நிஜாம் ஆட்சியின் கீழ் தெலுங்கானா பகுதியில் நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறை தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்தது. மாநிலத்தின் 60 சதவீத நிலங்கள் அரசுக்குச் சொந்தம். 10 சதவீதம் நிஜாமுக்கு. 30 சதவீதம் ஜாகிர்களின் சொத்து. சட்டவிரோதமாக நிலங்களைக் கைப்பற்றுவது, கட்டாய உழைப்பு ஆகியவை இந்தப் பகுதியில் வழக்கம். சில ஜாகிர்தார்கள் சொந்தமாக காவல்துறை, வருவாய்த்துறை போன்றவற்றை வைத்திருந்தனர்.
விவசாயிகள் வீட்டுக்கு ஒருவரை நிலப்பிரபுவிடம் ‘வெட்டி’ (சம்பளமற்ற) உழைப்புக்கு அனுப்ப வேண்டும். மேலும் அவர்கள் வீட்டுக்கான தோல் பொருட்கள், காலணிகள், கள், ஆடுகள், துணி, விவசாயக் கருவிகள், சட்டிப் பானைகள் அனைத்தையும் அந்தந்த தொழில் செய்வோர் இலவசமாகத் தர வேண்டும். அடுத்த ஊருக்குப் பல்லக்கில் சுமந்து செல்ல வேண்டும். இதையெல்லாம் செய்துவிட்டுத்தான் தம் நிலத்தில் வேலை செய்ய முடியும். மேலும் வீட்டிலிருக்கும் இளம் பெண்களைப் பிடித்துச் சென்று தம் வீட்டில் அடிமை வேலை செய்ய வைத்ததுடன், காம இச்சைக்கும் பயன்படுத்தினர்.
1940களில் இந்தக் கொடுமைகளுக்கு எதிராக விவசாயிகள் போராடத் தொடங்கியபோது கம்யூனிஸ்ட் கட்சி இதில் இணைந்தது. இந்தக் கொடுமைகள் அனைத்தையும் ஒழிக்கும் கோரிக்கைகளை கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்து மக்களை அணிதிரட்டியது. சங்கம் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ஆந்திர மகாசபா நிலங்களில் செங்கொடியை நட்டுப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியது. குண்டர்களை விரட்டியடித்தது. வெட்டி முறையை ஒழித்தது. நிலப்பிரபுக்கள் ஓடி நிஜாமிடம் தஞ்சமடைந்தனர்.
நிஜாமின் ராணுவம் உள்ளே புகுந்தது. எனினும் மக்கள் தம்மிடமிருந்த ஆயுதங்களுடன் எதிர்த்து நின்றனர். ஏற்கெனவே கொரில்லா போர் முறையில் பயிற்சி பெற்றிருந்த சுந்தரய்யா தலைமை ஏற்று மக்களுக்குப் பயிற்சி கொடுத்ததுடன் முன்னாள் ராணுவ வீரர்களும் பயிற்சி கொடுத்தனர். சுற்றிச் சுழன்றார் சுந்தரய்யா.
தெலுங்கானாவில் தனி ஆட்சியே அமைந்தது. நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. பெண்கள் உட்பட அனைவரும் ஆயுதமேந்தினர். ஓரளவு பாலின சமத்துவமும் ஏற்பட்டது. எனினும் இந்தியா விடுதலை பெற்றதும் உள்ளே நுழைந்த இந்திய இராணுவம் இரண்டரை ஆண்டுகள் போரிட்டு பழைய முறையைத் திருப்பி விட்டது. 1951அக்டோபர் 10 அன்று போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. நாட்டுக்குள்ளேயே இன்னொரு நாட்டை உருவாக்க முயன்றது தவறு என்று பின்னர் கட்சி முடிவுக்கு வந்தாலும், இந்தப் போராட்டம் இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொரிக்கப்பட்டது.
1951ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கி 1952இல் முடிவடைந்த தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் 17 இடங்களில் கம்யூனிஸ்டுகள் வென்றனர். சுந்தரய்யாவும், பசவபுன்னையாவும் மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கட்சியை ஒன்றுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் ரகசியமாக வேலை செய்பவர்களையும், பகிரங்கமாகச் செயல்படுபவர்களையும் இணைத்து ஒரு மாநாடு மகாராஷ்டிராவில் பூனாவுக்கருகே நடத்த முடிவெடுக்கப்பட்டது. சுந்தர்ய்யா சிரமம் எடுத்து அஜய் கோஷ் போன்ற தலைவர்களை அங்கு கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பையும் ஏற்றார்.
தெலுங்கானாவுக்கும், ஆந்திராவுக்கும் தனித்தனி கமிட்டிகள் அமைக்க முடிவெடுக்கப்பட்டு தெலுங்கானா கமிட்டியின் தலைமைப் பொறுப்பு சுந்தரய்யாவிடம் கொடுக்கப்பட்டது. வேறு யாரையும் அவர்கள் ஏற்க மறுத்தனர். அந்த மாநாடு நடைபெற்று பத்து நாட்களுக்குப் பிறகு சுந்தரய்யா தலைமறைவு வாழ்க்கையிலிருந்து வெளிவந்து ராஜ்யசபாவுக்குப் போட்டியிட்டார்.
ஆந்திரக் கமிட்டியில் பிரச்சனைகள் ஏற்பட்டதால் சுந்தரய்யாவும், பசவபுன்னையாவும் தெலுங்கானா கமிட்டியிலிருந்து ஆந்திரக் கமிட்டிக்கு மாறினர். அவர் முதலமைச்சர் சஞ்சீவ ரெட்டியைச் சந்தித்து அவரை வற்புறுத்தி தெலுங்கானா போராட்டத்தால் சிறையில் இருந்தவர்களை அணி அணியாக விடுவிக்க வைத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததால் டெல்லியில் தலைமை அலுவலகம் அமைக்கும் பணி சுந்தரய்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது. நாடாளுமன்றக் கட்சி அலுவலகத்தை அமைத்தது அவர் செய்த முக்கியமான பணி. அங்கும் நடந்தும் சைக்கிளிலும் ஜீப்பிலும் சுற்றிக் கொண்டிருந்தார் சுந்தரய்யா.
1955இல் நடைபெற்ற தேர்தலில் சுந்தரய்யா கன்னாவரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே மாநிலங்களவையிலிருந்து ராஜினாமா செய்தார். எனினும் ஆந்திரத் தேர்தலில் கட்சி பெரும் சரிவைச் சந்தித்ததால் ராஜேஸ்வரராவ் கட்சியைக் கலைக்க வேண்டுமென்று கூற, சுந்தரய்யா போன்றோர் மறுத்து வாதிட்டனர். உட்கட்சி மோதல் வெடித்தது.
1957 முதல் 1967 வரை முதல் இரண்டாண்டுகள் ஆந்திர சட்டசபையிலும், தேச சட்டமன்றத்திலும் இருந்தார். 1962 தேர்தலில் கன்னவரத்தில் மீண்டும் வெற்றி பெற்றார்.
1954இலிருந்தே உட்கட்சியில் சித்தாந்த, அரசியல், ஸ்தாபனப் போராட்டம் நடந்து கொண்டே இருந்தது. சுந்தரய்யா, இ.எம்.எஸ். ஜோதிபாசு, ஹர்கிஷன்சிங் போன்ற தலைவர்கள் பி.சி.ஜோஷி போன்றவர்களின் வர்க்கக் கூட்டுக் கொள்கைக்கு எதிராக நின்றனர்.
1962இல் சீன எல்லைப் பிரச்சனை வெடித்தபோது கட்சிப் பிளவு பகிரங்கமாக இருந்தது. பேச்சுவார்த்தையே தீர்வு என்று கூறிய சுந்தரய்யா போன்ற தலைவர்கள் சுமார் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டனர். வெளியே வந்ததும் நடைபெற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதை எதிர்த்து 32 தலைவர்கள் வெளிநடப்புச் செய்தனர். அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்தனர்.
அரசு அவர்களை சீன ஏஜெண்டுகள் என்று கூறி அவதூறு பரப்ப முயன்றது. எனினும் அது தவறான வாதமேயாகும். தேர்தல் கமிஷன் இரண்டு கட்சிகளுக்கும் ஒரே பெயரும் சின்னமும் இருக்கமுடியாது என்று கூறியது. இதை எதிர்பார்த்து முன்பே கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என்று பெயரிடும் அனுமதியை தலைவர்கள் மாநாட்டில் பெற்றிருந்தனர். அப்படியே நட்சத்திரத்துடன் கூடிய அரிவாள் சுத்தியல் சின்னமும் வந்தது. அப்போது கேரளத் தேர்தல் வந்ததால் காங்கிரஸ் அரசு தாக்குதலை ஏவி சுந்தரய்யா உள்ளிட்ட தலைவர்களைக் கைது செய்து விட்டது.
1958-59 தொடங்கி சுந்தரய்யாவுக்குத் தொடர்ந்து வயிற்றில் பொறுக்க முடியாத வலி ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இதைச் சரி செய்ய பெரிய அறுவை சிகிச்சை தேவையென மருத்துவர்கள் கூறினர். மற்றவர்கள் வற்புறுத்தலில் தன் மனைவி லீலாவுடனும்,சகோதரர் ராமுடனும் சோவியத் சென்று சிகிச்சை மேற்கொண்டார் சுந்தரய்யா. மிகப்பெரிய அறுவை சிகிச்சைக்கும், ஓய்வுக்கும் பின் புத்துயிர் பெற்றார் சுந்தரய்யா.
1964இல் சுந்தரய்யா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1975 வரை நீடித்தார். அவசர நிலையின்போது கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டதால் பதவியை ராஜினாமா செய்தார். பொதுச்செயலாளராக இருந்த காலத்தில் கட்சி அவரது பணியால் பெரும் வளர்ச்சி கண்டது. மேலும் சிஐடியூ, அகில இந்திய விவசாயிகள் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய அமைப்புகளும் உருவாயின. 1969இல் தீவிர இடதுசாரி இயக்கம் தோன்றிய போது அதை எதிர்த்துப் போராடினார் சுந்தரய்யா.
1977இல் பொறுப்பிலிருந்து விலகியபோது மிகுந்த தயக்கத்துடன் அவரை விடுவித்தது கட்சி. ஆந்திராவின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிக்காலம் வரை அதில் நீடித்தார் சுந்தரய்யா.
1984 மே 19 ஆம் தேதி கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணமடைந்தார். சென்னையிலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் விஜயவாடாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. வழி நெடுகிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். கிருஷ்ணா நதிக்கரையில் அவரது உடல் அரசு மரியாதையுடனும், தலைவர்களின் வீர வணக்கத்துடனும் எரியூட்டப்பட்டது.
‘வரலாறு வார்த்தைகளால் எழுதப்படும் போதெல்லாம்
உன் பெயர் பொன்னால் அங்கே பொரிக்கப்படும்
எம் விடுதலைப் போரின் பயணத்தில்
என் முன்னே நடந்த வழிகாட்டி
என் தோழனே உனக்கு வீர வணக்கம்’
– ஹரீந்திரநாத் சட்டோபாத்யாயா
(தமிழில்: பி.கே.ராஜன்)
(தொடரும்)