காங்கிரஸ் இயக்கத்தை நிறுத்திவிட்டதால், மீண்டும் அது தொடங்கும் வரை படிப்பைத் தொடருமாறு அம்மா வற்புறுத்த, அதை ஏற்ற சுந்தரய்யா மேல்படிப்புக்கு பெங்களூருக்குத் தன் மாமா வீட்டுக்குச் சென்றார். அங்கு இண்டர்மீடியட் இரண்டாம் வருடப் படிப்பில் சேர்ந்தார். முன்னரே தன் அக்காவிடமும் மாமாவிடமும் தான் கதர் ஆடைதான் உடுத்துவேன் என்றும் ராட்டினத்தில் நூல் நூற்பேன் என்றும் கூறி அனுமதி பெற்று விட்டார். மாமாவுக்கு அவர் மீது நன்மதிப்பு இருந்தது.
இந்த நிலையில்தான் அமீர் ஹைதர்கான் சுந்தரய்யாவை முழுநேர அரசியலுக்கு இழுக்க பெங்களூருக்கு வந்தார். சுந்தரய்யா பெரிய ஆர்வம் ஒன்றும் காட்டவில்லை. ஹைதர் அவரை வற்புறுத்தினாலும், தான் படிப்பு முடிந்தபிறகுதான் யோசிப்பேன் என்று கூறிவிட்டார். மேலும் காந்திய வழியா, கம்யூனிச வழியா என்பதிலும் அவர் முடிவுக்கு வரவில்லை. எனினும், ஹைதர் ஒரு திரியைக் கொளுத்திப் போட்டார். மாமா வீட்டில் யூனியன் ஜாக் பறக்கும்போது ஒரு தேசபக்தர் அங்கு இருக்கலாமா என்ற கேள்வியைக் கேட்டுவிட்டுச் சென்று விட்டார்.
சுந்தரய்யா கப்பன் பூங்கா நூலகத்தில் கிடைத்த கம்யூனிச நூல்களைப் படித்தார். அந்தச் சமயத்தில் அவரது அக்கா மகளின் திருமணம் வரவும், அதிலும் யூனியன் ஜாக் கொடியைப் பறக்கவிட்டார் மாமா. கடும் கோபமடைந்த சுந்தரய்யா அதற்காக மாமாவிடம் சண்டை போட்டுவிட்டு ஊருக்குக் கிளம்பி விட்டார். ஹைதர் கொளுத்திய வெடி வெடித்து விட்டது.
ஊருக்குச் சென்று சில வேலைகளை முடித்துவிட்டு சென்னைக்குத் திரும்பி முழுநேர கம்யூனிஸ்ட் ஆவதென்று முடிவெடுத்து வி.கே. நரசிம்மனுக்குத் தகவல் கொடுத்துவிட்டார்.
அவர் அங்கு இருந்தபோது வாலிபர்களைத் திரட்டி நூல் நிலையம் நடத்தினார். அந்தச் சமயத்தில் சென்னையில் நரசிம்மனும், ஹைதர்கானும் கைது செய்யப்பட்டு விட்டனர். காந்தி வெறும் கையோடு வட்டமேசை மாநாட்டிலிருந்து திரும்பியிருந்தார். காங்கிரஸ் இயக்கம் தொடங்கும் என்பது போலத் தெரிந்தது. கம்யூனிஸ்டுகள் கைது செய்யப்பட்டதால் அங்கு செல்வதில் பொருளில்லை என்பதை உணர்ந்து இங்கு வாலிபர்களைத் திரட்டி இயக்கம் நடத்தலாம் என்று நினைத்தார்.
தாம் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஈடுபடப் போவதால் சொத்தை அவரது அண்ணாவும், தம்பியும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறினார் சுந்தரய்யா. ஆனால் அவரது அண்ணன் ஏற்க மறுத்தார். எனவே இவரது பங்கு இவருக்கே வந்துவிட்டது. எனினும் அதை ஏற்காமல் அண்ணனுக்கே விற்றுவிட்டார்.
அவ்வப்போது நிலத்திலும் இறங்கி வேலை செய்வார் சுந்தரய்யா. மற்ற கூலியாட்களுக்கும் தனக்கும் ஒரே மாதிரிதான் உணவு கொடுக்க வேண்டுமென்று சண்டை போடுவார். மாடு திமிறியபோது அதன் கொம்பைப் பிடித்து அடக்க முயன்றவர் அவர். அவ்வளவு துணிவு. அவரது சொந்த வீட்டு அனுபவங்கள் காரணமாகவும், சுற்றுப்புற சூழல் காரணமாகவும் பெண்களின் உரிமைகள், பாலுறவு சமத்துவம் ஆகியவற்றில் தீவீர ஆதரவாளராக அப்போதே இருந்தார் சுந்தரய்யா.
தாழ்த்தப்பட்டோருக்கு நூல் நிலையம், பள்ளி, இலவச மருத்துவமனை, கூட்டுறவு விற்பனைக் கடை என்று பலவற்றையும் செய்தார் அவர். அவரது வாலிபர் சங்கத் தோழர்களும் முழுதாக உதவினர். சிறந்த காந்தியவாதி என்றும் கம்யூனிஸ்ட் என்றும் பெயர் பெற்றார் சுந்தரய்யா. அப்போது முதன்முதலாக விவசாயத் தொழிலாளர் சங்கத்தையும் அமைத்தார்.
1932இல் காங்கிரசின் சிறை நிரப்பும் போராட்டத்தில் எந்தப் பலனும் இருக்காது என்று நினைத்தவர் தானும் கலந்து கொள்ளவில்லை. மற்றவர்களிடமும் அப்படியே சொன்னார். அதே நேரத்தில் தனிநபர் பயங்கரவாதத்தில் ஈடுபட முயன்றவர்களுடனும் மாறுபட்டு நின்றார் சுந்தரய்யா. அதனால் எந்தப் பலனும் இருக்காது என்று அவர்களிடம் வாதிட்டார்.
அக்காலத்தில் மார்க்ஸ் ஏங்கல்சின் கம்யூனிஸ்ட் அறிக்கையையும், அரசும் புரட்சியும், போன்ற நூல்களையும் தெலுங்கில் மொழிபெயர்த்து வெளியிட்டார் சுந்தரய்யா.
அப்போது ஹைதர்கான் சுந்தரய்யாவை சோவியத் அனுப்ப முயன்றார். எனினும் அது கைகூடவில்லை. அச்சமயத்தில் காந்திஜி அங்கு சுற்றுப்பயணம் வர, அவரது கூட்டங்களுக்குப் பாதுகாப்புத் தருமாறு சுந்தரய்யாவிடம் கேட்டுக் கொண்டது காங்கிரஸ். அதையும் அவர் செவ்வனே செய்து தந்தார்.
முறையாக கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆகாவிட்டாலும், 1931லிருந்தே தம்மை பரீட்சார்த்த உறுப்பினராகக் கருதினார் சுந்தரய்யா. 1932இல் பம்பாய் சென்று கம்யூனிஸ்ட் உணர்வுள்ள தோழர்களைச் சந்தித்தார். அவர்களில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாடும் ஒருவர். தென்னிந்தியாவில் கட்சியை அமைக்கும் பொறுப்பு சுந்தரய்யாவுடையது. அங்கு வந்த தென்னிந்தியர்களில் யாருக்கு சோஷலிச சிந்தனை உள்ளது என்பதை ஆராய்வதே முக்கிய நோக்கம். சென்னையில் ஏறக்குறைய கம்யூனிஸ்ட் கட்சியாகவே கருதப்பட்ட ‘தொழிலாளர் பாதுகாப்பு’ சங்கங்களை சேர்க்கும் முயற்சியில் அவரும் தோழர்களும் ஈடுபட்டனர். அப்போது அவர் கேரளத்துக்குச் சென்று இ.எம்.எஸ்.சையும், கிருஷ்ணபிள்ளையையும் சந்தித்து விவாதித்தார். அவர்கள் சுந்தரய்யாவை காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் சேருமாறு அழைத்தனர். தொடர்ந்து அவர்களிடையே விவாதம் நடந்தது.
கம்யூனிஸ்ட் கட்சியின் புத்தகங்களை அச்சிட்டு அவற்றைப் படித்து விவாதிக்கும் முயற்சியை சுந்தரய்யா எடுத்தார். அக்காலத்தில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஏழாவது மாநாட்டுக்கு தோழர் மிராஜ்கரை அனுப்ப கட்சி எடுத்த முடிவை செயல்படுத்த முடியாது போனது. அவர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டு விட்டார்.
1935இல் காங்கிரசிலிருந்து வெளியேறிய கம்யூனிஸ்டுகள் யூத் லீகை ஒரு மேடையாகக் கொண்டு செயல்பட்டனர். சுந்தரய்யா கட்சித் தோழர்கள் இருந்த கிராமங்களில் விவசாய சங்கத்தையும், விவசாயத் தொழிலாளர் சங்கத்தையும் கட்டமைக்கத் தொடங்கினார். இவற்றுக்கிடையில் கடும் சிரமத்துக்கிடையே மத்தியக்குழுவிலும் கலந்து கொண்டார். ஆனால் அது சரியாகச் செயல்படவில்லை என்று எழுதுகிறார் சுந்தரய்யா. கட்சி மையம் செயல்படுவது மிகவும் சிரமமாக இருந்தது. பம்பாய்க்கு யார் சென்றாலும் கைது செய்யப்பட்டனர். எனினும் முயற்சியெடுத்து மத்தியக்குழுவை லக்னோவில் கூட்டினார். அதில் தோழர் காட்டேவை ரகசியமாகக் கொண்டு சேர்க்கும் பணியை செவ்வனே செய்தார் சுந்தரய்யா.
1936இல் அனைவரும் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தனர். எனினும் கம்யூனிஸ்ட் கட்சியை ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் நிறுவினார்கள். சுந்தரய்யாவின் இந்தக் காலகட்டத்தில் பி.ராமமூர்த்தி, ஏ.எஸ்.கே அய்யங்கார், பி.சீனிவாசராவ், எம்.ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் கட்சியில் இணைந்தனர்.
இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று தன்னை காங்கிரஸ் மாநாட்டில் அறிவித்துக் கொண்ட சிங்காரவேலர் பின்னர் விலகிவிட்டதாகவும் ஒரு அனுதாபியாக மட்டுமே இருந்ததாகவும் பதிவு செய்கிறார் சுந்தரய்யா. சிங்காரவேலரை நழுவிப் போனவராகவே சொல்கிறார் சுந்தரய்யா.
கட்சிப் பணிக்காக முதலில் நடந்தே சென்றவர் இப்போது சைக்கிளில் செல்லத் தொடங்கினார். நெல்லூரிலிருந்து சைக்கிளிலேயே சென்னை செல்வதும் திரும்புவதும் வழக்கமானது. இந்தப் பழக்கம் பின்னர் தலைமறைவு காலத்தில் அவருக்குப் பயன்பட்டது. அவரைப் பின் தொடர முயன்ற சிஐடிக்கள் சோர்ந்து போனார்கள். ஒவ்வொரு புரட்சியாளனும் தமது உடலைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது அவரது கருத்து.
1942-43இல் கொரில்லா பயிற்சி பெற்று விட்டார் சுந்தரய்யா. அவரது வலுவைக் கண்டு பயிற்சியாளரே வியந்து போனார். நீரில் மூழ்கி நீச்சல் அடிப்பது, மலையேறுவது என்று அனைத்திலும் அசத்தினார்.
1939இல் இரண்டாம் உலகப்போர் தொடங்கியதும், கம்யூனிஸ்டுகள் அதை எதிர்த்துப் பிரசாரம் செய்யத் தொடங்கினர். பி.சீனிவாசராவ் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட, பி.ராமமூர்த்தி அவரது ஊரான வேப்பத்தூரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
சுந்தரய்யா அவரை சி.சுப்ரமணியத்தின் உதவியுடன் அங்கிருந்து கடத்தி சென்னைக்கு வரவழைத்து அங்கு இரண்டு தலைமறைவு மையங்களை ஏற்படுத்தினார். ஆனால் சில மாதங்களில் இரண்டு தலைமறைவு மையங்களையும் போலீஸ் மோப்பம் பிடித்துக் கைது செய்து விட்டது. அவர்கள் மீது சென்னை சதிவழக்குப் போடப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும் சுந்தரய்யா விடாமல் மேலும் இரண்டு தலைமறைவு மையங்களை ஏற்படுத்தினார். இது 1942 வரை தொடர்ந்தது. அப்போது ஏற்பட்ட திருப்பத்தால், கட்சி மீதான தடை விலக்கப்பட்டு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
1943இல் பம்பாயில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் மத்தியக்குழு உறுப்பினராக சுந்தரய்யா தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் ராணுவம் இந்தியாவுக்குள் நுழைந்து விடலாம் என்ற அச்சம் ஏற்பட, கட்சி அனைத்து இடங்களிலும் கொரில்லாக் குழுக்களை ஏற்படுத்த முடிவு செய்து சுந்தரய்யாவிடம் பொறுப்பை ஒப்படைத்தது. அவரும் பல இடங்களுக்குச் சென்று கொரில்லா பயிற்சி அளித்தார்.
1945இல் ஆந்திராவில் கட்சி உருவானாலும், சுந்தரய்யா மையத்திலேயே தொடருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். மையத்துக்கும் தென்னிந்திய கட்சிக் கிளைகளுக்கும் இணைப்பை அவர் ஏற்படுத்தினார்.
1943இல் மையத்தில் இருந்தபோதுதான் லீலாவதியுடன் அவரது திருமணம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் பி.சி.ஜோஷி முன்னால் தம்மை தம்பதியராக அறிவித்துக் கொண்டவர்கள், அங்கிருந்தவர்களுக்கு தேநீர் விருந்து அளித்தனர். அவ்வளவுதான். திருமணம் இனிதே முடிந்தது. அவரது திருமண வாழ்வில் ஒருபோதும் இருவரும் சிறு சச்சரவு கூடச் செய்ததில்லை என்பது நாம் கடைப்பிடிக்க வேண்டிய பண்பல்லவா?
1943இல் வங்கப்பஞ்சம் ஏற்பட்டபோது கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் தமது பசியையும் பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கி அனைவருக்கும் சேவை செய்தனர். விளைவு அவர்களது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. கட்சித் தலைவர் முசாபர் அகமது சுந்தரய்யாவின் உதவியை நாட, அவர்களை ஆந்திராவுக்கு வரவழைத்து நல்ல உணவு, ஆரோக்கியம், மருத்துவ சிகிச்சை அளித்து திருப்பி அனுப்பி வைத்தார் சுந்தரய்யா.
பெரும்பாலான தற்கால இளைஞர்களுக்கு தெலுங்கானா போராட்டம் என்றால் சில வருடங்களுக்கு முன் நடந்ததுதான் தெரிந்திருக்கும். ஆனால் இந்திய விடுதலைக்கு முன்பாகவே தெலுங்கானாவில் புரட்சி நடந்து ஒரு கம்யூனிச அரசாங்கமே நடந்தது. தலைமை ஏற்று நடத்திய தளபதி, சுந்தரய்யா.
(தொடரும்)