தெலுங்கானா போராட்டம் என்றால் பெரும்பாலான மக்களுக்கும் சமீபத்தில் நடைபெற்ற போராட்டங்களும் தெலுங்கானா மாநிலம் உருவானதும்தான் தெரிந்திருக்கும். நாற்பதுகளிலேயே ஒரு வீரமிக்க தெலுங்கானா விவசாயிகள் போராட்டம் நடைபெற்றதும், பெண்கள் உட்பட ஆயுதமேந்திப் போராடி கொடூர நிலப்பிரபுக்களிடமிருந்தும் நிஜாமிடமிருந்தும் பெரும்பகுதியை விடுவித்துத் தனியாக ஓர் அரசே நடத்தியதும் தெரிந்திருக்காது.
அந்த வீரமிக்க போராட்டத்தின் தளநாயகர், வழிநடத்தியவர் பி. சுந்தரய்யா. இந்தப் போராட்டத்தால் தெலுங்கானா பகுதியில் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்பன உள்ளிட்ட உரிமைகள் செயல்படுத்தப்பட்டன.
ஒருங்கிணைந்த ஆந்திராவில் நெல்லூர் மாவட்டம், கொவ்வூர் வட்டத்திலுள்ள அலகானிபாடு என்ற கிராமத்தில் பெரும் நிலச்சுவாந்தார் வீட்டில் பிறந்தவர் சுந்தரய்யா. அவருக்கு வைக்கப்பட்ட முழுப்பெயர் புச்சாலபள்ளி வேங்கட சுந்தரராமி ரெட்டி. அவர்களது குடும்பத்தில் இருந்த நிலங்களைப் பேண முடியாமல் பெரும்பகுதியை அரசுக்கே விட்டுக் கொடுக்கும் அளவுக்கு பெருந்தனக்காரர்கள்.
உள்ளூர் பஞ்சாயத்துப் பள்ளியில் படித்தபோது சண்டித்தனத்துக்குப் பெயர் போனவராக இருந்தார் சுந்தரய்யா. எனினும் அவரது ஈடுபாட்டால் படிப்பில் சிறந்து விளங்கி ஆசிரியர்களிடம் நற்பெயர் பெற்றார்.
உயர்சாதி ரெட்டிக்கள் பெரும்பாலாக இருந்த அவரது கிராமத்தில் தீண்டாமைக் கொடுமை நிறைந்திருந்தது. அவர்களது உழைப்பு சுரண்டப்பட்டது. இவற்றை நேரில் பார்த்தார். அவரது தந்தை இறந்தபிறகு தாயார் குடும்பப் பொறுப்பை ஏற்றார். அவரது அக்கா ஒரு நீதிபதிக்கு இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டார். சுந்தரய்யாவை அவர் மேலும் படிப்பதற்காகத் தம்முடன் அழைத்துச் சென்று தமிழ்நாட்டில் திருவள்ளூரில் பள்ளியில் சேர்த்தார்.
தெலுங்கு நன்றாகத் தெரிந்திருந்தாலும் தமிழில் தடுமாறினார் சுந்தரய்யா. அதிலிருந்தே தாய்மொழியே கல்வி கற்கச் சிறந்தது என்ற எண்ணம் அவரிடம் நிலைகொண்டு விட்டது. அதே சமயத்தில் தெலுங்கு கற்பிக்க ஓர் ஆசிரியரை ஏற்பாடு செய்தார் மாமா. அவரது தூண்டுதலில் ஏராளமான தெலுங்குப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினார் சுந்தரய்யா. அவர் படித்த புத்தகங்கள் தேசபக்தியை அவருக்கு ஊட்டின. மாமாவுக்கு இவருக்குள் இருந்த புரட்சிக் கனல் தெரிந்துவிட்டது.
திருவள்ளூரைச் சுற்றியிருந்த அழகிய கோவில்களைக் கண்டு களிப்பது அவர் பொழுதுபோக்கு. புராணங்களையும் படித்தார். பிறகு ஏலூருக்கும் ராஜமுந்திரிக்கும் மாமாவுக்கு மாற்றல் கிடைத்தபோது அங்கும் படித்தார் சுந்தரய்யா. இங்கு நாவல்களைத் தாண்டி வரலாறுகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நூலகரே வியக்கும் அளவுக்குப் படித்தார். பின்னர் அங்கு காங்கிரஸ் ஊழியர்கள் மூலம் தேசிய இயக்க அறிமுகம் கிடைக்க அவற்றைப் பற்றியும் தெரிந்து கொள்ளலானார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மீது வெறுப்பு ஏற்பட, தேசிய இயக்கத்தில் கலந்துகொள்ள முடிவெடுத்தார்.
பனாரஸ் மாணவ நண்பர்கள் மூலம் ஆயுதப்புரட்சி குறித்தும் அறிந்தார். அவர்கள் முதலில் ஒரு ‘புரட்சியாளர் குழுவை’ அமைத்தனர். புரட்சியாளர் தொடர்பான புத்தகங்களைப் படித்து அவர்கள் விவாதித்தனர். அப்போது பள்ளியில் தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் நல்ல தேர்ச்சி பெற்றார். சாரணர் பயிற்சி பெற்று சிறந்த சாரணர் என்றும் பெயர் பெற்றார். ஒருமுறை தம்பி செய்த கலாட்டாவால் மாமா அவரை நன்கு அடித்துவிட, தாங்கள் இருவரும் மெட்ராஸ் சென்று படிக்கிறோம், இனி இங்கு இருக்க மாட்டோம் என்று சுந்தரய்யாவும் அவரது தம்பியும் சொல்லி விட்டார்கள்.
சென்னையில் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளியில் இருவரும் சேர்ந்தனர். அங்கு அவருக்கு அரசியல் கோட்பாடுகளும் தத்துவார்த்தக் கல்வியும் அறிமுகமாயின. தொடர்ந்து பத்திரிகைகளைப் படித்து பொது அறிவை வளர்த்துக் கொண்டார் சுந்தரய்யா. அப்போது படித்த மதப்புத்தகங்களால் மதப்பற்றோடு, சேவை மனப்பான்மையும் அவருக்கு ஏற்பட்டது.
அவ்வப்போது வீட்டுக்கு வருவார். வரும்போது, வீட்டிலும் ஊரிலும் கடைப்பிடிக்கப்படும் திண்டாமைக்கு எதிராகக் கலகக் குரல் கொடுக்கத் தொடங்கினார். ஊர் மக்களோடு வயலில் இறங்கி உழைத்தார், நெருக்கம் காட்டினார். அவர்களும் அவரை நேசித்தனர். தங்கள் கஷ்டங்களைப் பகிர்ந்துகொண்டனர். யானாதி பிரிவைச் சேர்ந்த ஒருவரை அண்ணன் ஒருமுறை ஏதோ காரணத்துக்காக அடித்தபோது அவரோடு சண்டைக்குப் போய்விட்டார் சுந்தர்ய்யா.
1927இல் சென்னையில் காங்கிரஸ் மாநாடு நடந்தபோது அங்கு சென்று சுற்றிப் பார்த்தார் சுந்தரய்யா. பள்ளியில் விளையாட்டில் யோகாசனத்தில் முன்நின்றார். கடைசிவரை அவர் யோகாசனத்தை விடவில்லை. மற்றவர்களுக்கும் கற்பித்தார்.
அச்சமயம் சைமன் கமிஷன் இந்தியா வந்தது. அதை பகிஷ்கரிக்க காங்கிரஸ் முடிவெடுத்தது. இதை அறிந்து கொண்ட சுந்தரய்யாவும் அவரது நண்பர்களும் பள்ளிக்குச் செல்லாமல் தவிர்த்துவிட்டனர். அடுத்த நாள் பள்ளி சென்றபோது ஆசிரியர் அவரை நிறுத்தி ஏன் வரவில்லை என்று கேட்க, அது தேசியக்கடமை என்று துணிவுடன் பதிலளித்தார். தனது பாதுகாப்பாளர் தடுத்திருந்தால் அதுவும் தேசியக்கடமையிலிருந்து தவறுவதாகும் என்று பதிலளித்தார். ஆசிரியர் விட்டுவிட்டார். ‘நல்ல காரியம் செய்யும்போது யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை’ என்று தன் நண்பர்களிடம் சொன்னார்.
சென்னைக்கு காந்திஜி வந்தபோது அக்கூட்டத்துக்கு சாரணர் உடையுடனேயே சென்றதால் ஆசிரியர் அதைக் கேள்வி கேட்க, உங்கள் சாரணர் இயக்கமே வேண்டாமென்று விட்டுவிட்டார் சுந்தரய்யா. அவ்வளவு தேசபக்தி!
அப்போது பெங்களூரில் இருந்த அவரது மாமா அவரைச் சமாதானப்படுத்தி அங்கு வந்து படிக்குமாறு அழைத்தார். எனினும் சென்னை லயோலா கல்லூரியில் படிக்க ஆசைப்பட்டு அங்கு இண்டர்மீடியேட்டில் சேர்ந்தார். அவர் விடுதியில் தங்கியிருந்தபோது யூத் லீக் உறுப்பினரான எச்.டி.ராஜா அங்கு கம்யூனிஸ்ட் அறிக்கையையும், சோஷலிச நூல்களையும் கொண்டு வந்தார். அது சுந்தரய்யாவிடம் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தியது. அப்போதே அவரும் அவரது நண்பர்களும் கம்யூனிஸ்ட் அனுதாபிகளாக மாறிவிட்டனர். மீரட் சதிவழக்கு குறித்தும் பகத்சிங் வழக்கு குறித்தும் தொடர்ந்து படித்தார். மிகவும் கஷ்டப்பட்டு, ரகசியமாக சோஷலிச நூல்களைப் பெற்றுப் படித்தார்.
ஜனவரி 26ஆம் தேதியை சுதந்திர நாளாகக் கடைப்பிடிக்குமாறு காங்கிரஸ் அறைகூவல் விடுக்க, அவர் 290 மாணவர்களைத் திரட்டி ஊர்வலமாக வந்தார். வழியில் சத்தியமூர்த்தியும் சங்கமேஸ்வரனும் அவர்களை வாழ்த்தினர். பத்திரிகைகளிலும் சிறப்பாகச் செய்திகள் வந்தன.
மறுநாள் காந்தி குல்லாயுடன் வந்த ஒரு மாணவனை கல்லூரி தடுக்க, அனைத்து மாணவர்களும் காந்தி குல்லாய் அணிந்து அதை எதிர்த்தனர். வேறு வழியின்றிப் பின்வாங்கியது கல்லூரி. இதனால் சுந்தரய்யாவின் மாணவர் குழாம் தனிச்சிறப்பு பெற்றது.
இந்த உதவாக்கரைப் படிப்பை விட்டுவிட்டு தேசிய இயக்கத்தில் இறங்க முடிவு செய்து பெட்ராண்ட் பாதிரியாருக்குக் கடிதம் எழுதினார். அவரோ இவரை அழைத்துப் படிப்பை முடித்துவிட்டுப் போகுமாறு வலியுறுத்தினார். எனினும் சுந்தரய்யாவின் மேதமயைக் கண்டு பெருவியப்படைந்திருந்தார். வீட்டிலும் எல்லோரும் வற்புறுத்த தேர்வு எழுதினார்.
வீடு திரும்பிய சுந்தரய்யா காரியத்தில் ஈடுபடலானார். அவரும் பல நிலச்சுவாந்தார் வீடுகளைச் சேர்ந்த பையன்களும் தாழ்த்தப்பட்டோருக்கு ஒரு விருந்தை ஏற்பாடு செய்தனர். ஆனால் நிலப்பிரபுக்களின் மிரட்டலால் அவர்கள் வரத் துணியவில்லை. எனினும் அவர்மீது அவர்களுக்கு நன்மதிப்பு ஏற்பட்டது. அங்கு கூலியாட்கள் சங்கங்கள் அமைக்க முயன்றார் அவர். மார்க்சிய நூல்கள் அவர்மீது செலுத்திய செல்வாக்கு அது.
அப்போது மேற்கு கோதாவரி மாவட்டத்துக்கு வருகை தந்து சத்தியாகிரகத்துக்குத் தலைமையேற்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு சென்று ஊழியர்களுக்கு உடற்பயிற்சி கொடுத்தார் சுந்தரய்யா. முதலில் திருஸுமர்ரு எனும் கடற்கரை கிராமத்தில் இறங்கியபோது போலீஸ் வரவேயில்லை. எனவே கள் இறக்கும் பனை, ஈச்ச மரங்களை வெட்டித் தள்ளத் தொடங்கினர்.
அப்போது எந்த முன் அனுபவமும் இன்றி மரத்தில் ஏறிக் குலைகளை வெட்டித் தள்ளிய சுந்தரய்யாவின் துணிவைக் கண்டு மற்றவர்கள் திகைத்தனர். ஊரெங்கும் ஒரே பேச்சாக இருந்தது. ஏராளமான மரங்களை இவர்கள் வெட்டவும், வேறு வழியின்றி அவர்கள் கைது செய்யப்பட்டனர். முதலில் தஞ்சை சிறுவர் பள்ளிக்கு அவர் அனுப்பப்பட்டார். வழியில் மக்கள் வாழ்வைக் கண்டவர், காங்கிரஸ் ஒரு பக்கம் போராடுகிறது. மக்களோ உணர்வின்றி இருக்கிறார்களே என்று நினைத்துக்கொண்டார்.
அவர் அதுவரை படித்திருந்த நூல்களால் தாம் ஒரு கம்யூனிஸ்டாக வேண்டுமென்ற ஆவல் வேரூன்றியிருந்தது. அந்தச் சிறுவர் பள்ளியிலும், பின்னர் திருச்சி, ராஜமுந்திரி சிறைகளிலும், தாம் கற்றதை மற்றவர்களுக்குப் பாடம் எடுத்தார் சுந்தரய்யா.
சிறுவர் சிறையில் உணவு மோசமாக இருந்தது. சாதி, மதப் பாகுபாட்டால் உணவும் மாறியது. நால்வரைச் சிறைக் கமிட்டியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்கள் மனுவை அளித்தனர். காலையில் இயற்கை உபாதைகளைக் கழிக்கக்கூட அனுமதிக்காமல் ட்ரில் எடுத்ததை இவர்கள் எதிர்த்தனர். மருத்துவம் கிடைக்காத நிலை இருந்தது. இவர்கள் எதிர்த்ததால் நால்வரும் தனிக் கொட்டடிகளில் பிரித்து அடைக்கப்பட்டனர். உண்ணாவிரதத்தை ‘ரிங் லீடர்கள்’ தொடங்கினர். எனினும் வலுக்கட்டாயமாக உணவைத் திணித்தனர். வேறு வழியின்றி மற்றவர்கள் கைவிடவும், இவரும் கைவிட வேண்டி வந்தது.
இருமாதங்களுக்குப் பிறகு இவர்களைப் பிரிக்கவே திருச்சி சிறைக்கு 12 பேரை மாற்றினர். தஞ்சை சிறையில் தாமே இந்தியைக் கற்று நாவல்களைப் படிக்கும் அளவுக்கு முன்னேறியிருந்தார் சுந்தரய்யா. திருக்குறளையும் கற்க முனைந்தார். ஏற்கெனவே ஊரில் வேலை செய்திருந்ததால் இங்கு வேலை செய்வது அவருக்கு எளிதாகவே இருந்தது. மற்றவர்களின் வேலையையும் சேர்த்துச் செய்தார் அவர்.
நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கால் மீண்டும் சிறுவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். குடும்பம் அவரை விடுவிக்க முயற்சி செய்தது. நீதிமன்றத்தில் இவர் பதிலளிக்க மறுத்ததால் வழக்கு தள்ளுபடியானது. ராஜமுந்திரி சிறைக்கு அவர் மாற்றப்பட்டார். அவருக்கு அரிசிச் சோறு கிடைத்தாலும் ராகி களி கொடுக்கப்பட்டவர்களுக்கு பண்டமாற்று செய்து உதவினார் சுந்தரய்யா.
ராஜமுந்திரி சிறையில் பகத்சிங்கின் தோழர்களான சிவவர்மா, விஜயகுமார் சின்ஹா ஆகியோரைச் சந்தித்துப் பழகினார் சுந்தரய்யா. சிவவர்மா தமது வீரசாகசங்களை விவரிப்பார். கஷ்ட நஷ்டங்களை விவரிப்பார். அவரிடமிருந்து சிறு விஷயங்களில்கூட கவனம் தேவை என்பதைக் கற்றார் சுந்தரய்யா. இது பிற்காலத்தில் அவரது தலைமறைவு வாழ்க்கைக்கும் ஆயுதப் போராட்டத்துக்கும் உதவியது. சிவவர்மாவின் விவரிப்புகள் ‘தனிநபர் போராளிகள்’ மீது மரியாதையை ஏற்படுத்தியது.
சிறையில் கிடைத்த அறிமுகங்கள் பின்னர் கட்சியைக் கட்ட உதவியது. 1931 மார்ச்சில் விடுதலையானார் சுந்தரய்யா. பிரிட்டிஷ் அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டதைத் தொடர்ந்து மார்ச் 23 அன்று பகத்சிங் தூக்கிலிடப்பட்டார். மற்றொரு பக்கம், காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தைப் பாதியில் கைவிட்டது சுந்தரய்யாவைப் பெரிதும் பாதித்தது.
(தொடரும்)