Skip to content
Home » தோழர்கள் #32 – போர்க்களத்தில் லஷ்மி

தோழர்கள் #32 – போர்க்களத்தில் லஷ்மி

போர்க்களத்தில் லஷ்மி

பொறுப்பேற்றுக் கொண்ட சுபாஷ் எழுச்சியுரையாற்ற, அவ்வளவு நாட்களாக அனைவர் மனதிலும் இருந்த சந்தேகங்கள் காணாமலேயே போயின. மகாத்மா காந்தியுடன் தான் கருத்து வேறுபட்டதைக் குறிப்பிட்ட சுபாஷ் அடக்குமுறையாளரை இன்னொரு சக்தியைக் கொண்டு தாக்குவது வலுவான அடியாக இருக்கும் என்றார். முதலில் ஜெர்மனிக்குச் சென்று அங்கு ஹிட்லரைச் சந்தித்தவர் அவரது யூத அழிப்புக் கொள்கையை ஏற்க மறுத்தார். அவர்கள் நிச்சயம் தோற்பார்கள் என்று கணித்தார் சுபாஷ்.

ஜப்பான் அவரை வேறு விதமாக அணுகியது. ஐ.என்.ஏ முழுதுமாக அவர் பின்னால் முழு நம்பிக்கையுடன் அணிவகுத்தது. ராணுவ உடை அணிந்தார் சுபாஷ். ஆயுதப் போராட்டத்தின் மூலம்தான் இறுதி வெற்றி கிடைக்கும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அவர் முதன் முதலாக அவர்களிடையே உரையாற்றிய போது ‘ஜெய் ஹிந்த்’ என்றும் ‘சலோ தில்லி’ என்றும் முழங்கினார். அவருக்குப் பின்னால் ராணுவத்தினரும் பொது மக்களும் ஒரே குரலில் முழங்கினர்.

அடுத்த குண்டைப் போட்டார் சுபாஷ். பெண்கள் பங்கு பெறாமல் ராணுவம் முழுமையடையாது என்றார். ஜான்சி ராணி ரெஜிமெண்டை அமைப்பது அவரது விருப்பம். அடுத்த நாள் சிங்கப்பூர் வந்த ஜப்பான் பிரதமரும் ராணுவ அமைச்சருமான ஜெனரல் ஹிடெகி டோஜோ அனைத்து உதவிகளையும் அளிப்பதாக சுபாஷுக்கு உறுதியளித்தார். ஆனால் ஜப்பான் உட்பட அனைவருக்கும் பெண்கள் படையணி பற்றிப் பெரும் ஐயம் இருந்தது.

இரவு முழுவதும் லஷ்மி தூங்காமல் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார். இந்திய விடுதலைப் போர் மீது இந்தியப் பெண்களுக்குப் பெரிய ஈர்ப்பு ஒன்றும் இருந்ததாக அவருக்குத் தெரியவில்லை. பலரும் தூங்கவில்லை. அடுத்தநாள் எல்லப்பா அது குறித்து விவாதிக்க லஷ்மியை அழைத்தார். சிங்கப்பூர் முழுவதும் தேடி அதில் சேர 20 பெண்களை அவர்கள் பிடித்தனர். சுபாஷ் வந்தபோது இவர்கள் அவருக்கு ஆச்சரியம் கொடுக்கும் விதத்தில் அணிவகுக்க அவர் வியந்து போனார். அதேபோல் முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மாறாக இருந்ததால் வந்தே மாதரத்தை தேசிய கீதமாக சுபாஷ் ஏற்கவில்லை. அப்போதுதான் இவர்கள் ஜனகனமன என்ற தாகூரின் பாடலை இசைத்தனர். ஐ.என்.ஏவுக்கும் கீதம் உருவாக்கப்பட்டது.

அந்த அணிவகுப்பின்போது சுபாஷ் லஷ்மியைப் பார்க்க விரும்பியதாக எல்லப்பா தெரிவித்தார். சிலிர்த்தார் லஷ்மி. அவரைச் சாந்தப்படுத்தி ஒரு நண்பன்போல் பேசினார் சுபாஷ். லஷ்மி அணித் தளபதியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற தன் விருப்பதை வெளிப்படுத்தினார். போரின் ஆபத்துகளை விளக்கினார். நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்தார் லஷ்மி. மறுநாளிலிருந்து பொறுப்பை ஏற்றார் லஷ்மி.

முதலில் சேர்ந்த 20 பேரில் 15 பேர்தான் தேறினார்கள். அவர்களுக்குப் பொறுமையாக ஆண் வீரர்கள் பயிற்சியளித்தனர். ஆனால் ஜப்பானியர்கள் இவர்களைச் சந்தேகத்துடனேயே பார்த்தனர். நேதாஜி பயணத்தில் இருந்தார். லஷ்மியும் பயணம் செய்து பலரைச் சேர்த்தார். திரும்பியதும் ஜப்பானியர்கள் தம் மீது காட்டும் அக்கறையின்மையை நேதாஜியிடம் கூறினார். நேதாஜி உடனடியாகத் தலையிட்டு ஒரு பயிற்சி மைதானத்தை அவர்களுக்கு ஒதுக்கினார். அங்கு பயிற்சி பெற்ற பின் காடுகளில் பயிற்சியைத் தொடர்ந்தனர். கடும் வேகத்தில் வேலைகள் நடந்தன.

அக்டோபர் 19 அன்று லஷ்மியை அழைத்த சுபாஷ் சுதந்திர இந்தியாவின் தாற்காலிக அரசை அக்டோபர் 21 அன்று பிரகடனம் செய்யப் போவதாகக் கூறினார். பெண்கள் விவகார அமைச்சராக நேதாஜியின் அமைச்சரவையில் இணைய லஷ்மியின் விருப்பத்தைக் கேட்டார். திகைத்த லஷ்மி அதையும் ஏற்றார். ஆனால் காந்தி அந்தப் புதிய அரசை ஏற்கவில்லை. தமது கண்களில் நீர்த்திரையுடன் கடவுளின் பெயராலும் 40 கோடி மக்களின் பெயராலும் உறுதிமொழி ஏற்றார் நேதாஜி. ஆசாத் ஹிந்த் உருவானது. லஷ்மியும் பொறுப்பேற்றார்.

அக்டோபர் 22 அன்று ஜான்சிராணி லஷ்மி படையணி அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. பிரிட்டிஷ் மட்டுமல்ல, அமெரிக்காவும் ஏகாதிபத்தியமே என்று தனது பிரகடனத்தில் அன்றே கணித்துச் சொன்னார் நேதாஜி. மொழி உட்படப் பல விஷயங்களையும் அமைச்சரவை விவாதித்தது. நவம்பர் 1 அன்று அணியில் சேர்ந்த 300 பேருக்குப் பயிற்சி தொடங்கியது. இந்தப் பெண்களின் மாற்றத்தைக் கண்டு மற்ற பெண்கள் மலைத்தனர். அனைவரும் உற்சாகமாக இருந்தனர்.

ஜப்பான் பயணம் சென்ற நேதாஜி அவர்களிடம் ஒருபோதும் அது இந்தியா மீது தனது அதிகாரத்தைச் செலுத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார். டிசம்பரில் பர்மா செல்வதற்கு முன் லஷ்மியிடம் ரங்கூனில் போர்முனைக்குச் செல்லத் தயாராகுமாறு தெரிவித்தார். கிளர்ச்சியடைந்தார் லஷ்மி.

ஆனால் ஜனவரி 2 அன்று பாங்காக்குக்குச் சென்று நேதாஜியுடன் சேர்ந்து அங்கிருந்து ரங்கூன் செல்லுமாறு லஷ்மிக்குப் பணிக்கப்பட்டது. அவரை அழைத்துச் சென்ற ஜப்பான் ராணுவ விமானத்தில் இருந்தவர்கள் ஒரு பெண்ணைப் பார்த்து அதிசயித்தனர். அவரது விமானம் இறங்கியபோது அவரை ஓர் அமைச்சராக வரவேற்க இருவர் காத்திருந்தனர். அனைத்தும் நேதாஜியின் ஏற்பாடு. அங்கு அளிக்கப்பட்ட விருந்தில் நேதாஜியுடன் பங்கேற்றார் லஷ்மி. இருவரும் அங்கிருந்து ரங்கூன் சென்றனர். ரங்கூனில் இந்தியர்கள் அதிகம். அங்கு ஜான்சி ராணி படை ஏற்கனவே தொடங்கப்பட்டிருந்தது. அவர்களுக்குப் பயிற்சி தொடங்கப்பட்டது. அங்கு கெரில்லா படையணியும் இருந்தது. அதன் பயிற்சித் தாக்குதலில் உற்சாகமாகப் பங்கேற்றார் லஷ்மி. ஜப்பானியர்கள் சற்றுச் சுணங்கினர். நேதாஜி மிரட்டிப் பணிய வைத்தார்.

ஜனவரி 26 அன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடினர். அங்கிருந்த ஏராளமான இந்தியர்கள் அதில் உற்சாகமாகக் கலந்து கொண்டனர். பிப்ரவரியில் ஒவ்வொரு படையணியாகப் போர்முனைக்குச் செல்லத் தொடங்கியது. இந்திய வீரர்கள் தாம் ஜப்பானியர்களுக்குக் கட்டுப்பட்டு இருக்கவில்லை, இந்திய விடுதலைக்காகவே போராடுகிறோம் என்பதைப் போர் முனையில் நிரூபிக்க வேண்டும் என நேதாஜி கட்டளையிட்டார். அதைத் தம் சிரமேற்கொண்டு நிறைவேற்றுவதாக உறுதியளித்து, உன்னதமான நோக்கத்துடன் அணிவகுத்தது ஐ.என்.ஏ. போர்முனையில் அவர்களது தாக்குதலைக் கண்டு பிரமித்த ஜப்பானியர்கள் அதன் பிறகு மிகுந்த மரியாதை செலுத்தினர்.

இதற்கிடையில் கஸ்தூரிபா காந்தி ஆஹாகான் சிறையில் மரணமடைந்ததைக் கேட்ட நேதாஜியும் லஷ்மியும் தமது வானொலி உரையில் உணர்வுபூர்வமான அஞ்சலியைச் செலுத்தினர்.

இரண்டு மாதங்கள் கழித்து சிங்கப்பூருக்கு லஷ்மி வந்தபோது துணைத் தளபதி திருமதி தேவரின் தலைமையில் ஜான்சிராணி படை வலிமை அடைந்திருந்தது. பெண்கள் மிகுந்த ஒழுக்கத்துடன் இருந்தனர். கால்நடையாகவே படையணி ரங்கூனுக்குச் செல்லவிருந்தது. அதற்கான பயிற்சிகள் நடந்தன. சிங்கப்பூரிலிருந்து லஷ்மி ரங்கூனில் போர்முனைக்குச் செல்வார். ஏப்ரல் 5 அன்று இறுதியாக சிங்கப்பூரிடமிருந்து விடைபெற்றார் லஷ்மி. பின்னர் அவர் அங்கு செல்லவேயில்லை.

பாங்காக் வழியாக ரங்கூன் சென்றடைந்தார் லஷ்மி. அவர் தொடங்கிய பெண்கள் அணி அங்கு பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்தது. பலர் மருத்துவமனைகளில் பணிபுரிந்து வந்தனர். பின்னர் அங்கிருந்து டிரக்கில் மேமயோ சென்றார். வான்வழித் தக்குதல் அதிகமாக இருந்தது.

மேமயோவில் ஒரு வெட்டவெளியில் இருந்த ஒரு பள்ளியில் அவரது அணி தங்கியது. விரைவில் அவர்கள் அங்கிருந்து செல்ல வேண்டும். அங்கு மேமயோவில் பல இந்தியர்கள் தமது அரசு வேலையையும் ராஜினாமா செய்து விட்டு ஆசாத் ஹிந்த் அமைப்பில் இருந்தனர். அவர்களது மனைவியர் ஜான்சிராணி படையில் சேர்ந்தனர். அவர்கள்தான் பின்னர் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலர் விமான குண்டு வீச்சில் பலியாயினர். வேலையையும் ஓய்வூதியத்தையும் இழந்தனர். ஆனால் இவை அனைத்துக்கும் பின்னால், விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியமும் அவர்களுக்கு மறுக்கப்பட்டது. காரணம் அவர்கள் சிறைப்பட்டதற்கான எந்த ஆவணமும் இல்லை. பலரும் நோயாலும், வறுமையாலும் மரணமடைந்தனர். அப்போது நடந்த வான்வழித் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாகத் தப்பினர் லஷ்மியின் படையினர்.

மே 1 அன்று அனைவரும் கலந்து கொண்ட விருந்துக்குப் பிறகு அவர்கள் தங்கியிருந்த பள்ளிமேல் விமானத் தாக்குதல் நடைபெற்றது. அவசர அவசரமாகக் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு பதுங்கு குழிக்குச் சென்றனர் லஷ்மியும் மற்றவர்களும். கடுமையான குண்டு வீச்சில் எரிந்து போன விறகாகச் சிதைந்தது பள்ளி. அவர்கள் அணிந்திருந்த உடையைத் தவிர எதுவும் தப்பவில்லை. வேறு வழியின்றி ஆண்கள் அணியும் சீருடையே அவர்களுக்கும் தரப்பட்டது. இப்போது அவர்கள் போர்முனையில் இருக்கும் வீரர்களாகத் தம்மை உணர்ந்தனர். இரவுக் காவல் பணி தொடங்கியது.

ஐ.என்.ஏ இந்திய பர்மா எல்லைக்குச் சென்றபோது கடும் மழையில் மாட்டிக் கொண்டது. இம்பால் படைத்தளத்தைக் கைப்பற்றும் எண்ணம் நிறைவேறவில்லை. பின் வாங்கியது படை. மேமயோவில் லஷ்மி இருந்தபோது காயமடைந்த வீரர்கள் அங்கு குவியத் தொடங்கினர். லஷ்மி அவர்களுக்கு மருத்துவம் பார்க்கத் தொடங்கினார். போரைத் தவிர கடுமையான மலேரியாவாலும், வயிற்றுப் போக்காலும் வீரர்கள் அவதிப்பட்டனர். இந்திய மருத்துவப் பணியாளர்களின் அர்ப்பணிப்பைக் கண்ட ஜப்பானியர்கள் அவர்களைப் பெரிதும் பாராட்டினர். இந்திய வீரர்களின் உறுதி சற்றும் குறையவில்லை.

(தொடரும்)

பகிர:
கி. ரமேஷ்

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *