Skip to content
Home » தோழர்கள் #25 – ‘அடித்தால் திருப்பி அடி’

தோழர்கள் #25 – ‘அடித்தால் திருப்பி அடி’

பி.எஸ்.ஆர்

“கரையேறி மீன் விளையாடும் காவிரி ஆறு,
எங்கள் உறையூரின் காவலனே நீ வாழிய நீடு”

என்ற திரைப்படப்பாடலைப் பலரும் கேட்டிருப்போம். காவிரி ஆறு கொஞ்சி விளையாடும் சோழ நாடு. செழித்து நிற்கும் நெற்பயிர்கள். தென்னிந்தியாவின் நெற்கிடங்கு என்று அறியப்படும் தஞ்சை மாவட்டம். இந்தப் பச்சைப்பசேல் காட்சிகளுக்குப் பின்னால் அதிர வைக்கும் வேறொரு காட்சி உண்டு.

சில மடங்களுக்கும் சில தனிநபர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சொந்தமாக இருந்தன. அங்கு பண்ணையாள் என்ற முறையில் அடிமைகளாக விவசாயத் தொழிலாளர்கள் சுரண்டப்பட்டனர். காலை விடியும்போது வயலில் இறங்கினால் பொழுது இறங்கும்போதுதான் ஏற முடியும். சிறுநீர்கூட அங்கேயே கழிக்க வேண்டும். குழந்தையைக் கரையில் மரத்தில் தூளி கட்டித்தான் தொங்கவிட வேண்டும்.

சாட்டையால் அடிப்பது, சாணியைக் கரைத்து வலுக்கட்டாயமாகப் புகட்டுவது என்று காட்டுமிராண்டித்தனமான தண்டனைகள். குத்தகைதாரருக்கு விளைச்சலில் நான்கில் ஒரு பங்குதான். குழந்தைகளை ஆறு வயதில் மாடு மேய்க்கவும், பத்து வயதில் சாணம் அள்ளவும், பதினைந்து வயதில் வண்டி ஓட்டவும், பதினெட்டு வயதில் பண்ணை வேலை செய்யவும் அனுப்ப வேண்டும்.

இந்நிலையில் ஒரு கலகக்குரல் எழுகிறது. ‘அடித்தால் திருப்பி அடி. சாணிப்பால் குடிக்காதே’. குனிந்தே கூன் விழுந்தவர்கள் நிமிர்ந்து பார்க்கிறார்கள். அக்கலகக்குரலுக்குச் சொந்தக்காரர் தோழர் பி. சீனிவாசராவ். அவர்களது மீட்பராகக் கம்யூனிஸ்ட் கட்சியால் அனுப்பப்பட்டு தஞ்சை-நாகை மண்ணுக்கு வந்து சேர்ந்தவர். செங்கொடியை அவர்கள் கையில் கொடுத்துப் போராட்டக் களத்துக்கு இழுக்கிறார் பி.எஸ்.ஆர். ஒரு வரலாற்றைப் படைக்கிறார்.

பி.எஸ்.ஆர். காவிரி ஆற்றின் தாய்மண்ணான தென்கன்னடப் பிரதேசத்தில் படகாராவில் 1910ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி ஒரு வைதீக பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். அவருக்கு அண்ணனும் ஒரு தம்பியும் ஆறு சகோதரிகளும் இருந்தனர். அவரது தந்தை அவருக்கு எட்டு வயதாக இருக்கும்போதே இறந்துவிட, அவரது தாய்மாமன் அவர்களது குடும்பத்தைத் தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டார்.

அவரது தாய் ஒரு வைதீகக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணியாதலால் ஒரு விதவைப் பெண்ணின் கோலம் தரித்துத் தனது அனைத்து வசதிகளையும் மறுத்து வாழ்ந்தார். அவரது துன்பம் மகனையும் துன்புறுத்தியது. தனது அன்னையிடம் இதைக் குறித்துக் கேட்டுக் கொண்டே இருந்தார். அன்னை அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பதைக் கண்டு மனம் வருந்தினார். சோமவாரத்தில் நாள் முழுதும் பட்டினி. இதைக் கண்டு தானும் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்தார் மகன். வேறு வழியின்றி அம்மா விரதத்தைக் கைவிட்டார். அந்தச் சிறு வயதிலேயே இந்த வரதம் இருப்பதால் அப்பா திரும்பி வந்து விடுவாரா என்று பகுத்தறிவுக் கேள்வி எழுப்பினார் பி.எஸ்.ஆர்.

ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் படித்த பி.எஸ்.ஆர். அங்கும் அனைத்தையும் குறித்துக் கேள்வி எழுப்பினார். அவரது குறும்புத்தனத்தால் கோபமடைந்த பாதிரிகள் அவரைப் பள்ளியை விட்டு நீக்கினார்கள். மாமாவின் தலையீட்டால் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஒரு மாணவனாகச் சிறந்து விளங்கினார் பி.எஸ்.ஆர். அதே சமயத்தில் அவரது மனதில் போராட்ட மனோபாவம் வளர்ந்து கொண்டிருந்தது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகவும் இருண்ட, ரத்த ஆற்றில் மிதந்த நாள் 1919, ஏப்ரல் 13. அன்றுதான் மிகக்கொடியவன் டயர் பஞ்சாப் மக்களிடையே குண்டுகள் தீரும் வரை சுட்டு ஏராளமானோரைக் கொன்றான். இந்தியாவே கோபத்தில் கொதித்தது.

1920ஆம் ஆண்டு கூடிய காங்கிரஸ் மாநாடு, அனைத்து இந்தியர்களும் அந்நியப் பணிகள், பள்ளிகளை விட்டு வெளியேற வேண்டுமென அறைகூவல் விடுத்தது. பெங்களூர் கிறிஸ்தவக் கல்லூரியில் படித்து வந்த பி.எஸ்.ஆர். தனது படிப்பை விட்டுவிட்டு வெளியேறினார். மாமனோ சப் மாஜிஸ்ட்ரேட். அவர் எப்படி விடுவார்? ஆனால் அடங்கி வாழ விருப்பமின்றி வீட்டை விட்டு பி.எஸ்.ஆர். வெளியேறினார்.

எப்படியோ இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டார் அவர். அங்கு ஓர் உணவு விடுதியைத் திறந்து நல்ல வருமானத்தைப் பெற்று ஆடம்பர வாழ்வு வாழ்ந்தார். உயர் ரக சிகரெட்டுக்குக்கூட அடிமையாகி விட்டார். எனினும் சிறிது காலத்தில் இந்தியா திரும்பினார். அங்கு எந்தச் சபலமுமின்றி மீண்டும் சுதந்திரப் போராட்டத்தில் குதித்து விட்டார். சில காலம் தொடர்ந்த சிகரெட் பழக்கத்தை விடாப்பிடியாக முயன்று கைவிட்டார் பி.எஸ்.ஆர். மிகவும் தேர்ந்த சமையல்காரராக அவரை இந்த அனுபவம் மாற்றியது.

1920இலிருந்து 1930 வரை போராட்டங்களால் நாடு கொதித்துக் கொண்டிருந்தது. 1930இல் காந்தி உப்பு சத்தியாகிரகம் அறிவித்து தண்டி யாத்திரை சென்றார். நாடு முழுவதும் நடந்த சத்தியாகிரங்களில் பி.எஸ்.ஆரும் கலந்து கொண்டு இரண்டு முறை கைதானார். பின்னர் காந்தி 1932இல் அன்னியத் துணிகளைப் புறக்கணிக்க வேண்டும், கதர் துணி அணிய வேண்டும், அன்னியத் துணி விற்கும் கடைகள் முன் மறியல் செய்ய வேண்டுமென அறைகூவல் விடுக்க, மறியலில் இறங்கினார் பி.எஸ்.ஆர். அவர் கட்டிளங்காளையாக இருந்த சமயம். அவர் மறியலில் இறங்கினால் போலீஸ் வீறு கொண்டு தாக்கும். அனைத்தையும் வாங்கிக் கொண்டு அவர் மறியலில் ஈடுபடுவார். என்றாவது கதர் கடையல் அதிக விற்பனையானால், இன்று பி.எஸ்.ஆர். மறியலா என்று கேட்பார்களாம்!

ஒருமுறை அவரைக் கடுமையாகத் தாக்கி, அவர் இறந்து விட்டார் என்று நினைத்து சாக்கடையில் தூக்கிப் போட்டுவிட்டுப் போய் விட்டது போலீஸ். மக்கள் பதறினாலும், அவரைக் காப்பாற்றத் துணியவில்லை. எனினும் ஒரு பெண்மணி அவரை வாரியெடுத்துச் சென்று தன் வீட்டில் வைத்து மீண்டும் உயிர் கொடுத்தார். அவரைக் கடைசி வரை கண்ணீர் மல்க நினைவு கூர்வார் பி.எஸ்.ஆர். அந்தப் பெண்மணி ஒருவருக்கு தாசியாக இருந்தவர்.

1935இல் பிரிட்டிஷ் மன்னர் இந்தியா வந்தபோது அவரது வரவுக்கு எதிராகக் காங்கிரஸ் களமிறங்கியது. 1943இல் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சென்னையிலுள்ள தனது வீட்டையே விற்று ரூ.8000 நன்கொடை கொடுத்த தோழர். அங்குசாமி ஒரு துண்டுப் பிரசுரத்தை அச்சடித்து இளைஞர்கள் மூலம் விநியோகித்தார். பி.எஸ்.ஆர். அவர்களில் ஒருவராக இருந்தார். போலீஸ் பாய்ந்து அவரைத் துரத்திப் பிடித்துச் சிறையிலடைத்தது. ஒரு துண்டுப் பிரசுரத்தைக் கூட அவர்களால் பொறுக்க முடியவில்லை.

1932ஆம் ஆண்டில் துணிக்கடை மறியலில் பி.எஸ்.ஆர் சிறையிலிருந்த போது ஒரு நிகழ்ச்சி. அங்கு அவர் மிகவும் மரியாதை செலுத்திய சுபாஷ் சந்திரபோசும் இருந்தார். அடிக்கடி அவரைப் பார்க்கச் செல்வார் 25 வயதான பி.எஸ்.ஆர். பொழுது போவது தெரியாமல் பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்பார்.

அந்த சமயத்தில் அந்தச் சிறையில் இருந்த அமீர் ஹைதர்கான் கண்ணில் மாட்டிவிட்டார் பி.எஸ்.ஆர். ஹைதர் அவரைக் குறி வைத்து விட்டார். போசைப் பார்த்து விட்டு வெளியே வந்த பி.எஸ்.ஆரைப் பின்னாலேயே சென்று பிடித்தார். அவரிடம் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை’க் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அந்தச் சிறிய புத்தகத்தைப் பார்த்த பி.எஸ்.ஆர். சற்றும் சுரத்தின்றிப் படிக்கிறேன் என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்.

ஹைதர் அடுத்த நாள் அவரைப் பிடித்துக் கொண்டு படித்தாரா என்று விசாரித்தார். பி.எஸ்,ஆர். அந்தப் புத்தகத்தைப் பார்த்திருந்தார். அதிலிருந்த விஷயங்கள் அவருக்குப் புரியாமல் வைத்து விட்டார். அதனால் ஹைதரிடம் அதில் ஒன்றுமேயில்லை என்று சொல்லி விட்டார். அவரை விடாமல் இழுத்துச் சென்ற ஹைதர் அந்தப் புத்தகத்தை விரிவாக விளக்கினார். அசந்து போனார் பி.எஸ்.ஆர். இந்தச் சிறு புத்தகத்தில் இவ்வளவு விஷயமா. மெதுவாக கம்யூனிசத்திடமும், ஹைதரிடமும் நெருங்கலானார். அதன் பிறகு லெனின் எழுதிய அரசும் புரட்சியும் நூலைப் படித்தார். ‘ஏகாதிபத்தியம் ஒழிக’ என்ற கோஷத்தைப் பல மேடைகளிலும் முழங்கியிருந்த பி.எஸ்.ஆர். அதன் உண்மையான பொருளை இப்போது உணர்ந்தார். தினமும் ஹைதரை அரித்து அடிப்படை மார்க்சியத்தைக் கற்றார் அவர்.

சில வாரம் கழித்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார் பி.எஸ்.ஆர். அங்கும் பல மார்க்சிய நூல்களைக் கொண்டு சென்றவர், இ.எம்.எஸ். உட்படப் பலருக்கு அவற்றைக் கொடுத்துப் படிக்கச் செய்தார். இ.எம்.எஸ். படித்த முதல் மார்க்சிய நூல் அவர் கொடுத்ததுதான்.

இதற்கிடையில் 15 மாதம் சிறைத்தண்டனை பெற்ற ஹைதர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். தனது ‘குருநாதர்’ சேலம் சிறையில் இருப்பதை அறிந்த பி.எஸ்.ஆர். தன்னையும் அங்கு மாற்றுமாறு சிறை அதிகாரிகளை அரிக்கத் தொடங்கினார். அவரது தொந்தரவு பொறுக்காமல் வேறு வழியின்றி அவர் அங்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு இருவரும் சந்தித்து மகிழ்ந்து, ஆழ்ந்த விவாதங்களில் மூழ்கினர். பி.எஸ்.ஆர். கம்யூனிஸ்டாகிக் கொண்டிருந்தார்.

0

சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த பி.எஸ்.ஆர் அங்கு சுந்தரய்யாவுடன் இணைந்து மூக்குப்பொடித் தொழிலாளர் சங்கத்தைத் தொடங்கி அதன் செயலாளரானார்.

அகில இந்திய அளவில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டிருந்தும், சென்னையில் எதுவும் தொடங்கவில்லை. மாறாக, பி.ராமமூர்த்தி, ஏ.எஸ்.கே. அய்யங்கார் ஆகியோர் சென்னை ராஜதானி தீவீர இளைஞர் கழகத்தை உருவாக்கியிருந்தனர். அதன் மாநாட்டில் கலந்து கொண்டார் பி.எஸ்.ஆர்.

கம்யூனிஸ்ட் கட்சி வெளிப்படையாகச் செயல்பட முடியாததால் அவர்கள் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் சேர்ந்து செயல்படுவதென்று முடிவெடுக்கப்பட்டது. சென்னை மாகாணத்தின் கட்சிச் செயலாளரான சுந்தரய்யா, தமிழகத்தில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியை உருவாக்கும் பணியை பி.எஸ்.ஆரிடம் ஒப்படைத்தார். பி.ஆருடன் சென்னையில் அப்பணியில் இறங்கிய பி.எஸ்.ஆர்., தொழிலாளர் பாதுகாப்புக் கழகத்திலும் தீவீரமாக ஈடுபட்டார்.

1936இல் தமிழகத்தின் முதல் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளை உருவாக்கப்பட்டது. அந்த முதல் கிளையின் உறுப்பினராக பி.எஸ்.ஆர். இருந்தார்.

1936இல் லக்னோவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டையொட்டி நடந்த காங்கிரஸ் சோஷலிஸ்ட் மாநாட்டில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தை உருவாக்குவதென்று தீர்மானிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் ஜீவாவும் பி.எஸ்.ஆரும் கலந்து கொண்டனர். எனினும் 1943இல்தான் தமிழகத்தில் விவசாய சங்கத்தை உருவாக்க முடிந்தது.

மக்களிடையே தனது பிரசாரத்தைக் கொண்டு செல்ல ஒரு பத்திரிகை வேண்டுமென நினைத்த காங்கிரஸ் சோஷலிஸ்ட்கட்சி அதற்காக ‘ஜனசக்தி’ ஏடைத் தொடங்க முடிவெடுத்தது. ஜீவா ஆசிரியராகவும், பி.எஸ்.ஆர். நிர்வாகப் பொறுப்பும் ஏற்றனர். பி.எஸ்.ஆர் கண்டிப்பானவர் என்பதால் அப்பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆங்கிலத்தில் நியூ ஏஜûம் தொடங்கப்பட்டது.

மூன்றே இதழ்களில் நின்று போனாலும் சீனிவாசராவின் நெருங்கிய நண்பர் ஒருவரின் பெயரில் ஓர் அச்சகத்தின் பேரில் மனுக் கொடுக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது.

அக்காலத்தில் இளம் கம்யூனிஸ்டுகளான ஜீவா, சீனிவாசராவ், ராமமூர்த்தி, கே. முருகேசன் ஆகியோர் தொழிலாளர்களிடையே பணிபுரிந்து தொழிற்சங்கங்களை உருவாக்கி வலுப்படுத்தினர்.

விவசாய சங்கம் அமைக்கும் முயற்சியை ஒட்டித் தமிழகத்தில் பல இடங்களில் ஜமீன் ஒழிப்பு மாநாடுகளும் லேவாதேவி ஒழிப்பு மாநாடுகளும் நடைபெற்றன. அவற்றில் ஜீவாவும் பி.எஸ்.ஆரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

நாகை விவசாயிகள் மாநாடு சீனிவாசராவ் தலைமையில் நடைபெற்று முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றியது.

1936இல் சென்னைக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் நேரு தன் மனைவி கமலாவுடனும் மகள் இந்திராவுடனும் சென்னை வந்தார். அவரைச் சந்தித்த ராவ், மாலையில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு வந்து அவர்களது தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டுமெனவும் கேட்டார்.

முதலில் ஏற்ற நேரு பின்னர் பின்வாங்கி விட்டார். கோபமடைந்த சீனிவாசராவ் ‘எங்களைப் போன்ற தொழிலாளர் தொண்டர்கள் நடத்தும் விருந்தில் கலந்து கொள்ள உங்களுக்கு நேரமிருக்குமா?’ என்று குத்தலாகக் கேட்டவுடன் நேரு அசந்து போனார். அவரைப் பற்றி விசாரித்துக் கொண்டு பின்னர் விருந்தில் கலந்து கொண்டார்.

அதேபோல் 1938இல் சென்னை வந்த சுபாஷ் சந்திர போசையும் பி.எஸ்.ஆர். வரவேற்று கட்சி சார்பில் தேநீர் விருந்தளித்தார். பின்னர் போஸ் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி பார்வர்ட் பிளாக் உருவாக்கியபின் சென்னை வந்தபோதும் அவரை வரவேற்று மாலையில் ஒரு பெரும் பேரணியை ஏ.எஸ்.கேவும் பி.எஸ்.ஆரும் நடத்தினர்.

அச்சமயத்தில் தொழிலாளர்கள் மீது போலீஸ் தாக்குதல் தொடுக்க, கோபமடைந்து நேரில் இறங்கினார் போஸ். எனினும், பேரணியைத் தொடர்ந்து நடத்துவதென்று முடிவெடுத்த தலைவர்கள் அவரை மீண்டும் காரில் அமர வைத்து வழிநடத்தினர். கடற்கரையில் அவரது ஆவேசப் பேச்சைக் கேட்டு மக்கள் மெய்சிலிர்த்தனர்.

1940இல் போர் எதிர்ப்புப் பிரசாரத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ராவும் ஒருவர். அவர்கள் கடுமையான தாக்குதல்களுக்கும் உள்ளாயினர்.

1942இல் யுத்தம் சோவியத்துக்கெதிராகத் திரும்பியதும், கம்யூனிஸ்டுகள் அதனை மக்கள் போர் என்று வகைப்படுத்தி அதில் பாசிசத்துக்கெதிராக களமிறங்க வேண்டுமெனவும் முடிவெடுத்தனர். எனவே கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீக்கப்பட்டு நாடெங்கும் கம்யூனிஸ்டுகள் விடுதலை செய்யப்பட்டனர். சீனிவாசராவும் விடுதலை பெற்றார்.

1939இலேயே காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த கம்யூனிஸ்டுகள் இப்போது முறையான கட்சியை உருவாக்க முனைந்தனர். டாக்டர் சுப்பராயன் வீட்டில் கூடிய கூட்டத்தில் ஒரு மாநிலக்குழு உருவாக்கப்பட்டது. அக்குழுவில் பி.எஸ்.ஆர். மாநிலக்குழு உறுப்பினரானார்.

அந்தக் கூட்டம் பல பிரச்னைகளை விவாதித்தது. அப்போது தஞ்சை மாவட்டத்தில் நிலப்பிரபுக்கள் கொடுமை, பண்ணையடிமைத்தனம் ஆகியவற்றை ஒழித்து, கந்து வட்டிக்கு முடிவு கட்டி, விவசாய சங்கத்தைக் கட்டியமைக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதற்குக் கிராமம் கிராமமாகச் செல்ல வேண்டும், ஏழை மக்களுடன் விகல்பமில்லாமல் கலந்து பழக வேண்டும். உடல் உறுதியும், உள்ளத் திடமும் இருக்க வேண்டும். பி.எஸ்.ஆர் தானாக முன்வந்து இப்பொறுப்பை ஏற்றார்.

தஞ்சையில் மிகச்சில நிலப்பிரபுக்களிடமும் ஆதினம், மடம் ஆகியவற்றிடமும் பல்லாயிரக்கணக்கான நிலங்கள் இருந்தன. மன்னார்குடிக்கு அருகில் இருந்த தென்பரை கிராம நிலம் அனைத்தும் ஐதராபாத் ருத்ராபதி மடத்துக்குச் சொந்தம். அங்கு பல கோரிக்கைகளை முன்வைத்து நடந்த கூட்டத்தில் பி.எஸ்.ஆரும், மணலி கந்தசாமியும் கலந்து கொண்டனர். மடம் அவர்களது கோரிக்கையை ஏற்க மறுக்க, மாபெரும் போராட்டம் வெடித்தது. அதைச் சரியான வழியில் நகர்த்திய தலைவர்கள் ஏழு மாதங்களுக்குப் பின் மடத்தைப் பணிய வைத்தனர். அந்த வெற்றி லட்சக்கணக்கான பண்ணையடிமைகளிடையே நம்பிக்கையைத் தோற்றுவித்தது.

காக்கி டிராயருடனும் வெள்ளைச் சட்டையுடனும் கிராமங்களில் சுற்றத் தொடங்கினார் பி.எஸ்.ஆர். அவர்களது துன்ப துயரங்களைக் கண்டு அவரது நெஞ்சு கொதித்தது. அவர்களது அப்பாவித்தனம் கண்டு அவர் நெஞ்சு வெதும்பியது. ‘இந்த ஆண்டை ரொம்ப நல்லவரு. தினம் அடிக்க மாட்டாரு!’

பி.எஸ்.ஆர் பொங்கியெழுந்தார்: ‘நிலப்பிரபு உன்னைச் சாட்டையால் அடித்தால் அடிக்க விடாதே. சாணிப்பால் கொடுத்தால் குடிக்காதே! அவன் உன்னை அடித்தால் நீயும் அவனைத் திருப்பி அடி!’

பிராமணரான அவர் தமது குடிசையில் அமர்ந்து அவர்களது சோற்றை உண்பது அவர்களை மகிழச் செய்தது.

இந்தப் பிரசார வேகமானது பல இடங்களில் மோதலாக வெடித்தது. இப்பெருவெள்ளத்தை போலீசை வைத்து மட்டும் எதிர்கொள்ள முடியாது என்று புரிந்துகொண்ட ஆண்டைகள் ஓர் ஒப்பந்தத்துக்கு வந்தனர். அது மன்னார்குடியில் கையெழுத்தானது. இந்த வெற்றியால் அனைத்துக் கிராமங்களிலும் செங்கொடி பறக்கத் தொடங்கியது. போராட்டம் முன்னை விடத் தீவீரமானது. லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் முதன்முறையாக அச்சமின்றி சரிநிகர் சமானவர்களாக நிமிர்ந்து நடக்கத் தொடங்கினர். போராட்டத் தளபதி பி.எஸ்.ஆர்!

பம்பரமாகச் சுழன்ற பி.எஸ்.ஆர். பரவலாக விவசாயிகள் சங்கத்தை உருவாக்க முனைந்தார். 1944 மே 3 மன்னார்குடியில் மாநாடு. மே 10 மதுரை மாவட்ட அமைப்பு மாநாடு. 17ஆம் தேதி ராமநாதபுரம். 25 திருநெல்வேலி. இவ்வாறு அனைத்து இடங்களிலும் சங்கத்தை உருவாக்கியவர் அவை ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டுமென்று கற்றுக் கொடுத்தார். விவசாயிகள் சங்க விதிமுறைகள் என்ற நூலை வெளியிட்டார்.

குன்னியூர் சாம்பசிவ ஐயரின் அடக்குமுறையை எதிர்த்து அங்கு நடந்த கூட்டத்தை அடிக்க அடியாட்களை ஏவுகிறார் ஐயர். பி.எஸ்.ஆர் நெருங்கி வந்தால் சுட்டு விடுவேன் என்று கையைத் தனது டிராயர் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு சிங்கமாகக் கர்ஜிக்கிறார். அவர்கள் தயங்கி ஏச்சில் இறங்குகின்றனர். விஷயம் தெரிந்த விவசாயப் பெருமக்கள் பெருந்திரளாக ஆவேசமாக வரவும், பயந்து போன ஐயர் பின்வாங்கி ஒப்பந்தத்துக்கு வந்தார். அடியாட்கள் பி.எஸ்.ஆரிடம் மன்னிப்புக் கேட்க புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தார்.

இதுபோல் அவர் கொதித்தெழுந்த சம்பவங்கள் நிறைய நடந்தன. 1946இல் திருச்சி ரயில்வே ஊழியர்களுக்கு ஆதரவாகச் சென்றபோது கைது செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும், தமிழில் பல பிரசுரங்களையும் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அவரது கொஞ்சு தமிழைத் தஞ்சை மக்கள் ரசித்துக் கேட்டனர்.

அவரது காலத்தில் தமிழகத்தில் முற்போக்குக் கருத்துக்களைப் பரப்பிக் கலக்கிய ‘தமிழ்நாடு புதுமைக் கலாமண்டபத்தின்’ இயக்குனர் பி.எஸ்.ஆர். அது அவரது கலைப்பணி.

1952இல் அவர் காதலித்த ஆசிரியை நாச்சியாரம்மாளைக் கரம் பிடித்தார். இரண்டு பெண்மக்கள், ஓர் ஆண்மகன் அவருக்கு வாரிசுகள்.

1960இல் பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி தமிழ்நாடெங்கும் விவசாயிகள் பாதயாத்திரை திட்டமிடப்பட்டது. தனது ஆஸ்துமா நோயை மீறி, பலர் தடுத்தும் பி.எஸ்.ஆர் கோவைக் குழுவுக்குத் தலைமை வகித்தார். சிறப்பாகத் திட்டமிட்டு நடத்தி முடித்தார்.

அதைத் தொடர்ந்து 1961 செப்டெம்பர் 14 மறியல் நடைபெற்றது. வெளியிலிருந்து வழிகாட்டினார் பி.எஸ்.ஆர். சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார். நாங்குநேரி சென்றபோது அவருக்கு ஆஸ்துமா தொல்லை அதிகரித்தது. எனினும் சரி செய்து கொண்டு பேசினார். இரவு பலரது விண்ணப்பத்தையும் மறுத்து ரயிலில் துண்டை விரித்து தஞ்சை திரும்பினார்.

இந்த மறியல் போராட்டத்துக்குப் பணிந்த தமிழ்நாடு அரசு நில உச்சவரம்புத் திட்டத்தில் சில திருத்தங்களைச் செய்தது. பி.எஸ்.ஆர். மறியல் போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

1961, செப்டம்பர் 21 அன்று பி.எஸ்.ஆருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட, தோழர் காத்தமுத்து ஓடோடி டாக்டரை அழைத்து வந்தார். சிறிது அமைதிப்பட்டாலும், பின்னிரவு நேரத்தில் அவர் மறைந்தார்.

திருத்துரைப்பூண்டியில் விவசாய மக்களின் கண்ணீருக்கிடையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. எங்கிருந்தோ வந்து அம்மக்களின் அடிமைத்தனத்துக்கு முடிவு கட்டிய புரட்சியாளர் அங்கேயே அடக்கமானார்.

(தொடரும்)

ஆதார நூல்கள்
1. பி.எஸ்.ஆர். வாழ்க்கை வரலாறு – ஆர்.நல்லகண்ணு
2. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் – என்.ராமகிருஷ்ணன்
3. காவியம் படைத்த கம்யூனிஸ்ட் அமீர் ஹைதர் கான் – டாக்டர் அயூப் மிர்சா
4. பி.ராமமூர்த்தி வாழ்க்கை வரலாறு
5. இ.எம்.எஸ். வாழ்க்கை வரலாறு

பகிர:
கி. ரமேஷ்

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.View Author posts

1 thought on “தோழர்கள் #25 – ‘அடித்தால் திருப்பி அடி’”

  1. நன்றி தோழர்…
    இது போன்ற பல தியாகங்கள் செய்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் பற்றி நம் தமிழ் நாட்டு மக்கள் அறியாமல் இருப்பது பெரும் அவலம் தோழர் என்னையும் சேர்த்து.

    இன்னும் இது போன்ற நிறைய தியாக தலைவர்கள் பற்றி நம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும், அப்போது தான் நம் தமிழ் நாட்டு அரசியல் பாமர பாட்டாளி மக்கள் அரசாக மாறும்.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *