு மாநாடு சென்னை தர்மபிரகாஷில் கூடியது. அதில் மாநிலச் செயற்குழுவுக்குத் தேர்வானார் ஜீவா. அப்போது இந்திய சீனப் போர் வெடிக்க, நூற்றுக்கணக்கான தலைவர்கள் கைதாயினர். எனினும் ஜீவா சீனப் போரில் சீனாவுக்கு எதிராக உறுதியான நிலையெடுத்ததாகவே தெரிகிறது. இதுவும் சிபிஐயும், சிபிஐ(எம்)மும் பிரிந்ததில் ஒரு முக்கியப் பங்கை வகித்த பிளவு.

இந்த நேரத்தில்தான் கட்சியை அவரது மரணம் பேரிடியாகத் தாக்கியது. தமது சிம்மக்குரலால் தொழிலாளர்களை சிலிர்த்தெழச் செய்த மாமனிதர், தமது எழுதாற்றலால் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மார்க்சியத்தைப் போதித்த ஆசான், அந்தக் கொள்கைக்காக எண்ணற்ற தாக்குதல்களைத் தாங்கிய போராளி ஜீவா 1963ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதியன்று பெரும் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மரணம் கம்யூனிஸ்டுகளை மட்டுமல்ல, தமிழகத்தையே உலுக்கியது.

பல்லாயிரக்கணக்கான மக்கள், தொழிலாளர்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தக் கண்ணீருடன் திரண்டனர். ஏராளமான தலைவர்கள் சிறையில் இருந்ததால் அவரது உடலைப் பார்த்து அஞ்சலி செலுத்தக்கூட முடியாமல் தவித்தனர். அடுத்த நாள் அவரது உடல் பிராட்வேயில் துறைமுகத் தொழிலாளர் சங்கத்தில் வைக்கப்பட்டு, பின்னர் காசிமேடு இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

சிலரது மரணம் அத்தோடு முடிந்து விடும். ஆனால் சிலரது மரணமோ வரலாறாகிவிடும். ஜீவாவின் மரணம் அத்தகையது. அவர் நமக்கு விட்டுச் சென்ற செய்திகள் பல்லாயிரம். ஜீவாவின் மரணத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்வுகளை கே.ஜீவபாரதி ‘ஜீவன் பிரிந்தபோதும் சிலையாய் எழுந்த போதும்’ என்ற தலைப்பில் உணர்ச்சிமிகு புத்தகமாக வடித்துள்ளார்.

மகாகவி பாரதிக்குப் பின் தமிழ்மொழிக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் பெரும் மதிப்பைத் தேடித் தந்தவர் ஜீவா. கம்பராமாயணம் மீது மிகுந்த காதல் கொண்டவர். இலக்கியத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஈடுபாடு கொண்டவர். தனது பாடல்களையும் பாரதியின் பாடல்களையும் சேரிப் பகுதிகளில், பட்டி தொட்டிகளில் பாடிக் காட்டினார். அவரது பாடல்கள் புரட்சிகரக் கருத்துகளை அவர்களிடம் கொண்டு சேர்த்தன. திருவருட்பாவைப் புதிய கோணத்தில் பேசுவார். காரைக்குடி கம்பன் கழகத்தில் ஆண்டுதோரும் அவரது சொற்பொழிவு இருக்கும்.

எல்லோரின் பேச்சுக்களும் ரத்தத்தைச் சூடாக்காது. ‘பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிடரிமயிரைப் பிடித்து ஆட்டி, அதன் கோரப்பற்களை உடைத்து, குடலைப் பிடுங்கி…’ – இதுதான் ஜீவாவின் சிங்கநாதம்.

‘சட்டசபையில் இருக்கும்போது அவருக்கு முன்னால் மைக் வைக்கிறார்களே என்று வருத்தப்படுவேன். அந்த மைக் உடைந்து போகும்படிப் பேசுவார்.’ சொன்னவர் ராஜாஜி.

ஜீவாவின் எழுத்துகள் ஜீவன் நிரம்பியவை. அநாவசியமான அலங்காரங்கள், அடுக்கு வார்த்தைகள், அர்த்தமற்ற வர்ணனைகள் இருக்காது. நேரடியான சொற்கள் மூலம் இலக்கைத் தாக்குவார்.

முதல்வர் காமராஜருக்கே நெருக்கமாக இருந்தபோதும், அதைக் கொண்டு தனது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள அவர் முயலவில்லை. ஒரு நாள், ஜீவாவின் வீட்டுக்கருகில் இருந்த ஒரு பள்ளி விழாவுக்கு வந்த காமராஜர் வீட்டுக்கு வந்து அவரையும் அழைக்கிறார். அவரை முன்னால் செல்லுமாறும் தான் பின்னால் வருவதாகவும் சொல்லு அனுப்பிவிட்டார் ஜீவா.

பின்னர் தாமதமாக வந்த ஜீவாவைக் கோபித்துக் கொண்டார் காமராஜர். அதற்குப் பதிலளித்த ஜீவா, தன்னிடம் இருந்த ஒரே வேட்டியைக் காய வைத்து உடுத்திக் கொண்டு வந்ததாகக் கூற, அதிர்ந்து போனார் காமராஜர். உடனே அவருக்குத் தெரியாமல் அவரது மனைவியை ஒரு சத்துணவு ஊழியர் பதவிக்கு விண்ணப்பம் அளிக்குமாறு செய்ய வைத்து வேலை கொடுத்தார். அதன் பிறகு ஜீவாவின் வறுமை சற்று குறைந்தது.

ஜீவா மறைந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு சென்னை தண்டையார் பேட்டையில் மார்பளவுச் சிலை நிறுவப்பட்டது. இந்தியாவில் ஒரு கம்யூனிஸ்ட் தலைவருக்கு எழுப்பப்பட்ட முதல் சிலை அதுவே. அந்தச் செலவை முழுமையாக எம்.ஜி.ஆர் ஏற்றார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பி.சி.ஜோஷி திறந்து வைத்தார். கே.காமராஜ் தலைமை வகித்தார். ராஜாஜி, குன்றக்குடி அடிகளார், அண்ணாதுரை, ம.பொ.சி, மணலி கந்தசாமி, எஸ்.வி.காட்டே, பெரியார் உள்ளிட்ட பல தலைவர்களும் விழாவில் கலந்து கொண்டனர். அதுவே ஜீவாவின் பெருமையைக் காட்டும்.

கோடிக்கால் பூதமடா மக்கள்! அன்னார்
கொதித்தெழுந்து குலவையிட்டால், அவரை நாளும்
வாடிக்கை யாய்ச்சுரண்டிக் கொழுக்கும் வாழ்க்கை
வழக்கொழியும்! புதுவாழ்க்கை மலரும்! தம்பி!
கூடிக்கொள்! சங்கம்வை! கொடியைத் தூக்கு!
கோஷமிடு! போராடு! என்றே கூவி
சூடிக்கை யாய்த்தூண்டி, துயிலும் நீங்கித்
தொழிற்சங்கம் பலகண்டான் தோழன் ஜீவா!
……..
பொதுவுடைமை இயக்கத்தைத் தொடங்கி, நாளும்
ஆவியுடன் அனைத்தையுமே அதற்காய் ஈந்து
ஆயுளெலாம் போரிட்டான் அருமை ஜீவா!
…….
இதயத்தின் ரத்தத்தை மையாய் ஆக்கி,
எலும்பெல்லாம் எழுதுகின்ற கருவியாக்கி,
முதல்தொட்டு முடிவுரையைத் தனது வாழ்வின்
மூச்செல்லாம் பேச்செல்லாம் எழுத்தா யாக்கி
விதம்விதமாய் அனுபவித்த தியாக வாழ்வின்
வேதனையை, சாதனையைப் பொருளா யாக்கி
கடைநடத்திச் சென்றுவிட்டான்! நம்முள் ஜீவ
காவியமாய் நிலைபெற்று நின்றான் ஜீவா!

(திருச்சம்பலக்கவிராயர், ஜனசக்தி, 20.2.66)

(தொடரும்)

ஆதாரம்
1. தோழர் ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு – எம்.இஸ்மத்பாட்சா
2. ஜீவா- வெளிச்சத்தின் விலாசம் – புதுவை ரா ரஜனி
3. பி.ராமமூர்த்தி- ஒரு போராட்டச் செம்மலின் வாழ்க்கைப் பயணம் – என்.ராமகிருஷ்ணன்
4. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் – என்.ராமகிருஷ்ணன்

பகிர:
கி. ரமேஷ்

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *