2002 குடியரசுத் தலைவர் தேர்தல். ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி தமது வேட்பாளராக அரசியலுக்குச் சற்றும் தொடர்பில்லாத ராக்கெட் விஞ்ஞானி ஏ.பி.ஜே.அப்துல் கலாமை முன்மொழிகிறது. போட்டி போட்டுக் கொண்டு காங்கிரஸ் உட்பட அனைவரும் ஆதரிக்கின்றனர். காரணம் என்ன தெரியுமா? அவருக்கு எதிராக நின்றவரின் பின்னணி அப்படி.
அவர்தான் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பெண்கள் படையான ஜான்சிராணி ரெஜிமெண்ட்டின் தளபதி, கேப்டன் லஷ்மி செகால். சுதந்திரப் போராட்ட வீரர். தொடர்ச்சியாக அரசியலில் இருந்தவர். பெண்களுக்கான ஜனநாயக மாதர் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். தொடர்ந்து மருத்துவராகச் செயல்பட்டு கீழ்த்தட்டு மக்களுக்குச் சேவை புரிந்தவர். தவிரவும் அவர் ஒரு கம்யூனிஸ்ட். இதைவிட வேறு தவறு வேண்டுமா? அப்துல் கலாம் 89% வாக்குகள் பெற்றுக் குடியரசுத் தலைவரானார்.
லஷ்மியின் தந்தையின் பெயர் சுவாமிநாதன். ஒரு கட்டுப்பெட்டியான தமிழ் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். மிகவும் வறுமையான அக்குடும்பம் மலபாரில் ஒரு கிராமத்தில் வசித்தது. மூத்த மகனான அவர் தம்முடன் படித்தவர்களுக்கே டியூஷன் எடுத்து சம்பாதித்துத் தமது இளைய சகோதரன், சகோதரிகளைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போதுதான் அங்கு முன்சிபாக இருந்த பெருபிளவில் கோவிந்த மேனனின் உதவி அவருக்குக் கிடைத்தது. அவரது புத்திசாலித்தனத்தைக் கண்ட மேனன் அவர் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடிக்க உதவினார். பின்னர் சட்டம் படித்து சென்னை சட்டக் கல்லூரியின் விரிவுரையாளராகவும், முதல்வராகவும் ஆனார். பிராமணக் கட்டுப்பாடுகளை மீறி வெளிநாடு சென்றும் படித்தார். மூன்று வருடங்களில் சமர்ப்பிக்க வேண்டிய ஆய்வுக் கட்டுரையை ஆறே மாதத்தில் சமர்ப்பித்து ஆசிரியர்களை ஸ்தம்பிக்க வைத்தார். 37 வயதில் சென்னை திரும்பினார். இப்போதுதான் தானும் ஒரு திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் ஈடுபட வேண்டுமென்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது.
வெளிநாடு சென்றபோதே அவரைத் தடுத்தவர்கள் அவர் கெட்டுப் போய் விடுவார் என்று கணித்தார்கள். ஆம், அவர் கெட்டுத்தான் போனார். அதாவது முழு ஐயுறுவாதியாகத் திரும்பி விட்டார். பிராமணப் பழக்க வழக்கங்களை விட்டொழித்துவிட்டார். சமையல் செய்யவும் உதவி செய்யவும் ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை அமர்த்திக் கொண்டார்.
திருமணம்? அப்போதுதான் அவருக்கு மாணவராக இருந்தபோது உதவி செய்த கோவிந்த மேனன் நினைவுக்கு வந்தார். அவரது மகள்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்தவர், அவர்களது குடும்பத்தைத் தேடிக் கண்டு பிடித்தார். மேனன் மறைந்துவிட்ட சூழலில் அவரது 14 வயது கடைசி மகள்தான் திருமணமாகாமல் இருந்தார். சுவாமிநாதன் நேரே சென்று அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு விட்டார். அவர் பெயர் அம்முகுட்டி. அம்மு அம்மா முதலில் வயது வித்தியாசம் காரணமாகப் பெண் கொடுக்க யோசித்தார். எனினும் அம்முகுட்டிதான் மேலும் வாழ்க்கையில் உயர வேண்டுமென்றால் இதை விட்டால் வேறு வழியில்லை என்று துணிவுடன் திருமணம் செய்து கொண்டுவிட்டார்.
சுவாமிநாதன் அவரைச் சென்னைக்கு அழைத்து வந்தார். கல்வி கற்பித்தார். ஆங்கிலம் கற்பித்தார். விரைவில் அவரை ஐரோப்பாவுக்கும் இங்கிலாந்துக்கும் அழைத்துச் சென்று தங்க வைத்தார். அம்மு அவர் தங்கிய குடும்பங்களிடமிருந்து ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டார். வெளிநாட்டுப் பண்பாட்டைப் பின்பற்றி வாழத் தொடங்கினார். மூன்று குழந்தைகள். லஷ்மியுடன் இரண்டு சகோதரர்கள். சுவாமிநாதன் இரு சகோதரர்களையும் இங்கிலாந்துக்குப் படிக்க அனுப்பினார். அடிமைப் புத்தியிலிருந்து விடுபட அக்கல்வி உதவும் என்று நினைத்தார் அவர். இங்கு திரும்பி ஆங்கிலேயர்களை எதிர்க்க அது பயன்படும் என்று நினைத்தார்.
ஆனால் இங்கு பள்ளியில் படித்த லஷ்மி அங்கு ‘பேரரசர் வாழ்க’ என்ற இங்கிலாந்து கீதத்தைப் பாடிக் கொண்டிருந்தார். 1857 சிப்பாய்க் கலகம்தான் கல்கத்தாவுக்குக் கரும்புள்ளி என்று அவர்கள் சொல்லிக் கொடுத்ததை நம்பிக் கொண்டிருந்தார்.
அப்போதுதான் முன்னணி வழக்கறிஞராக இருந்த சுவாமிநாதன் கடம்பூர் கொலை வழக்கைக் கையில் எடுத்தார். ஓர் ஆங்கிலேயரைக் கொலை செய்ததாக ஒரு ஜமீந்தாரின் இளம் மகன் மீது குற்றச்சாட்டு. இரண்டு ஆங்கிலேயர்களை நீதிபதிகளாகக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது என்று கருதிய சுவாமிநாதன் வழக்கை முழுவதும் இந்தியர்களால் ஆன பம்பாய் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல அனுமதி கேட்டார். அங்கு தமது தரப்பு வாதங்களை வைத்து அவரை விடுவித்தார்.
குடும்பத்தினரின் வாழ்க்கை திரும்ப ஆரம்பித்தது. அதுவரை ஆங்கிலேயர் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்த லஷ்மி குடும்பத்தினர் முழு இந்தியராக மாறுவது என்று முடிவெடுத்தனர். குழந்தைகள் கான்வெண்டிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாறினர். ஆங்கில ஃப்ராக்குகளை விட்டு விட்டு பாவாடை சட்டை அணியத் தொடங்கினார் லஷ்மி.
வீட்டில் மலையாளத்திலும் தமிழிலும் பேசத் தொடங்கினர். அன்னியத் துணிகளை மறுத்தனர். அம்மு மெட்ராசின் உமன்ஸ் இந்தியா அசோசியேஷனிலும், அகில இந்திய பெண்கள் மாநாட்டிலும் முழு வேகத்தில் ஈடுபட்டார். வீட்டில் அனைத்துச் சாதியினரும் பணிபுரிந்தனர். அவர்கள் அனைவரையும் தம் குடும்பத்தினராகவே மதித்தனர். இவர்கள் முஸ்லிம் வீடுகளிலும் சாப்பிட, அந்த வீட்டுப் பெரியவர்கள் பார்த்து மலைத்தனர்.
1930இல் சுவாமிநாதன் மறைந்தார். அம்மு இன்னும் வேகமாக அரசியலில் ஈடுபட்டார். மகாத்மா நன்கொடை கேட்டபோது லஷ்மி தனது ஆபரணங்கள் அனைத்தையும் கழற்றிக் கொடுத்துவிட்டார். தாமும் கதர் உடை அணியத் தொடங்கினார். சத்தியாகிரகம் தொடங்கியபோது பேரணிகளிலும், கூட்டங்களிலும் வீட்டினர் பங்கேற்றனர். தடியடிகள் நடைபெற்றபோது லஷ்மி தனது கோபத்தைக் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டார். ஆனால் படிப்பை விட வேண்டுமென்ற காந்தி அழைப்பு விடுத்தபோது நாட்டு மக்களுக்குச் சேவை செய்யப் படித்தே ஆக வேண்டுமென்று அவர்கள் நினைத்தனர். லஷ்மி ஏற்கனவே மருத்துவராக வேண்டுமென்று முடிவெடுத்திருந்தார்.
மீரட் சதிவழக்கு நடந்தபோதுதான் பொது ஒத்துழையாமை இயக்கத்தின்மீது லஷ்மிக்கு இருந்த மரியாதை குறையத் தொடங்கியது. மீரட் சதிவழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சரோஜினி நாயுடுவின் இளைய சகோதரை தோழர் சுபாஷினி இவர்கள் வீட்டில் சில மாதங்கள் இருந்தார். வெளியே எப்போதும் இரண்டு காவல்காரர்கள் சாதாரண உடையில் காவலிருந்தனர். சுபாஷினியுடன் நெருங்கிப் பழகி அவரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றார் லஷ்மி. மார்க்சியம் அவருக்கு அறிமுகமானது. சுரண்டுவோர், சுரண்டப்படுவோர் என்ற இரு வர்க்கங்கள் இருப்பதை முதன்முதலாக உணர்ந்தார் லஷ்மி. அன்னிய நுகத்தடி தூக்கியெறியப்பட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று அவருக்கு ஒரு தெளிவற்ற சிந்தனை இருந்தது.
காந்தி சுரண்டல் பற்றிப் பேசினாலும், அவர்களது கோட்பாட்டில் முழுப் புரட்சி குறித்துப் பேசவேயில்லை. அரசியல், பொருளாதார, சமூக விடுதலை குறித்துப் பேசவேயில்லை என்பதை சுபாஷினி உணர்த்தினார். அப்புரட்சி பழைய, அழுகிய, நிலப்புரபுத்துவ அமைப்பைத் தூக்கியெறிந்து ஒரு புதிய சோஷலிச சமூகத்தை உருவாக்கும். காந்தி ஒரு சமூகச் சீர்திருத்தவாதி, ஒரு புரட்சியாளரல்ல என்பதை விளக்கினார். லஷ்மியால் அப்போது முழுதும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் மருத்துவத் தேர்வுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தார் என்றாலும் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கி விட்டார். எட்கர் ஸ்னோவின் ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ அவர் மீது ஆழமாக தாக்கத்தை உண்டாக்கியது.
1936இல் விமானியான பி.கே.என். ராவைத் திருமணம் செய்து கொண்டாலும், இருவருக்கும் புரிதல் இல்லாததால் ஆறே மாதத்தில் பிரிந்துவிட்டனர். லஷ்மி ஒரு பாவப்பட்ட மனைவியாகவே இருக்க விரும்பவில்லை. பர்மா சென்று திரும்பியதும் 1946இல் இருவரும் விவாகரத்துப் பெற்றனர்.
முன்னதாக, 1938இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார் லஷ்மி. அரசு விக்டோரியா மருத்துவமனையிலும், கோஷா ஆஸ்பத்திரியிலும் ஒரு வருடம் பணிபுரிந்தார்.
திருமணத்தில் அவருக்கு ஏற்பட்ட ஏமாற்றம் ஒருபுறம். அதனால் அவரது குடும்பத்தினரின் நச்சரிப்பிலிருந்து அவர் விடுபட வேண்டியிருந்தது. அவருடன் படித்த ஒரு மருத்துவர் சிங்கப்பூரில் வேலை செய்தார். அவரும் இவரை அழைத்தார். லஷ்மியின் மாமா மகனும், அவரது மனைவியும் சிங்கப்பூரில் இருந்தனர். 1940இல் அவர் மெட்ராசிலிருந்து சிங்கப்பூர் பயணப்பட்டார். அவரது வாழ்க்கையின் திருப்பம் அங்கு தொடங்கியது.
(தொடரும்)