லஷ்மி சிங்கப்பூர் வந்து சேர்ந்தபோது ஐரோப்பாவில் போர் வெடித்துக் கொண்டிருந்தது. சிங்கபூரில் பிரிட்டனுக்கு வலுவான ஒரு ராணுவத் தளம் இருந்ததால் ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கை பலருக்கும் இருந்தது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏராளமான ஏழை மக்கள் கப்பலில் ஏறினர். அவர்களெல்லாம் வாழ வழியில்லாமல் மலேயா தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்றவர்கள். அவர்களது நிலை லஷ்மியைப் பிழிந்தெடுத்தது. படகிலிருந்து கப்பலில் நூல் ஏணி வழியாக ஏறும்போது தவறிக் கடலில் விழுந்து செத்தவர்கள் பலர். அவர்களது பயணத்தில் வசதி கிடையாது. போதுமான காற்றோட்டமோ, கழிவரை வசதியோ கிடையாது. வழியிலேயே பலர் இறந்துவிடுவர்.
சிங்கப்பூரில் ஏராளமான சீனர்கள் இருந்தனர். அவர்கள் அடிமைப் புத்தியுடன் இல்லாமல் தமது மரியாதையை உயர்த்திப் பிடித்தனர் என்கிறார் லஷ்மி. மேலும் அவர்களது வாழ்க்கையில் ஒழுக்கமும் ஒழுங்கும் இருந்தது. லஷ்மிக்கு அங்கு மருத்துவத் தொழிலில் ஈடுபடுவதில் பெரிய பிரச்சனை எதுவுமில்லை. அங்கிருந்த தமிழர்களும் மலையாளிகளும் லஷ்மியுடன் நெருங்கிப் பழகிவிட்டனர். மலேயப் பெண்கள் தொடக்கக் கல்வியுடன் நிறுத்தப்பட்டு திருமணம் செய்து கொடுக்கப்பட்டு, பிள்ளை பெறும் சாதனமாகவே பயன்படுத்தப்பட்டனர். எந்த அரசியல், சமூக விழிப்புணர்வும் அவர்களிடம் இல்லை.
லஷ்மி தனது தொழிலில் நிலைத்துவிட்டாலும் அவருக்கு அறிவுப்பூர்வமான தூண்டல் எதுவும் இல்லாதது சலிப்பாக இருந்தது. உடனிருந்த இந்தியர்களிடம் இந்திய விடுதலைப் போரோ, ஐரோப்பியப் போரோ எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பிரிட்டிஷ் கட்டிக் கொண்டிருந்த கப்பல் தளத்தில் ஜப்பானியர்கள் நுழைந்துவிட்டதாகத் தகவல் பரவியது.
இந்திய சமூகத்தில் பெரிய ஆளாக இருந்தவர் கே.பி.கேசவ மேனன் மட்டுமே. அவர் லஷ்மியுடன் நெருங்கிய நட்பில் இருந்தார். அவருடன் அரசியலைப் பகிர்ந்து கொண்டார் லஷ்மி.
1941இல் ரப்பர் தோட்டங்களில் தொழிலாளர் பிரச்சனை ஏற்பட்டபோது ஏராளமான தொழிலாளர்களை நாட்டை விட்டே வெளியே அனுப்பினர் முதலாளிகள். அதை கேசவமேனன் எதிர்த்து கூட்டம் நடத்தினார். ஆனால் அடிமைப் புத்தியால் இந்தியர்கள் அதில் கலந்து கொள்ளத் தயங்கினர். சீனர்கள் இந்தியர்களைத் தாழ்வாகப் பார்க்கும் நிலையை இது உருவாக்கியது. ஆனால் அப்போது இந்திய ராணுவம் வந்து சேர்ந்தது. அது இந்தியர்களுக்கு ஊக்கமளித்தது. தம்மை வெள்ளையர்களுக்கு நிகராகவே கற்பனை செய்து கொண்டனர்.
பிரிட்டிஷ் ராணுவத்துக்கு ஆள் சேர்த்தபோது இந்தியர்களைச் சேர்க்கவே இல்லை. எனினும் மருத்துவ சேவை கட்டாயமாக்கப்பட்டதால் லஷ்மி அதில் சேர வேண்டியிருந்தது. அவர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிப்பது, போர் வெடித்தால் உடனே கிளம்பி வருவது ஆகியவை மட்டுமே பணிகள். அச்சமடைந்த குடும்பங்கள் தமது வீட்டுப் பெண்களையும் குழந்தைகளையும் ஊருக்கு அனுப்பிவிட்டு, பிறகு ஆண்களும் வெளியேற முயன்றனர். அப்போது அமெரிக்கா செல்லும் வழியில் அங்கு வந்திருந்த லஷ்மியின் அம்மாவும், தமக்கையும் அவரையும் வெளியேறுமாறு வற்புறுத்தினர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். அவர் போரில் நேரடியாக ஈடுபட ஆர்வத்தோடு இருந்தார். அது கிளர்ச்சியூட்டுவதாகவும், சாகசமாகவும் இருக்கும் என்றும் நினைத்தார்.
ஜப்பானியர்கள் போரில் பலவீனமானவர்கள் என்று கணக்குப் போட்டது தப்பாகிவிட்டது. ஜெர்மானியர்கள் ஓட்டிய விமானத்திலிருந்து முக்கியமான இடங்கள்மீது குண்டு வீசியது ஜப்பான். எனினும் லஷ்மி வசித்த இடத்தில் போர் பிரச்சனை இல்லை. சிங்கப்பூரில் குண்டுகள் ஒவ்வொன்றாக விழத் தொடங்கின. இந்தியர்கள் கடுமையாகப் போர் புரிந்தாலும் அதைப் பற்றிய செய்திகள் வெளிவரவில்லை. ஆஸ்திரேலியர்கள் பின்வாங்கினாலும் போரிட்டதாகச் செய்தி வந்தது.
பிரிட்டனின் வலிமையாகக் கருதப்பட்ட கப்பல்தளம் முழுமையாகத் தகர்க்கப்பட்டுவிட்டது. ஏராளமானோர் ஏற்கெனவே லஷ்மி போல் கேசவமேனன் வீட்டில் அடைக்கலம் புகுந்துவிட்டனர். அவர் நிறைய உணவுப் பொருட்களை வாங்கி சேமித்திருந்ததால் சமாளிக்கமுடிந்தது. ஜப்பான் குண்டு வீசத் தொடங்கியது என்றாலும் இந்தியர்கள் விரக்தி அடையவில்லை. ஜப்பான் பிரிட்டிஷைத் தாக்குவது அவர்களுக்கு மனதின் ஒரு மூலையில் மகிழ்ச்சியாகவே இருந்தது.
ஜப்பானியர்கள் சீனர்களைத்தான் அதிகமாகத் தாக்கினர். இந்தியர்கள்மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தனர். மகாத்மா காந்தி என்ற பெயர் அவர்களைக் கட்டிப் போட்டிருந்தது. நடுவில் ஒருமுறை நள்ளிரவில் காரில் சென்றபோது லஷ்மி குண்டு வீச்சுக்கு இடையில் மாட்டிக்கொண்டு அருகில் ஒரு வீட்டில் அடைக்கம் தேடவேண்டியிருந்து. அடுத்த நாள் காலைதான் தப்பித்து வீட்டுக்கு வந்தார்.
ஜப்பானியர்கள் முக்கிய இந்தியர்களுடன் கைகுலுக்கிக்கொள்ள விரும்பினார்கள். ஜப்பானிய ராணுவம் ஆட்சியைப் பிடித்து ஒழுங்கை நிலை நாட்டுவதில் கவனம் செலுத்தியது. தெருவில் இறங்கி, திருடிக் கொண்டிருந்த சீன, மலேய இளைஞர்களைத் தாக்கியது. சிலரைச் சுட்டுக் கொன்று மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. கலவரம் அடங்கியது.
சீனா மீது ஜப்பான் தாக்குதல் நடத்தியதால் லஷ்மிக்கு அவர்கள் மீது வெறுப்பு இருந்தது. அவர் வீட்டுக்குளேயே இருந்தார். அப்போது ஒரு விஷயத்தைக் கவனித்தார். குழந்தைகள்மீது ஜப்பானியர்கள் மிகுந்த பாசத்தோடு இருந்தனர். வீட்டில் குழந்தை இருந்தால் சீனர்களாக இருந்தாலும் அவர்கள் எதுவும் செய்யாமல் விட்டுவிட்டனர். இந்தப் போக்கு லஷ்மியைக் கவர்ந்தது. ஜப்பானியர்கள் மீது இருந்த வெறுப்பும் குறைந்தது.
அடுத்ததாக லஷ்மியைப் பாதித்த விஷயம் ஜப்பானியர்களைப் பாலியல் ரீதியாக மகிழ்விக்க அவர்கள் அடிமைகளாகப் பிடித்துக் கொண்டு வந்திருந்த கொரியப் பெண்கள். ஏராளமான பெண்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தனர். சில வருடங்களுக்கு முன்புதான் ஜப்பான் அரசு இந்தக் கொடுமைகளுக்காக அவர்களிடம் மன்னிப்புக் கோரியது! அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் நிவாரணம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. உலக வரலாறெங்கும் பெண்கள் மீதான இத்தகைய கொடுமைகள் நிறைந்திருக்கின்றன.
ஜப்பானின் கொடுமையான ராணுவப் பிரிவான கெம்பாட்டி யாரைக் கண்டாலும் கன்னத்தில் அறைவது என்ற கீழ்த்தரமான செயலைச் செய்து வந்தது. லஷ்மியும் மற்ற இந்தியர்களும் இதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர்களது கடும் கண்டனத்துக்குப் பிறகு, இந்தியர்களிடம் உறவைப் பேண வேண்டுமென்றால் இதைச் செய்யக் கூடாது என்று அவர்களுக்குப் புரிய வைக்கப்பட்டது.
0
மீண்டும் மருத்துவப் பணியைத் தொடங்கினார் லஷ்மி. வாழ்க்கை வழக்கமாக நகரத் தொடங்கியது. இந்தியர்களுக்கு வேறு அனுபவம் காத்திருந்தது. விடுதலை ராணுவத்தை அமைக்கும் வாய்ப்பு அவர்களுக்கு வந்து சேர்ந்தது.
பிரிட்டிஷ் இந்தியப் படையில் இருந்த கேப்டன் மோகன் சிங் அதிலிருந்து விலகி ஜப்பானுடன் சேர்ந்திருந்தார். பல இந்திய ராணுவத்தினரையும் அப்படியே சேர வைத்திருந்தார். இந்தியர்களைக் கேடயமாகவே பயன்படுத்தியது பிரிட்டிஷ் ராணுவம். அது பின்னால் மறைந்து கொண்டு இந்தியர்களை முன்னால் அனுப்பியது. மோகன் சிங் பிரிட்டிஷ் ராணுவத்திலிருந்து விலகினாலும், பிரிட்டிஷை எதிர்த்துப் போரிடத் தயங்கினார்.
கேசவ மேனனும் மோகன் சிங்கும் பார்த்தவுடனேயே நட்புக் கொண்டுவிட்டனர். இருவருமே ஜப்பானின் கருவியாகிவிடக் கூடாது என்றே சிந்தித்தனர். 1942 பிப்ரவரி 17 அன்று பிரிட்டிஷ், ஆஸ்திரேலிய ராணுவக் கைதிகள் இந்தியர்களிடமிருந்து பிரித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் கேப்டன் மோகன் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இந்திய தேசிய ராணுவத்தில் சேரலாம் அல்லது போர்க் கைதிகளாகலாம் என்று சொல்லப்பட்டது. பலர் தயங்கியதற்குக் காரணம் ஜப்பானியர்களின் அடிமையாக வேண்டியிருக்கும் என்பதுதானே தவிர பிரிட்டிஷ் மீதான விசுவாசமல்ல.
தான் விரும்பிய வாய்ப்பு தன் முன்னால் நிற்பதைக் கண்டார் லஷ்மி. அதைத் தவறவிட அவர் விரும்பவில்லை. இந்திய ராணுவத்தின் மருத்துவப் பிரிவினர் அடிக்கடி அவர்களைச் சந்திக்க வந்தனர். அவர்களில் கேப்டன் பிரேம் செகாலும் ஒருவர்.
1911இல் பிரிட்டிஷ் வைஸ்ராய் மீது வெடிகுண்டு வீசிவிட்டு ஜப்பானுக்குத் தப்பிய புரட்சியாளர் ராஷ் பிகாரி போஸ் ராணுவ, பொதுத் தலைவர்களை ஜப்பானுக்கு அழைத்தார். இந்திய விடுதலை குறித்து ஜப்பான் பிரதமருடன் அவர் பேச விரும்பினார். அவர்களுடன் சிங்கப்பூர் வந்து சேர்ந்த போஸ் ஏப்ரல் 22 அன்று இந்தியர்களின் கூட்டத்தைக் கூட்டினார். இந்திய விடுதலை லீகை போசைத் தலைவராகக் கொண்டு தொடங்க அங்கு முடிவெடுக்கப்பட்டது அவர்கள் தொடங்கிய வானொலி இந்திய மொழிகளில் பிரசாரம் செய்தது. அதில் ஒரு பிரசாரகராகும் வாய்ப்பு லஷ்மியிடம் வந்து சேர்ந்தது. பிரிட்டிஷின் போர் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்றும் அதற்கு பங்கம் செய்யுமாறும் இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்தார் லஷ்மி.
ஆகஸ்ட் 9 அன்று காங்கிரஸ் விடுத்த ‘வெள்ளையனே வெளியேறு’ அறைகூவலை இந்தியர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். கையில் மூவர்ணக் கொடியை ஏந்தி இந்திய தேசிய ராணுவம் சிங்கப்பூர் தெருக்களில் உற்சாக நடை போட்டது.
இப்போது ஜப்பானின் அணுகுமுறை சற்று மாறியது. ஜெனரல் மோகன்சிங் கேட்ட ஆயுதங்களை வழங்குவதில் தயக்கம் காட்டியது ஜப்பான். தாம் ஜப்பானிடம் சரணடைந்த போது வைத்திருந்த ஆயுதங்கள் மட்டுமே ஐ.என்.ஏ.விடம் இருந்தன. இடையில் கேப்டன் தில்லான் என்பவர் ஐ.என்.ஏ. பர்மாவுக்கு வருவதற்கு ஏற்பாடு செய்யச் சென்றவர் பிரிட்டிஷிடம் காட்டிக் கொடுத்து விட்டார். ஜப்பான் முழுவதுமாக நம்பிக்கை இழந்தது.
பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர போசும் ராகவனும் டோக்கியோ செல்வதாகக் கூறப்பட்டபோது மற்றவர்கள் ஏற்கவில்லை. பல மாற்றங்கள் செய்யப்பட்டு நெருக்கடி தவிர்க்கப்பட்டது. இப்போது ஐ.என்.ஏ. இந்தியாவிலிருந்து தப்பி ஜெர்மனியில் இருந்த சுபாஷ் சந்திர போசைத் தலைமை தாங்க அழைக்குமாறு ஜப்பானிடம் கோரியது. லஷ்மிக்குப் பெரிதாக நம்பிக்கை இல்லாததால் தம் மருத்துவப் பணியில் கவனம் செலுத்தினார்.
1943 ஜூன் இறுதியில் திடீரென வானொலியைக் கேட்குமாறு அழைப்பு வந்தது. வானொலியில் உரையாற்றியவர் வேறு யாருமல்ல, சுபாஷ் சந்திர போஸ்தான். சுபாஷை வரவேற்க முதலில் ஜப்பான் யாரையும் அனுமதிக்க மறுத்தாலும், கடும் விவாதத்துக்குப் பிறகு சில உயர் அதிகாரிகளையும் சில பெண்களையும் அனுமதித்தது.
லஷ்மியும் அவர்களில் ஒருவர். பாதுகாப்புக் காரணங்களால் வேறு இடத்தில் தரை இறங்கிய போஸ், ராஷ் பிகாரி போசுடன் அங்கு வந்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். முன்பே சுபாஷ் காங்கிரஸ் மாநாட்டுக்கு வந்திருந்த போது சிறுமியான லஷ்மி அவரைப் பார்த்திருக்கிறார். சுபாஷூடன் வந்த இளைஞர் அபித் ஹஸனுடன் பிரேம் செகாலும் வேறு சிலரும் நீண்ட பேச்சு நடத்தினர். இந்த அபித் ஹஸன் தான் ‘ஜெய் ஹிந்த்’ என்ற கோஷத்தினை முதலில் எழுப்பியவர். அவர் மற்றவர்களிடம் சுபாஷை அனைவரும் நேதாஜி என்றே அழைக்க வேண்டுமென்று கூறினார்.
ஜூலை 4 அன்று சிங்கப்பூரின் பெரிய அரங்கான கதே அரங்கில் இந்தியர்கள் ஒன்றுகூட, ராஷ் பிகாரி போஸ் உரையாற்ற வந்தார். தம் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருந்த அவர் தலைமைப் பொறுப்பை சுபாஷிடம் ஒப்படைத்தார். அந்த ஒப்பற்ற தன்ன்னலமற்ற மனிதர் அடுத்த ஓராண்டில் ஜப்பானில் மரணமடைந்தார். இந்திய சுதந்திர லீகின் பொறுப்பை சுபாஷ் ஏற்றுக்கொண்டார்.
(தொடரும்)