Skip to content
Home » தோழர்கள் #34 – நடிப்பு, பாட்டு, அரசியல்

தோழர்கள் #34 – நடிப்பு, பாட்டு, அரசியல்

கே.பி.ஜானகியம்மா

அப்போது நான் சிறுவன். பள்ளி மாணவன். வீட்டுக்கு காலையில் தொலைபேசி ஒலிக்கும்போது எடுப்பேன். ஒரு கரகரத்த பெண்குரல் ‘கிருஷ்ணா’ என்று என் தந்தையை அழைக்கும். அவரிடம் ‘எனக்கு மருந்து தீர்ந்து போச்சு. மருந்து குடுத்து அனுப்பு’ என்று அன்புக் கட்டளையிடும். என் அப்பாவும் என்னிடம் மருந்தைக் கொடுப்பார். நான் அதை எடுத்துக்கொண்டு மண்டையன் ஆசாரி சந்தில் இருக்கும ஒருவரிடம் சேர்க்க வேண்டும். அவர்தான் அனைவரும் அம்மா என்று அழைத்த கே.பி.ஜானகியம்மா.

அம்மாவின் அறை சுமார் எட்டுக்கு எட்டு இருக்கலாம் என்று நினைவு. உள்ளே ஒரு கும்மிட்டி அடுப்பு. தனக்காகச் சமைத்து வைத்திருப்பார். பெரிதாக அந்த அறையில் எதுவும் பார்த்ததாக நினைவில்லை. அம்மா அங்கும் இங்கும் அந்த சிபிஐ(எம்) அலுவலகத்தில் சுற்றிக் கொண்டிருப்பார். அவரைப் பற்றி நான் எழுதுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை.

60 ஆண்டு அப்பழுக்கற்ற பொது வாழ்க்கை. விடுதலைப் போராட்ட வீரர். தமக்கு அளிக்கப்பட்ட பட்டையத்தை, ஓய்வூதியத்தை மறுத்தவர். இறுதிவரை எளிமையாக வாழ்ந்து மறைந்த ‘செல்வந்தர்’.

1917ஆம் ஆண்டில் மதுரையில் ஒரு வறுமை மிகுந்த குடும்பத்தில் பிறந்தார் ஜானகி. பெற்றோர் தம் மகள் மீது அன்பைக் கொட்டி வளர்த்தனர். தனது எட்டாவது வயதில் அன்னையை இழந்த ஜானகி பாட்டியால் வளர்க்கப்பட்டார்.

1920கள் தேசிய இயக்கம் மிகுந்த துடிப்புடன் இருந்த காலம். இயக்கம் ஏராளமானோரைத் தன் பிடிக்குள் இழுத்துக் கொண்டிருந்தது. கதர் நூற்பது, கதராடை உடுத்துவது என்பது ஒரு இயக்கமாகவே இருந்தது. ஜானகியம்மாவும் அவரது இயல்பால் அதனுள் ஈர்க்கப்பட்டார். தானே நூற்றுக் கதராடை அணியத் தொடங்கினார்.

அந்தக் காலத்தில் நாடகம் என்பது சமூகத்தில் ஒரு முக்கியமான பங்கை வகித்து வந்தது. சிவாஜி, எம்.ஜி.ஆர். என்று பலரும் நாடகத் துறையில் புகழ் பெற்று வந்தவர்களே. இப்போது திரைக்கலைஞர்கள் பெற்ற வரவேற்பை அந்தக் காலத்தில் நாடகக் கலைஞர்கள் பெற்றனர். அந்தத் துறையில் தமது 12 வயதில் நுழைந்தார் அம்மா. அப்போதெல்லாம் ஆண்களே பெண் வேடமிட்டும் நடிக்கும் நிலை இருந்தது. உள்ளே நுழைந்த சில பெண் கலைஞர்களில் ஒருவர் அம்மா. அவர் சேர்ந்தது பழனியப்பாபிள்ளை பாய்ஸ் கம்பெனி.

அப்போது தமிழகத்தில் செயல்பட்ட பல கம்பெனிகளின் நாடகங்கள் மக்களிடையே பக்தியை வளர்ப்பது, நீதிக் கருத்துக்களைப் பரப்புவது என்பது போல் இருந்தவை. ஆனால் அன்று சமூகத்தின் நிலையை நாடகமும் பிரதிபலிக்கும் அல்லவா? நாடகத்துறையில் தியாகி விஸ்வநாததாஸ் போன்றோர் தேசியக்குரலை ஒலிக்கத் தொடங்கினர். மேடையில் பாடும் பாடல்களிலேயே சுதந்திரக் கருத்துகள் வீரத்துடன் ஒலிக்கும். இதனால் நாடகத் துறையில் தணிக்கை அமலுக்கு வந்தது. இந்தக் காலத்தில்தான் ஜானகி உள்ளே நுழைகிறார்.

நாடக அரங்கில் பெயர் வாங்க வேண்டுமென்றால் நல்ல குரல் வளம் இருக்க வேண்டும். நன்றாகப் பாட வேண்டும். இவை இரண்டும் ஜானகிக்கு அமைந்திருந்தன. சில ஆண்டுகளிலேயே பல நாடகங்களில் நடிக்கும் பயிற்சியை அவர் பெற்றுவிட்டார். அவரது இனிய குரல் வளம் பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.

நாடகங்களையும் பாடல்களையும் பாஸ்கரதாஸ், உடுமலை நாராயணகவி போன்றோர் எழுதி வந்தனர். விடிய விடிய நாடகங்கள் நடக்கும். ஜானகி நடித்த குழு இலங்கைக்கெல்லாம் சென்று புகழ் பெற்று வந்தது. அவரது ஊதியமும் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. அவரது பாடல்களில் தேசியக் கருத்துகளும் ஒலித்தன.

அந்தக் குழுவில் இருந்த ஆர்மோனியக் கலைஞர் குருசாமி ஜானகியை ஈர்த்தார். அவர் காங்கிரஸ் இயக்கத்தில் தீவீரப் பற்றுக் கொண்டவர். அவர் ஜானகியையும் காங்கிரஸ் மீதும் தேசிய இயக்கத்தின் மீதும் பற்றுக் கொள்ளச் செய்தார். அதன் விளைவாக ஜானகிக்கு அரசியல் ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியது. விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஆர்வமும் வந்தது. குருசாமி மீதான காதலால் அவரைத் திருமணம் செய்து கொண்டார் ஜானகி. குருசாமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகளும் இருந்த நிலையில் இரண்டாவது மனைவியாக அவர் வீட்டில் குடியேறினார்.

தியாகி விஸ்வநாததாஸ் தனது வாழ்க்கையையே நாடகத்துக்காகவும், விடுதலைப் போராட்டத்துக்காகவும் தியாகம் செய்தவர். அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவருடன் நடிக்க மற்ற நடிகைகள் ஒப்புக் கொள்ளவில்லை. இந்தச் செய்தியை அறிந்த ஜானகி அதை உடைத்து அவருடன் நடிக்கத் தொடங்கினார். குருசாமியும் ஜானகியும் அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தனர். விஸ்வநாததாஸ் மதுரை தமிழ்நாடு நாடக நடிகர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தபோது ஜானகி துணைத் தலைவராக இருந்தார். மிகுந்த போலீஸ் நெருக்கடியில் ஒரு நாடகத்தில் நடித்த தாஸ் மேடையில் முருகன் வேடமிட்டு மயில்மீது அமர்ந்து சோகமாகப் பாடிக் கொண்டே இருந்தபோது தலை சாய்ந்து மறைவெய்தினார். ஜானகியும் குருசாமியும் மிகுந்த துயரில் ஆழ்ந்தனர்.

ஏராளமாக ஊதியம் பெற்றிருந்த ஜானகி நூற்றுக்கணக்கான பவுன் தங்கத்தையும், விலை உயர்ந்த நூற்றுக்கணக்கான பட்டுச்சேலைகளையும், மதுரை மேலமாசி வீதியில் இரண்டு வீடுகளையும் சொந்தமாக வைத்திருந்தார். ஆனால் அவரைக் காங்கிரஸ் இயக்கம் ஈர்க்க, மெதுவாக நாடகத் தொழிலைக் கைவிடத் தொடங்கினார் ஜானகி. கணவரின் தூண்டுதலில் தமிழ்நாடெங்கும் காங்கிரஸ் கூட்டங்களில் அவரது குரலில் தேசபக்திப் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின. அவர் வந்து பாட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழத் தொடங்கியது. அவர் பாடுவார் என்று அறிவித்தால் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடத் தொடங்கினர். இந்தச் சேவையை எந்தப் பணமும் பெற்றுக்கொள்ளாமல் செய்து வந்தார் ஜானகி. 1930லிருந்து 1936 வரை அதை மட்டுமே செய்து வந்தார். எந்த வருமானமும் இல்லை.

பாரதியாரின் ‘விடுதலை விடுதலை’, ‘பாரத சமுதாயம் வாழ்கவே’, ‘வந்தே மாதரம்’ ஆகிய பாடல்கள், காந்தி, நேரு பாடல்கள், காங்கிரஸ்காரர்களின் தவறுகளைத் தட்டிக் கேட்கும் பாடல்கள் எனப் பலவற்றை அவர் பாடுவார். வெகு விரைவில் மதுரையில் ஒரு பிரபலமான காங்கிரஸ் தலைவராக அறியப்பட்டார். ஏ. வைத்தியநாதைய்யர், என்.எம்.ஆர். சுப்புராமன் போன்ற தலைவர்கள் ஜானகி பாடினால்தான் தாங்கள் பேசுவோம் என்று கூடக் கூறியதுண்டு.

சாதி எதிர்ப்பு, பெண் விடுதலை, பெண் முன்னேற்றம், சமத்துவம் ஆகிய கொள்கைகளைக் கடைப்பிடித்த ஜானகியும், குருசாமியும் மற்ற காங்கிரஸ்காரர்களையும் இந்த வழியில் சிந்திக்க வைத்தனர்.

1930களில் கம்யூனிஸ்டுகள் மீதான தாக்குதல்களை பிரிட்டிஷ் அரசு அதிகப்படுத்தியது. மீரட் சதிவழக்கில் முசாபர் அகமது உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மறுபுறம் காங்கிரசுக்குள் சோசலிச மனப்பான்மை கொண்டவர்கள் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியை உள்ளுக்குள் உருவாக்கினர். கம்யுனிஸ்டுகளும் சோஷலிஸ்டுகளும் இணைந்து செயல்பட முடிவெடுத்திருந்தனர்.

தமிழ்நாட்டில் பி.சீனிவாசராவ், பி.ராமமூர்த்தி, ப. ஜீவானந்தம் ஆகிய தலைவர்கள் அக்கட்சியை நிறுவும் பணியிலும், அதற்கு ஆதரவாகக் காங்கிரஸ் தொண்டர்களைத் திரட்டும் பணியிலும் தீவீரமாக ஈடுபட்டிருந்தனர். காங்கிரஸ் தொண்டர்களும் தலைவர்களும் குருசாமி, ஜானகி வீட்டுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதில் ஜானகி மகிழ்ச்சியடைந்தார்.

1938இல் வத்தலகுண்டில் நடந்த அரசியல் மாநாட்டில் தேசிய கீதத்தைப் பாட யாராவது முன்வர வேண்டுமென்று தலைவர்கள் அழைக்க, குருசாமியும் மற்றவர்களும், ஜானகியைப் பாடுமாறு வற்புறுத்தினர். அவரும் நடுக்கத்துடன் சென்று முதன்முறையாக அரசியல் மாநாட்டில் தேசிய கீதத்தைப் பாடினார். அங்குதான் ஜீவா, பி. ராமமூர்த்தி, எம்.ஆர். வெங்கட்ராமன் ஆகிய தலைவர்கள் அவருக்கு அறிமுகமாயினர்.

நாடகத்திலிருந்து வந்த ஜானகியை அரசியலுக்குக் கொண்டு வருவது நல்லது என ஜீவா கருதினார். அந்தக் கருத்தை ஜானகியிடம் வலியுறுத்தினார். துணிவையும் தெளிவையும் கொடுத்தார். ஜீவாவைத் தன் குருவாக வரித்துக்கொண்டார் ஜானகி.

பெண்கள் பிரச்சனைகள் குறித்து ஒருமணி நேரம் அவரிடம் பேசினார் ஜீவா. அவரது உரைகள் ஜானகியின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன. காங்கிரசைத் தவிர வேறொன்றும் அறியாத ஜானகிக்கு ஒரு புதிய உலகம் விரிந்தது. அதை மலரச் செய்தவர் ஜீவா.

அந்த மாநாடு நடைபெற்றுச் சில நாட்களுக்குப் பிறகு குருசாமி அவரது வீட்டுக்கு எம்.ஆர்.வெங்கட்ராமனை அழைத்து வந்தார். அங்கு ஜானகியை மிகவும் பாராட்டினார் எம்.ஆர்.வி. அத்துடன் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி பற்றியும், கொள்கை பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார் அவர். அவரது கொள்கைப் பிடிப்பும், ஆவேசமான விளக்கமும் ஜானகியை பிரமிக்க வைத்தது.

எம்.ஆர்.வி. இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டார். குருசாமியும், ஜானகியும், வீடு, வீடாக, வீதி, வீதியாக மக்களிடம் சென்று உண்டியல் வசூல் செய்ய வேண்டுமென்று கோரினார். ஜானகி பிரபல நாடக நடிகையாக இருந்தவர். அவருக்கு இதைக் கேட்டு பயமும் பீதியும் ஏற்பட்டது. எம்.ஆர்.வி அவருக்கு தைரியம் கொடுத்தார். தம் கட்சியின் கொள்கையை மக்களிடம் விளக்கினால்தான் அவர்களது ஆதரவைப் பெற முடியுமென்று எடுத்துக் கூறினார். அதை ஏற்ற ஜானகி தெருவில் இறங்கினார். உண்டியல் வசூல் செய்தார். அவரது அரசியல் செயல்பாடு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது.

(தொடரும்)

பகிர:
கி. ரமேஷ்

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.View Author posts

1 thought on “தோழர்கள் #34 – நடிப்பு, பாட்டு, அரசியல்”

  1. Sarojini Kanagasabai

    கம்யூனிஸ்ட் கட்சிக்காக தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர். என் தந்தையின் சகதோழர். மில் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் ஊதியத்தை முறைப்படுத்தக் கோரி ஜானகி அம்மாள் தலைமையில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. கிராமங்களுக்கு நடந்தே சென்று மக்களின் ஆதரவை திரட்டினார். துவரிமான், சோழவந்தான், திருமங்கலத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் இன்றும் கம்யூனிஸ்ட் கட்சியை ‘ஜானகி அம்மா கட்சி’ (ஜானகி அம்மாவின் கட்சி) என்று அடையாளப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. மிக சிறந்த ஆளுமை ‌. எமர்ஜென்சி காலகட்டத்தில் தோழர்களின் குடும்பத்தினர் பசி போக்க தன்னுடைய பட்டுச் சேலை மற்றும் நகைகளை விற்று கொடுத்தவர். அவருடைய நினைவுகள் மங்கிய ஒரு நாளில் மண்டையன் ஆசாரி சந்தில் இருந்த கட்சி அலுவலகத்தில் சந்தித்த போது கண்கள் கலங்கின. அருமையான பதிவு தோழர்.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *